வியாழன், 18 ஆகஸ்ட், 2016

பயமுறுத்தும் புள்ளி விபரங்கள்.. எதிர்காலம் பற்றி காபறேட்டுக்களிடம் கேட்காமல் உண்மையான புள்ளி விபரங்களை கொஞ்சம் பாருங்கள் ...

எண்கள் 1:  2016-ம் ஆண்டு ஜூன் 30 நிலவரப்படி தமிழகத்தில் 83 லட்சத்து 35 ஆயிரம் பேர் வேலையின்றி வேலை வாய்ப்பு அலுலவங்களில் பதிவு செய்திருக்கின்றனர். இவர்களில் கலை பட்டம் பெற்றோர் 4.50 லட்சம் பேர். அறிவியல் பட்டம் பெற்றோர் 6.14 லட்சம் பேர். வணிகவியல் பட்டதாரிகள் 3.40 லட்சம் பேர். பட்டதாரி ஆசிரியராக பதிவு செய்தோர் 3.82 லட்சம் பேர். மொத்தம் 14 லட்சம் பட்டதாரிகள் வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கின்றனர்.
எச்சரிக்கை: தனியார் சுயநிதிக் கல்லூரிகள், பள்ளிகள் பிதுங்கி வழியும் தமிழகத்தில் பணத்தை பறிகொடுத்து வேலை வாய்ப்பிற்காக காத்திருப்போர் 83 லட்சம் – கிட்டத்தட்ட ஒரு கோடிப் பேர். இவர்களது குடும்ப உறுப்பினர்களையும் கணக்கிட்டால் தோராயமாக மூன்று கோடி மக்கள் கிரமமான வருமானம், வேலையின்றி வாழ்கின்றனர். ‘மிஸ்டு’ கால் கொடுத்தே பல இலட்சம் பேரை உறுப்பினராக்கிய தமிழக பாரதிய ஜனதாவும், ஒரு ‘கோடி’ உறுப்பினர்களை கொண்டிருப்பதாக பீற்றும் அ.தி.மு.க அரசும் வேலை வெட்டியற்று இருக்கும் ஒரு கோடிப்பேருக்கு என்ன பதில் சொல்லும்?

__________
எண்கள் 2: தமிழகத்திலுள்ள ஏழு அரசு மற்றும் 14 அரசு உதவி பெறும் பி.எட் கல்லூரிகளின் 1,777 இடங்களுக்கு சென்னை லேடி வெலிங்டன் கல்லூரியில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்கு 3,736 பேர்கள் விண்ணப்பித்திருக்கின்றனர்.
எச்சரிக்கை: தமிழகத்தில் சுமார் 600-க்கும் மேற்பட்ட தனியார் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றில் சுமார் 50,000த்திற்கும் நிகரான இடங்கள் இருக்கலாம். முந்தைய எச்சரிக்கையில் ஆசிரியர் பயிற்சி முடித்து வேலையற்று இருப்போர் எண்ணிக்கை 3.82 லட்சம். ஆக வெலிங்கடன் கவுன்சிலிங்கின் முடிவு என்ன? அடுத்த வருடத்தில் மேலும் சுமார் அரை லட்சம் பேர் ஆசிரியர் வேலைக்காக காத்திருப்போர் பட்டியலில் சேருவர். காத்திருப்போரை உற்பத்தி செய்வதற்க்காக எதற்கு இவ்வளவு கல்லூரிகள்? படித்து முடித்தாலும் வேலை இல்லை என்றால் எதற்காக இந்த அரசு, அதிகாரிகள்?
_________
எண்கள் 3: ராணுவ புரட்சிக்கு முயற்சித்த 35 ஆயிரம் பேரை துருக்கி அரசு கைது செய்தது. இதன் காரணமாக துருக்கி சிறைகளில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதால், நன்னடத்தை மற்றும் குறைவான காலம் தண்டனை பெற்ற 38 ஆயிரம் பேரை விடுவிக்க துருக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
எச்சரிக்கை: சிறையில் இருக்கும் அப்பாவிகளை விடுதலை செய்ய இடநெருக்கடியே தீர்வு என்றால், அப்பாவிகளைக் கைது செய்யும் அரசுகளுக்கு மக்கள் ஏன் இடம் கொடுக்க வேண்டும்?
__________
எண்கள் 4: கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி 2014 -2016 இரு நிதியாண்டுகளில் மத்திய அரசு அளித்த 2,179 கோடி ரூபாயுடன், தமிழக அரசு 1,019 கோடி ரூபாயை சேர்த்து தனியார் பள்ளிகளுக்கு அளித்திருக்கிறது.
எச்சரிக்கை:  இலவசக் கட்டாயக் கல்வி வழங்குவதற்காக ஒரு வருடத்தில் தனியார் பள்ளிகள் பெரும் அரசு பணம் 1500 கோடி ரூபாய் ஆகிறது. இந்த ரூபாயில் எத்தனை அரசு பள்ளிகளைத் திறக்கலாம், மேம்படுத்தலாம், தரத்தை உயர்த்தலாம்?
__________
எண்கள் 4: தண்ணீர் பற்றாக்குறையால் சாகுபடி பாதிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும 2.5 லட்சம் டன் உரங்கள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் வேளான் துறையினர் கவலை அடைந்துள்ளனர்.
எச்சரிக்கை:  சாகுபடி பாதிப்பினால் விவசாயிகளின் வாழ்க்கை முடங்கியது குறித்து கவலைப்படாதவர்கள் தேக்கமடைந்த உரங்களுக்காக கவலைப்படுவது ஏன்? உர முதலாளிகளின் மானியத்திற்கு கேடு வரக்கூடாது என்றா?
__________
எண்கள் 5: தமிழக போக்குவரத்து துறையின் கீழ் 81 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், 60 பகுதி நேர அலுவலகங்கள், 19 சோதனை சாவடிகள் செயல்படுகின்றன. ஊழியர் பற்றாக்குறை அதிகரிப்பினால் 5,000 லாரிகள் தகுதி சான்றிதழை புதுப்பிக்க முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
எச்சரிக்கை: பராமரிப்பு இல்லாததால் சாலைகள் மோசம்; தொழிலாளர் நலத்துறை ஆய்வு இல்லாததால் லாரி ஓட்டுநர்களுக்கு பணிச்சுமை; ஆர்.டி.ஓ துறை ஊழியர் பற்றாக்குறையினால் லாரிகளின் தகுதியை புதுப்பிக்கமுடியவில்லை! பிறகு ஏன் தமிழக மக்கள் அதிகம் விபத்துக்களில் சாக மாட்டார்கள்?
_________
எண்கள் 6: இந்திய பொருளாதாரம் எப்படி இருக்குமென ஆண்டுக்கு 500 கோடி முதல் 2,500 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டும் நிறுவனங்களின் தலைமை நிதி அதிகாரிகள் 300 பேர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் நாட்டின் பொருளாதாரம் நடுத்தர காலத்தில் மற்றும் நீண்ட கால நோக்கில் இருக்குமென 90 சதவீத்தினரும், இந்தியாவில் தொழில் துவங்குவது ஓரளவு சுலபமாகியுள்ளது, முதலீடுகளுக்கான சூழல் மேம்பட்டுள்ளது என 60 சதவீதத்தினரும் தெரிவித்து உள்ளனர்.
எச்சரிக்கை: இந்தியாவில் பொருளாதாரம் எப்படி இருக்குமென பில்லியனர் கம்பெனிகளில் கேட்பதற்குப் பதில் வேலை வாய்ப்பு அலுவலங்களில் பதிவு செய்திருக்கும் மில்லியன் கணக்கான இந்தியர்களிடம் கேட்டால் உண்மை நிலவரம் கிடைக்கும்! வருடத்திற்கு 500 கோடி ரூபாய்களுக்கு மேல் வருவாய் ஈட்டும் முதலாளிகள்தான் இந்தியப் பொருளாதாரத்தின் அளவு கோலென்றால் வருடத்திற்கு ஒரு இலட்ச ரூபாயைக் கூட சம்பாதிக்காத பெரும்பான்மை மக்கள் என்ன பயங்கரவாதிகளா?
__________
எண்கள் 7: ரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றுக்கு தீர்வாக, 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டிற்கு ஒரு முறை “ஆல்பெண்டாசோல்”  எனப்படும் குடல்புழு நீக்கும் மாத்திரைகள் அரசு சார்பில் கொடுக்கப்படுகிறது. இதன்படி சென்னை மாநகராட்சியில் 15.2 இலட்சம் குழுந்தைகளுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டன.
எச்சரிக்கை: ரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாட்டை தீர்க்க குடல்புழு நீக்கும் மாத்திரை எப்படி தீர்வாகும்? சத்துக் குறைபாட்டினால் வரும் நோய்தான் புழுவென்றால் அந்த ஊட்டச்சத்து குறையை உருவாக்கும் அந்த ‘வைரசின்’ பெயர் அரசு!  வினவு.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக