ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

சமணர்களிடம் இருந்து கொல்லாமையை கற்ற இந்துக்கள்


tamilvu.org  :சமணசமயக் கொள்கைகளில் சில இப்போதும் இந்து மதத்தில்24 காணப்படுகின்றன. சமணசமயக் கொள்கைகள் இரண்டு வழியாக இந்து மதத்தில் சேர்ந்திருக்க வேண்டும். இந்துமதம் மேலோங்கிச் சமணசமயம் குன்றியபோது, சமணர்கள் இந்துமதத்தை மேற்கொண்டு இந்துக்களாக மாறியபோதிலும், தாம் முன்பு மேற்கொண்டிருந்த சமண சமயக் கொள்கைகளையும் விடாமல் ஒழுகி வந்தது ஒன்று. சமணசமயத்தை அழித்த இந்துமதம், சமண சமயத்தின் சிறந்த கொள்கைகள் சிலவற்றைத் தன் கொள்கையாக ஏற்றுக்கொண்டது மற்றொன்று. இவ்வாறு இரண்டு வழிகளில், சமணசமயக் கொள்கைகள் இந்துமதத்தில் கலந்து விட்டன. இந்து மதத்தில் காணப்படுகிற சமணசமயக் கொள்கைகளை ஆராய்வோம்.
ஊன் உண்ணாமை: இந்தக் கொள்கையை இந்து மதம் சமணசமயத்தினிடமிருந்து பெற்றுக்கொண்டது. பண்டைக் காலத்தில் தமிழர், முருகன் கொற்றவை முதலிய தெய்வங்களுக்கு ஆடு கோழி முதலியவற்றைப் பலியிட்டு வணங்கியதோடு, ஊன் உணவையும் உட்கொண்டுவந்தனர்.
இதற்குச் சங்க நூல்களே சான்றாகும். ஆரியரும் (பார்ப்பனரும்) பண்டைக்காலத்தில் இந்திரன், வருணன் முதலிய தெய்வங்களுக்கு ஆடு மாடு குதிரை முதலியவற்றைக் கொன்று பலியிட்டுவந்ததோடு புலாலுணவைப் புசித்து வந்தனர். ஆரியப்பார்ப்பனர் ரிஷிகளுக்கு விருந்துசெய்யும் போதும், சிராத்தம் செய்யும்போதும் கன்றுக்குட்டி, ஆடு, மான், முயல், உடும்பு முதலிய பிராணிகளின் மாமிசத்தைச் சமைத்து உண்டனர். எத்தனை வகை மாமிச உணவைச் சமைக்கிறார்களோ அத்தனை உயர்வாக மதிக்கப்பட்டது அவர்களுடைய விருந்து. இதற்கு அவர்களுடைய வேதம் இதிகாசம் முதலிய நூல்களே சான்றாகும். இக் காலத்திலும் வடநாட்டுப் பார்ப்பனர் மீன் மாமிசம் முதலிய புலால் உணவை உண்டுவருவது கண்கூடு. சமணசமயம் நமது நாட்டிலே பரவிச் செல்வாக்கடைந்திருந்த போது அது ஊன் உண¢பதைத் தடுத்து வந்தது. ஊன் உண்பவரும் பிராணிகளைக் கொல்கின்றவரும் இழிந்தவர் என்றும், மீன்பிடித்தல் வேட்டையாடுதல் முதலிய கொலைத் தொழில் செய்வோர் இழிபிறப்பினர் என்றும் சமணசமயம் கூறிற்று.

‘‘விலக்கின் மாக்கொன்று வெண்ணிணத் தடிவிளிம்படுத்த
பல்லினார்களும், படுகடல் பரதவர் முதலா
எல்லைநீங்கிய இழிதொழில் இழிகுலம் ஒருவி,
நல்ல தொல்குலம் பெறுதலும், நரபதி! அரிதே.’’

என்று சமண நூலாகிய சிந்தாமணி கூறுகிறது. இந்துக்கள் தம் தெய்வங்களுக்கு ஆடுமாடுகளைப் பலியிடுவதையும் யாகங்களில் உயிர்க்கொலை செய்வதையும் சமணர் வன்மையாகக் கண்டித்து வந்தனர். வைதீகராகிய ரிஷிகள் (பிராணிகளின் உயிரைக்கொன்று) யாகம் செய்தபோது அதை அரக்கர்கள் அழித்துவந்தார்கள் என்று இதிகாச புராணங்களில் கூறப்படுகிறதல்லவா? இதன் உண்மைக் கருத்து யாதெனின், ஆரியப்பார்ப்பனர் யாகத்தின்பேரால் பிராணிகளைக் கொலை செய்துவந்ததை அரக்கர்கள்25 அஃதாவது சமண சமயத்தவர் தடுத்துவந்தார்கள் என்பதே. சமண சமயத்தவருடைய கொள்கை நாடெங்கும் பரவிச் செல்வாக்கடைந்த போது, இந்து மதத்தவரும் இக் கொள்கையைத் தமது கொள்கையாக ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. மற்றும் பிற்காலத்திலே இந்துமதம் செல்வாக்கடைந்து சமணசமயம் பின்னடைந்த காலத்தில், சமணர்கள் ஏராளமாக இந்து சமயத்தில் சேர்ந்து மதம் மாறியபோது, தமது ஊனுண்ணாக் கொள்கையை விடாமல் இந்து மதத்தில் புகுத்திவிட்டனர். இவ்வாறு இரண்டு விதத்தில் சமணரின் இக் கொள்கை இந்து மதத்தில் சேர்ந்து விட்டது.
பௌத்தர்களும் ஊனுண்ணாக் கொள்கையுடையவர். ஆனால், அவர்கள் கொல்லாமையை மட்டும் வற்புறுத்திக் கூறி ஊனுண்ணாமையை அதிகமாக வற்புறுத்தாது விட்டனர். சமணரோ கொல்லாமை, ஊன் உண்ணாமை ஆகிய இரண்டையும் வற்புறுத்தியதோடு, இவற்றைத் தமது மதத்தின் முதன்மையான கொள்கையாகவும் கொண்டனர். ஆதலால், சமணர்களாலேயே இந்தக் கொள்கை நமது நாட்டில் அதிகமாகப் பரவிற்று என்று கருதலாம்.
ஊன் உணவு அல்லாத ‘‘காய்கறி’’ உணவுக்கு இப்போது சைவ உணவு என்று பெயர் கூறப்படுகிறது. சமண சமயம் செல்வாக்குற்றிருந்த பண்டைக்காலத்திலே ‘‘மரக்கறி’’ உணவுக்கு ஆருகத உணவு என்று பெயர் வழங்கியதாகத் தெரிகிறது. இலங்கையிலுள்ள தமிழர்கள் ‘‘காய்கறி’’ உணவை இப்போதும் ஆரத உணவு என்று வழங்கி வருகின்றனராம்26. ஆரத உணவு என்பது ஆருகத உணவு என்பதன் திரிபு.
தீபாவலி: இது சமணரிடமிருந்து இந்துக்கள் பெற்றுக்கொண்ட பண்டிகை. கடைசித் தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர், பாவாபுரி நகரத்திலே அவ்வூர் அரசனுடைய அரண்மனையிலே தங்கியிருந்தபோது, அங்குக் குழுமியிருந்த மக்களுக்கு அறவுரை செய்தருளினார். இரவு முழுவதும் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு விடியற்காலையில் முடிவடைந்தது. வைகறைப்பொழுது ஆனபடியினாலே, சொற்பொழிவைக் கேட்டுக்கொண்டிருந்த மக்கள் அனைவரும் தத்தம் இல்லம் செல்லாமல் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கிவிட்டனர். வர்த்தமான மகாவீரரும், தாம் அமர்ந்திருந்த ஆசனத்திலிருந்தபடியே வீடுபேறடைந்தார். பொழுதுவிடிந்து எல்லோரும் விழித்தெழுந்து பார்த்தபோது, மகாவீரர் வீடுபேறடைந்திருப்பதைப் கண்டு அரசனுக்கு அறிவித்தனர். அவ்வரசன் மற்ற அரசர்களை வரவழைத்து அவர்களோடு யோசனை செய்து, உலகத்திற்கு ஞானவொளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவுகூர்ந்து வழிபடும்பொருட்டு, அவர் வீடுபெற்ற நாளில் வீடுதோறும் விளக்குகளை ஏற்றிவைத்து விழாக் கெண்டாடும்படி ஏற்பாடு செய்தான். அதுமுதல் இந்த விழா தீபாவலி என்னும் பெயரால் கொண்டாடப்படுகிறது. (தீபம் = விளக்கு. ஆவலி = வரிசை) மகாவீரர் விடியற்காலையில் வீடுபேறடைந்தபடியால், தீபாவலி விடியற்காலையில் கொண்டாடப்படுகிறது. நீராடியபின்னர் திருவிளக்கேற்றித் தீபாவலிப் பண்டிகை கொண்டாடுவது வழக்கமாக இருக்கிறதன்றோ?
சமணசமயம் வீழ்ச்சியடைந்த பிறகு, சமணர்கள் பெருவாரியாக இந்துமதத்தில் சேர்ந்தனர். சேர்ந்த பிறகும் அவர்கள், தாம் வழக்கமாகக் கொண்டாடிவந்த தீபாவலியை விடாமல் தொடர்ந்து கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்கமுடியாத இந்துக்கள், இதைத் தாமும், ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால், பொருத்தமற்ற புராணக் கதையைக் கற்பித்துக்கொண்டார்கள். திருமால் நரகாசுரனைக் கொன்றார் என்றும், அவன் இறந்தநாளைக் கொண்டாடுவதுதான் தீபாவலிப் பண்டிகை என்றும் கூறப்படும் புராணக் கதை பொருத்தமானது அன்று. அன்றியும், இரவில் போர் புரிவது பண்டைக்காலத்து இந்தியப் போர்வீரர்களின் முறையும் அன்று. சூரியன் மறைந்த உடனே போரை நிறுத்தி, மறுநாள் சூரியன் புறப்பட்டபிறகுதான் போரைத் தொடங்குவது பண்டைக்காலத்துப் போர்வீரர்கள் நடைமுறையில் கொண்டிருந்த வழக்கம். சமணர் கொண்டாடி வந்த, மகாவீரர் வீடுபேறடைந்த திருநாள் தீபாவலி என்பதில் ஐயமில்லை. ஆனால், இந்தப் பண்டிகையை ஏற்றுக் கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்ட பிறகு, இந்துக்கள் இந்தப் பண்டிகையின் உண்மைக் காரணத்தை ஏற்றுக் கொள்ள மனம் இல்லாமல் புதிதாகக் கற்பித்துக்கொண்ட கதைதான் நரகாசுரன் கதை.
சமண சமயத்திலிருந்து இந்துக்கள் சில கொள்கைகளைக் கைப்பற்றிக் கொண்டார்கள் என்று கூறினோம். இக் கொள்கைகளில் இந்துக்களாகிய சைவர்கள் சில முக்கியக் கொள்கைகளைத் தமக்குரியனவாகக் கொண்டிருக்கிறார்கள். அவற்றை முறையே ஆராய்வாம்:
சைவமும் சமணமும்: சைவர்களுக்கும் சமண சமயத்தவருக்கும் பொதுவான சில கொள்கைகளை இங்கு ஆராய்வோம். இக் கொள்கைகளில் சில இரண்டு சமயத்துக்கும் பொதுவானதாக, அடிப்படையான கொள்கைகளில் ஒற்றுமையுள்ளதாக இருக்கின்றன. வேறு சில மேற்பார்வைக்குப் பொதுவாகவும் அடிப்படைக் கொள்கையில் வேறுபட்டும் காணப்படுகின்றன. ஆயினும், மிக மிகப் பண்டைக் காலத்தில், இவ்விரு சமயங்களும் மிக நெருங்கிய தொடர்புடையனவாய் இருந்து பின்னர்க் காலஞ் செல்லச் செல்ல வேறுபட்டு வெவ்வேறு தத்துவப் பொருள்களைக் கற்பித்துக் கொண்டனவாகத் தோன்றுகின்றன. இக் கொள்கைகளை ஆராய்ந்து காண்போம்.
சிவராத்திரி: சைவ சமயத்தவர் சிவராத்திரியைப் புனிதநாளாகக் கருதிக் கொண்டாடி வருகின்றனர். எல்லாச் சிவன் கோயில்களிலும் சிவராத்திரி வழிபாடு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. சமண சமயத்தவரும் சிவராத்திரியைக் கொண்டாடி வருகின்றனர். இதில், சிறப்பு என்னவென்றால், சைவர் சமணர் ஆகிய இருவரும் கொண்டாடும் சிவராத்திரி மாதம், பக்ஷம், திதி, நட்சத்திரம் முதலிய எல்லாம் ஒன்றாக அமைந்திருப்பதுதான்.
சைவர்கள் சிவராத்திரியன்று இரவு சிவபெருமானை வழிபட்டு ஒழுகினால் சிவகதியடையப் பெறலாம் என்று கருதுகின்றனர். ஆனால், சமண சமயத்தவர் சிவராத்திரி கொண்டாடுவதன் காரணம் என்ன? முதல் தீர்த்தங்கரராகிய ஆதிபகவன் (ரிஷபதேவர்) திருக்கயிலாய மலையிலே வீடுபேறடைந்தார் என்பது சமண சமயத்தவர் கொள்கை. வெள்ளியங்கிரியாகிய கயிலாயமலையிலே ஆதிபகவன் வீடுபேறடைந்தார் என்பதும், அது மாசித் திங்கள், அமரபக்ஷத்துச் சதுர்த்தசியன்று நள்ளிரவு என்பதும் சமணசமயக் கொள்கை. சமணர்கள், சைவ சமயத்திலே பிற்காலத்தில் சேர்ந்தபோது, தமது பழைய சிவராத்திரி வழிபாட்டைச் சைவ சமயத்தில் புகுத்தியிருக்கலாம். அல்லது, ஆதிகாலத்திலிருந்தே சிவராத்திரி வழிபாடு சைவ சமயத்தில் இருந்தது என்று கூறினால் அதை மறுத்துக் கூற யாதொரு சான்றும் கிடையாது. அப்படியானால், சமணர்களுக்கும் சைவர்களுக்கும் சிவராத்திரி வழிபாடு தொன்று தொட்டு இருந்து வருகிறது என்று கருதவேண்டும்; இதனால், மிகமிகப் பழைய காலத்தில் இரண்டு சமயங்களும் ஒன்று பட்டிருந்திருக்க வேண்டும் என்று கருத இடமுண்டு.
மோட்சமாகிய வீட்டுற்குச் சிவகதி என்றும், சிவபுரி என்றும், அருகக்கடவுளுக்குச் சிவகதிநாயகன், சிவன் என்றும் பெயர்கள் கூறப்படுவதைச் சமணசமய நூல்களில் பெரிதும் காணலாம். அது போலவே, தேவாரம் முதலிய சைவ சமய நூல்களிலே வீடுபேறு சிவகதி என்று கூறப்படுகிறது.
திருக்கயிலாயமலை : கயிலையங்கிரி என்னும் திருக்கயிலாயமலை இமயமலைக்கு வடபுறத்திலே திபெத்து நாட்டில் இருக்கிறது. இதற்கு வெள்ளியங்கிரி என்னும் பெயரும் உண்டு. பனிக்கட்டியால் நிறைந்துள்ள இந்த மலை இரவும் பகலும் வெண்மைநிறமாக வெள்ளிபோல் காணப்படுவதால் இதற்கு இப்பெயர் வாய்ந்தது. சமணர்களுக்கும் சைவர்களுக்கும் இந்த மலை புனிதமான திருப்பதியாகும். சிவபெருமான் இந்த மலையில் எழுந்தருளியிருக்கிறார் என்றும், இங்குள்ள சிவபெருமானை வணங்குவதற்காகத் திருநாவுக்கரசர் புறப்பட்டுச் சென்று, இக்கட்டான வழியில் செல்ல முடியாமல் திரும்பி வந்து விட்டார் என்றும் புராணம் கூறுகிறது. சுந்தரமூர்த்தி நாயனாரும் சேரமான் பெருமாள் நாயனாரும் முறையே யானை மீதும் குதிரை மீதும் அமர்ந்து ஆகாய வழியாக இக் கயிலை மலைக்குச் சென்றார்கள் என்றும், காரைக்கால் அம்மையார் இம்மலைக்குச் சென்று இவ்விடத்தைக் காலினால் மிதிக்க அஞ்சித் தலையினால் நடந்து சென்றார் என்றும் சைவ புராணங்கள் கூறுகின்றன. சைவசமயப் பெரியார்கள் எல்லாரும் திருக்கயிலாய மலையையும் அதில் எழுந்தருளியிருக்கும் கயிலாயநாதனையும் தம் பாடல்களில் பாடியிருக்கிறார்கள். திருக்கயிலாய மலை சைவர்களுக்குப் புனிதமான திருமலையாகும்.
அது போன்றே, சமணர்களுக்கும் திருக்கயிலாயமலை புனிதமான திருப்பதியாகும். ஏன்? சமணருடைய முதல் தீர்த்தங்கரரான ஆதிநாதர் இக்கயிலை மலையிலே வீடு பேறடைந்தார். ஆகவே, இது சமணர்களுக்குப் புண்ணியத்திருப்பதியாகும் திருக்கலம்பகம் என்னும் சமண சமய நூல், ஆதிநாதரை, கயிலாயம் என்னும் திருமலைமேல் உறைகின்றனர் என்று கூறுகிறது. மேலும்,

‘‘போக்கறு சுடர் வெள்ளி
மாக்கயிலை மிசை நாப்பண்’’

ஆதிநாதர் எழுந்தருளியிருக்கிறார் என்றும் மேற்படி நூல் கூறுகின்றது. இதனால் சைவர்களுக்குரியது போலவே சமணர்களுக்கும் உரிய புனிதமான திருப்பதி கயிலாயமலை என்பது விளங்குகிறது.
சடைமுடி : சைவர்கள் வணங்கும் சிவபெருமான் சடை முடியுடையவர் என்றும், அதனால் அவர் சடையன் என்று கூறப் படுகிறார் என்றும் சைவ நூல்கள் கூறுகின்றன. சமணரின் ஆதி நாதரும் (ரிஷபதீர்த்தங்கரர்) சடை முடியுடையவர் என்று சமண நூல்கள் கூறுகின்றன. ஆதிநாதரைத் தவிர, ஏனைய இருபத்து மூன்று தீர்த் தங்கரர் எல்லோரும் சடைமுடியற்றவர்கள். இவர்கள் திருவுருவங்கள் சடைமுடியில்லாமல் அமைக்கப்பட்டிருப்பதை இன்றும் சமணக் கோயில்களில் காணலாம். ஆனால், ஆதிநாதர் மட்டும் சிவபெருமானைப்போலவே சடைமுடியுடையவர். இதனைத் திருக்கலம்பகம்,
‘‘ஆலநெடு நிழலமர்ந்தனை
காலம் மூன்றும் கடந்தனை
தாழ்சடை முடிச் சென்னிக்
காசறு பொன்னெயிற் கடவுளை’’

என்று கூறுகிறது. இக்காலத்துச் சமணர் கோயில்களில் ரிஷபதேவராகிய ஆதிநாதர் திருவுருவமும், ஏனைய தீர்த்தங்கரரைப் போலவே, சடைமுடியில்லாமல் காணப்படுகின்றது. ஆனால் பண்டைக் காலத்திலே இருந்த ஆதிநாதர் திருவுருவங்கள் சடைமுடியுடன் அமைந்திருந்தன. இதற்கு ஆதாரமாகப் பழைய ஆதிநாதரின் திருவுருவங்கள் இன்றும் சடைமுடியுடன் சில இடங்களில் காணப்படுகின்றன.
இப்போதைய திகம்பரச் சமணர் இதை முற்றும் மறந்து விட்டனர். திருக்கலம்பகம் ஒன்று தவிர ஏனைய சமணத் தமிழ் நூல்கள் ஆதிநாதர் சடைமுடியுடையவர் என்பதைக் கூறவில்லை. ஆனால், சுவேதாரம்பரச் சமணரால் எழுதப்பட்ட திரிசஷ்டி சலாகாபுருட சரித்திரம் (ஆதீஸ்வர சரிதம்) இதைக் கூறுகிறது. சமண முனிவர் துறவுகொள்ளும்போது, லோசம் செய்துகொள்வது வழக்கம். அஃதாவது தலைமயிரைக் கைகளால் பிய்த்துக் களைவது வழக்கம். அந்த முறைப்படி, ஆதிநாதர் லோசம் செய்தபோது, இந்திரன் பொன்தட்டில் அந்த மயிரை ஏந்தினான் என்றும், ஆதிநாதர் தமது தலையிலிருந்து நான்கு பக்கங்களிலும் நான்கு பிடி மயிரைப் பிய்த்துக் களைந்து தட்டில் வைத்து, மற்றப் பக்கத்து மயிரையும் களையத் தொடங்கியபோது, இந்திரன் அந்த மயிரின் ஆழகைக் கண்டு இனியும் பிய்த்துக் களைய வேண்டாம் என்று வேண்டிக் கொண்டதாகவும், இந்திரன் வேண்டுகோளுக்கு இணங்கி ரிஷபர் (ஆதிநாதர்) மற்றச் சிகைகளைக் களையாமலே விட்டார் என்றும் ஆதீஸ்வர புராணம் கூறுகிறது.27
எருது அல்லது விருஷபம் : சமணருடைய முதல் தீர்த்தங்கரரான விருஷப தேவராகிய ஆதிநாதருக்கு முத்திரை (அடையாளம்) விருஷபம் என்னும் ஏறு ஆகும். இவரது திருவுருவத்தின்கீழ் விருஷபம் (ஏறு) அமைக்கப் பட்டுள்ளதைச் சமணக் கோயில்களில் இன்றுங் காணலாம். இவ்வாறே, சைவரும் சிவபெருமானுடைய வாகனம் ஏறு (விருஷபம்) என்று கூறுகின்றனர்.
அன்றியும், தருமத்திற்கு (அறத்திற்கு) வடிவம் ஏறு (எருது) என்று கூறுவது சமணசமயத் துணிபு. இதனை,

‘மணியினுக் கொளி; அகமலர்க்கு மல்கிய
அணியமை அங்குளிர் வாசம்; அல்லதூஉம்
திணி இமிலேற்றினுக் கொதுக்கம்; செல்வநின்
இணைமலர்ச் சேவடி கொடுத்த என்பவே.’

எனவரும் சீவகசிந்தாமணி முத்தியிலம்பகச் செய்யுளால் அறியலாம். இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், ‘இமிலேறென்றது- அறத்தினை; தருமத்திற்கு அது வடிவமாகலின்’ என்று எழுதி யிருப்பதும் கருதத் தக்கது. விருஷபத்தைத் தருமத்தின் வடிவமாகக் கூறுவது போன்று தியானத்தையும் எருதின் வடிவமாகச் சமணர் கூறுவர். இதனை, ‘தியானமெனும் நரையம் புகா வினைத் தெவ்வென்றவா’ எனவரும் திருநூற்றந்தாதி28 அடியினாலும். ‘தியானம் என்னும் இடபத்திலே புகுந்து தீவினைப் பகையை வென்றபடி. நரை - விடபம்’ என வரும் அதன் பழைய உரையினாலும் அறியலாம்.
இந்தக் கருத்தைச் சைவரும் கொண்டுள்ளார். ஆதிநாதர் திருவுருவத்தின்கீழ், சமணர் எருது உருவத்தை (சிறியதாக) அமைப்பதைச் சைவர் சற்றுப் பெரியதாகச் செய்து, சிவபெருமானது வாகனம் எருது என்றும், அவர் அதன்மேல் ஊர்ந்து வந்து அடியார்களுக்குக் காட்சியளிக்கிறார் என்றும் கூறுகின்றனர். விருஷப வாகன சேவையைச் சிறப்பாகவும் கருதுகின்றனர். அன்றியும், தருமத்தின் உருவந்தான் எருது என்று சமணரைப் போன்றே சைவரும் கூறுகின்றனர். இதனை,
‘வானேறுரு மெனதாயுதம் அவனாயுத மழுவாள்
யானேறுவ தயிராபதம் அவனேறுவ தெருதே’

என்று இந்திரன் சிவனைப் பழித்துக் கூறியதாகக் கூறப்படும் தக்கயாகப்பரணி29த் தாழிசையினாலும், ‘எருதென்றது எருதையன்று; தருமமென்பது30, தருமம் வெளுத்திருத்தலும் வஸ்துக்களில் வலிதாதலானும் தருமத்தின்மேலல்லது ஈசுவரன் ஏறானென்று கொண்டான். இதில் தேவேந்திரன் ஈசுவரனை இகழ்ந்தவாறாவது தரும வாகனன் யுத்தஞ் செய்ய வல்ல னல்லனென்றவாறு’ எனவரும் அதன் பழைய உரையினாலும் அறியலாம். இதனால், சமணரைப் போன்றே சைவரும் விருஷபத்தைத் தருமத்தின் (அறத்தின்) உருவாகக் கொண்டிருப்பது உணரலாம். இவ்வொற்றுமை இச் சமயங்களின் பண்டையத் தொடர்பைக் காட்டுகிறது.
நந்தி - கோமுகயக்ஷன்: திருக்கயிலாயமலையில் வீடு பேறடைந்த ஆதிநாதராகிய விருஷப தேவருடைய பரிவார தெய்வங்களில் கோமுகயக்ஷர் முதன்மையானவர் என்று சமணசமய நூல்கள் கூறுகின்றன. (கோமுகயக்ஷன் என்பதற்குப் பசுவின் முகத்தையுடைய யக்ஷன் என்பது பொருள்.
கோமுகயக்ஷன் உருவம் எருது அல்லது பசு முகத்துடன் சித்திரங்களிலும் சிற்பங்களிலும் அமைக்கப் படுகின்றன. சைவசமயத்தவரும் தம் சிவபெருமானுடைய பரிவாரத் தெய்வங்களில் ‘நந்தி தேவரை’ முதன்மையாகக் கூறுகின்றனர். சைவரின் நந்திதேவருக்கும் சமணரின் கோமுக யக்ஷனைப் போன்றே எருது முகம் உள்ளது. சிவன் கோவில்களில் நந்திவாகன சேவை சிறந்ததாகக் கருதப்படுகிறது.
அன்றியும், சமணர்களில் நந்திகணம் என்னும் ஒரு பிரிவு உண்டு. இந்தக் கணத்தைச் சேர்ந்தவர் நந்தி என்னும் பெயரைச் சூட்டிக்கொள்வர். அச்சநந்தி, ஆரிய நந்தி, பவணந்தி, புட்பநந்தி, கனகநந்தி முதலிய பெயர்கள் சமண முனிவருக்கு உண்டு. சிவபெருமானுடைய கயிலாய மலையில் உள்ள நந்தி தேவரது வழியில் வந்த சத்தியஞான தரிசனிகள் என்பவர் மெய்கண்டாருக்குச் சிவஞான போதத்தைப் புகட்டியதாகச் சைவர் கூறுவர். இந்த ஒற்றுமைகளால் இவ்விரண்டு சமயங்களில் பண்டையத் தொடர்பு அறியப்படும்.
காலனைக் கடந்தது: ஆருகதரின் அருகக் கடவுளும், சைவரின் விரிசடைக் கடவுளும் காலனைக் கடந்தவர் (இயமனை வென்றவர்) என்று இரண்டு சமய நூல்களும் கூறுகின்றன. இதற்கு, இரண்டு சமய நூல்களில் இருந்தும் இலக்கியச் சான்றுகளைக் காட்டுவோம்.
சிவபெருமான் காலனை உதைத்தார் என்று சைவ புராணங்கள் கூறுகின்றதை அனைவரும் அறிவோம். தேவாரத்திலும் இச் செய்தி பல இடங்களிற் கூறப்பட்டுள்ளது.
‘‘சாடினார் காலன் மாளச் சாய்க்காடுமேவினாரே’’
என்றும்,
‘‘காலனை உதைப்பர் போலும் கடவூர் வீரட்டனாரே’’
என்றும்,
‘‘சாற்றிநா ளற்ற தென்று தருமரா சற்காய் வந்த
கூற்றினைக் குமைப்பர் போலும் குறுக்கைவீ ரட்டனாரே’’

என்றும் தேவாரம் கூறுகிறது. இன்னும் பல மேற்கோள்கள் காட்டக் கூடுமாயினும் விரிவஞ்சி விடுகின்றோம் இனி, சமண நூல்களிலிருந்து சில மேற்கோள்களைக் காட்டுவாம்:
‘‘கோறன் மாற்றி யுதைப்பது கூற்றையே
கூறுகிற்பது மெய்ப்பொருட் கூற்றையே’’

என்றும், ‘‘காலனை வெந் கண்ட வென்றிப் பெருமானே’’ என்றும் சமணரின் திருக்கலம்பகம் கூறுகிறது.
‘‘கன்று காலனைக் கடந்தாய்! காதற் காமனைக் கடிந்தாய்!
தொன்று மூத்தலைத் துறந்தாய்! தோற்ற மாக்கட லிறந்தாய்’’

என்று மற்றொரு சமண சமய நூலாகிய நீலகேசி கூறுகிறது. விரிவஞ்சி இதனோடு நிறுத்துகின்றாம்.
சிவபெருமான் தம்மை வழிபட்ட அடியார்க்காகக் (மார்க்கண்டற்காக) கூற்றுவனை உதைத்தருளி, அடியவர்க்குச் சாவா வரத்தைத் தந்தருளினார் என்பது சைவரின் புராணக் கதை. அருகக் கடவுள் காலனைக் கடந்து (சாவைக் கடந்து) பிறவா நிலையைத் தாம் அடைந்தார் என்பது சமணரின் சாத்திரக்கொள்கை. காமனைக் காய்ந்தது என்னுங் கதையில், பொதுநோக்காகப் பார்க்கும்போது, இருசமயக் கருத்தும் ஒற்றுமையுடையன போற் காணப்படினும், அடிப்படையான கருத்தில் வேற்றுமையுடையனவே, அஃதாவது சிவபெருமான், இயற்கையாகவே பிறப்பிறப்பில்லாதவர்; ஆகையால், தம் அடியவர் பொருட்டுக் காலனை உதைத்து அடியவர்களை இறவாமை உள்ளவர்களாகச் செய்கிறார். ஆனால், அருகக்கடவுள், தமது பிறப்பை நீக்கிக்கொள்ளக் காலனைக் கடந்தார் என்பது,
காமனைக் காய்ந்தது: அருகப்பெருமானும் சிவபெருமானும் காமனைக் காய்ந்தவர் (வென்றவர்) என்று சமணராலும் சைவராலும் கூறப்படுகின்றனர். இவற்றையும் ஆராய்வோம்:
‘‘செற்றங் கனங்கனைத் தீவிழித்தான் தில்லை யம்பலவன்
நெற்றியிற் கண் கண்ட கண்கொண்டு மற்றினிக்

காண்பதென்னே’’
என்றும்
‘‘மகர வெல்கொடி கைந்தனைக் காய்ந்தவன்’’
என்றும்,
‘‘தூமன் சுறவந் துதைந்த கொடியுடைக்
காமன் கணைவலங் காய்ந்தமுக் கண்ணினர்’’

என்றும் திருநாவுக்கரசர் கூறியுள்ளதைப் படிக்கிறோம். சைவர்கள் இதைப்பற்றி நன்கறிந்திருப்பதால் மேன்மேலும் மேற்கோள் காட்ட வேண்டியதில்லை. அருகப்பெருமான் காமனைக் காய்ந்த செய்தியை ஆருகதமத நூல்களிற் காண்போம்.
‘‘காமனை வென்றோன் ஆயிரத்தெட்டு
நாம மல்லது நவிலாது என்நா.’’
என்று கவுந்தியடிகள் அருகக்கடவுளைத் துதிக்கிறார் சிலப்பதிகாரத்தில்.
‘‘அல்லற் பிறவி அகன்றோய் நீ! ஆசைவெவ்வே ரறுத்தோய்நீ!
வெல்லற்கரிய அனங்கனைமெய்,
வெண்ணீறாகவெகுண்டோய்நீ!’’

என்பது நீலகேசி.
‘‘களிசேர் கணையுடைய காமனையுங் காய்ந்த
அளிசேர் அறவாழி அண்ணல் இவன் என்ப’’

என்பது சீவகசிந்தாமணி.
‘‘சிலைவயங்கு தோளனங்கள் திறலழித்த விசயமென்னோ?’’
‘‘கண்மூன்று தோற்றிஇகல் காமனுடல் பொடியாகக்
கனன்றாய் தூய
விண்மூன்று மதிற்குடைக்கீழ் வீற்றிருந்தாங்
கறமுரைத் தாய்’’

என்பது திருக்கலம்பகம். இவ்வாறு சமண சமய நூல்களும் தம் அருகக்கடவுள் காமனைக் காய்ந்தார் என்று கூறுகின்றன.
பொது நோக்காகப் பார்க்கும்போது, சிவபெருமானும் அருகப்பெருமானும் காமனைக் காய்ந்த செய்தி ஒற்றுமை உடையதாகக் காணப்பட்டாலும், அடிப்படையான கருத்தில் வேறுபாடு உண்டு. அஃதாவது சிவபெருமான், மற்றவர் பொருட்டுக் காமனைக் காய்ந்தார். அருகப்பெருமானோ, தம்மிடத்தில் இருந்த காமம் என்னுங் குற்றத்தை நீக்குவதற்காகக் காமனைக் காய்ந்தார்.
முப்புரம் எரித்தது: சிவபெருமான் முப்புரத்தை எரித்து அழித்தார் என்று சைவ நூல்கள் கூறுகின்றன. சமணரின் அருகக் கடவுளும் முப்புரத்தை எரித்து அழித்தார் என்று சமண சமய நூல்கள் கூறுகின்றன.
தேவாரத்திலே, சிவபெருமான் முப்புரத்தை அழித்த செய்தி கூறப்படுகிறது. அவற்றில் சில வருமாறு:
‘‘சிலையினால் மதில்கள் மூன்றும் தீயெழச் செற்ற செல்வர்’’
‘‘வறவைத் தொழில்புரிந்து அந்தரத்தே செல்லும்
மந்திரத் தேர்ப்
பறவைப் புரமெரித்தார் எம்மை யாளும் பசுபதியே’’
‘‘செம்பு கொப்புளித்த மூன்று மதிலுடன் சுருங்க வாங்கி
அம்பு கொப்பளிக்க எய்தார் அதிகைவீ ரட்டனாரே’’

முப்புரம் என்பது மூன்று கோட்டைகள் என்று புராணக் கதை கூறுகிறது. ஆனால், முப்புரம் என்பது மும்மலம் என்று தத்துவார்த்தம் கூறப்படுகிறது.
‘‘அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புர மாவன மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யார் அறி வாரே’’

என்பது திருமூலர் அருளிச்செய்த திருமந்திரம். இதனால், முப்புரம் அல்லது திரிபுரம் என்பது ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்கள் என்று தெரிகிறது. ஆகவே சிவபெருமான் முப்புரம் அழித்தார் என்பதற்கு ஆன்மாக்களிடம் பொருந்தியுள்ள மும்மலங்களை அழித்தார் என்று தத்துவப் பொருள் கொள்ளவேண்டும்.
சமணரின் அருகக்கடவுளும் முப்புரத்தை எரித்தார் என்று சமண சமய நூல்களும் கூறுகின்றன. அருகப் பெருமான் எரித்த முப்புரம் என்பது காம, வெகுளி, மயக்கம் என்னும் மூன்று குற்றங்கள். சமண சமய நூல்களில் இருந்து இதனை விளக்குவாம்.
‘‘ஒருமூன்று அவித்தோன் ஓதிய ஞானத்
திருமொழிக் கல்லதுஎன் செவியகம் திறவா’’

என்று, கவுந்தி அடிகள் அருகப் பெருமானைப் போற்றுகிறார் (சிலப்பதிகாரம் நாடு காண் காதை). இதற்கு அடியார்க்கு நல்லார் உரை வருமாறு: ‘‘எனது செவிகள் காம, வெகுளி, மயக்கங்களைக் கெடுத்தவனால் ஓதப்பட்ட ஞான பாதமாகிய திருமொழியைக் கேட்டற்குத் திறப்பினல்லது பிறிதொன்றற்குத் திறப்பனவல்ல.’’
‘‘முரணவிய வென்றுலகம் மூன்றினையும், மூன்றில்
தரணிமேல் தந்தளித்த தத்துவன்தான் யாரே’’

(சிந்தாமணி, பதுமையார் இலம்பகம், 81)
இதற்கு நச்சினார்க்கினியர் உரை : ‘‘மூன்றுமதிலையும் அழித்து அங்கம், பூர்வம், ஆதி என்கிற மூன்றாகமத்தாலும் உலகம் மூன்றின் தன்மையையும் தரணிமேலே தந்து வெளிப்படக் கூறின தத்துவன் யார்தான்?’’
‘‘அரணங்கொடிய மதின்மூன்றும் அழியக்கனன்றீர் அன்றுள்ள
முரணம் பொன்றே நுமக்கங்கு.....................’’

என்பது திருக்கலம்பகம்.
‘‘காவலாகிய கொடுமையையுடைய ஆவரணங்களான முக்குற்றமும் கெடக் கோபித்தீர்; கோபிக்கும் காலத்தில், மனத்தினது வலியாகிய ஒரு கணையே உமக்கிருந்தது;’’(பழைய உரை)
குறிப்பு : சைவரின் சிவபெருமான் முப்புரத்தை எரித்தார் என்பதும், முப்புரம் என்பது ஆணவம், கன்மம், மாயை என்னும் முக்குற்றங்கள் என்பதும், அவ்வாறே சமணரின் அருகப்பெருமானும் முப்புரத்தை எரித்தார் என்பதும் அம்முப்புரம் என்பது காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்று குற்றங்கள் என்பதும் வெளிப்பார்வைக்கு ஒரே கருத்துள்ளனவாகத் தோன்றினாலும், உண்மையில் கருத்து வேறுபாடுடையன. இவ்வேறுபாடுகள் இவ்விரண்டு சமயங்களின் தத்துவக் கருத்தை அறிந்தவர் தாம் உணரமுடியும். இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை எனின்:
சைவ சமயக் கருத்துப்படி சிவபெருமான் ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று குற்றங்களை அழித்தார் என்றால் ஆன்மாக்களிடம் உள்ள இந்த மூன்று குற்றங்களையும் அழித்தார் என்பது பொருள். சிவபெருமான் தம்மிடமிருந்த இந்த மூன்று குற்றங்களையும் அழித்தார் என்பது பொருள் அன்று. என்னை? இறைவன் இயற்கையாகவே இக்குற்றங்கள் இல்லாதவர் ஆகலின்.
ஆனால், சமணரின் அருகக்கடவுள் காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்றும் குற்றங்களையும் அழித்தார் என்றால், சமண சமயக் கருத்துப்படி, தம்மிடமிருந்த இம்மூன்று குற்றங்களையும் அழித்தார் என்பது பொருள். என்னை? மற்ற உயிர்களிடமுள்ள இக்குற்றங்களை அருகக் கடவுள் அழிப்பவர் அல்லர். ஒவ்வோர் உயிரும் தம்மிடம் உள்ள குற்றங்களைத் தாமே முயன்று அழிக்க வேண்டும் என்றும் அருகக்கடவுள் பிறரிடமுள்ள இக் குற்றங்களை அழிக்கமாட்டார் என்றும் சமண சமய சாத்திரம் கூறுகின்றது.
ஆகவே, முப்புரம் எரித்த கதையில் இரண்டு சமயத்துக்கும் ஒற்றுமையுள்ளதுபோலக் காணப்பட்டாலும், அடிப்படையான தத்துவக் கருத்தில் மாறுபாடு உண்டு என்பது அறியத்தக்கது.
ஐயனார்: ஐயனார், சாஸ்தா, அரிகரபுத்திரன் எனும் பெயர்களையுடைய தெய்வம் ஊர்த் தெய்வமாக இப்போது இந்துக்களால் வணங்கப்படுகின்றது. இந்தத் தெய்வம் பௌத்தம், சமணம் எனும் இரு சமயங்களிலிருந்து இந்து மதத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. பௌத்த மதத்திலிருந்து ‘சாஸ்தா’ என்னும் தெய்வத்தை இந்துக்கள் எவ்வாறு ஏற்றுக் கொண்டார்கள் என்பதைப் ‘பௌத்தமும் தமிழும்’ என்னும் எமது நூலிற் காண்க. சமண சமயத்திலிருந்து இத் தெய்வத்தை இந்துக்கள் எவ்வாறு ஏற்றுக் கொண்டார்கள் என்பதை ஈண்டுக் கூறுவோம். சமணர்களுடைய கோவில்களில் இத் தெய்வத்தை இன்றுங் காணலாம். பரிவாரத் தெய்வங்களில் ஒன்றாகச் சமணர் இதனை இன்றும் வணங்குகின்றனர். இத் தெய்வத்திற்கு ‘பிரமம் யட்சன்’ ‘சாத்தனார்’ முதலிய பெயர்களை அவர்கள் கூறுகின்றனர். முதன் முதலாக, ஜினகாஞ்சியில் உள்ள திருப்பருத்திக்குன்றத்துச் சமணக் கோயிலைக் கண்ட போது, அங்கு இத் தெய்வத்தின் உருவமும் பூசிக்கப்படுவதைக் கண்டு வியப்படைந்தோம். பின்னர், ஏனைய சமணத் திருக்கோயில்களுக்குச் சென்றபோதும் அங்கும் இத்தெய்வத்தின் திருவுருவம் பூசிக்கப்படுவதைக் கண்டோம். இது சமணர்களிடமிருந்து இந்துக்கள் பெற்றுக்கொண்ட சிறு தெய்வங்களில் ஒன்று. சமணராக இருந்து இந்துக்களாக மாறிய ஆருகதர்களால் இது இந்து மதத்தில் புகுத்தப்பட்டிருக்க வேண்டும்.
பௌத்த மதத்திலிருந்தும் சமண மதத்திலிருந்தும் ஐயனாரை (சாஸ்தாவை) இந்துக்கள் ஏற்றுக்கொண்டனர். பௌத்த ஐயனாருக்கும் சமண ஐயனாருக்கும் உள்ள வேற்றுமை யாதெனில், பௌத்த ஐயனாருக்கு வாகனம் குதிரை; சமண ஐயனாருக்கு வாகனம் யானை என்பதே. சைவக் கோயில்களில் பிள்ளையார் அல்லது முருகன் எவ்வாறு போற்றப்படுகின்றனரோ அவ்வாறே சமணக்கோயில்களில் ஐயனார் எனப்படும் பிரம்மயட்சன் தனிக் கோயிலும் பூசை முதலிய சிறப்பும் பெற்று இன்றும் விளங்குகின்றார்.

‘‘பெரியபுராணம்’’ ‘‘அறுபத்துமூன்று அடியார்’’
‘‘ஸ்ரீபுராணம்’’ ‘‘சித்தாந்தம்’’
பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர் புராணம் கி.பி 11 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சைவ நூல் இப் புராணத்திற்கு முதல் நூலாக உள்ளவை சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருத்தொண்டத் தொகையும், நம்பியாண்டார் நம்பி அருளிய திருத்தொண்டர் திருவந்தாதியும் ஆகும். இந்தத் திருத்தொண்டர் புராணத்தைப் பெரியபுராணம் என்றும் வழங்குவர். இப் பெயர்கள் சமணரது ‘‘திரிஸஷ்டி ஸலாகா புருஷர் சரித்திரம்’’ என்றும் பெயரிலிருந்து அமைக்கப்பட்டதாகத் தோன்றுகிறது. திரிஸஷ்டி ஸலாகா புருஷர் சரித்திரம் சமணர்களுக்குரிய நூல். இதில் 63 பெரியார்களின் சரித்திரங்கள் கூறப்படுகின்றன. திரிஸஷ்டி = அறுபத்துமூன்று; ஸலாகா புருஷர் = பெரியார். சமணருக்கு 63 பெரியார்கள் உள்ளனர். அவர்களாவன: தீர்த்தங்கரர் இருபத்து நால்வர், சக்கரவர்த்திகள் பன்னிருவர், பலதேவர் ஒன்பதின்மர், வாசுதேவர் ஒன்பதின்மர், பிரதிவாசுதேவன் ஒன்பதின்மர் ஆக அறுபத்து மூவர். இவர்களுடைய சரித்திரங்களைக் கூறும் நூலுக்குத் திரிஸஷ்டி ஸலாகா புருஷர் சரித்திரம் என்பது பெயர்; அஃதாவது அறுபத்து மூன்று பெரியார்கள் சரித்திரம் என்பது பெயர்.
சைவரின் பெரியபுராணத்தில் (திருத்தொண்டர் புராணத்தில்) 63 அடியார்களின் சரித்திரம் கூறப்படவில்லை. எழுபத்திருவர் சரித்திரங்கள் கூறப்படுகின்றன. ஆனால், தொகையடியாரைக் கழித்து 63 அடியார்கள் என்று கூறுகிறார்கள். எழுபத்திரண்டை ஏன் 63 ஆகக் குறைக்கவேண்டும்? சமணரது 63 அடியாருக்குச் சமானமாகக் கணக்கிடுவதற்குத்தானே? சென்னை மயிலாப்பூர் போன்ற சில சிவன் கோயில்களில் இப்போதும் அறுபத்து மூவர் உற்சவம் வெகு சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அன்றியும் கன்னட மொழியிலே சைவ அடியார்களின் சரிதம், தமிழ்த் திருத்தொண்டர் புராணம் போலவே எழுதப்பட்டிருக்கின்றது. அவற்றிற்கும் அறுபத்து மூவர் பெரியார் சரிதம் என்று பெயர் சூட்டியுள்ளனர். அஃதாவது, அருவத்துமூவர புராதன சரிதெ என்றும், அருவத்து மூரு புராதன சரணர சரிதெ என்றும் பெயர் சூட்டியுள்ளனர்.31 இதனால், சமணரைப் போலவே சைவரும் தம் அடியார் தொகையை அறுபத்து மூவர் என்று ஆக்கிக்கொண்டது தெரிகிறது.
சமணர் தம் திரிஸஷ்டி ஸலாகா புருஷர் சரித்திரத்தை ஸ்ரீ புராணம் என்றும் வழங்குவர். ஸ்ரீபுராணம் என்னும் பெயரையுடைய மணிப் பிரவாள நடைநூல் ஒன்றும் சமணருக்கு உண்டு. இந்த ஸ்ரீபுராணத்தில் சமணருடைய 63 பெரியாருடைய சரிதங்கள் கூறப்ப டுகின்றன. சமணர் தம் திரிஸஷ்டி ஸலாகா புருஷர் சரித்திரத்தை ஸ்ரீபுராணம் என்று வழங்கிவருவது போலவே, சைவர்களும் தமது பெரிய புராணமாகிய திருத்தொண்டர் புராணத்தை ஸ்ரீபுராணம் என்று பண்டைக் காலத்தில் வழங்கி வந்தனர். ஆனால், இந்த வழக்கு இக்காலத்தில் வழங்கப்படுவதில்லை.
தொண்டை நாட்டில், திருவொற்றியூரில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோயில் கல்வெட்டுச் சாசனம் இவ்வாறு கூறுகிறது. ‘‘திருப்பங்குனி யுத்திரத்து ஆறாந்திருநாளான புதன் கிழமையும் ஏகாதசியும் பெற்ற ஆயிலைத்தினன்று படம்பக்கநாயக தேவர் திருமகிழின் கீழ் திருவோலக்கஞ் செய்தெழுந்தருளியிருந்து ஆளுடைய நம்பி ஸ்ரீபுராணம் கேட்டருளி’’.32
இந்தச் சாசனம் கோவிராச கேசரிபன்மரான சக்கரவர்த்திகள் ஸ்ரீ இராசாதிராச தேவரது 9 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. இவர் கி.பி. 1172 முதல் 1186 வரையில் அரசாண்ட இராசாதிராசர் II ஆவர். இந்தச் சாசனத்திலே, திருவொற்றியூர்க் கோயிலில், ஸ்ரீ புராணத்தில் ஆளுடைய நம்பி புராணம் படிக்கப்பட்ட செய்தி கூறப்படுகிறது. இதில், பெரியபுராணம் ஸ்ரீபுராணம் என்று கூறப்படுவது காண்க.
ஸ்ரீபுராணம், அறுபத்து மூவர் என்பவைகளைச் சைவரும் சமணரும் வழங்கியதுபோலவே சித்தாந்தம் என்னும் பெயரையும் இரு சமயத்தாரும் தம் சமய சாத்திரங்களுக்குப் பெயராக வழங்கி வருகின்றனர். சித்தாந்தம் என்பதற்கு முடிந்தமுடிபு என்பது பொருள். ஆயினும் இந்தப் பெயரைச் சமணரும் சைவரும் தம் சாத்திரங்களுக்குப் பெயராக வழங்கியுள்ளனர்.
‘‘ஸ்ரீகோமாறஞ் சடையற்கு யாண்டு 3. மதநெச்சுர நாட்டுத் திருச்சுரத்து திருமலைத் தேவர்க்கு குணசாகர படாரர்செயவித்த குழுவாணை நல்லூர் தும்பூர்க் கூற்றத்து காடந்தைகுடி தர்மசித்தனான தயாமாறர் திருமாலடைஞ்சிருந்து சித்தாந்தம் உரைக்கும் படாரர் உள்ளிட்டுப் பதின்மர் வயிராக்கியர்க்கு ஆஹாரதானமாகத் தன் முதல் குடுத்து33 என்று கழுகுமலைக் கல்வெட்டுச் சாசனம் கூறுகிறது. இதில் சமணருடைய சாத்திரம் சித்தாந்தம் என்று கூறப்பட்டிருப்பது காண்க. சைவரும் தமது சமய சாத்திரத்தைச் சித்தாந்தம் என்று கூறுகின்றனர்.
சித்தர் வணக்கம்
பண்டைக் காலத்தில் சிறுவர்களுக்கு நெடுங்கணக்குக் கற்பிக்கத் தொடங்கும்போது முதலில் சித்தர் வணக்கம் கூறுவது மரபு. ‘‘ஹரி நமோத்து சிந்தம்’’ என்று கூறிய பின் ஆசிரியர் பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிப்பர். இக்காலத்துப் பாடசாலைகளில் இந்த வழக்கம் கைவிடப்பட்டது. ஆனால், பண்டைக் காலத்தில் இந்த வழக்கம் இருந்து வந்தது. இதில் சிந்தம் என்பது சித்தம் என்பதன் திரிபு. சித்தர் என்பவர் சமணருடைய பஞ்சபரமேஷ்டிகளில் ஒருவர். எனவே, சமணர் சித்தர் வணக்கம் செய்து வந்தனர். இந்த வழக்கத்தைத்தான் மற்றவர்களும் கைக்கொண்டனர். தமிழ் நாட்டிலே சித்தர் வணக்கம் செய்த பிறகு சிறுவர்களுக்கு எழுத்துக் கற்பிக்கத் தொடங்கியது போலவே, ‘‘சிததம நம’’ என்று கன்னட நாட்டினரும், ‘‘ஓம் நமஸ்ஸிவாய சித்தம் நம’’ என்று தெழுங்கு நாட்டினரும் இவ்வாறே சித்த வணக்கம் செய்து பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பித்து வருகின்றனர்.34
இவ்விடத்தில், பாடசாலைகளுக்குப் பள்ளிக்கூடம் என்னும் பெயர் வழங்குவது நினைவுகூரத்தக்கது. பள்ளி என்பதற்குச் சமண முனிவர் வாழும் பள்ளி என்பது பொருள். சமண முனிவர், நாட்டுச் சிறுவர்களைத் தம் பள்ளிகளில் உள்ள கூடத்தில் இருக்கச் செய்து அவர்களுக்கு எழுத்துக்களையும் நூல்களையும் படிப்பித்து வந்தனர். இதனால் பாடசாலைகளுக்கும் பள்ளிக்கூடம் என்னும் பெயர் ஏற்பட்டது. சமணர் தம் பள்ளிக் கூடங்களில், சிறுவர்களுக்கு எழுத்துக் கற்பிக்கும்போது சித்தர் வணக்கம் கூறிய பிறகு கற்பிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். இந்த வழக்கந்தான், இக் காலத்திலும் மற்றவர்களாலும் வழக்கத்தில் கைக்கொள்ளப்பட்டது. எனவே, பள்ளிக் கூடம் என்னும் பெயரும், சித்த வணக்க முறையும் சமணரிடமிருந்து பெற்றுக் கொண்டவை என்பது வெளிப்படை.
________________________________________________________________________
24. இந்துமதம் என்று இங்குக் கூறுவது சைவவைணவ மதங்களை.
25. இந்துக்களால் அரக்கர் என்று கூறப்படுவோர், சமண நூல்களில் வித்தியாதரர் என்று கூறப்படுகின்றனர்.
26. ஸ்ரீபுராணம்; நூன்முகம், பக்கம் 32.
27. P.116, Adisvara Caritra. Trisasti Salaka Purusa Carita. Vol I Gaekwad’s Oriental Series No.LI.
28. 34 ஆம் செய்யுள்.
29. காளிக்குக் கூளி கூறியது. 209
30. கி.பி. 8 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த பரமேஸ்வரவர்மன் என்னும் பல்லவ அரசன், சைவ சமயத்தவனாய் எருதுக் கொடியைப் பெற்றிருந்தான். இவனது எருதுக் கொடியைச் சில புராணங்கள் ‘தர்மத்துவஜம்’ என்று கூறவதும் ஈண்டுக் கருதத்தக்கது. இவன் பரம்பரையின் யாவரும் ரிஷபக் கொடியைக் கொண்டிருந்தனர்.
31. P.5.6 Mys. Arch. Annual Report. 1925.
32. 371 of 1911. No. 1358 SII (Texts) Vol.V.P.494.
33. S.I.I. Vol V.
34. ஸ்ரீபுராணம், நூன்முகம், பக்கம் துதுதுடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக