செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

கனிமொழி : ஜி எஸ் டி மசோதாவுக்கு எமது திருத்தங்கள் ஏற்கப்பட்ட பின்புதான் ஆதரித்தோம் !


திருத்தங்களுடன் கூடிய சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா, மக்களவையில் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி ஒருமனதாக நிறைவேறியது. அவையில் இருந்த 443 உறுப்பினர்களும் அந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், ஜிஎஸ்டி மசோதா நிறைவேறியுள்ளதால் வரும் நிதியாண்டு முதல் ஜிஎஸ்டி சட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி மசோதாவில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய சில திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பொருட்களை உற்பத்தி செய்யும் மாநிலங்களின் நலனுக்காக கூடுதலாக ஒரு சதவிகித வரி விதிக்க வகை செய்யும் அம்சத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்ததைத் தொடர்ந்து அந்த ஷரத்து நீக்கப்பட்டது. மேலும், ஜிஎஸ்டி சட்டம் அமல்படுத்தப்படுவதன் மூலம் மாநிலங்களுக்கு ஏதேனும் வருவாய் இழப்பு ஏற்பட்டால், முதல் ஐந்தாண்டுகளுக்கு மத்திய அரசு 100 சதவிகித இழப்பீடு வழங்க வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட கோரிக்கையும் ஏற்கப்பட்டது.


இந்நிலையில், ஜிஎஸ்டி மசோதா தொடர்பான விவாதத்தில் பேசிய அதிமுக எம்.பி-க்கள், ஜிஎஸ்டி சட்டம் அமலாக்கப்பட்டால் தமிழகத்துக்கு ஆண்டுதோறும் ரூ.9 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று கருத்து தெரிவித்து வாக்கெடுப்புக்கு முன்னதாக அதிமுக எம்.பி-க்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், 'தமிழ் இந்து' நாளிதழுக்கு பேட்டியளித்த திமுக எம்.பி. கனிமொழி பேசுகையில், “ஜிஎஸ்டி-யை அதிமுக எதிர்ப்பது உண்மையானால், அதை எதிர்த்து வாக்களித்திருக்க வேண்டும். ஆனால், அதிமுக வெளிநடப்பு செய்தது. இதற்கு ஜிஎஸ்டி மசோதாவை அவர்கள் மறைமுகமாக ஆதரிப்பதாகவே அர்த்தமாகும்.
ஆனால், நாங்கள் ஜிஎஸ்டி மசோதாவுக்கு எதிராக வாக்களிக்கவில்லை. ஏனெனில், இதன் மீதான மாநிலங்களவை குழுவில் நான் இடம் பெற்றிருந்தேன். அப்போது என்னிடம் பல வணிகர்கள் கூறிய கருத்துக்களின்படி, இந்த மசோதாவில் அவர்களுக்கு சாதகமான அம்சங்களும் உள்ளன. தொலைநோக்குப் பார்வையில், நாடு முழுவதும் இது பலனளிக்கும் எனவும் தெரிந்தது. மேலும், மாநில அரசுக்கு ஏற்படும் இழப்பை ஐந்தாண்டுகளுக்கு மத்திய அரசு ஏற்க வேண்டும் எனவும் கோரியிருந்தோம். இது ஏற்கப்பட்டதன் அடிப்படையில், மசோதாவை ஆதரித்தோம்” என்றார். மின்னம்பலம்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக