ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

கலைஞர்:ஜெ,கடிதங்கள் எழுதியதாக கூறுவது பொய் ! சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளம் அணை....

சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டப் போகும் திட்டம் தொடர்பாக தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கும் நிலையில் இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில், “சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை ஒன்றைக் கட்டுவது பற்றி, மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையும், கேரள அரசும் எழுதிய பல கடிதங்களுக்கு தமிழக அரசிடமிருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை. இந்நிலையில், அணைக் கட்டும் திட்டத்திற்கான அனுமதியை நதி நீர்ப் பள்ளத்தாக்கு மற்றும் புனல் மின் திட்டங்களுக்கான மத்திய நிபுணர்கள் குழு, இந்தத் திட்டத்தை மேற்கொள்வதற்கான வரைமுறைகளைப் பரிந்துரை செய்திருக்கிறது” என்று "இந்து" நாளிதழில் 26-8-2016 அன்று செய்த வெளிவந்தது. இதைக் கண்டு அதிர்ந்து நானும் தமிழ்நாட்டில் உள்ள மற்ற எதிர்க் கட்சிகளின் தலைவர்களும் அவசர அவசரமாக அறிக்கைகள் விடுத்திருந்தோம்.

அனைத்துக் கட்சிகளின் சார்பில் அறிக்கைகளை வெளியிட்ட பிறகு, தமிழக அரசு விழித்துக் கொண்டு, தமிழக முதலமைச்சர் அவசர இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு ‘சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்டும் திட்ட ஆய்வுக்கான அனுமதியினை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்’ என்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், இந்த அணைகட்டும் திட்டத்தை கேரள அரசு தொடரக் கூடாது என்று கேரள அரசுக்கு ஆலோசனை வழங்க வேண்டுமென்று கடந்த 21-6-2012 அன்று அப்போதைய பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்ததாகவும், முதல் அமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டிருக்கிறார். 2012ஆம் ஆண்டிற்குப் பிறகு நான்கு ஆண்டுகள் ஆகின்றனவே, இந்த இடைக்காலத்தில் தமிழக அரசு முக்கியமான இந்தப் பிரச்சினை பற்றி டெல்லியில் ஆளும் புதிய அரசுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறதா? நேரில் சந்தித்த போது, பிரதமரிடம் பேசியிருக்க வேண்டாமா? இப்போது அணை கட்டுவதற்கான முயற்சிக்கு மத்திய அரசு ஒப்புதல் தந்த பிறகு, அதனைத் திரும்பப் பெற வேண்டும் என்று கடிதம் எழுதுவது தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்கின்ற முயற்சி அல்லவா ?
முதலமைச்சர் ஜெயலலிதா நேற்றைய தினம் (27-8-2016) பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "தமிழக அரசுக்கு மத்தியச் சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை பல முறை கடிதம் எழுதியதாகக் குறிப்பிட்டிருப்பது உண்மையில் தவறான தாகும்” என்று தெரிவித்திருக்கிறார்.. ஆனால் 26-8-2016 தேதிய "இந்து"ஆங்கில நாளிதழில் "மத்திய அரசின் நீர் வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் 4-5-2016 அன்று தமிழக அரசின் பொதுப்பணித் துறைச் செயலாளருக்கு கடிதம் எழுதினார். ஆகஸ்ட் 11, 12ஆம் தேதி வரை எந்தப் பதிலும் தமிழக அரசிடமிருந்து வரவில்லை" என்று எழுதப்பட்டிருக்கிறது. எனில் ; முதல் அமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு பல முறை கடிதம் எழுதியதாகக் குறிப்பிட்டிருப்பது தவறல்லவா? இல்லை எனில் 4-5-2016 அன்று தமிழக அரசின் பொதுப்பணித் துறை செயலாளருக்கு மத்திய அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியதாகக் கூறியிருப்பது தவறான செய்தியா? இதிலே எது உண்மை? மத்திய அரசு சொல்வது சரியா; அல்லது ஜெயலலிதா சொல்வது சரியா? எது சரி என்று நாடு தெரிந்து கொள்ள வேண்டாமா?
முதலமைச்சர் ஜெயலலிதா கூறுவது போல தமிழக அரசு பல கடிதங்கள் எழுதியது உண்மை என்றால், எந்தெந்த தேதியில் கடிதங்கள் தமிழக அரசின் சார்பில் அண்மைக் காலத்தில் எழுதப்பட்டன என்ற விவரங்களையெல்லாம் தெரிவிக்க வேண்டாமா? தமிழக அரசு நடவடிக்கை எடுக்கிறதோ இல்லையோ, சிறுவாணியில் அணை கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்தால் தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்கள் பாலைவனமாகி விடும் . எனவேதான், உடனடியாக மத்திய-மாநில அரசுகள் சிறுவாணியில் கேரள அரசு அணையைக் கட்டுவதைத் தவிர்த்திட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கொங்கு மண்டலத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த உள்ளது.
அதன்படி வரும் செப்டம்பர் 3ஆம் தேதியன்று காலை 10 மணி அளவில் கோவை சிதம்பரம் பூங்காவில், கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களின் சார்பில் கழகப் பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமையில், மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். கழகத் தோழர்கள் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று சிறப்பாக கழகத்தின் குரலை எதிரொலிக்க வேண்டுமென்றும்; மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த பொது மக்கள் குறிப்பாக விவசாயப் பெருமக்கள் ஒத்துழைத்திட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி அவர்கள்.  மின்னம்பலம்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக