திங்கள், 15 ஆகஸ்ட், 2016

கங்கை அமரன்: நாங்களே எதிர்பார்த்திராத உயரத்துக்கு எங்களை பஞ்சு அருணாசலம் அவர்கள்...



(109) நூறு ஜென்மம்... வாழும் சொந்தம்!


ண்ணீரோடு... சோகத்தில்... திக்குமுக்காடி இருக்கிறோம் நாங்கள்.சினிமாவில் நாங்கள் வாய்ப்புத் தேடி அலைந்தபோது... "இது சரிப் படாது... இவங்க சரியா வருவாங்களா?' என எங்களை எல்லோரும் ஒதுக்கி வைத்திருந்த நேரத்தில்... விரக்தியின் உச்சத்தில் நாங்கள் இருந்தபோது.... கதாசிரியர் அண்ணன் ஆர்.செல்வராஜ் மூலமாக எங்களைப் பற்றி அறிந்து... "பாவலர் பிரதர்ஸ்'’என்ற பெயரில் கச்சேரி செய்து வந்த எங்களை...’ பல எதிர்ப்பு களையும் மீறி... எங்கள் மீதும், எங்கள் திறமை மீதும் நம்பிக்கை வைத்து... "அன்னக்கிளி'’படம் மூலம் "இளைய ராஜா'வாக ஆக்கி... அறிமுகப்படுத்தி.... "பாவலர் பிரதர்ஸ்'ஸான எங்களின் திரைஇசைப் பயணத்தில்... ஆதரவையும், ஆலோசனைகளையும் வழங்கி... ஆதரித்த எங்களின் திரையுலகத் தகப்பன்... அண்ணன் பஞ்சு அருணாச்சலம் 09-08-2016 அன்று இயற்கை எய்தினார்.>நான் "பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ்' தொடரில் பல அத்தியாயங்களில் அண்ணன் பஞ்சு அருணாச்சலம் பற்றி குறிப்பிட்டு... எழுதி வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
அண்ணன் பஞ்சு அருணாச்சலத்தை... இழந்து நிற்கிற இந்த நேரத்தில்.... அவர் குறித்து எழுது வது... எனது... எங்களின்... கடமையும், நன்றியும் ஆகும்.>நாங்க நினைக்க முடியாத உய ரத்துல நாங்க இன்னைக்கி இருக்கிறதுக் கும்... நாங்க நினைக்க முடியாத உயரத் துல நாங்க வாழ்றதுக்கும்... நாங்க நினைக்க முடியாத வசதிகள் இன் னைக்கி எங்களுக்கு கிடைச்சிருக்கதுக்கும்... எங்க பரம்பரையே உச்சத்துல இருக்கிறதுக்கும்... வெங்கட்பிரபு, பிரேம்ஜி உட்பட... எங்க பரம்பரையே உச்சத்துல இருக்கதுக்கும் ஒரே காரணம்னா... அண்ணன் பஞ்சுஅருணாச்சலத்த தவிர... வேற யாரையுமே சொல்ல முடியாது.
"அன்னக்கிளி'யில எங்கள அறிமுகப்படுத்தினதோட மட்டுமில்லாம... அவர் கதை எழுதின எல்லா படங்களுக்கும் எங்கள மியூஸிக் டைரக்டரா போட்டு... புதுப்புது இசையவும், புதுப்புது பாட்டுக்களயும் தர்றதுக்கு வழி செஞ்சவர் அவர்.
>தன்னோட கையிலயே எங்கள பிடிச்சுக்கிட்டுப் போற மாதிரி போய்... எல்லா எடத்துலயும் எங்கள ஒசத்தி வச்சார்.">எங்கள அவர் அறிமுகப்படுத்துறதுக்கு முன்னாடி... அவரோட படங்களுக்கு விஜயபாஸ்கர்தான் இசையமைச்சுக் கிட்டிருந்தார். அவர் நினைச்சிருந்தா... பேருக்கு எங்கள அறி முகப்படுத்திட்டு.... விட்டிருக்கலாம். ஆனா... அவர் தொடர்ந்து எங்கள ஆதரிச்சார்.  ’நாங்க கீழ போயிரக்கூடாது.... மேல மேல போகணும்னு மனப்பூர்வமா நினைச்சார். சின்னப் படங் கள்லருந்து... ஏவி.எம். உட்பட... பல பெரிய கம்பெனி படங்கள்லயும் எங்கள ஒசத்தி வச்சார். எங்கள மட்டுமில்ல... ரஜினி, கமலையும் ஒசத்தி வச்சார்.ரஜினியவும், கமலவும் அறிமுகப்படுத்தினவரு டைரக்டர் கே.பாலசந்தரா இருந்தாலும்... சினிமாத்துறையில... அரசாளக்கூடிய அளவுக்கு ரஜினி, கமல்... இவங்க ரெண்டுபேரோட அந்தஸ்தையும் ஒசத்தினது... அண்ணன் பஞ்சு அருணாச்சலம் எழுதின கதைகள்தான்.>ரஜினியோட ஆரம்பகாலப் படங்கள்ல... பெரும்பாலும் அவர் வில்லத்தனமாத்தான் நடிச் சிட்டிருந்தார். அதுவரை கதாநாயகனா நடிச்சுக் கிட்டிருந்த சிவக்குமாரை வில்லத்தனமாவும், அது வரை வில்லனா நடிச்சுக்கிட்டிருந்த ரஜினிய கதா நாயகத்தனமாவும் "புவனா ஒரு கேள்விக்குறி' படத்துல’மாத்தி வச்சார் பஞ்சு அண்ணன். "முரட்டுக்காளை'’கத எழுதி... ரஜினிய கமர்ஷியல் ஹீரோவா ஒசத்தினார். அதேசமயம்... ரஜினிக்குள்ள இருக்க நடிப்புத் திறமைய... மனசுல வச்சு... "எங் கேயோ கேட்ட குரல்'னு ரஜினியோட குணச்சித்திர நடிப்ப வெளிப்படுத்தும் கதயவும் எழுதினார்.
"சகலகலா வல்லவன்'’உட்பட... பல வெற்றிப்படங்கள... கமலுக்கு எழுதினார்.>எல்லாருமே ஒண்ணு கூடுற எடமா பஞ்சு அண்ணனோட வீடு இருந்துச்சு. நாங்க... ரஜினி... பெரும்பாலான டைரக்டர்கள்னு பல பிரபலங்கள்... அவர் வீட்ல கூடுறது வழக்கம். பஞ்சு அண்ண னோட மனைவி... விதவிதமா உணவுகள் சமைச்சுத் தருவார். அந்தம்மா சமைச்சுத் தர்ற உணவ சாப்பிடுறதுக்காகவே நாங்க காத்திருப்போம். பஞ்சு அண்ணன் பெரிய ஆலமரம். அந்த நிழல்ல நாங்க உட்பட... பல நண்பர்கள் இளைப்பாறியிருக்கோம்.வெற்றிகரமான மனிதர் பஞ்சு அண்ணன். கதா சிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், தயாரிப்பாளர்...னு எல்லாத்துறையிலும் வெற்றிகரமான மனிதர். மற்ற கதாசிரியர்கள் நாலஞ்சு கதைகள் சொல்லுவாங்க. அதுல ஒண்ண... தயாரிப்பாளர் தேர்வு செய்வார். ஆனா... பஞ்சு அண்ணன் ஒரே கதை தருவார். அதுவே வெற்றிப்படமா அமைஞ்சிடும். ஒரே நேரத்துல ஏவி. எம். ஸ்டுடி யோவுல... நாலு படங்களோட ஷூட் டிங் நடக்கும். அந்த நாலுமே.... இவரோட கதயில உருவாகுற படங்களா இருந்த காலங்களும் உண்டு.அவரோட வசனங்கள் ரொம்ப பேசப் படும். பெரும்பாலும் அந்த வசனங்கள... ஷூட்டிங் ஸ்பாட் டுலதான் ஒக்காந்து எழுதுவார்.  ""சார்... டயலாக் வேணுமே''னு எஸ்.பி.முத்துராமன் கேட்பார்."பெரிய மாளிகை. வேலையாட்கள் ஆங் காங்கே வேலை செய்து கொண்டிருந்தார்கள். பண்ணயாரப் பார்க்க... சிலர் காத்திருந்தார்கள்... அப்போது வில்லனான பண்ணயார் ஜெய்சங்கர் மாடிப்படிகள் வழியாக கம்பீரமாக இறங்கி வந்தார்'னு லெங்க்தியான ஸீன எழுதிக் குடுத்து... “"இதை எடுத்துக்கிட்டிருங்க'னு சொல்லிக் குடுப்பார். அந்த விஷுவலை முடிக்கிறதுக்குள்ள.... டயலாக்கை எழுதிக் குடுத்திடுவார்.இசையில எக்ஸ்பெரிமெண்ட்டலா சில விஷயங்கள பண்ணணும்னு ராஜாண்ணன் விரும்பினார்.  நல்ல இசைஞானம் கொண்ட பஞ்சு அண்ணன், அதை நிறைவேத்தி வச்சார். லைவ் ஆர்க்கெஸ்ட்ராவ ரெக்கார்டிங்குக்கு பயன்படுத்திக்கிறதுல ராஜாண்ணன் எப்பவுமே ஆர்வமானவர். "காற்றினிலே வரும் கீதம்'’படத்துக்கு 100 கலைஞர்கள் கொண்ட ஆர்க்கெஸ்ட்ராவை பயன்படுத்திக்கச் சொன்னார். அதுதான் ராஜா அவ்வளவு கலைஞர்களைப் பயன்படுத்தி இசையமைச்ச முதல் படம். >பஞ்சு அண்ணன் தயாரிச்ச படங்கள்ல... அதிகமா பாட்டெழுதுனது... கவிஞர் கண்ணதாசன் அய்யா. அவருக்குப் பிறகு அதிகம் பாட்டெழுதுனது நான்தான். ""அமர் எழுதட்டும்''னு’சொல்லிடுவார்.>இன்னைக்கும் ரசிக்கப்படுற... "மணமகளே மருமகளே வா வா'’பாட்டு..., "பொன் எழில் பூத்தது புது வானில்'’பாட்டு... இப்படிப் பல பாட்டு தந்தவர்... தன்னோட படங்களுக்கு என்னய பாட்டெழுத வச்சது என்னோட பாக்கியம். இன்னைக்கி... எங்களோட சொத்து சுகத்துக்கு காரணமானவர் பஞ்சு அண்ணன்.இந்த நன்றிக்காகத்தான்... பஞ்சு அண்ணனோட படங்களுக்கு சம்பளம் பேசாமலே மியூஸிக் பண்ணுவார் ராஜாண்ணன். ராஜாண்ணனின் மூத்த மகன் கார்த்திக்ராஜாவை, தான் தயாரித்த "அலெக்ஸாண்டர்' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார் பஞ்சு அண்ணன். இளைய மகன் யுவன் ஷங்கர் ராஜா "அரவிந்தன்' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான போதே... தங்களது தயாரிப்பான "பூவெல்லாம் கேட்டுப் பார்' படத்தில் யுவனை இசையமைப்பாளராக்கினார்."அன்னக்கிளி'யில ஆரம்பிச்சது எங்க மீதான அவரோட அன்பு.அவர் கடைசியா கலந்துகொண்டது... யுவன் ஷங்கர் ராஜாவோட குழந்தைக்கு பேர் வைக்கிற விழாவுல. சினிமாவத்தாண்டி... எங்க குடும்ப பிரச்சினைகள்லயும் நல்ல ஆலோசனை தருவார். ""ஏன் அமர் இப்படி பண்றே?''னு என்னய கண்டிப்பார். ""விடு ராஜா... அவன் சின்னப்பையன்''னு எனக்கு சப்போர்ட்டும் பண்ணுவார். எங்கள வாழ்க்கைல உயர்த்தவும், ரஜினி, கமல... கமர்ஷியல் ஹீரோக்களா அடையாளங்காட்டவும்... பஞ்சு அண்ணன் பிறந்திருப்பாரோ...அண்ணன் பஞ்சு அருணாச்சலம் படத்துக்கு நான் எழுதுன பல பாடல்கள்ல ஒண்ணு... ‘"ஒரு ராகம் பாடலோடு'னு தொடங்கும். அதுல வர்ற வரிகள்..>ஏதோ நூறு ஜென்மம் ஒன்று சேர்ந்து வந்த சொந்தம்...வாழும் காலம் யாவும் துணையாக வேண்டும் என்றும்......அவரின் ஆன்மா எங்களை என்றும் ஆசிர்வதித்துக்கொண்டே இருக்கும். அந்த மகானை எங்களால் மறக்க முடியாது.>நி ரஜினியுடன் எனது அனுபவம்...(மெட்டுக்கள் தொடரும்...)  நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக