திங்கள், 15 ஆகஸ்ட், 2016

5 காசு முறைகேட்டுக்கு 41 ஆண்டாக தொழிலாளி மீது வழக்கு... டெல்லி அரசின் கண்றாவி

5 காசு பிரச்சினைக்காக 41 ஆண்டாக நடக்கும் வழக்கு
டெல்லி அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தவர் ரன்வீர்சிங் யாதவ்.
இவர், 1973-ம் ஆண்டு பஸ்சில் பணியில் இருந்தார். அப்போது திடீரென டிக்கெட் பரிசோதகர்கள் பஸ்சில் ஏறி சோதனையிட்டனர். அந்த பஸ்சில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் தான் செல்லும் இடத்துக்கு 15 காசு கொடுத்து டிக்கெட் வாங்கினார். அந்த இடத்துக்கு செல்ல 10 காசுதான் கட்டணமாகும். ஆனால், கண்டக்டர் ரன்வீர்சிங் 15 காசு வசூலித்து 10 காசுக்கு மட்டும் டிக்கெட் கொடுத்து இருந்தார். மீதி 5 காசை தான் வைத்துக் கொண்டார். இதை பரிசோதகர்கள் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து துறை ரீதியான விசாரணை நடந்தது. இதில் அவர் குற்றம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
சஸ்பெண்டை எதிர்த்து ரன்வீர்சிங் தொழிலாளர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 1990-ம் ஆண்டு இதன் மீது தீர்ப்பு கூறப்பட்டது. ரன்வீர்சிங்குக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.
ஆனால், டெல்லி அரசு போக்குவரத்து கழகம் இந்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல் செய்தது. இதன் இடைக்கால தீர்ப்பில் ரன்வீர்சிங்குக்கு அரசு போக்குவரத்து கழகம் வழங்க வேண்டிய ரூ.6 லட்சம் பணிக்கொடை மற்றும் பல்வேறு பயன்பாடுகளை வழங்கும்படி கோர்ட்டு கூறியது. ஆனாலும், இறுதி கட்ட தீர்ப்பு வழங்காமல் தொடர்ந்து வழக்கு நடந்து வருகிறது.
இந்த வழக்கு 41 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. தற்போது ரன்வீர் சிங்குக்கு 73 வயது ஆகிறது.
இந்த வழக்குக்காக ரன்வீர்சிங்கும், அரசு போக்குவரத்து கழகமும் சேர்ந்து ரூ. 5 லட்சம் வரை செலவு செய்துள்ளனர். ஆனாலும் 5 காசு பிரச்சினைக்கு இன்னும் முடிவு ஏற்படவில்லை.
இது தொடர்பாக ரன்வீர்சிங் கூறும் போது, எனது முழு வாழ்க்கையையுமே இந்த வழக்குக்காக இழந்து விட்டேன். என்னிடம் இருந்த பணத்தை எல்லாம் வழக்குக்காக செலவழித்து விட்டேன். ஆனால், நான் குற்றம் அற்றவன் என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவு ஆண்டு காலமாக போராடி வருகிறேன். எனது மகன் நான் எந்த தவறும் செய்திருக்க மாட்டேன் என்று நம்புகிறான். அதை நான் உறுதி செய்ய வேண்டும். நமது கோர்ட்டு நடைமுறைகள் சரியில்லாததால் இவ்வளவு காலமாக வழக்கு இழுத்து கொண்டே போகிறது என்று கூறினார்.  முகநூல் பதிவு ,,, நல்லவற்றை பகிர்வோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக