ஞாயிறு, 31 ஜூலை, 2016

கனிமொழி:புதிய கல்வி கொள்கை பழைய குலகல்வி திட்டத்தின் மறுவடிவம்தான் .. விடமாட்டோம்!

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை 2016ஐ கண்டித்து மாவட்டத்தில் உள்ள கிருத்தவ, இஸ்லாமிய, இந்துக்கள் என அனைத்து மதத்தினரையும் கொண்ட ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக எம்பி கனிமொழி, சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக புதிய கல்வி கொள்கை அமைந்துள்ளது. இட ஒதுக்கீடு வேண்டாம் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கூறியது ஏன் என்று இப்போது தான் தெரிகிறது. கல்வியில் மாநில அரசின் உரிமையில் மத்திய அரசு தலையிடுவது ஏற்க முடியாது. சமூக நீதியை காக்க பல்வேறு போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றுள்ளோம்.


இனி அதை கீழ் இறங்க அனுமதிக்க மாட்டோம். கல்வியில் உலக தரம் வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் உலக தரம் வாய்ந்த கல்வி எத்தகையது என்பது முக்கியம். எந்த மொழியில் பயின்றாலும் அந்த மொழியில் உலக தரம் உள்ள கல்வி இருக்க வேண்டும். சமஸ்கிருத மொழியில் உலக தரமான கல்விக்கு வாய்ப்பு உள்ளதா?
புதிய கல்வி கொள்கையின் படி 10-ம் வகுப்பில் பெயிலாகும் மாணவன் உயர் கல்வி படிக்க முடியாது. இது பழைய குல கல்வி திட்டம் போல் உள்ளது. குல கல்வி திட்டத்தை கொண்டு வந்த ராஜாஜியை நீக்கி விட்டு அனைவருக்கும் சமமான கல்வி திட்டத்தை கொண்டு வந்த காமராஜரை ஆட்சியில் கொண்டு வந்தோம்.

இன்று மத்திய அரசு அதே குலகல்வி திட்டத்தை கொண்டு வர முயற்சிக்கிறது. தற்போது மத்திய அரசின் கல்வி குழுவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர்தான் உள்ளனர். எனவே அந்த கல்வி குழுவை மாற்றி அமைக்க வேண்டும். இந்த போராட்டம் சரியான நேரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கைக்கு எதிரான போராட்டத்தில் தி.மு.க. முழுமையாக ஈடுபடும். சமூக நீதிக்கு எதிரான புதிய கல்வி கொள்கையை தி.மு.க. கடுமையாக எதிர்க்கும். எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை திணித்தால் போராட்டத்தால் தமிழகம் தீப்பற்றி எரியும் என்றார். செய்தி : பரமசிவம் படங்கள்: ராம்குமார் நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக