செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

இனி கவுன்சிலர்களை வாங்கலாம் விற்கலாம்... ஜெயலலிதா மேயர் தேர்தலை சந்திக்க பயம் பயம் பயம்!

ஜனநாயகத்தை குழி தோண்டி ஜெயா புதைத்து விட்டார். வேண்டாதவர்கள் மீது போலி கேசுகளை போடுவது, அரசியல்வாதிகளை விலைக்கு வாங்குவது தொடங்கி, கடைசியில் மக்களையும் விலைக்கு வாங்கி விட்டார். தமிழ்நாடு இனி எப்போதும் மஹாராணி ஆட்சி தான் என்ற நிலைமைக்கு வந்துவிட்டது
நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள், நேரடி தேர்வை ரத்து செய்ய, தமிழக அரசு, சட்டசபையில் நேற்று புதிய சட்ட மசோதா தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே, நேரடி மேயர் தேர்தலை ரத்து செய்த அரசு, இப்போது, நகராட்சி, பேரூராட்சிகள் தலைவர்களையும், கவுன்சிலர்கள் மூலமே தேர்வு செய்ய முன்வந்திருப்பது, எதிர்க்கட்சிகளிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற மறைமுக தேர்தலால், கவுன்சிலர்கள் கடத்தல், குதிரை பேரம் போன்ற செயல்கள் அதிகரிக்கும் என, கட்சி தலைவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். தமிழகத்தில், 1996 மற்றும், 2001ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில், மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் ஆகியோரை, மக்கள் நேரடியாக தேர்வு செய்யும் முறை இருந்தது. 2006ல், நேரடி மேயர் தேர்தல் ரத்து செய்யப்பட்டு, கவுன்சிலர்கள் மூலம் மேயரை தேர்வு செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.


கடந்த, 2011ல் மேயரை நேரடியாக தேர்வு செய்யும் முறையை, அ.தி.மு.க., அரசு மீண்டும் கொண்டு வந்தது. தற்போது, மீண்டும் அ.தி.மு.க., அரசு, பழையபடி மறைமுக தேர்தல் மூலம், மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் ஆகியோரை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது.
ஜூன் மாதம், மேயரை மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்வதற்கான, சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. நேற்று, நகராட்சி தலைவர் மற்றும் பேரூராட்சி தலைவரை, மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்வதற்கான, சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
ஏற்கனவே, மறைமுக தேர்தல் மூலம், மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் தேர்வு செய்யப்பட்ட போது, தலைவர் பதவியை பிடிக்க, கட்சி பிரமுகர்கள் முட்டி மோதினர்; கவுன்சிலர்களை ஊட்டி, கொடைக்கானல், பெங்களூரு, டில்லி என அழைத்து சென்று கவனித்தனர். சுயேச்சைகள் மற்றும், 'அதிருப்தி' கவுன்சிலர்களுக்கு பணம் கொடுத்து விலைக்கு வாங்கியது உட்பட, பல விதமான சம்பவங்கள் அரங்கேறின.
அதே நிலை மீண்டும் ஏற்படும் என்பதால், மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் ஆகியோர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என, எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

தேர்தல் அதிகாரிகள் கலக்கம்!< தமிழகத்தில், 12 மாநகராட்சிகள், 123 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 12 ஆயிரத்து, 527 ஊராட்சிகள் உள்ளிட்ட, உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன; இவற்றில், மொத்தம், 1.48 லட்சம் பதவிகள் உள்ளன. அக்., மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்தும் ஏற்பாடுகளை,
மாநில தேர்தல் கமிஷன் செய்து வருகிறது;இதற்காக, 183 கோடி ரூபாயை
, அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மொத்தமுள்ள பதவிகளில், 50 சதவீதம் பெண்களுக்கு வழங்கும் வகையில், அரசு சட்டம் இயற்றியுள்ளது. அதன் அடிப்படையில், பெண்களுக்கான பதவிகளை ஒதுக்கும் பணி நடந்து வருகிறது.
மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் ஆகியோரை, கவுன்சிலர்கள் மூலம் தேர்வு செய்ய, சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து, தேர்தல் அதிகாரி ஒருவர்கூறியதாவது:
கடந்த, 2006ல், மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணை தலைவர், பேரூராட்சி தலைவர், துணை தலைவர் பதவிக்கு, மறைமுக தேர்தல் நடந்தது. கவுன்சிலர்கள், இவர்களை தேர்வு செய்தனர். அப்போது, கவுன்சிலர்கள் கடத்தல், குதிரை பேரம் போன்ற புகார்கள் எழுந்தன. கவுன்சிலர்கள் காட்டில், பண மழை பொழிந்தது.
இதன் காரணமாகவே, 2011ல் மறைமுக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போது, மீண்டும் மறைமுக தேர்தல் நடத்தப்போவதாக, அரசு அறிவித்துள்ளதால், பலரும் பதவியை பிடிக்க, எல்லா வழிகளையும் பயன்படுத்துவர்; இதனால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

 உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், மகளிரணி செயலர் கனிமொழி ஆகியோருடன் ஆலோசனை நடத்திய, அக்கட்சி தலைவர் கருணாநிதி, 'இந்த தேர்தலில், 100 நகராட்சிகளை தி.மு.க., கைப்பற்ற வேண்டும்' என, கட்டளையிட்டிருந்தார்; அதற்கு கட்சியினரை தயார்படுத்தும்படியும் கூறியிருந்தார்.
இதன் மூலம், ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்ததால், அதிருப்தியில் இருக்கும் கட்சியினரை உற்சாகப்படுத்த முடியும்; அடுத்து வரவிருக்கும் லோக்சபா தேர்தலுக்கும் அஸ்திவாரம் போட்டதாக இருக்கும் என, கருணாநிதி திட்டமிட்டார்.
அதை முறியடிக்கும் வியூகமாகவே, இத்தகைய சட்ட திருத்த மசோதாக்களை, முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அரசியல் உள்நோக்கம்!

பா.ம.க., இளைஞர் அணி தலைவர் அன்புமணியின் அறிக்கை:

அரசியல் உள்நோக்கத்துடன், தமிழக ஆட்சியாளர்கள் மேற்கொண்டுள்ள இம்மாற்றம் கண்டிக்கத்தக்கது. 2006ல் தான், முதன்முறையாக பேரூராட்சி தலைவர் முதல், மாநகராட்சி மேயர் வரை, அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் பதவிகளும், மறைமுக< தேர்தல் மூலம் நிரப்பப்பட்டன. அப்போது, எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதா, கடும் கண்டனம் தெரிவித்தார்.
அது மட்டுமின்றி, 2011ல் அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், நேரடி தேர்தல் நடத்தும் முறை கொண்டு வரப்பட்டது. அதற்கு முற்றிலும் எதிரான வகையில், இப்போது அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி தலைவர் பதவிகளும் மறைமுக தேர்தல் மூலம் நிரப்பப்படும் என்று, தமிழக அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
மறைமுக தேர்தல் மூலம் நகர்ப்புற உள்ளாட்சி தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் நிலை உருவானால், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், எதிரணியில் உள்ள உறுப்பினர்களை, பணம் கொடுத்து விலைக்கு வாங்கும் கலாசாரம் பெருகும். அது, ஜனநாயக படுகொலைக்கும், ஊழலுக்கும் வழி வகுக்கும்.
உள்ளாட்சி தலைவர் பதவிக்கு, நேரடி தேர்தல் நடந்தால், வெற்றி பெற முடியாது என்பதை தெரிந்து கொண்டதால், வாக்காளர்களை விலைக்கு வாங்குவதற்கு பதிலாக, உள்ளாட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, பதவிக்கு வந்து விடலாம் என்ற எண்ணத்தில் தான், இப்படி ஒரு முடிவை அரசு எடுத்திருக்கிறது; இது, உள்ளாட்சி ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.
இவ்வாறு அன்புமணி அறிக்கையில் கூறியுள்ளார்

ஜனநாயகத்துக்கு நல்லதல்ல!

மக்கள் தங்கள் பக்கம் இருக்க மாட்டார்கள் என்ற அவநம்பிக்கையில் தான், இப்படி நகராட்சி தலைவர்களையும், மறைமுகமாக தேர்வு செய்யும் சட்ட முன் வடிவை, முதல்வர் கொண்டு வந்திருக்கிறார். சட்டசபையில் பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக, ஜனநாயகத்தை சாகடிப்பது, சரியான போக்கு அல்ல.
இப்படி செய்வதன் மூலம், கவுன்சிலர்களை விலை கொடுத்து வாங்கும் குதிரை பேரமும், ஊழலும், முறைகேடும் அதிகரிக்கும் என்பது தெரிந்தும், எப்படியும் தாங்கள் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்குடன் இப்படியெல்லாம் செய்கின்றனர். மக்கள் தான் நல்ல தீர்ப்பு சொல்ல வேண்டும்.முத்தரசன்,மாநில செயலர், இந்திய கம்யூ.,
ஜனநாயகவாதிகள் ஏற்கமாட்டார்கள்!

குறுக்கு வழியில் அதிகாரத்தை கையில் எடுப்பவர்கள் கையாளும் விஷயத்தையே, இன்றைய அ.தி.மு.க., அரசு, எல்லா விஷயங்களிலும் கையாண்டு வருகிறது. மக்களை நேரடியாக சந்திக்க திராணி இல்லாமல், இப்படியெல்லாம் செய்கிறது.
மக்கள் தங்கள் பின்னால் தான் அணிவகுக்கின்றனர் என, போலியாக காட்டிக் கொண்டிருக்கும் அ.தி.மு.க., அரசு, ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளி, இப்படிப்பட்ட மோசமான காரியங்களை செய்து கொண்டிருக்கிறது. ஜனநாயகத்தை மதிக்கும்; போற்றும் யாரும், இப்படிப்பட்ட காரியங்களை ஏற்கமாட்டார்கள்.வானதி சீனிவாசன்,பொதுச்செயலர், தமிழக பா.ஜ.,

- நமது சிறப்பு நிருபர் -  தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக