செவ்வாய், 19 ஜூலை, 2016

பியுஷ் மனுஷ் ஏன் கைது ? நாட்டுக்கு நல்லது செய்தால் வேற என்னதான் கிடைக்கும் ?


nisaptham.com : எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருக்கும் போது எதுவுமே பிரச்சினையில்லை. இடையில் ஏதாவதொரு இடத்தில் சிக்கல் வந்துவிட்டால் சோலி சுத்தம். ஏறி மிதிக்க நான்கு பேர் தயாராக இருந்தால் மண்ணை வாரித் தூற்ற நூறு பேர் வரிசையில் நிற்பார்கள். பியுஷ் மனுஷ் நிலைமை அப்படித்தான் இருக்கிறது. ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது ‘அந்த ஆளு ஒரு டுபாக்கூர்..நீங்களே விசாரிச்சு பாருங்க’ என்றார். சமூக ஊடகங்களின் யுகத்தில் கும்மினால் ஒரே கும்மாக கும்முவார்கள். தூக்கினால் ஒரே தூக்காகத் தூக்குவார்கள். இது ஒரு கூட்டம். அது ஒரு கூட்டம். பியுஷ் மட்டுமில்லை- இன்றைய சூழலில் யார் சிக்கினாலும் இதுதான் நிலைமை. அதனால்தான் வெளிச்சம் விழ விழ பயப்பட வேண்டியதாக இருக்கிறது. பாராட்டுகளைத் தாங்குவது பெரிய காரியமில்லை. வயதுக்கும் தகுதிக்கும் அனுபவத்துக்கும் மீறிய நல்ல பெயரையும் பாராட்டுகளையும் சேகரித்து வைத்து நமக்கென்று ஒரு பிம்பம் உருவாகியிருக்கும் போது சம்பந்தமேயில்லாத ஆட்கள் ஆயிரக்கணக்கானவர்கள் சேர்ந்து தூக்கிப் போட்டு மிதிக்கும் போது அதைத் தாங்குவதற்கு பெரும்பலம் வேண்டும். தூக்கி மிதிப்பவர்களில் முக்கால்வாசிப் பேருக்கு மிதிபடுகிறவரைப் பற்றி பத்து சதவீதம் கூட முழுமையாகத் தெரிந்திருக்காது என்பதுதான் கொடுமையாக இருக்கும்.

இருட்டு அறையில் முரட்டுக் குத்து குத்துவார்கள். 
பியுஷ் மனுஷ் நிறைய களப்பணிகளைச் செய்திருக்கிறார். சேலத்து ஏரிகள், தர்மபுரி வனப்பகுதி என்று அவர் செய்த இயற்கை சார்ந்த செயல்பாடுகள் மிக அதிகம். இதை வெறுமனே பொது நலக்காரியமாகச் செய்வதாகவெல்லாம் அவர் எந்த இடத்திலும் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. விகடனில் வெளியான நேர்காணல் ஒன்றில் கூட ‘இந்த வனத்தில் இருந்துதான் எங்களுக்கான வருமானத்தை எடுத்துக் கொள்கிறோம்’ என்றுதான் பேசுகிறார். வனத்தை வளர்க்கிறேன்; அதிலிருந்து வருமானத்தை எடுத்துக் கொள்கிறேன் என்கிற பரஸ்பர சகாயம். mutual benefit.
‘நீ பாட்டுக்கு உன் வேலையைப் பாரு; நான் என் வேலையைப் பார்க்கிறேன்’ என்று இருந்துவிட்டால் இந்த உலகில் நமக்கு பிரச்சினையே இல்லை. ஆனால் பியுஷ் அப்படி இல்லாததுதான் பிரச்சினையின் மையப்புள்ளி என்கிறார்கள். ஏரிகள், குளங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கும் கட்டடங்களை தொடர்ந்து எதிர்த்திருக்கிறார். அவர் சார்பில் புகார்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன. ஆக்கிரமித்துக் கட்டுகிறவர்களில் பெரும்பாலானவர்கள் வசதி வாய்ப்பும் அரசியல் செல்வாக்கும் படைத்தவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் இவர் மீது ஒரு கண். வசமாகச் சிக்கட்டும் என்று காத்திருக்கிறார்கள். சிக்கிக் கொண்டார்.
பிரச்சினைக்குக் காரணமான முள்ளுவாடி ரயில்வே கேட் வெகு காலமாகவே சேலத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடம்தான். தொடரூர்தி கடக்கும் போதெல்லாம் சாலையை அடைத்து வைத்துவிடுவார்கள். இரண்டு பக்கமும் போக்குவரத்து நீளும். அங்கே ஒரு மேம்பாலம் கட்டுவதற்காக திட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அந்தச் சாலையில் போக்குவரத்தை வழிமாற்றியிருக்கிறார்கள். அதில் இருக்கும் சிக்கல்கள் குறித்தும் அதை வேறு வகையில் ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியம் குறித்தும் ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் பியூஷ் மற்றும் அவரது குழுவினர் மனு கொடுத்திருக்கிறார்கள். 
பிரச்சினை நடந்த தினத்தில் மேம்பாலத் திட்டப்பணி நடக்கும் இடத்தில் பியுஷ்ஷூம் அவரது குழுவினரும் பணியாளர்களைத் தடுத்திருக்கிறார்கள். இதை மக்கள் போராட்டம் என்று சொல்ல முடியாது என்றுதான் சேலத்து நண்பர்கள் சொல்கிறார்கள். தடுக்க விரும்பியிருந்தால் மக்களைத் திரட்டி ஏதாவதொரு வகையில் அமைதியான போராட்டத்தை நடத்தியிருக்கலாம். இவர்களாகவே களத்தில் இறங்கி வேலைக்கு இடையூறாக இருக்கவும் வழக்கு மேல் வழக்காகப் பதிந்து உள்ளே தள்ளிவிட்டார்கள். இதுவரை பியுஷ் மீது கண்ணாக இருந்தவர்கள் அவர் வெளியே வராமல் இருக்கவும், ஊடகங்களில் பெரிய அளவில் செய்தி வராமல் இருக்கவும், பியூஷ்ஷூக்கு ஆதரவாக மக்கள் திரண்டுவிடாமல் இருக்கவும் எல்லாவிதமான லாபிகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இப்பொழுதுதான் பியுஷ் ஆணாதிக்கவாதி என்றும், பிறர்களின் உதவியோடு ஒரு காரியத்தைச் செய்துவிட்டு பெயரைத் தனக்கானதாக மாற்றிக் கொள்கிறார் என்றும், பாலியல் ரீதியாகப் பேசினார் என்றும் அவரது அந்தரங்கங்களைப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். இதெல்லாம்தான் பயமாக இருக்கிறது. பியுஷ் எந்தப் பெண்ணின் ஆடையைக் கிழித்துவிட்டுக் கைதாகவில்லை. யாரிடமும் பிக்பாக்கெட் அடிக்கவில்லை. அவர் மக்களுக்கான காரியத்தில் இறங்கிக் கைதாகியிருக்கிறார். இந்தச் சமயத்தில் ‘இவனைப் பற்றித் தெரியாதா’ என்கிற வகையில் ஏன் அவரது உள்ளாடையை அவிழ்க்கிறார்கள் என்று புரியவில்லை. இந்தச் சமயத்தில் இது அவசியமானதுதானா?  இங்கே யார்தான் புனிதர்கள்? எல்லோரிடமும் ஒரு மிருகம் ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது.
பியுஷ் இந்தச் சமூகத்திற்காகச் செய்த காரியங்கள் முக்கியமானவை. பொதுக்காரியங்களில் ஆயிரம் கைகளின் உதவிகள் இல்லாமல் எதையும் செய்து முடித்துவிட முடியாது. அப்படிச் செய்யும் போது முன்னால் நிற்பவரின் பெயர்தான் வெளியில் தெரியும். காந்தி சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது மாதிரிதான் இது. ஆனால் ஒருங்கிணைப்பு அவசியம் அல்லவா? ஒருங்கிணைத்தவரின் பெயர் முன்னால் வருவது இயல்பானதுதான். அதைத்தான் பியுஷ் செய்திருக்கிறார். சேலத்தின் ஏரிகள் மேம்பாட்டில் அவரது பங்களிப்பு இருக்கிறது. தர்மபுரியில் வனம் அமைத்ததில் அவர் பணியாற்றியிருக்கிறார். அவர் செய்யக் கூடிய வேலைகள் இன்னமும் இருக்கின்றன. அற்பக் காரணங்களைச் சொல்லி நம்மிடையே இயங்கிக் கொண்டிருக்கும் ஒன்றிரண்டு களப்பணியாளர்களையும் ஒடுக்கி விட வேண்டியதில்லை.

ஸ்டண்ட் அடிக்கிறார், விளம்பரம் தேடுகிறார், சம்பாதிக்கிறார் என்று என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்- ஆனால் அதன் பின்னால் நல்ல காரியங்கள் நடந்திருக்கின்றன அல்லவா? அதுதான் முக்கியம். நம்மில் எத்தனை பேர் பத்து மரங்களை நட்டிருக்கிறோம்? எத்தனை பேர் ஏரியில் இறங்கி சுத்தம் செய்திருக்கிறோம்? எத்தனை குப்பை மேடுகளைச் சுத்தம் செய்திருக்கிறோம். அவன் ஸ்டண்ட் அடித்தாவது இதையெல்லாம் செய்யட்டுமே. விளம்பரம் தேடியாவது துரும்பைக் கிள்ளிப் போடட்டுமே. எதையுமே செய்யாமல் வெட்டி நியாயம் பேசிக் கொண்டேயிருப்பதைவிடவும் அத்தகைய காரியங்கள் எவ்வளவோ பரவாயில்லை அல்லவா?
தன் வீடு, தன் குடும்பம் ஆகிய எல்லைகளைத் தாண்டி பொதுவெளியில் இறங்கும் போது என்னதான் நல்ல காரியமாக இருந்தாலும் பத்து பேர் நம் பின்னால் நின்றால் நூறு பேராவது எதிர்த்துப் பேசத்தான் செய்வார்கள். நாம் சரி என்று நினைப்பது அவர்களுக்குத் தவறாகத் தெரியலாம். நம்முடைய நிலைப்பாடு அவர்களது நிலைப்பாடுகளுக்கு முரணாக இருக்கலாம். இதெல்லாம் இயல்பானதுதான். எதிர்பார்க்க வேண்டியதுதான். பியுஷூக்கு குடும்பம் இருக்கிறது. இரு குழந்தைகள் இருக்கிறார்கள். இனி ‘நமக்கெதுக்கு இந்த எழவெல்லாம்’ என்று ஒதுங்கிக் கொள்ளக் கூடும் அல்லது ‘ஒரு கை பார்க்கலாம்’ என்று தொடர்ந்து செயல்படக் கூடும். ஒதுங்கிக் கொள்கிறவர்கள் சாதாரண மனிதர்கள் ஆகிறார்கள். தொடர்ந்து செயல்படுகிறவர்கள் சாதனை மனிதராக உருமாறுகிறார்கள். பியுஷ் இரண்டாம் வகையிலான மனிதர் என்று நம்புகிறேன். போராட்டங்களின் முறைகளை மாற்றிக் கொண்டு தொடர்ந்து செயல்பட மனப்பூர்வமான வாழ்த்துக்கள். ஆயிரம் குறைகளைச் சொன்னாலும் இந்த நிலத்துக்கும் இயற்கைக்கும் அவரது பங்களிப்பு முக்கியமானது. அரசாங்கம் அதைக் கருத்தில் கொண்டு பரிசீலிக்கட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக