செவ்வாய், 26 ஜூலை, 2016

அகரமுதல எழுத்தெல்லாம் ஆரியம் ஒழிக்க பழகு…!

திருவள்ளுவர் சிலை
சிலையாக பொட்டலம் கட்டி வைத்தாலும் பார்ப்பனியத்தைப் பொசுக்கும் உலையாகக் கொதிக்கிறார் திருவள்ளுவர்.
பிள்ளையார் பிடிக்க
குரங்கானது கதை.
திருவள்ளுவரைப் பிடிக்க
தருண் விஜய்யும், பா.ஜ.க.வும்
குரங்கானது நிஜம்.
சிலையாக
பொட்டலம் கட்டி வைத்தாலும்
பார்ப்பனியத்தைப் பொசுக்கும்
உலையாகக் கொதிக்கிறார்
திருவள்ளுவர்.
“அணுவைத் துளைத்து
ஏழ்கடலைப் புகட்டி
குறுகத் தறித்தக் குறள்” – இப்போது
மனுவைத் துளைத்து
‘நூல்’ கடலைப் புரட்டி
ஆரியக் குரலை நெறிக்கிறது.
முப்பாலுக்கு அப்பாலும்
வரும் சிரமம் தவிர்க்க
வழிகாட்டும் உலகப் பொது அறமாம்.
திருக்குறளை
உவக்குமோ வருணா சிரமம்!
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்…”
எனும் ஒரு அடி போதாதா?
“சதுர்வர்ணம் நமா சிருஷ்டம்…” எனும்
பகவத்கீதையின் காவித் தவளைகள்
பல அடி தாவிக் குதிக்க !
“மனத்துக்கண் மாசு இலன் ஆதல்;
அனைத்து அறன் ஆகுல நீர பிற”
இந்த ஈரடி படி இருக்கச் சொன்னால்
சங்கராச்சாரிக்கே ஜன்னி கண்டுவிடுமே!
“மழித்தலும் நீட்டலும் வேண்டா…”
ஒரு குறள் போதாதா?
சாதுக்கள் வாது செய்ய!

திருவள்ளுவரை இந்து சாமியாராக்கி
தீபாராதனைக் காட்டி
கங்கைக் கரையில்
கரைக்க நினைத்தாலும்
தீட்டிய திருக்குறளோ
கருத்துற்றோரின்
இதயக் கரையில்
இதழ்களின் படியில்
தீய வருணாசிரமத்திற்கு
திவசமே கொடுத்து விடுகிறது.
பகையாடிக் கெடுக்க
முடியாத காரணத்தால்
உறவாடிக் கெடுக்க
வள்ளுவர் மேல்
காவிக்கொரு காதல்.
வள்ளலார் மேல்
வந்த காதல் – அவரை
ஜோதியில் கலந்தது.
வள்ளுவர் மேல்
வந்த காதல் – அவரை
வீதியில் எறிந்தது.
நல்ல வேளை
ஜோதிக்கு பதிலாக
தொலைக்காட்சி இருந்ததால்
நம் கண்ணுக்கு தெரிந்தது.
பெரியார்
நெஞ்சம் நிமிர்த்திச் சொல்வோம் இனி வடக்கே வரும் முதலில் திருவள்ளுவர் சிலை பிறகு பெரியார் சிலை !
புத்தரை
கிருஷ்ணனின்
அவதாரமென்றக் கும்பல்
வள்ளுவரை
மனுவின்
மறு அவதாரமென்றால்
வியப்பதற்கில்லை !
திருவள்ளுவருக்கே
பூணூல் போட்ட
திருட்டுக் கும்பலல்லவா !
கல்விக் கூடத்தில்
சமஸ்கிருதத் திணிப்பு – கோயில்
கருவறையில் தமிழ், தமிழன் தீட்டென்று
பார்ப்பனக் கொழுப்பு
கண்டுகொள்ளாமல்
பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். பசப்பு!
தெருவில் வந்து என்னடா
திருவள்ளுவர் நடிப்பு!
விவேகானந்தரைப் பிடித்துக் கொண்டு
விளங்காத ஆர்.எஸ்.எஸ்.
திருவள்ளுவரைப் பிடித்துக் கொண்டு
தெருவில் திரியப் பார்க்கிறது,
இந்து வேடம் வந்தாலும் – வேறு
எந்த வேடத்தில் வந்தாலும்
சந்து பொந்திலும் வறுத்தெடுக்க
வள்ளுவர் அதிகாரம் காத்திருக்கிறது !
உள்நோக்கம் மட்டுமல்ல
உள்ள நோக்கமும் எதிர்ப்புக்குரியது.
இல்லாத ராமனுக்கு
மசூதியை இடித்து
கோயில் கட்ட குவிந்த கும்பல்
இருக்கிற திருவள்ளுவருக்கு
பீடம் கட்ட
பீறிடக் காணோமே!
இங்கிருந்து ராமனுக்கு
செங்கல் சுமந்த அனுமார்களுக்கு
உத்தரகாண்ட் ‘கிளைமேட்’­­­
ஒத்து வராதோ !
பெரியார் - திருவள்ளுவர்
தெற்கிருந்து ஒரு சிலையின் பாதம் பட்டாலே கங்கையின் புனிதம் தீட்டாகும் என்றால்…
தெற்கிலிருந்து
ஒரு திருவள்ளுவர் சிலை
கங்கை நதித் தீரம்
கால் வைக்க முடியாதெனில்,
வடபுலம் தோன்றிய
ஆரிய சாமிகளுக்கு
காவிரிக் கழிமுகம் வரைக்கும்
கோயில் எதற்கு ?
கோதாட்டும் சிலைகளுக்கு
வேலிக்கணக்கில்
இங்கே விளை நிலம் எதற்கு ?
தெற்கிருந்து
ஒரு சிலையின் பாதம் பட்டாலே
கங்கையின் புனிதம்
தீட்டாகும் என்றால்,
எதற்காக
அதை அஞ்சலில் அனுப்பி
எங்கள் அருமைத் தாய் நிலத்தை
அசிங்கப்படுத்துகிறாய் ?
உண்மையில்,
கங்கையைத் ‘தீட்டாக்குவது’ யார் ?
திருவள்ளுவரா
திருந்தாத அகோரிகளா ?
rsyf-virudhai-poster-condemining-violence-on-gujarat-dalits-1
பார்ப்பன பாசிசத்துக்கு எதிராக பு.மா.இ.மு போஸ்டர்
பண்ணிய பாவத்தைத் தொலைக்க
புண்ணிய நதியென
கங்கையை ஆக்கி,
அனாதைப் பிணங்களும்…
சடங்கின் நிணங்களும்…
மிதக்க வைத்தது
‘மேல்’ சாதி ஆச்சாரமல்லவா ?
ஒரு குலத்துக்கு ஒரு நீதி
மனு நீதியை எதிர்த்ததனாலேயே
வான்புகழ் வள்ளுவரை
ஊன்புகழ் ஆரியம் எதிர்க்கிறது.
“வள்ளுவர் செய் திருக்குறளை
மறுவர நன்குணர்ந்தோர்
உள்ளுவரோ மநுவாதி…” என
மணோன்மணியம் சுந்தரனார்
வியந்தோதிய வள்ளுவரை
சாதி சொல்லி
பழி வாங்குது பார்ப்பனியம்.
ஆரிய தேசம்
மாறிடும் வேளை
நாறிடும் கங்கை தெளியும்,
நால்வர்ண வேதம் ஒழியும்.
கரை மீறிடும்
பாட்டாளி வர்க்க அரசியலால்
கங்கையின் அழுக்கும் தொலையும்.
புண்ணிய நீர் வியர்வைக்கு
பூசாரிகள் கூட்டம் பணியும் !
காலனியாதிக்க எதிர்ப்புப் போரிலேயே
முதலில் கால் பதித்த
தெற்கின் திருமுகங்களை
வரலாற்றில் மறைத்த
வடக்கின் ஆளும் வர்க்கமே,
கங்கையின் ராமன்
இங்கே கதை விடும்போது
எங்கள் திருவள்ளுவர் என்ன
ஈ.வெ.ரா.-வுக்கும்
இடமில்லையா என்ன ?
நெஞ்சம் நிமிர்த்திச் சொல்வோம்
இனி வடக்கே வரும்
முதலில் திருவள்ளுவர் சிலை
பிறகு பெரியார் சிலை !
– துரை. சண்முகம்   vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக