சனி, 27 ஆகஸ்ட், 2016

தமிழகத்திற்கு தண்ணீரா? எப்படி முடியும் ?- கர்நாடகா முதல்வர்!

மின்னம்பலம்.காம் :‘செழிப்பும், மகிழ்ச்சியும் ஓங்கிய டெல்டா மாவட்டங்கள் எனுமளவுக்கு தஞ்சையைச் சுற்றியுள்ள மாவட்டங்களை அழைப்போம். குறிப்பாக, காவிரிப்படுகை எப்போதும் வளமாக இருக்கும். ஆனால் இன்று? அனைத்தும் வறண்டு காணப்படுகிறது. காவிரியை கர்நாடகம் கட்டுப்படுத்தி தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கிறதே. காவிரி வந்தால் மட்டுமே மீண்டும் செழிக்கும்’ என வேதனையைப் பகிர்கின்றனர் டெல்டா மாவட்ட விவசாயிகள். மனவுணர்வுகளை உணர்ந்து காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக, தமிழ்நாட்டுக்கு 50 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பெங்களூருவில் கர்நாடக முதல்வர் சித்தராமய்யா அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனடியாக நடத்தினார். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமய்யா, ‘இந்த ஆண்டு எங்கள் கர்நாடகாவிலேயே வறட்சி நிலவுகிறது. எங்கள் மக்களே தண்ணீருக்காகத் தவிக்கும்போது, எங்கிருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர இயலும்? கர்நாடக மக்களின் குடிநீர் தேவைக்காக 45 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது.
கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகளில் 50 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது. தற்போது, தமிழ்நாட்டில் மேட்டூர் அணையில் 34 டிஎம்சி தண்ணீர் உள்ளது. வேண்டுமானால் அதை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஆண்டு கர்நாடகாவுக்கே போதிய தண்ணீர் இல்லாததால் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வாய்ப்பேயில்லை. அப்படியிருக்க, எங்கிருந்து காவிரியில் 50 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிடுவது? அந்தப் பேச்சுக்கே இடமில்லை. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் உள்ள மனுவை சட்டரீதியாக சந்திக்க கர்நாடகா தயாராக உள்ளது’ என தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமய்யா, முன்னாள் முதல்வர் குமாரசாமி, மத்திய அமைச்சர் ஆனந்த்குமார், கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் பாட்டீஸ், எதிர்க்கட்சித் தலைவர் ஈஸ்வரப்பா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக, கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ஆனந்த்குமார், ‘கர்நாடகாவில் போதிய மழையின்றி விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதனால் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது. கர்நாடக மண்ணில் மொழி, நிலம் போன்ற பிரச்னைகளில் நாங்கள் அனைத்துக் கட்சியினரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக கர்நாடக மக்களுக்காக குரல் கொடுப்போம். காவிரி தண்ணீர் பிரச்னை தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் தெரிவிக்கப்படும்’ என்றார். இக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா கலந்து கொள்ளவில்லை. கூட்டம் நடைபெற்ற சமயத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணைப் பகுதியில் ஆய்வு செய்து, விவசாயிகளிடம் ஆலோசனை நடத்தினார். முன்னதாக, தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதால், தமிழகத்துக்கு சிறிதளவாவது தண்ணீர் திறந்துவிட்டால்தான் காவிரிப் பிரச்னை தொடர்பான வழக்கில் தங்களால் வாதிட முடியும்’ என, காவிரி நதிநீர் வழக்கில் கர்நாடக சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் நாரிமன், அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக