ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

ஹிலாரியைச் சுற்றும் மரண சர்ச்சை!


minnambalam.com :அமெரிக்கத் தேர்தலில் வென்று ஜனாதிபதி ஆவார் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கும், உலகம் அறிந்த முகமான ஹிலாரி கிளிண்டன்மீது ஒரு மரணத்தின் நிழல் விழுந்திருக்கிறது. அதாவது, அமெரிக்காவில் நடந்த ஒரு கொலையின் பின்னணியில் ஹிலாரி இருக்கிறார் என்ற குற்றச்சாட்டை கூறியிருப்பது சாதாரண அமெரிக்கக் குடிமகனோ அல்லது அவருக்கு எதிராகப் போட்டியிடும் எதிர்க்கட்சியினரோ அல்ல. அமெரிக்காவையே ஆட்டிப் படைக்கும் விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அசாஞ்சே. இந்தக் குற்றச்சாட்டு வலுப்பெற்று விவாதப் பொருளாகியிருப்பதும் அதனால்தான்.
ஹிலாரியின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தேசியக் கமிட்டி உறுப்பினரான 27 வயது இளைஞரான சேத்ரிச் என்பவர், கடந்த மாதம் வாஷிங்டன் டிசி-யில் வைத்துக் கொல்லப்பட்டார். அதிகாலையில் நடந்த அந்த துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்த அவரது மரணத்துக்கு காரணமாக போலீஸ் சொன்னது, ‘அது கொள்ளைக் கும்பல்களுக்கு இடையிலான மோதல்’ என்பதோடு நிறுத்திக்கொண்டனர்.

ஜனநாயகக் கட்சியின் மக்கள்நலன் துறையில் வேலை செய்துகொண்டிருந்தவர் சேத்ரிச். இவர் கொல்லப்பட்டபிறகு, அமெரிக்கப் புலனாய்வு நிறுவனமான எஃப்.பி.ஐ.யின் ஏஜெண்ட் எனவும் அவர் ஹிலாரி கிளிண்டனால் அனுப்பப்பட்ட ஒரு குழுவினரால் தாக்கி கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் பலவிதமாக கதைகள் உருவாகியிருக்கின்றன. இந்தக் கதைகளுக்கு அடிப்படையோ, ஆதாரமோ இல்லை. ஜனநாயகக் கட்சியில் வேலைபார்த்த சேத் ரிச்சிடம் கிளிண்டனை வீழ்த்துமளவுக்கு ஆதாரங்களோ, ஆவணங்களோ இருந்திருக்க வாய்ப்பே இல்லை .சேத்ரிச், கொள்ளைக்கும்பலோடு தொடர்பில் இருந்தார்-அவர் கொல்லப்பட்டதும் இப்படி ஒரு கொள்ளைக் கும்பலால்தான். ஆனால் ஹாலிவுட் பட பாணியில் ஹிலாரிக்கும் இந்த மரணத்துக்கும் தொடர்பை ஏற்படுத்தி, அவரை அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து அப்புறப்படுத்த முயல்கிறார்கள் என்கிறார்கள் ஹிலாரியின் ஆதரவாளர்கள். ஒருபக்கம் இது அபத்தமான ஒரு திரைக்கதைபோல தோன்றினாலும் ஜூலியன் அசாஞ்சே இதை அரசியல் படுகொலை என்கிறார்.

(கொல்லப்பட்ட சேத்ரிச்)
கடந்த சில நாட்களுக்குமுன்னர் விக்கிலீக்ஸ் ஹிலாரியின் ஜனநாயகக்கட்சியில் சில ரகசிய இமெயில்களை வெளியிட்டிருந்தது. அது தொடர்பாகப் பேசிய ஜூலியன், ‘விக்கிலீக்ஸ் நேரடியாக ஆவணங்களை இறக்குமதி செய்வதில்லை. எங்கள் தகவலாளிகள் முயற்சி செய்து ஆவணங்களைக் கொடுப்பார்கள். அது சிலநேரங்களில் அபாயகரமான வேலையாகவும் இருக்கும். ஜனநாயகக் கட்சியில் வேலைசெய்த இளைஞன் வாஷிங்டனில் நடந்து கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறான். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், எங்களுக்காக வேலை செய்கிறவர்கள் அபாயகரமான வேலைகளில் இருக்கிறார்கள். அவர்கள் செய்வது சவாலான பணி. இப்படி இளைஞர்கள் கொலை செய்யப்படும்போது எங்களுக்காக பணி செய்கிறவர்கள் கவலையும் பதட்டமும் அடைகிறார்கள்’ என்றார். இந்த இடத்தில் அசாஞ்சே இரண்டு விஷயங்களைப் பதிவு செய்கிறார். ஒன்று, சேத்ரிச் தங்களுக்காக வேலை செய்ததால்தான் கொல்லப்பட்டார் என்பதை மறைமுகமாகவும், இப்படியான கொலைகள் நடப்பதால் தங்களுக்கு தகவல் தருகிறவர்கள் அல்லது ஆவணங்களை வழங்குகிறவர்கள் கவலையடைகிறார்கள் என்பதை நேரடியாகவும் சொல்கிறார்.

(ஜூலியன் அசாஞ்சே)
ஜூலியன் அசாஞ்சேயிடம், வாஷிங்டனில் கொல்லப்பட்ட சேத்ரிச் உங்களின் தகவலாளியா? என்று கேட்டபோது, ‘எங்களுக்கு தகவல் அளிப்பவர்கள் குறித்து நாங்கள் பேசுவதில்லை’ என பதில் சொன்னார். ஆனால் கடந்த செவ்வாயன்று விக்கிலீக்ஸ் ட்விட்டரில், சேத்ரிச் கொலை குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு இருபதாயிரம் டாலர்கள் அளிக்கப்படும் என ட்வீட் வெளியிட்டார்கள்.
“நாங்கள் சேத்ரிச் சம்பவத்தில் என்ன நடந்தது எனப் புரிந்துகொள்ள விசாரணை செய்து கொண்டிருக்கிறோம். இது, கவலைப்படவேண்டிய சூழல் என நான் நினைக்கிறேன். இதுவரை ஒரு முடிவும் வரவில்லை. வலுக்கட்டாயமாக ஒரு முடிவை நாங்கள் முன்வைக்க விரும்பவில்லை. ஆனால், நாங்கள் அதைப்பற்றி கவலை கொள்கிறோம். அதைவிட, இப்படி ஏதாவது நடக்கும்போது விக்கிலீக்ஸுக்கு தகவலளிக்கும் பல மூலங்களும் கவலை கொள்கின்றனர்’ என்பதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார் ஜூலியன்.
இந்த சர்ச்சைகள் ஒருபக்கம் சென்று கொண்டிருக்க, ஹிலாரியை எதிர்த்துப் போட்டியிடும் டொனால்டு ட்ரம்பின் நெடுநாள் நண்பரான ராஜர் ஸ்டோன், ‘நான் விக்கிலீக்ஸ் அதிபர் ஜுலியன் அசாஞ்சேயுடன் தொடர்பில் இருப்பதாக’த் தெரிவித்தபோது இது ஜூலியனும், டொனால்டு ட்ரம்பும் ஹிலாரியை வீழ்த்த போட்டிருக்கும் திட்டம் என்பதாகவும் ஒரு புதிய சர்ச்சை உருவாகியிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக