ஞாயிறு, 5 ஜூன், 2016

பாஜக கூட்டணி ஐ ஜ கட்சி + வேந்தர் மூவீஸ் + SRM கல்லூரி + பாரிவேந்தர் பச்சமுத்து + காணமல் போன மதன் = புரிகிறதா?

என்ன ஆனார் ‘வேந்தர் மூவிஸ்’ மதன்? என்று கடந்த இதழில் எழுதி இருந்தோம். மதன் மாயமானதைத் தொடர்ந்து அதிர்ச்சி அளிக்கும் பல விவகாரங்கள் வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கின்றன. எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் நிழல் வேந்தராக வலம் வந்த மதன், ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு திடீரென மாயமாகிவிட்டார். இந்த விவகாரத்தில் எஸ்.ஆர்.எம் கல்விக் குழுமத்தையும், அதன் நிறுவனர் மற்றும் வேந்தர் பாரிவேந்தரையும் சுற்றிச் சர்ச்சைகள் வலம் வருகின்றன. இப்போது, எஸ்.ஆர்.எம் கல்லூரியில் சீட் வாங்குவதற்காக மதனிடம் பணம் கொடுத்தவர்கள் போலீஸில் புகார் கொடுத்து வருகிறார்கள். திருச்சியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அவரிடம் பேசினோம். “என் மகனை மருத்துவக் கல்லூரியில் சேர்க்க எஸ்.ஆர்.எம் குழுமத்தின் நிறுவனர் பாரிவேந்தரின் கல்லூரிச் சேர்க்கை நிர்வாகியான ‘வேந்தர் மூவிஸ்’ மதனை அணுகினேன். அவர், 2016-17-ம் ஆண்டுக்கான சேர்க்கைக்கு 62 லட்சம் ரூபாய் கேட்டார். 27.2.2016 அன்று ரூ.52 லட்சம், 11.3.2016 அன்று ரூ.10 லட்சம் என ரூ.62 லட்சம் மதனிடம் கொடுத்தேன். என் மகன் ப்ளஸ் 2-வில் போதிய கட்ஆஃப் மார்க் பெறாததால், பணத்தைத் திருப்பிக் கேட்டேன். 23.5.2016 அன்று மதனின் தம்பி சுதீர் மூலம் ரூ.10 லட்சம் திருப்பிக் கொடுத்தார். மீதியை 30.5.2016 அன்று தருவதாகச் சொன்ன அவர், அதன் பிறகு போனை எடுக்கவே இல்லை” என்றார்.
டாக்டர் சந்திரன் என்பவர், “என் மகனின் மருத்துவப் படிப்புக்காக திண்டுக்கல் மாவட்ட இந்திய ஜனநாயகக் கட்சியின் நிர்வாகியான பாபு மூலம் வேந்தர் மூவிஸ் அலுவலகத்தில் மதனை சந்தித்தேன். அவரிடம் ரூ.53 லட்சம் கொடுத்தேன். மதன் மாயமாகிவிட்ட செய்தியைக் கேள்விப்பட்டு பாபுவிடம் பேசினேன். அவர், உங்களுக்கு சீட் கிடைத்துவிடும் என்று தெரிவித்தார். இப்போது, பாபுவையும் தொடர்புகொள்ள முடியவில்லை” என்றார்.

மதனின் நண்பர்கள் சிலரிடம் பேசினோம். அவர்கள் கேட்டுக்கொண்டதால் பெயர்களைக் குறிப்பிடவில்லை. “யாரையும் ஏமாற்றும் எண்ணம் மதனுக்கு இல்லை. அவர் அப்படிப்பட்டவர் கிடையாது. அவர், தினமும் 6 மணி நேரம் பூஜை செய்யக்கூடிய ஆன்மிகவாதி. காசிக்கு செல்வதற்கு முன்புகூட, ஒருவரிடம் 50 லட்சம் ரூபாய் கடனைத் திருப்பிக் கொடுத்துவிட்டுத்தான் அவர் சென்றுள்ளார். எஸ்.ஆர்.எம் தலைவர் பாரிவேந்தருக்கும் மதனுக்கும் உள்ள தொடர்புகள் பற்றி வாக்குமூலமாகத் தனது கடிதத்தில் மதன் பதிவு செய்துள்ளார்.

எஸ்.ஆர்.எம் குழுமத்துடன் மதன் மிக நெருக்கத்தில் இருந்தார். பாரிவேந்தருக்காகத்தான் வேந்தர் மூவிஸை மதன் ஆரம்பித்தார். பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சியில் முக்கியப் பொறுப்பிலும் இருந்தார். அவரைக் கட்சியில் இருந்து பிப்ரவரி மாதம் நீக்கிவிட்டதாக இப்போது சொல்கிறார்கள். அதுகுறித்த செய்திகள் ஏன் வெளிவரவில்லை? மதன் மாயமாகி உள்ள விவகாரத்தில் பல மர்மங்கள் புதைந்துகிடக்கின்றன. மதன் உயிரோடு இருக்கிறாரா... இல்லையா? என்று கூட எங்களுக்குத் தெரியவில்லை. மதன் குறித்து அவதூறுகள் பரப்பப்படுகின்றன. குறிப்பாக, மதனுக்கு நான்கு மனைவிகள் என்று வதந்தியைப் பரப்புகிறார்கள். இது சுத்தப்பொய். அவரது முதல் மனைவி சிந்துவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், சுமலதாவுடன் வாழ்ந்து வந்தார்” என்றனர்.

மதனுக்கும், பாரிவேந்தருக்கும் எப்படிப் பிரச்னை ஏற்பட்டது என்று உள்விவரம் தெரிந்த சிலர் கூறுகையில், “பிரபல இயக்குநர் ஒருவருடன் பாரிவேந்தருக்கு மோதல் ஏற்பட்டது. அதுதான், வேந்தர் மூவிஸ் தொடங்கியதற்குக் காரணம். மாணவர்கள் சேர்க்கை மூலம் கிடைக்கும் பணத்தை சினிமா பிசினஸில் கொட்டினார்கள். அதில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால், சீட் கொடுக்காத மாணவர்களுக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுப்பதில் பிரச்னை ஏற்பட்டது. பாரிவேந்தரின் நம்பிக்கைக்கு உரியவராக மதன் இருந்ததால், அவரிடம் கணக்குவழக்குகளைக் கேட்பதில்லை.

இன்ஜினீயரிங், மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கான அனுமதி மற்றும் மாணவர் சேர்க்கை என எல்லாமே மதன் வசம் இருந்தன. இது, எஸ்.ஆர்.எம் குழுமத்தில் சிலருக்குப் பிடிக்கவில்லை. இந்த நிலையில், பாரிவேந்தரின் உறவினரான அன்பு என்பவரை சினிமா பிசினஸில் களமிறக்கினர். அது, மதன் தரப்புக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ஒருசிலர், கூலிப்படை ஏவி அன்புவைக் கொலை செய்ய முயற்சி செய்தனர். அதில் மதனுக்குத் தொடர்பு இருப்பதாகத் தகவல் சென்றதால், பாரிவேந்தருக்கும் மதனுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. மதனிடம் கணக்கு விவரங்கள் கேட்கப்பட்டது. பல கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக மதன் மீது குற்றச்சாட்டுச் சொன்னார்கள். 2014 நாடாளுமன்றத் தேர்தலில், நெல்லையில் இந்திய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக மதன் நிறுத்தப்பட்டார். அப்போது, அ.தி.மு.க வேட்பாளரை மிஞ்சும் வகையில் அவர் பணத்தை வாரி இறைத்துள்ளார். இப்போது பிரச்னை வந்ததும் மதனுக்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்கிறார்கள். இவர், பாரிவேந்தரின் நிழல் என்பது எல்லோருக்கும் தெரியும்” என்றனர்.

மதனின் முதல் மனைவி சிந்து கொடுத்த புகார் மனுவில், “எனக்கும் மதனுக்கும் 10.10.1996 அன்று திருமணம் நடந்தது. எங்களுக்கு வேதிகா என்ற மகள் உள்ளார். மதன், 28.5.2016 அன்று மாயமாகிவிட்டார். அவரது செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு உள்ளது. பாரிவேந்தரும் எனது கணவரும் மிகவும் நெருக்கமாக இருந்தது எஸ்.ஆர்.எம் குழுமத்தில் சிலருக்குப் பிடிக்கவில்லை. இதுவே பிரச்னைக்குக் காரணம்” என்று கூறியுள்ளார்.
பாரிவேந்தர் வெளியிட்ட அறிக்கையில், “மதனுக்கும் எங்கள் குழுமத்தின் மாணவர் சேர்க்கைக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. அத்துடன் அவர், அந்தக் கடிதத்தில் கூறியுள்ளது போன்று எந்தவொரு தொகையையும் எங்களது நிறுவனத்திடமோ, நிறுவனரிடமோ ஒப்படைக்கவில்லை. எங்களது நிறுவனத்தின் பெயரை முறைகேடாகப் பயன்படுத்தி போலி ஆவணங்கள் மூலம் சம்பாதித்த பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றும் நோக்கத்துடன் அவர் சமூக வலைதளங்கள் மூலமாகத் தகவல்களைப் பரப்பிவிட்டுத் தலைமறைவாகிவிட்டார். மேலும் எங்களது நிறுவனம் தவிர, வேறு பல கல்வி நிறுவனங்களிலும் இதேபோல அவர் மோசடி செய்திருக்கிறார் என்றும் தெரியவருகிறது. இது திட்டமிட்ட மிரட்டல் நாடகம். எனவே, இதுதொடர்பாக போலீஸில் புகார் கொடுத் துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

போலீஸ் வட்டாரத்தில் பேசினோம். “மதனிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்தவர்களில் நான்கு பேர் இதுவரை புகார் கொடுத்துள்ளனர். மதனின் தாயார் தங்கம் கொடுத்த புகாரில் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பான பணம் கொடுக்கல், வாங்கல் விவரங்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளன. விசாரணை மேற்கொள்ளப் படுகிறது” என்றனர்.

நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா என்பவர், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘‘பாரிவேந்தருக்கும் மதனுக்கும் பிரச்னை ஏற்பட்டதால்தான் கல்வி நிறுவனங்களின் நடக்கும் ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாரிவேந்தர், அரசியல் செல்வாக்கு மிகுந்தவர். அவரைத் தமிழக போலீஸ் விசாரித்தால் நீதி கிடைக்காது. எனவே, சி.பி.ஐ விசாரணை தேவை. இந்த விவகாரத்தை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும்.” என்றார்.

மதன் பிடிபட்டால் பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வரலாம்!

- எஸ்.முத்துகிருஷ்ணன், பி.ஆண்டனிராஜ், எஸ்.மகேஷ்   நக்கீரன்.இன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக