செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

தெலுங்கு கன்னடம் மலையாளம் ஓடியா மொழிகளையும் செம்மொழி ஆக்கிய ஆரிய சதி! தமிழ் மட்டும்தான் செம்மொழி .... பொறுக்கல்ல?

மொழிகளில் தமிழ் மற்றும் சமஸ்கிருதம் அல்லாத தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியதை எதிர்த்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் காந்தி, பொதுநல மனு ஒன்றை அளித்திருந்தார். இதுகுறித்து அவர், “உலகம் முழுவதும் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் இருக்கின்றன. இதில் கிரேக்கம், லத்தீன், ஹீப்ரூ, தமிழ், சமஸ்கிருதம், சீனம் ஆகிய மொழிகளுக்கு மட்டுமே சிறப்புண்டு. காரணம், இவை இலக்கிய இலக்கண தகுதிகளோடு ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. ஆனால், சில நூற்றாண்டு பழமையும் இலக்கண இலக்கிய தொன்மையற்ற கன்னட, மலையாள, தெலுங்கு, மற்றும் ஒடியா மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்தை வாரி வழங்கியுள்ளது மத்திய அரசு. இதனை ரத்து செய்ய வேண்டும் என்றே இந்த வழக்கை தொடர்ந்தேன்” என்கிறார் வழக்கறிஞர். இந்த மனுவை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கவுல் மற்றும் நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. “செம்மொழி அந்தஸ்து விவகாரத்தில் மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. இதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்” என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் மத்திய அரசுக்குச் செம்மொழி பற்றிய புரிதல் முதலில் வேண்டும் என்கிறார்கள் தமிழறிஞர்கள். “செம்மொழி என்றால் என்ன என்பதை நாம் அறிந்து கொள்வது நல்லது. செம்மொழி குறித்து தெளிவாக சொல்வதானால் பிறமொழி எழுத்துகள், சொற்கள் இன்றி மொழிபெயர்ப்புகளற்ற சுய இலக்கண, சுயமான இலக்கியங்கள் கொண்டு 1000 ஆண்டுகள் முதல் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவையான செம்மையான மொழியே, செம்மொழி என்பது தமிழ் அறிஞர்களின் கருத்து. இந்தப் பெருமை தமிழுக்கு உண்டு. அறிஞர் கால்டுவெல் திராவிட மொழிகளை ஒப்பிட்டு 1856இல் ஒரு ஆங்கில நூலை எழுதினார். அதில் தமிழின் தொன்மையை விளக்கினார். அது உலக அளவில் விவாதிக்கப்பட்டது. அவருக்கு அடுத்தபடியாக, பேராசிரியர் பரிதிமாற் கலைஞர், தமிழ், செம்மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என 1902இல் கோரிக்கை விடுத்தார். அதன் பிறகு, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள பல தமிழ் அமைப்புகளும் அறிஞர்களும் இது தொடர்பாகப் பல முயற்சிகளை எடுத்தனர். இதன் பயனாக இந்திய மொழிகளிலே முதன்முதலில் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கடந்த 2004 ஜுன் 6ஆம் தேதி வழங்கப்பட்டது. அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இரண்டாவதாக சமஸ்கிருதத்துக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது.
ஆனால், செம்மொழி என்பது ஏதோ ஒரு பட்டம் என்று நினைத்த மற்ற மாநில அரசுகள், செம்மொழி அந்தஸ்தை கோரத் தொடங்கினர். இதையடுத்துதான் கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளுக்கு 2005இல் செம்மொழி அந்தஸ்து மத்திய அரசால் வழங்கப்பட்டது. இதையடுத்து 2013ஆம் ஆண்டு மலையாள மொழிக்கும், 2014ஆம் ஆண்டு ஒடியா மொழிக்கும் வழங்கப்பட்டது. இது ஏற்புடையதல்ல” என்பது மொழி அறிஞர்களின் கருத்து.  மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக