புதன், 27 ஜூலை, 2016

குளிக்கும் போதும் கோட்-சூட் போட்டுக்கிட்டு…”: இதற்கு என்ன விளக்கம் கவிஞரே!

கபாலி தோல்வி படம் என்று வைரமுத்து விழா ஒன்றில் பேசியது சமூக ஊடகங்களில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.  இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக கவிஞர் வைரமுத்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில்,“கடந்த ஞாயிற்றுக்கிழமை என் நண்பரின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டேன். விழாவில் பேசும்போது அவரது கடவுள் நம்பிக்கையோ எனது கடவுள் மறுப்போ எங்கள் நட்புக்கு எந்த வகையிலும் தடையாய் இருந்ததில்லை என்பதை விளக்கிச் சிலவற்றை ஏற்றுக்கொள்ள முடியாத இடத்திலும் புரிந்துகொள்ள வேண்டும் என்று உணர்ச்சி ஓட்டத்தில் குறிப்பிட்டேன். நான் சொன்ன வேகத்தில் ஒரு வார்த்தை விடுபட்டுப் போய்விட்டது என்று பிறகு புரிந்து வருந்தினேன். கபாலி படத்தின் வெற்றி – தோல்வி என்று பேசப்படுவதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் புரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்ல வந்தேன். அதில் வெற்றி என்ற வார்த்தை விடுபட்டுவிட்டது.
என் நோக்கம் நான் சார்ந்திருக்கும் திரையுலகை – நான் பெரிதும் நேசிக்கும் ரஜினியைத் திட்டமிட்டுக் குறைத்துச் சொல்வதல்ல. என் நெஞ்சு தூய்மையானது. ஒரு வார்த்தை அதற்கு வசப்படாமல் போயிருக்கலாம். அதை யாரும் தவறாகப்புரிந்துகொள்ள வேண்டாம்.இந்தச் செய்தி வெளியாவதற்கு முன்பே ரஜினிகாந்த் சென்னைக்கு வந்த மறுநாள்அவரிடமே தொலைபேசியில் இதைக் குறிப்பிட்டுச் சொன்னேன். அவர் எனக்கும் சில நண்பர்கள் அப்படித்தான் சொன்னார்கள் என்று பெருந்தன்மையாகப் பேசினார். எங்கள் நட்பு பெரியது; தயவு செய்து யாரும் இதைச் சர்ச்சையாக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்”
என்று தெரிவித்துள்ளார்.
வைரமுத்து ‘கபாலி’ தோல்வி என்பதை அந்த தொனியில் தான் பேசினாரா என்பதை வீடியோவைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம். ரஜினியின் கோட்-சூட் குறித்து எள்ளலாக பேசுகிறார்.  “கபாலியில் ரஜினி கோட் சூட் போடுவதற்கு முன்பே அரிமா சங்கத்துக்காரங்க போட்டுட்டாங்க. உங்களைப் பார்த்துதான் ரஞ்சித், கபாலியில் ரஜினிக்கு கோட்-சூட் போடவைத்து அந்தப் படமும் ஓடிக்கொண்டிருக்கிறது. குளிக்கும் போதும் கோட்-சூட் போட்டுக்கிட்டு…” என்று நிறுத்தி அங்கே ஒரு சிரிப்பை உதிர்க்கிறார் வைரமுத்து. அதற்கான விளக்கத்தையும் வைரமுத்து அளித்திருக்க வேண்டும். அதை கவனமாக தவிர்த்திருக்கிறார்.thetimestamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக