ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

அந்த முத்தத்தின் ஈரம் எப்போதும் காயாதது...


மின்னம்பலம்.காம் :தனி ஒருவருக்காக தமிழகமே கலங்குவதெல்லாம் அவ்வளவு எளிதில் சாத்தியமாகக்கூடியதல்ல. சக கலைஞர்கள், அரசியல்வாதிகள், ரசிகர்கள் என அனைவரும் ஒருமித்த உடைந்த குரலில் வெளிப்படுத்தும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் நா.முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்துக்கு தூவப்படும் மொழிமலர்கள்.
‘இறந்துபோனதை
அறிந்த பிறகு தான்
இறக்க வேண்டும் நான்’
-நா.முத்துகுமார்
தன்னுடைய இறப்பு எப்படி இருக்க வேண்டும் என எழுதாத கவிஞர்கள் இல்லை. அந்த வரிசையில் முத்துக்குமாரும் விதிவிலக்கல்ல. தன் மரணத்தைப்பற்றி எழுதிவைக்க அசாத்திய துணிச்சல் தேவையில்லை. கொண்டாட்டமான வாழ்க்கை ஒன்றே போதும். எப்போதும் தனது வாழ்க்கையை கொண்டாட்டத்துடன் நகர்த்திய நா.முத்துக்குமார், நான்கு வயதில் தன் தாயை இழந்தவர். அந்த இழப்பு எழுதுவதற்கு முன்பாக அவரது பேனா முனையில் வந்து நின்றுவிடும். ஆனால், அந்த சோகம் ரசிகர்களைத் தாக்கிவிடாமல் பார்த்துக்கொள்வதில் இருந்த கெட்டிக்காரத்தனம்தான் அவரை இந்த நிலைக்கு உயர்த்தியது. பெண்மையைப் பற்றி எழுதும்போதெல்லாம், முதலில் தனக்குக் கிடைக்காத தாயன்பை நினைத்து எழுதியவர், பிறகு தன் மகளிடம் கிடைத்த முத்தங்களின் அன்பை முன்நிறுத்தி எழுதத் தொடங்கினார். அதன் பயனாகப் பிறந்ததே, இன்று அனைவரும் கொண்டாடும் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’. 41 வயதில் 1500 பாடல்களுக்கும் மேலாக எழுதியது எத்தனை பெரிய சாதனை. தன் ரசிகர்களுக்கு வார்த்தைகளின்மூலம் மகிழ்ச்சியை மட்டுமே கொடுத்துப் பழக்கப்பட்டவர்
நா.முத்துகுமார்.
காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி என அவரது பாடல்கள், படத்தின் உயிருடன் கலந்து உருவாக்கிய உணர்வுகளுக்கு அடிமைப்பட்ட மக்கள்தான் இன்று மொத்தமாக சேர்ந்து கலங்கிக் கொண்டிருக்கின்றனர். முதன்முதலில் நா.முத்துக்குமார், ஒரு படத்துக்கான எல்லாப் பாடல்களையும் எழுதிய படம் 7ஜி ரெயின்போ காலனி. இந்தப் படத்துக்குப் பிறகு முத்துக்குமார் என்ற படைப்பாளியின் பயணத்தை யாராலும் தடுக்க முடியவில்லை. இசையுலகின் அனைத்துத் தளத்திலும் என்னால் பயணிக்க முடியும் என நிரூபித்த படம் இது.

அடுத்த உச்சம் தொட்டது, சந்திரமுகி படத்தில் ‘கொக்கு பற பற’ பாடலின்மூலம், ‘பாய்ஞ்சு பாயுற பட்டம், இது பட்டய கிளப்புற பட்டம், Super Star பட்டம், நம் பட்டம்’ என்ற வரிகளால் ரஜினியால் கவனிக்கப்பட்டார்.
‘மீனாக்ஷி அம்மனை பாத்தாக்கா கந்து வட்டியோட கொடுமைய போக்கச் சொல்லு
ஸ்ரீ ரங்கநாதனை பாத்தாக்க தல காவேரியை அடிக்கடி வரச்சொல்லு
நேற்று என்ன நாளை என்ன இன்று மட்டும் உள்ளது
என் இஷ்டம்போல ஆட்டம் போடு பறந்து
காத்து இப்போ நம்ம பக்கம் சாதகமா வீசுதே
தும்பி இல்லை நம்ம பட்டம் பருந்து..
நூலோட போட்ட இந்த மாஞ்சா யாரோடும் டீலு போடுமே’
இந்த வரிகளை, அடுத்து நடித்த சிவாஜி படத்தில் ஷங்கரிடம் ரஜினி சிலாகித்துப் பேசியதன் விளைவு, பல வருடங்களாகத் தொடர்ந்துவந்த வைரமுத்து - வாலி போட்டிக்கு ஒரு மாற்று கண்டுபிடிக்கப்பட்டு, சிவாஜி படத்தின் ரஜினியின் அறிமுகப் பாடல் நா.முத்துக்குமாருக்கு வழங்கப்பட்டது. நா.முத்துக்குமார் பற்றி அமரர் வாலி அவர்கள் பேசியபோது. ‘பல்லேலக்கா’ பாடலை நண்பர் ஒருவருக்கு போட்டுக்காட்டி, ‘இது எப்டி இருக்கு சொல்லுங்கண்ணேன்’ என்றார். பாட்டோட சரணத்தைக் கேட்டவர் ‘அண்ணா, ரஜினிக்கு நீங்க எழுதுற பாட்டை யாராலும் அசைக்க முடியுமாண்ணா’ன்னார். ‘முடியும். நா.முத்துக்குமார்னு ஒருத்தன் வந்துட்டான். இந்தமாதிரி வெளிய சொல்லிக்கிட்டு சுத்தாதீங்கன்னு சொல்லி அனுப்பிட்டேன்’ என நா.முத்துக்குமாரின் வளர்ச்சியை வெகுவாக ரசித்தார் வாலி. அதன்பிறகு, முத்துக்குமாரின் பாடல்கள் இடம்பெறாத படங்களே வரவில்லை என்று சொல்லலாம். படத்தில் முத்துக்குமாரின் பாடல்கள் இருந்தால் நன்றாக இருக்குமே! என திரையுலகம் நினைத்ததாகவும் சொல்லலாம். அத்தனை பாடல்களை எழுதிக்கொண்டே இருந்தார்.

வருடத்துக்கு 100 பாடல்கள் எழுதியே ஆகவேண்டும் என்ற குறிக்கோள் இல்லாமலே சாதாரணமாக 100 பாடல்களுக்கும் மேல் எழுதியவர். அதிலும் யுவனுடன் அவர் வைத்திருந்த நட்பு, காதல் அல்லது இதுவரை பெயரிடப்படாத ஒரு உணர்வென்பது யாராலும் யூகிக்கமுடியாத அளவு நெருக்கமானதாக இருந்தது. அதைப்பற்றி எழுத்தில் வடிக்க நா.முத்துக்குமாருக்கு வேறொரு உடல் இப்போது தேவையாக இருக்கிறது. யுவனைப்பற்றி நா.முத்துக்குமார் பேசியதையே உங்களுக்குக் கொடுக்கிறோம். ‘யுவனின் ரசிகர்களுக்கும், அவருக்கும் உள்ள நெருக்கத்தைப்பற்றி பாடும் பாடலை, அவரது சென்னை கான்செர்ட்டுக்காக எழுதியிருக்கிறேன். குழந்தைகளும், இசைக் கலைஞர்களும் மட்டுமே கடவுளிடம் பேசுவதற்கு கற்றுத் தருகிறார்கள்’ என ஃப்ளாய்டு சொல்லியிருக்கிறார். அதுபோல ஒரு நல்ல இசை, எப்போதுமே நமக்கு வழித்துணையா இருந்துக்கிட்டு இருக்கும். நம்முடைய புன்னகைல, சஞ்சலத்துல, கண்ணீர்த் துளியில, கனத்த மௌனத்துல, எல்லாத்துலயும் ஒரு இசை கேட்கும்போதெல்லாம் உருகவைத்து, நம்மை புதியதொரு உலகத்துக்கு, புதிய புதிய ஜன்னல்களைத் திறந்து, புதியபுதிய பிரதேசத்துக்கு அது நம்மைக் கூட்டிச்செல்லும். அப்படி, ஒரு நல்ல இசைக்குச் சொந்தக்காரர் நண்பர் யுவன் ஷங்கர் ராஜா. நான் கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்’ என முத்துக்குமார் பேசிய பேச்சு, அவர்களது நட்புக்குச் சான்றாக என்றும் நிற்கிறது.
ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு பயணம் என முத்துக்குமாரின் படைப்புலகப் பயணம் தொடர்ந்தது. பாட்டு எழுதணுமென்று வரும் இயக்குநர்களை காரில் ஏற்றிக்கொண்டு, ஈ.சி.ஆர். சாலையில் கார்போன போக்கில் படத்தைப் பற்றி பேசிக்கொண்டே எழுதுவார். கார் திரும்பவும் வீடு வந்து நிற்கும்போது பாடல்களைக் கையில் கொடுத்துவிட்டுப் போகும் இயல்பான மனிதராக வாழ்ந்ததால்தான், நா.முத்துக்குமாருக்கு ஒட்டுமொத்த திரையுலகமும் கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறது. போட்டியும், பொறாமையுமாக தவழ்ந்துகொண்டிருந்த தமிழ் சினிமா பாடலாசிரியர்களின் உலகத்தில் சக கலைஞர்களை அரவணைத்து, ‘இந்தப் பாடலை அவருக்குக் கொடுங்கள், என்னைவிட சிறப்பாக எழுதுவார்’ என்று தன்னலம் பேணாத படைப்பாளி நா.முத்துக்குமார் என்றால் அது மிகையாகாது. தன் பாடல்களுக்கு தேசிய விருது கிடைத்தபோது, அனைவரும் போற்றி கொண்டாடிக்கொண்டிருந்த சமயத்தில், ‘தேசிய விருதைவிட, தகவலறிந்ததும் என் மகள் கொடுத்த அந்த முத்தத்தின் ஈரம் என் கன்னத்தில் எப்போதும் ஒட்டிக்கொண்டிருக்கும்’ என அவர் பேசிய பேச்சு, என்றும் இறவாக் கவிஞனை நமக்குக் காட்டுகிறது.
‘ஒருபோதும்
இறந்துபோனதாய் நீ அறிய முடியாது
ஆகவே
நீ இறக்க முடியாது’
-சிவா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக