சனி, 6 ஆகஸ்ட், 2016

ஆசிரியர்களின் கால்களை மாணவர்கள் கழுவுவதா? கனிமொழி மாநிலங்கள் அவையில் ! 1800 ஆசிரியர்களின் காட்டுமிராண்டித்தனம் ......

சென்னையில் ஹிந்து ஆன்மிக சேவைக் கண்காட்சியில் தமிழ் ஆசிரியர்களுக்குப் பாத பூஜை செய்த நிகழ்வைக் கண்டித்து மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்கள் குழுத் தலைவர் கனிமொழி பிரச்னை எழுப்பினார். இது தொடர்பாக மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை காலையில் கேள்வி நேரம் தொடங்கியதும் மத்திய மனித வளத் துறை அமைச்சகம் தொடர்புடைய கேள்விகளுக்கு அத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பதிலளிப்பதாக இருந்தது. சென்னை நிகழ்வு: இந்நிலையில், கேள்வி நேரம் தொடங்கிய போது இடைமறித்த கனிமொழி, "தினமணி' நாளிதழில் "தமிழ் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பாத பூஜை' என்ற தலைப்பில் வெளியான புகைப்படத்துடன் கூடிய செய்தியின் பக்கத்தை அவையில் காண்பித்து குரல் எழுப்பினார்.
இதையடுத்து, அவரிடம் "என்ன பிரச்னை?' என்று அவையை வழிநடத்திய மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே. குரியன் கேட்டார். அப்போது கனிமொழி பேசியது வருமாறு:

 "நம் நாட்டில் ஆசிரியர்களை மதிக்கிறோம். அவர்கள் மீது உயரிய மரியாதை வைத்துள்ளோம். குழந்தைகளின் எதிர்காலத்தை செம்மைப்படுத்துவதற்கு ஆசிரியர்கள் உதவுகின்றனர். இந்நிலையில், சென்னையில் ஹிந்து குழுக்கள் சேர்ந்து நடத்திய கண்காட்சியில் 1,800 ஆசிரியர்கள் பங்கேற்றனர். அவர்களின் பாதங்களை மாணவர்கள் தண்ணீரால் கழுவுவது போன்ற காட்சி பத்திரிகையில் வெளியாகியுள்ளது. இதுதான் இந்த அரசின் புதிய கல்விக் கொள்கையா? இது பற்றி அவையில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் விளக்கம் தர வேண்டும்' என்று வலியுறுத்தினார்.
அறிவுரை: அப்போது தனது பாகிஸ்தான் பயணம் தொடர்பாக பதிலளிக்க மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவைக்குள் வந்தார். இதையடுத்து, "கனிமொழி எழுப்பிய விவகாரம் தொடர்பாக உரிய நோட்டீஸ் அளித்தால் அதை மாநிலங்களவைத் தலைவர் (ஹமீது அன்சாரி) பரிசீலித்து நடவடிக்கை எடுப்பார். ஹிந்து, முஸ்லிம் உள்ளிட்ட மதங்களின் பெயரைப் பயன்படுத்தி கேள்விகள் கேட்பதைத் தவிர்க்க வேண்டும்' என்று குரியன் அறிவுறுத்தினார். ஆனால், இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்று கனிமொழி வற்புறுத்தினார். அவையில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ், திமுக உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்ட உறுப்பினர்கள் கனிமொழிக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினர். அப்போது தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர்கள் அமைதியாக இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். இந்நிலையில், உரிய நோட்டீஸ் கொடுத்தால் மட்டுமே இந்த விவகாரத்தை பரிசீலிக்க முடியும் என்று குரியன் கூறினார். இதையடுத்து, சில நிமிடங்கள் சலசலப்புக்கு பிறகு அவையில் இயல்பு நிலை திரும்பியது. ஆதரவு கேட்ட திமுக: முன்னதாக, மாநிலங்களவை அலுவல் தொடங்கும் முன்பு அவையில் இருந்த அதிமுக, காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்டவற்றின் உறுப்பினர்களிடம் "தினமணி' நாளிதழை காட்டிய கனிமொழி, "இந்த விவகாரத்தை அவைக்குள் எழுப்ப ஒத்துழைக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். ஆனால், தமிழகத்தில் நடந்துள்ள இந்த நிகழ்வு குறித்து மேலிடத்தைக் கேட்காமல் ஆதரவு தர முடியாது' என்று அதிமுக எம்.பி.க்கள் மறுத்து விட்டதாகத் தெரிகிறது. இருப்பினும் மற்ற கட்சி உறுப்பினர்கள் கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்தனர்.தினமணி.com



tamilthehnidu.com  :சென்னை ஏ.கே.ஜெயின் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வரும் இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையி்ல் திமுக உறுப்பினர் கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா ஆகியோர் இந்த இந்த விவகாரத்தை எழுப்பி புகார் தெரிவித்தனர்.
இது குறித்து மாநிலங்களவை யில் திமுக குழுத் தலைவரான கனிமொழி பேசும்போது, “ஆசிரியர்கள் மீது நாம் மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். மாணவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்த அவர்கள் உழைக் கின்றனர். ஆனால் சென்னையில் இந்து மத அமைப்புகள் நடத்தும் ஒரு கண்காட்சியில் 1800-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். அந்நிகழ்ச்சியின் தொகுப்பைப் பார்க்குமாறு பள்ளிக் குழந்தைகள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். பூஜைகள் செய்யுமாறு வற்புறுத்தப் படுகின்றனர். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியே இது” என்றார்.
இந்த விவகாரத்தைத் தொடர்ந்து பேச அனுமதி மறுத்த அவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன், “இது குறித்து விவாதிக்க நோட்டீஸ் அளித்தால், அதற்கு அனுமதி அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்” என்று கூறி அமர வைத்தார்.
அடுத்து பேசிய இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜாவும், இந்த நிகழ்ச்சியை இந்து மதவாத நிறுவனங்கள் நடத்து வதாகவும்,. இந்தப் பிரச்சினையை கவனத்தில் கொண்டு அவையில் விவாதிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இதற்கு ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலரும் ஆதரவாக குரல் கொடுத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக