புதன், 24 ஆகஸ்ட், 2016

சீனு ராமசாமி: தலைகீழ் பாரதிராஜா ... நகரம் வெகுளி; கிராமம் வஞ்சனை!

tdharumaraj.blogspot.com:
நான் திரும்பத் திரும்ப பேசிக்கொண்டிருக்கிற ‘கிராமத்திலிருந்து தப்பித்தல்' தான் படத்தின் கதை!   அதாவது, பாரதிராஜா பாணி ‘கிராமப் புல்லரிப்புகளுக்கு' முற்றிலும் எதிரான கதை.கதை இவ்வளவு தான்.  பட்டறிவும் பகுத்தறிவும் பெற்று, கிராமத்திற்கு திரும்பி வருகிறான் ஒருவன்.   அவனை, ஊரும் உறவும் பிய்த்து எறிகின்றன .  உயிர் பிழைத்தால் போதும் என்று அவன் தப்பித்து ஓடுகிறான்.  இதை, சீனு ராமசாமி திகிலும் கருணையும் கலந்து சொல்லியிருக்கிறார்.  கிராமத்தில் திகில்; நகரத்தில் கருணை!இன்னும் விளக்கமாகச் சொல்லப் போனால், 16 வயதினிலே படத்தில் ‘மயிலு, மயிலு’ என்று நாடகத்தனமாக சொல்லித் திரியும் ஒரு மருத்துவரை ஞாபகம் இருக்கிறதா? அந்தப் படத்தில் ஒரு அசட்டு வில்லனாக அவர் வந்து போயிருப்பார்.   நாகரீக நகரம், கிராமத்து வெகுளித்தனத்தை எவ்வாறு வஞ்சிக்கிறது என்று விளக்க அவரைக் காட்டியிருப்பார்கள்
ஏறக்குறைய 40 வருடங்கள் கழித்து, மொத்தமும் தலைகீழாக மாறியிருக்கிறது.   இப்பொழுது நகரம் வெகுளி; கிராமம் வஞ்சனை!


;இந்த தலைகீழாக்கத்தின் அடிப்படையே தவறானது என்றாலும், அதன் காரணமாக கிராம வாழ்க்கை குறித்து முன்வைக்கப்படும் விமர்சனம் முக்கியமானது.  அந்த வகையில், சீனு ராமசாமியின் இந்தப் படம் அவசியமானது.

;பாரதிராஜாவில் தொடங்கிய புல்லரிப்பு, கொஞ்சம் கொஞ்சமாக சிலாகிப்பாக மாறி, சாதிப் பெருமையாக உறுதிப்பட்டிருக்கும் சூழலில் இந்தப் படம் ஆரோக்கியமாகப் பேசுகிறது. ;

மதுரையை மையமாகக் கொண்டு, கிராம வன்முறையைக் கொண்டாடிய படங்களை நாம் அறிவோம்.  அவற்றின் சூத்திரம் எளிமையானது.

எடுத்த எடுப்பில் அந்த முரட்டு கதாபாத்திரங்களை நம்மிடம் கிண்டலாக அறிமுகம் செய்வார்கள்.   ஆட்டுக்கறிக்காக சண்டையிட்டுக் கொள்கிறவர்கள், முதுகில் அருவாள் சொருகியிருப்பவர்கள், பட்டாபட்டி உள்ளாடை தெரிய திரிபவர்கள், முகம் முழுக்க மயிர் மண்டியிருப்பவர்கள்,  அதிகமாய் ‘சவுண்ட்' விடுகிறவர்கள், காதல் - கத்தரிக்காய் போன்றவற்றையெல்லாம் அறியாதவர்கள் - மொத்தத்தில் வேடிக்கையான முரடர்கள் என்றே நமக்கு அறிமுகம் செய்வார்கள்.

இதிலுள்ள கேலியையும் கிண்டலையும் மனதிற்குள் நமட்டி சிரித்து முடிப்பதற்குள், அந்த கதாபாத்திரங்கள் பெரும் வன்முறையொன்றை நிகழ்த்தி (கழுத்தை அறுப்பதிலிருந்து அணுஅணுவாய் சித்திரவதை செய்வது வரை) திரையரங்கில் நம்மை கதிகலங்க வைத்திருக்கும்.   நாம் அரண்டு போய் உட்கார்ந்திருப்போம்.  ஆனால், மொத்த திரைப்படக் குழுவும் ’பைத்தியக்காரக் கூட்டம்! பாசத்திற்காக, மரியாதைக்காக, மானத்திற்காகத் தான் இத்தனை வன்முறையும்.  மற்றபடி  பாசக்கார பயல்கள் தான்!’ என்று நம்மிடம் சத்தியம் செய்யும்.

அவர்களின் சத்தியத்தை நாம் நம்ப வேண்டும் என்பதெல்லாம் கூட இல்லை.  அவர்கள் காட்டுகிற வாழ்க்கையைக் கண்டு நாம் பதற வேண்டும், அரள வேண்டும் என்பது தான் அவர்களது மொத்த நோக்கமும். ;">தர்மதுரை படத்தில், ஆச்சரியமாக, மதுரைக்கார கதாநாயகன் ஒருவன் நம்மைப் போலவே வன்முறைக்கு பயந்து ஊரை விட்டு தப்பித்து ஓடுகிறான்!  அரண்டு நிற்கிறான்!  நம்மைப் போலவே அவனுக்கும் உடம்பெல்லாம் நடுக்கம்.

ஆனாலும் படம் பார்க்கும் போது  எனக்கு நம்பிக்கையே இல்லை.  எங்கே, ராதிகா கொதித்தெழுந்து, விஜய் சேதுபதியிடம், ‘போடுடா, அத்தனை பேரையும்!’ என்று சொல்லி விடுவாரோ?  இல்லை, முந்தைய படத்தைப் போல, அந்தப் பெண் தெய்வமே எல்லோரையும் போடுவதற்குக் கிளம்பி விடுமோ என்ற பயம் ஒரு ஓரத்தில் உயிரோடு இருந்தது.>தமிழ்த் திரைப்படங்களை பார்த்துத் திரும்புவதற்குள் தான் எத்தனை எத்தனை சோதனைகள்!

படம் முடியும் போது தான் அப்பாடா என்று இருந்தது.   ‘நல்ல வேளையாக மருத்துவர் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்தார்.  இதே வேடத்தில் சசிகுமார் மட்டும் நடித்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?’ என்று ஒரு ஆசுவாசம்.">இதனாலேயே, இந்தப் படத்தில் ஒலிக்கும் சீனு ராமசாமியின் குரல் கவனிக்கப்பட வேண்டியது என்று சொல்கிறேன்.  அந்தக்கால பாரதிராஜாவிலிருந்து அவரது நிஜ வாரிசுகளான பாலா, சசிகுமார் வரை தொடர்ச்சியாகக் காட்டி வரும் ‘மதுரை கிராமங்களை’ இந்தப் படம் துணிச்சலாகக் கேள்வி கேட்கிறது.  அவற்றின் போலித்தனத்தை சுட்டிக் காட்டுகிறது.  வன்முறையைக் கொண்டாடும் சூழலிலிருந்து விலகி நிற்கிறது.

இதற்காகவே படத்தின் பின் பாதியில் செய்யப்பட்ட பல தவறுகளை மன்னித்து விடலாம் என்றிருக்கிறேன்.  கிராமங்கள் வன்முறையானவை என்று காட்டிய முன்பாதிக் கதையை வலுப்படுத்துவதற்காக, அடுத்த பாதியில் ‘நகரத்தில் அன்பு வழிந்தோடுகிறது’ என்று சொல்வதை இப்போதைக்கு மன்னித்து விடலாம்.  இப்போதைக்கு மட்டும்!

இந்த அன்பின் நீட்சியாக, கிராமத்து வன்முறையாளர்களை கதாநாயகன் காருண்யத்தோடு மன்னித்து விடுவதையும் இப்போதைக்கு மறந்து விட நினைக்கிறேன். ">படத்தின் இறுதியில் ‘எல்லாம் சுபம்’ என்றே சொல்கிறார்கள்.   அதனால் இந்தப் படத்தை ’நல்லதையே நினைக்கும் படங்கள்’ (‘feel good movie’) என்று கூட நமது நண்பர்கள் பாராட்டுகிறார்கள்.

ஆனால், இத்தனை வன்முறைக்கும் அப்பால் (ஒரு தற்கொலை, ஒரு கொலை முயற்சி) அகிம்சையை போதிப்பது ஒரு மாபெரும் தந்திரமில்லையா என்றே கேட்கத் தோன்றுகிறது. இது அறத்தில் நிகழும் ஊழல் இல்லையா?

ஆனாலும், படத்தின் முதல் பாதி நேர்மைக்காக சீனு ராமசாமியை அறிவுறுத்தி விட்டு விடலாம் தான்.

கடைசியில் ஒரு சந்தேகம் மட்டும்.  துணிச்சலான இந்தப்  படத்தில் வைரமுத்துவுக்கு என்ன வேலை?  சாதி வெறியை நில வெறியாக சித்தரித்து (கள்ளிக்காட்டு, செவக்காட்டு, கரிசல்காட்டு
 தொடர்ந்து பாட்டு கட்டி வரும் வைரமுத்து, இந்தப் படத்திலும் தனக்குத் தெரிந்த பழைய குட்டிக்கரணங்களையே அடித்துக் கொண்டிருக்கிறார்.  எழுதுவதை நிறுத்துவது கூட ஒரு வகை புண்ணியம் தான் என்று அவருக்கு யாராவது சொல்லக்கூடாதா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக