செவ்வாய், 7 ஜூன், 2016

ஹாலிவூட் திரையுலகம் மெல்ல மெல்ல காணமல் போகிறதா?

minnambalam.com :‘ஹாலிவுட் லெவல்ல படம் எடுக்கணும் சார்’ என்று கிளம்பியவர்கள்தான் காணாமல் போகிறார்கள் என்றால், ஹாலிவுட்டே தற்போது காணாமல் போய் கொண்டிருக்கிறது. காமிக்ஸ் கதைகளையும், புத்தகங்களையும் படமாக்கி, தனது சந்தையை மிகப் பெரியதாக்கியது ஹாலிவுட்டின் மிகப் பெரிய சாதனை. இப்போது அதுதான் சோதனையாகிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே பழக்கப்பட்ட காமிக்ஸ் கதைகளும், அனிமேஷன் சீரியல்களும் அல்டிமேட் கிராஃபிக்ஸுடன் அதிர வைக்கும் இசையில் புது உணர்வைக் கொடுத்தது உண்மைதான். ஆனால், இதுதான் தங்களது சோர்ஸ் மெட்டீரியல் என ஹாலிவுட் நம்ப தொடங்கியதால் ஏற்பட்ட பிரச்னைகள், இப்போது ஹாலிவுட்டையே தலைகீழாக மாற்றிவிட்டது.

தற்போது தொடர் தோல்விகளால் நொந்துபோய் கிடக்கிறது ஹாலிவுட். மில்லியன் கணக்கில் பணம் போட்டு ஹாலிவுட் சினிமா எடுத்து வருபவர்கள் எல்லாம் கலக்கத்தில் இருக்கிறார்கள். காரணம் ரொம்பவும் சிறியதுதான். வெற்றி மோகம்.
வெற்றிகரமான சீகுவல் படங்களை விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய விதத்தில் இருந்த ஹாலிவுட், சீகுவல் இல்லாத படங்களை சுலபமாக சொல்லிவிடக்கூடிய விதத்தில் வந்து நிற்கிறது. முதல் படம் ரிலீஸாவதற்கு முன்பே, அதன் சீகுவலுக்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு விடுகிறது. கெடு முடிவதற்குள் கதையை உருவாக்கி, திரைக்கதையை எழுதி படமெடுத்துவிட வேண்டும் என்ற கட்டாயத்துக்குள் அடைக்கப்படுகின்றனர் இயக்குநர்கள். வெளி உலகத்துக்கும் அவர்களுக்கும் சம்மந்தமே இருப்பதில்லை.

பல மில்லியன் மதிப்புள்ள படங்கள் ஒரு ஸ்டூடியோவுக்குள் எடுக்கப்பட்டு விடுகின்றன. அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டிரெய்லர்களால் விட்ட பணத்தையாவது பிடித்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் இதெல்லாம் ஒரு படமா என்று வெளியே வந்து ரசிகர்கள் கடுப்பாகி கத்துவது, அவர்களுக்கு அடுத்த சீகுவலுக்கு நல்லது இல்லையே. அதிலும் குறிப்பாக கடந்த இரு மாதங்களில் ஹாலிவுட்டுக்கு விழுந்திருக்கும் அடி மிக பலமானது. இதிலிருந்து தப்பித்தது ‘கேப்டன் அமெரிக்கா’ மட்டும்தான். மற்றபடி உருவாக்கப்பட்ட காமிக்ஸ் மற்றும் ஃபேண்டஸி கதைகள் அனைத்தும் வாஷ்-அவுட்.

குறிப்பாக ஜுன் முதல் வாரத்தில் ரிலீஸான Warcraft, Alice Through the Looking Glass, Tenage Mutant Ninja Turtles (part 2) ஆகிய மூன்று படங்களும் அகலபாதாளத்துக்கு சென்றுவிட்டன. ரசிகர்கள் சலிப்படைவது என்ற விஷயம் இருக்கிறதல்லவா? அது சினிமாவின் மிகப்பெரிய சாபம். சமீபத்தில் தமிழ் சினிமா பேய்களிடம் சிக்கித் தவித்ததைப் போன்ற கொடூரமான விஷயம் அது. ஒன்றரை மணி நேரத்தில் பிரம்மாண்டம், சிலிர்ப்பு, சிரிப்பு என அனைத்தையும் கொண்டுவந்து சேர்த்ததால்தான் இந்தியாவில் ஹாலிவுட் படங்களின் மார்க்கெட் திடீர் வளர்ச்சியைக் கண்டது. ஆனால், அந்த எல்லையையும் தற்போது உடைத்துக் கொண்டிருக்கின்றன ஹாலிவுட் படங்கள். கேப்டன் அமெரிக்கா, சிவில் வார் மட்டும்தான் இந்த பேரழிவிலிருந்து தப்பித்தத் திரைப்படம். மற்றபடி எல்லா படங்களும் அயர்ச்சியையும், ஹாலிவுட்டுக்கு அதர்மத்தையும் கொண்டு வந்திருக்கின்றன.

அலைஸ் இன் வொண்டர்லேண்ட் கதைகள் மட்டும் கிட்டத்தட்ட டஜன் கணக்கில் ஹாலிவுட்டில் கிடக்கின்றன. பத்து வருடத்துக்கு ஒருமுறை ‘அலைஸ்’ கதை படமாக்கப்படும் நிலை மாறி 3 வருடத்துக்கு ஒரு படம் என வருகிறது. Alice Through the Looking Glass திரைப்படம் அவசரத்தில் செய்துவைத்த பிள்ளையார் சிலைபோல ஏடாகூடமாக இருக்கிறது. டைம் மிஷின் மூலம் கடந்தகாலம் சென்று ஹேட்டரின் குடும்பம் என்ன ஆனது என்று கண்டுபிடிக்கிறார் அலைஸ். கடந்த காலத்தை மாற்றுவதால் எதிர்காலம் மாறிவிடாது என்பதை சொல்கிறது இந்த படம். டைம் மிஷின் பற்றி எங்காவது படித்தாலோ, படம் பார்த்தாலோ, நம்மிடமும் இப்படி ஒரு டைம் மிஷின் இருந்தால் எப்படி இருக்கும்? என்ற எண்ணம் ஒருமுறையாவது வரும். அப்படி எண்ணம் வந்தாலும் இதெல்லாம் நடக்காது கண்ணா என்று சொல்லவந்த திரைப்படம், சொதப்பலில் போய் முடிந்துவிட்டது.

இவர்கள்தான் இப்படி என்றால் வார் கிராஃப்ட் வீடியோ கேமை படமாக்கியதும் சொதப்பலில் சென்று முடிந்திருக்கிறது. வீடியோ கேம்களில் கூட அனிமேஷன் காட்சிகள் வந்தால் எஸ்கேப் பட்டனை அழுத்தும் கேமர்கள், அனிமேஷன் காட்சிகளைப் பார்க்கத் தொடங்கியதே, அந்த அனிமேஷன் காட்சியில் ஒரு கதையை சேர்த்துவைத்த வார்கிராஃப்ட் போன்ற கேம்களினால் தான். வார்கிராஃப்ட் கேம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. அந்த வெற்றியை திரைப்படத்திலும் அடைந்துவிடத் துடித்து உருவாக்கிய வார்கிராஃப்ட் திரைப்படம், அவுட்-டேட்டட் என்று சொல்லும் அளவுக்கு மோசமான படமாக இருக்கிறது. இதற்கு சற்றும் குறையாமல் பேரழிவை சந்தித்துவரும் திரைப்படம் ‘டீனேஜ் மியூட்டன்ட் நிஞ்சா டர்டல்ஸ்’. தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியை படமாக மாற்றி முதல் பாகத்திலேயே சுமாரான வெற்றியை பெற்றிருந்தனர்.

அதிரடி சண்டைபோடும் ஆமைகள், அட்டகாச காமெடி வசனங்கள் என முதல் பாகம் வெற்றிபெற்ற காரணங்களையே பிடித்துக்கொண்டு, இரண்டாம் பாகத்தில் அளவுக்கு அதிகமாக அவற்றை பயன்படுத்தியிருப்பதே இந்த படத்தின் தோல்விக்கான காரணம். ஃபில்ம் மெட்டீரியல் என்ற ஒன்று இருக்கிறது. கதை என்ற இரும்புக்குண்டை தாங்கக்கூடிய பலம் நூல் என்ற திரைக்கதைக்கு இருக்கவேண்டும். இல்லையென்றால் இப்படித்தான் அறுந்துவிழும்.
மேட்மேக்ஸ் : தண்டர்ஸ்டோம் திரைப்படம் 1985-ல் உருவானது. அப்போதைய அதன் இணை தயாரிப்பாளர் பைரோன் கென்னடி, அடுத்த பாகம் மேட்மேக்ஸ் : ஃப்யூரி ரோட் திரைப்படத்துக்கு திட்டமிட்டு தண்டர்ஸ்டோம் படத்தின் திரைக்கதையை அமைக்கச் சொன்னார். ஆனால், அவர் தண்டர்ஸ்டோம் ஷூட்டிங்குக்கு ஸ்பாட் பார்க்க செல்லும்போது ஹெலிகாப்டர் விபத்தில் இறந்துவிட்டார். கையில் இருந்த திரைக்கதையை வைத்து ஜார்ஜ் மில்லர் அந்த படத்தை இயக்கிவிட்டார்.

ஆனால், அடுத்த பாகத்துக்கு எந்த மாதிரியான கதையை பைரோன் கென்னடி திட்டமிட்டார் என்பது தெரியாமல் போகவும் ஜார்ஜ் மில்லர், ப்ரெண்டன் மெக்கார்த்தியுடன் இணைந்து எப்படிப்பட்ட திரைக்கதையை உருவாக்க கென்னடி திட்டமிட்டார் என்ற பல வருட தேடலுக்குப் பின் உருவாகியது மேட்மேக்ஸ் ஃப்யூரி ரோட். 20 வருடங்களுக்குப் பிறகு ஃப்யூரி ரோட் திரைப்படம் செய்த வசூல் சாதனையும், அள்ளிய ஆஸ்கர் விருதுகளும் உலகம் அறிந்தவை. சீகுவல்களை உருவாக்கவேண்டும் என்ற எண்ணங்களுடன் வெளியாகும் படங்களின் திரைக்கதை இப்படித்தான் அமைக்கப்படுகிறது. மீண்டும் ஹாலிவுட் தனது பாதைக்குத் திரும்ப கொஞ்ச காலம் பிடிக்கும். அதுவரை ரெவனன்ட் போன்ற படங்களைக் கொண்டாடிக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள் ரசிகர்கள்.  minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக