வியாழன், 18 ஆகஸ்ட், 2016

பிரிட்டனின் அன்ஜெம் சௌத்ரிக்கு பத்து வருட சிறை தண்டனை... சட்டத்துக்குள் இத்தனை ஒளிந்திருந்தவன்

மின்னம்பலம் :உலக யுத்தம் ஒன்று இப்போது இல்லை. ஆனால், யுத்தங்கள் வெவ்வேறு வடிவங்களில் தொடர்கிறது. பயங்கரவாத தாக்குதல்கள், குண்டு வெடிப்புகள், நாம் கற்பனை செய்ய முடியாத அளவிலான நீஸ் வடிவ தாக்குதல் என மக்கள் மீது தீவிரவாதம் நடத்தும் யுத்தம் இந்த உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. தீவிரவாதம் என்பது உலகின் அத்தனை அரசுகளுக்கும் அச்சுறுத்தலாக இருப்பது ஒருபக்கம் என்றால், அதன் இன்னொரு பகுதி பிள்ளைகளைப் பிடித்து, மூளைச் சலவை செய்து, துப்பாக்கிகளைக் கையில் கொடுத்து அவர்களின் வாழ்வை சீரழிப்பதுதான். ஒவ்வொரு பெற்றோருமே தங்கள் பிள்ளைகளை தீவிர மூளைச்சலவைகளில் இருந்து காப்பாற்றியாக வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார்கள். இந்த சர்வதேச பிரச்னையில் மூளைச்சலவை நடத்துகிறவர்களில் நுட்பமான முகங்களை புரிந்துகொள்ள இந்தக் கட்டுரை உதவும்.

ஐ.எஸ் அமைப்பின் அச்சுறுத்தல் உலக நாடுகளுக்கு கடும் சவாலாக உருவாகி வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் யுத்தங்களில் பங்கேற்று வந்த நிலையில் இப்போது சொந்த நாடுகளில் குடிமக்களைக் காப்பாற்றியாக வேண்டிய நெருக்கடிக்குள் சிக்கியிருக்கின்றன ஐரோப்பிய நாடுகள். பல நாடுகள் தீவிரவாதத் தாக்குதலை மனதில் கொண்டு பல சிறப்புச் சட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் நிலையில், இங்கிலாத்தில் அன்ஜெம் சௌத்ரி என்பவரும் அவருடைய குழுவினரும் சுமார் 100 இங்கிலாந்து குடிமக்களை தீவிரவாதம் நோக்கி திருப்பியிருப்பதாக ‘தி கார்டியன்’ செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்தடுத்து தீவிரவாதத் தாக்குதல்களுக்குள்ளாகும் மேற்குலகம் உயர்ந்தபட்ச விசாரணையையும் , கண்காணிப்பு முறைகளையும் கொண்டது. இதிலிருந்து எப்படி இத்தனை நாள் தப்பியிருந்தார் சௌத்ரி என்பதுதான் வியப்பிலும் வியப்பான கேள்வி. தீவிரவாதத்தின்பால் நாட்டம் உருவாகும் அளவுக்கு பிரச்சாரம் செய்த இவர், தன் மீதான தீவிரவாதக் குற்றச்சாட்டுகளை மிக சாதுர்யமாக தவிர்த்து வந்தார். ஆனால் , கடந்த ஜூலையில், ஓல்டு பெய்லி ஜூரியில் (நீதிமன்றத்தில்) சௌத்ரி மீது வழக்கு பதியப்பட்டது.
சௌத்ரி மற்றும் அவரது சகாவான முகமது ரஹ்மான் தங்கள் தொண்டர்களை ஐ.எஸ் தலைவரான அபு பக்கர் அல் பக்தாதியை ஏற்று அவரை பின்பற்ற வேண்டும். அவர்கள் வலுவாக இருக்கும் சிரியாவுக்கு பயணித்து ஐ.எஸ் அமைப்பை ஆதரிக்க வேண்டும் என்று அவர்கள் பிரசங்கம் செய்தது பற்றி விசாரித்த நீதிமன்றம், சௌத்ரிக்கு பத்து வருட சிறை தண்டனையை வழங்கி உள்ளது. இங்கிலாத்தில் சட்டம் பயின்று இங்கிலாந்து குடிமகனான அன்ஜெம் சௌத்ரி ஒரு இந்திய வம்சாவளி முஸ்லிம்.
இங்கிலாந்து அரசின் புலனாய்வுத் துறையில் இருந்து வந்த ஆவணங்கள், சௌத்ரியின் குழு லண்டனில் இருக்கும் ஐ.எஸ்ஸின் கிளை போன்றே இருந்தது என்கின்றன. சௌத்ரியின் இந்த பயங்கரவாத வளையத்துக்குள் பலர் இருந்திருக்கிறார்கள். அதில் முக்கியமானவர் 2013ஆம் ஆண்டு லீ ரிக்பீ என்ற காவலரைக் கொன்ற மைக்கேல் அடிபொலஜோவும் ஒருவர். பத்தாண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தை தகர்க்க இடப்பட்ட திட்டத்தோடு தொடர்புடையவர் இவர் என்பது பின்னர் விசாரணையில் தெரியவந்தது.
லண்டன் பயங்கரவாதத் தாக்குதல்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாளான 7 ஜூலை 2014 அன்று, பயங்கரவாத இணையதளம் ஒன்றில், சௌத்ரியும், ரஹ்மானும் உறுதிமொழி ஒன்றை பதிவு செய்தனர். பயங்கரவாத இஸ்லாமிய குழுக்கள் தொடர்ந்து வளர்ந்து வரும் சூழலில், சௌத்ரி மிக முக்கியமான புள்ளி. ஐரோப்பாவிலும், லண்டனிலும், இளைஞர்களை தீவிரவாதம் நோக்கி திருப்ப முயல்கையிலும், அடிக்கடி ஊடகங்களில் தலைகாட்டியபோதும், சிலர் இவரை முட்டாளாகவே பார்த்தனர். அல்-முஹாஜிராவுன் எனும் இஸ்லாமிய அமைப்பின் முக்கிய பங்காக சௌத்ரி இருந்திருக்கிறார். பயங்கரவாதச் சட்டங்களின் அடிப்படையில் இந்த அமைப்பு தடை செய்யப்பட்டபோது, அதே அமைப்பு, அல்-குராபா எனும் பெயரில் இயங்கத் தொடங்கியது. ஆனாலும், Islam4Uk மற்றும் சிலுவைகளுக்கெதிரான இஸ்லாமியர்கள் (Muslims Against Crusades) எனும் கிளை அமைப்புகள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. இப்படி ஒன்றை தடை செய்தால் இன்னொரு அமைப்பு என வெவ்வேறு பெயர்களில் தீவிரவாத சிந்தனைகளை இங்கிலாந்தில் விதைத்தவர் சௌத்ரி.
டீன் கேடன், ஸ்காட்லாந்து யார்டின் பயங்கரவாத தடுப்பு பிரிவின் தளபதி, இருபது வருடங்களாக சௌத்ரி வெளியிட்ட அறிக்கைகள் அத்தனையையும் ஆராய்ந்து, இந்த வழக்கை கட்டமைத்ததாக தெரிவித்திருக்கிறார். “இந்த மனிதர்கள் சட்டத்துக்குள் நெடும் நாட்களாக ஒளிந்திருந்தார்கள். ஆனால், பயங்கரவாத எதிர்ப்பில் இவர் செய்த குற்றங்கள் குறித்தோ, அதற்கு இருந்த தாக்கம் குறித்தோ, இவர் பரப்பிய வெறுப்பு குறித்தோ, பயங்கரவாத அமைப்புகளை சேரச் சொல்லி இவர் இளைஞர்களை ஊக்குவித்தது குறித்தோ, யாருக்கும் சந்தேகமே இல்லை” என்று சௌத்ரி மற்றும் ரஹ்மான் குறித்து கேடன் கூறினார். இப்படி சந்தேகம் எழாத வண்ணம் பிரச்சாரம் செய்வதுதான் அன்ஜெம் சௌத்ரியின் நுட்பம்.
மேலும், பிரிட்டனில் நிச்சயமாக நூறு பேர், சௌத்ரியின் குழுவோடு, அல்லது வன்முறை ஜிஹாத்தை ஆதரிக்கும் கிளைக் குழுக்களோடு தொடர்புடையவர்களாக இருப்பார்கள் என்கிறது ஒரு தரப்பு தகவல்கள். அல்-முஹாஜிராவுன் அமைப்பின் தாக்கத்தை ஆராய்ந்த, பயங்கரவாத எதிர்ப்பு குழுவே இந்த எண்ணிக்கையை வெளியிட்டிருக்கிறது. ஐரோப்பாவில், சௌத்ரியோடு தொடர்பில் இருந்த பிறகு, ஐ.எஸ்ஸில் இணைந்தவர்களை கணக்கில் எடுத்துக்கொண்டால், இந்த எண்ணிக்கை அதிகரிக்கும். அதாவது, நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளில் இருந்து ஐ.எஸ்ஸில் இணைந்தவர்கள். நெதர்லாந்தில் நாட்டில் ஜிஹாதி இயக்கத்தின் முக்கிய புள்ளியாக இருப்பது சௌத்ரிதான் என டச்சு புலனாய்வு கண்டுபிடித்திருக்கிறது.
உள்துறை செயலாளரான ஆம்பர் ரட், “அன்ஜெம் சௌத்ரிக்கும் முஹமது ரஹ்மானுக்கும் வழங்கப்பட்டிருக்கும் தண்டனை, காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படைகளின் நீண்ட நாள் கடின உழைப்புக்குக் கிடைத்திருக்கும் வெற்றி. வன்முறையான, காட்டுமிராண்டித்தனமான குழுக்களுக்கு உதவச் சொல்லி பலவீனமான மனிதர்களின் மனதை இவர்கள் நச்சுப்படுத்தினார்கள். அரசுத் தெளிவாக இருக்கிறது. நம் வாழ்வை அச்சுறுத்துபவர்களையும், வெறுப்பை வளர்ப்பவர்களையும் எதிர்கொள்வதையே தொடர்வோம். ஒற்றுமையில் இணைந்து, பயங்கரவாதத்தில் இருந்தும், நச்சு சிந்தனையில் இருந்தும், சமூகங்களை காப்போம்”.

இருபது வருடங்களாக, சௌத்ரி தெரு முனைகளிலும், ஷாப்பிங் வளாகங்களிலும், மசூதிகள், தூதரகங்கள், காவல் நிலையங்களுக்கு வெளியே நின்று தன் மெகா போன்களை வைத்துக்கொண்டு, இஸ்லாமியர்களுக்கும், இங்கிலாந்தின் பிற மக்களுக்கும் இடையே பிளவை உருவாக்க முயன்றுக் கொண்டிருந்தார். தற்போது, ஐ.எஸ்ஸுக்கு ஆதரவளித்த காரணத்துக்காக கைது செய்யப்பட்டிருக்கிறார்.
ரிச்சர்ட் டார்ட், வாழ்க்கையில் பதில் தேடி அழைந்த ஒரு இளைஞன், சௌத்ரியால் மூளைச்சலவை செய்யப்பட்டார். தற்போது, பாகிஸ்தானில் வெடிகுண்டு தயாரித்த குற்றத்துக்காக, ரிச்சர்ட் சிறையில் இருக்கிறார். ரிச்சர்ட்டின் சகோதரர் ராப் லீச், திரைப்பட இயக்குநர் பல வருடங்கள் சௌத்ரி குறித்து ஆய்வு செய்து அறிந்திருக்கிறார்.
“அவரால் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியக் காரணம், அவருடைய கவர்ச்சி. நம்பமுடியாத அளவு கவர்ச்சியுடையவர். புத்திசாலி. மக்களை எப்படி கையாள வேண்டும் என்று அவருக்குத் தெரியும். அவரை முதன்முறையாக சந்திக்கும் இளைஞர் நீங்கள் என்றால், அவரை கண்டு ஆச்சர்யப்படுவீர்கள். உங்களுக்கு என்ன வேண்டும். உங்கள் தேவைகள் என்னென்ன என்பவை அவருக்கு தெரியும் - பலருக்கு இல்லாதவற்றை எல்லாம் அவர் அளித்திருக்கிறார்” என்று சௌத்ரி குறித்துக் கூறுகிறார்.
“கடந்த வருடம் நான் சௌத்ரியிடம் பேசியபோது, சிரியாவிலும் ஈராக்கிலும் உருவாகிக் கொண்டிருந்த சூழலின் காரணத்தால், மிக உற்சாகமாக பேசினார். பிணைக்கைதிகள் தலைகள் வெட்டப்படுவதையோ, அடிமைகள் எடுத்துக் கொள்ளப்படுவதையோ, பெண்கள் ஐ.எஸ் போராளிகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதையோ நினைத்து அவர் கவலைப்பட்டதே கிடையாது. ஐ.எஸ்ஸுக்கு சாதகமாகவே எல்லாம் நடந்துக் கொண்டிருந்த வேளையில், எனக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார். ஆனால், விசாரணையில் உண்மை தெரியவந்தது. சமூக ஊடகங்களில் இருக்கும் தனிப்பட்ட உரையாடல்கள் வரை எடுக்கப்பட்டது. இந்த விசாரணை நெருங்க நெருங்க அவர் பதற்றமடைந்தார். விசாரணையைத் தடுத்து நிறுத்த உச்சநீதிமன்றத்தில் முயன்றார். சில ஊடகவியாலாளர்களைச் சாட்சியங்களாக இருக்க முடியுமா என்று கேட்டார். ஒருவேளை, நீதிமன்றத்தில் இருந்து தண்டனை இன்றி வெளியேறினால், அவர் எப்படி பாதிக்கப்பட்டவர் போல நடந்துக்கொள்வார் என விவாதித்தோம். ஆனால், தீர்ப்பு வந்தபோது, அவர் எதுவும் சொல்லவில்லை. அன்ஜெம் சௌத்ரி, இறுதியாக வாயடைத்திருந்தார்” என பிபிசியின் உள்நாட்டு அலுவல்கள் நிருபர், டொமினிக் காஸ்கியானி எழுதுகிறார்.
நன்றி: www.theguardian.com, www.bbc.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக