வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

மனைவி இறந்த துக்கம்... 2 மகன்களை கொன்று தற்கொலை

திருக்கோவிலூர் அருகே மனைவி இறந்த துக்கம் தாங்காமல் 2 மகன்களை கொன்று விவசாயி தற்கொலைமனைவி இறந்த துக்கம் தாங்காமல் 2 மகன்களை கொன்று விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருக்கோவிலூர்:
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள அரும்பராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). விவசாயி. இவரது மனைவி அம்பிகா(35). இவர்களுக்கு சிலம்பரசன்(15), அன்பரசன்(13) ஆகிய 2 மகன்கள் இருந்தனர்.
புத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் சிலம்பரசன் 10-ம் வகுப்பும், அன்பரசன் 8-ம் வகுப்பு படித்து வந்தனர்.
கடந்த 6 மாதத்திற்கு முன்பு அம்பிகா இறந்துவிட்டார். இதனால் செந்தில்குமார் மனவருத்தத்தில் இருந்து வந்தார். யாரிடமும் பேசாமல் விரக்தியில் இருந்தார்.

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் அவர் மகன்களை கொன்று தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
நேற்று இரவு செந்தில்குமார் தனது வீட்டின் முன்பக்க கதவை பூட்டினார். பின்னர் தனது மகன்கள் சிலம்பரசன், அன்பரசன் ஆகியோருக்கு சாப்பாட்டில் வி‌ஷம் கலந்து கொடுத்தார். இதை சாப்பிட்ட அவர்கள் இருவரும் சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்தனர்.
பின்னர் செந்தில்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். செந்தில்குமாரின் தாய் திடீரென்று அங்கு வந்தார். வீட்டின் கதவு மூடியிருப்பதை பார்த்தார். வீட்டில் டி.வியில் பாட்டு சத்தம் ஒலித்துக்கொண்டிருந்தது. அந்த சத்தம் கேட்டு கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கவில்லை உள்பக்கமாக தாழ் போடப்பட்டிருந்தது.
இதனால் அவர் ஊர் பொதுமக்களிடம் கூறினார். அவர்கள் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி பார்த்தனர். அங்கு சிலம்பரசன், அன்பரசன் ஆகியோர் பிணமாக கிடந்தனர். செந்தில்குமார் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைப்பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அரகண்ட நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு கீதா, இன்ஸ்பெக்டர் ஜெயவேல், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாபு, தாரணீஸ்வரி ஆகியோர் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். உடல்களை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  மாலைமலர்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக