செவ்வாய், 26 ஜூலை, 2016

ஏழு திமுக எம்.எல்.ஏ-க்களுக்கு அம்மா சிக்னல் ! கடனில் தத்தளித்து வருந்தி பாரம் சுமப்பவர்களே கண்டெயினர் காத்துகிட்டு இருக்கு..

“தமிழ் மாநில காங்கிரஸ் மெல்ல கரைந்துகொண்டிருக்கிறது. சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் ஐக்கியமானது தமிழ் மாநில காங்கிரஸ். ஒரு இடத்தில்கூட அவர்களால் ஜெயிக்க முடியவில்லை. தேர்தல் முடிவுக்குப்பிறகு எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலரும் தமிழ் மாநில காங்கிரஸில் இருந்து விலக ஆரம்பித்தனர். இப்படி, விலகல் ஒருபக்கம் நடந்தபடி இருக்க... தமிழ் மாநில காங்கிரஸை எப்படியாவது காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துவிட வேண்டும் என திருநாவுக்கரசரும் ஒருபக்கம் வேலை பார்த்து வந்தார். இந்தச் சூழ்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸில் இருந்து ஒரு குரூப் அதிமுக-வுக்கு வரத் தயாராக இருக்கிறார்கள் என்ற தகவல் கார்டனுக்குச் சொல்லப்பட்டபோது அங்கிருந்து பெரிய ரெஸ்பான்ஸ் எதுவும் இல்லை. காரணம், தமாகா-வில் இருந்து ஆட்கள் பிரிந்து வருவதால் பெரிய மாற்றம் எதுவும் நிகழப்போவது இல்லை என்பது கார்டன் கணிப்பு. இந்த நேரத்தில்தான் வேலூர் ஞானசேகரன் அதிமுக-வில் இணைய முடிவுசெய்ததும், அவர் கார்டனை நெருங்க தேர்ந்தெடுத்த ரூட் தம்பிதுரை.


ஒரு ப்ளாஷ் ஃபேக் சொல்லிவிட்டுத்தான் இந்த இடத்தைக் கடந்துசெல்ல முடியும். கடந்த 2012ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் அது. தம்பிதுரையின் மகள் லஷ்யா மருத்துவம் படித்துக் கொண்டிருந்தார். அவர் படித்த அதே கல்லூரியில் மருத்துவம் படித்த மாணவர் நவீன். இருவருக்கும் காதல் மலர்ந்தது. லஷ்யா தனது வீட்டில் நவீன்பற்றி சொன்னதும், ’பையனை வரச் சொல்லும்மா.. நான் பேசணும்!’ என்று தம்பிதுரை அழைத்திருக்கிறார். நவீனும் தம்பிதுரை வீட்டுக்குப் போயிருக்கிறார். நவீனுடன் பேசும்போதுதான் அவர் வேலூர் ஞானசேகரனின் மகன் என்பது தெரிந்திருக்கிறது. ‘பொண்ணுகிட்ட சொல்லி அனுப்புறேன் தம்பி..’ என்று சொல்லி நவீனை அனுப்பிவிட்டார் தம்பிதுரை. அப்போது, காங்கிரஸ் எம்எல்ஏ-வாக இருந்த ஞானசேகரன், அதிமுக-வை கடுமையாக விமர்சனம் செய்துவந்தார். இந்தச் சூழ்நிலையில் ஞானசேகரனுடன் சம்பந்தம் வைத்தால், அம்மாவின் கோபத்துக்கு ஆளாகிவிடுவோம் என பயந்தார். மகளை அழைத்து தம்பிதுரை என்ன சொன்னார் தெரியுமா? ‘எனக்கு ஜாதி, மதம், பணம், அந்தஸ்து எதுவும் முக்கியமில்லம்மா. ஆனால், அம்மா எனக்கு முக்கியம். அவங்களை ஒருத்தர் எதிர்க்கிறாருன்னா அவரு எனக்கும் எதிரிதான். அதனால, என்னால இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க முடியாது. அதுக்குமேல உனக்கு அந்தப் பையன்தான் வேணும்னா நீ கல்யாணம் பண்ணிக்கோ.. நான் வரமாட்டேன்!’ என்று சொல்லிவிட்டார். அப்பாவைப் போலவே மகளும் பிடிவாதமாக இருந்தார். தம்பிதுரை இல்லாமலேயே லஷ்யா - நவீன் திருமணம் திருப்பதியில் அடுத்த மாதமே நடந்தது. தம்பிதுரை மட்டும் திருமணத்துக்குப் போகவில்லை. அவரது மனைவி போயிருந்தார். திருமணம் முடிந்தபிறகுதான் தம்பிதுரை இந்த விஷயத்தை கார்டனில் சொன்னார். 'எனக்கு கட்சிதான் முக்கியம்' என்பதை கார்டனில் பதிய வைத்தார். 'கட்சிக்காக பெத்த பொண்ணு கல்யாணத்துக்கே போகலையா..' என ஜெயலலிதாவே ஆச்சரியப்பட்டார்.

'கட்சி வேறு.. குடும்பம் வேறு.. ரெண்டையும் போட்டு குழப்பிக்காதீங்க... எனக்கு உங்க பொண்ணு கல்யாணம் பண்ணிகிட்டதுல எந்த வருத்தமும் இல்லை..' என்று சொன்னார் ஜெயலலிதா. அதன்பிறகு லஷ்யா வீட்டுக்கு வர, போக இருந்தாலும், இரண்டு குடும்பத்துக்கும் இடையில் அதிக நெருக்கம் இல்லை. அதிமுக-வில் இணைய முடிவுசெய்ததும், மருமகன் நவீன் மூலமாகத்தான் தம்பிதுரையிடம் விஷயத்தை சொல்லச்சொல்லி இருக்கிறார். நவீன் சொன்னதும், தம்பிதுரையும் உடனடியாக ஜெயலலிதாவை சந்திக்க நேரம் வாங்கிக் கொடுத்துவிட்டார். சம்பந்திகள் இருவரும் தற்போதுதான் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்களைப் பிரித்து வைத்ததும் அரசியல்தான். இப்போது சேர்த்துவைத்ததும் அரசியல்தான் என தம்பிதுரை வீட்டில் இருப்பவர்களே கிண்டல் செய்கிறார்களாம்.
ஜெயலலிதாவை சந்தித்தபோது, 'வேறுசில முக்கியப் பொறுப்பாளர்களும் விரைவில் அதிமுக-வுக்கு வரத் தயாராக இருக்கிறார்கள். அதற்கும் நீங்கள் நேரம் ஒதுக்கித் தரவேண்டும்' என்று கேட்டிருக்கிறார் ஞானசேகரன். 'தாராளமாக வரட்டும்..' என்று சொன்னாராம் ஜெயலலிதா. தமாகா கூடாரத்தைக் காலி செய்யாமல் ஓய மாட்டார்கள்போல.."என்ற ஸ்டேட்டஸ்க்கு போஸ்ட் கொடுத்தது.
அந்த ஸ்டேட்டஸ்க்கு லைக் போட்டதுடன் ஷேர் செய்தது வாட்ஸ் அப்.
தொடர்ந்து வாட்ஸ் அப் அனுப்பியது ஒரு நீளமான மெசேஜ்.
"தமாகா-வில் இருந்து பிரிந்து வருபவர்களைப்பற்றி எல்லாம் ஜெயலலிதா பெரிதாக நினைக்கவில்லை. தமாகா இருந்தாலோ, அது உடைந்தாலோ அதிமுக-வுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என்பது ஜெயலலிதாவின் கணக்கு. அவரது தற்போதைய டார்கெட் திமுக. சட்டமன்றத்தில் திமுக-வினர் தொடர்ந்து எதிர்ப்புகளைப் பதிவுசெய்வதும், குரல் கொடுப்பதும் ஜெயலலிதாவை ரொம்பவும் டென்ஷனாக்கி இருக்கிறது. இதைப் புரிந்துகொண்ட ஒரு டீம் தற்போது களமிறங்கியிருக்கிறது. திமுக-வில் இரண்டு மனமாக இருக்கும் 7 எம்எல்ஏ-க்களை குறிவைத்து வேலைகளைத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த ஏழு எம்எல்ஏ-க்களிடம் பேசியபோது, 'பார்க்கலாம்' என்று மட்டும் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். 'உங்க தொகுதி பிரச்னைக்காக பேச நீங்க எப்போது வேண்டுமானாலும் முதல்வரைச் சந்திக்கலாம்' என்று சொல்லியிருக்கிறார்கள். அந்த 7 பேர் இருக்கும் மாவட்டத்தின் கலெக்டர்களுக்கும் ஒரு உத்தரவு போயிருக்கிறது. 'அந்த எம்எல்ஏ என்ன கேட்டாலும் உடனே செஞ்சு கொடுங்க... அவங்க தொகுதியில கூடுதல் கவனம் செலுத்துங்க...' என்பதுதான் அந்த உத்தரவு.
திமுக-வில் தற்போது ஜெயித்திருக்கும் எம்எல்ஏ-க்களில் 80 சதவிகிதம் பேர் கடனில்தான் இருக்கிறார்கள். தேர்தல் செலவுக்காக வாங்கிய கடன் பல கோடி ரூபாய் இருக்கிறதாம். அதில் ஒரு எம்எல்ஏ, 'வாங்கின கடனுக்கு வட்டிகூட கட்ட முடியலை. பேசாம தற்கொலை பண்ணிக்கலாம்னு தோணுது' என்றெல்லாம் பேசியது அறிவாலயத்துக்குப் போனதோ இல்லையோ, கார்டனில் தெளிவாகக் கேட்டிருக்கிறது. இப்படியாக இருப்பவர்களிடம் எல்லாம், ' நாங்க இருக்கோம்..' என ஆஜராகிறது அதிமுக-வின் சீக்ரெட் டீம். போகிறபோக்கைப் பார்த்தால், திமுக-வில் உள்ள எம்எல்ஏ-க்கள் சிலர் தொகுதிப் பிரச்னைக்காக முதல்வரைச் சந்திப்பார்கள் என்றே தோன்றுகிறது" என்பதுதான் அந்த மெசேஜ்.
"இதெல்லாம் திமுக தலைமைக்குத் தெரியுமா?" என்ற கேள்வியை ஃபேஸ்புக் கேட்டது.
" தெரியாமல் எப்படி இருக்கும்? ஜெயித்தவர்கள் கடனில் இருக்கிறார்கள் என ஸ்டாலினிடம் சொன்னபோது, ' அதுக்கு என்ன பண்ணமுடியும்?' என்று கேட்டாராம். யாரு பேசினாலும் இங்கே இருந்து யாரும் போக மாட்டாங்க... என நம்பிக்கையோடு சொல்லிவருகிறாராம் ஸ்டாலின். நம்பிக்கை மட்டும் கடனை அடைத்துவிடுமா எனக் கேட்கிறார்கள் இந்தத் தகவலை ஸ்டாலினுக்குச் சொன்னவர்கள். அடைக்குமா என்பது ஸ்டாலினுக்கு மட்டும்தான் தெரியும்!'' என்று சொல்லி ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.  minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக