செவ்வாய், 7 ஜூன், 2016

கூட்டணி அவசியமில்லை - திருமாவளவன்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தன் சொந்த ஊர் அங்கனூருக்குச் சென்ற திருமாவளவன், அங்கே ஒரு நிகழ்ச்சியில் பேசினார். “காட்டுமன்னார்கோவில் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் தற்போதுள்ள ஆளுங்கட்சிக்குச் சாதகமாக அதிகாரிகள் நடந்துக் கொண்டுள்ளனர் என மக்களே உணர்ந்திருக்கிறார்கள். எனவே மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளேன். இந்திய தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து விடுதலை சிறுத்தைகளின் சார்பில் மனு கொடுக்க உள்ளோம்.

தேர்தல் நடத்துவதற்கான சட்டதிட்டங்களில் பல சீர்திருத்தங்களை செய்ய வேண்டும். இந்திய தேர்தல் ஆணையம் வேட்பாளர்கள் செலவு செய்யக்கூடிய தொகையை நிர்ணயிக்கக்கூடிய அதே வேளையில் அரசே அந்த செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லது வேட்பாளர்கள் 50 சதவிகிதம், தேர்தல் ஆணையம் 50 சதவிகித தொகை என செலவு தொகையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். வேட்பாளர்கள் செய்யக்கூடிய செலவை தேர்தல் ஆணையத்திடம் முன்தொகையாக செலுத்த வற்புறுத்த வேண்டும் உள்ளிட்ட சீர்திருத்தங்களை செய்தால் மட்டுமே தேர்தலை நியாயமாக நடத்த முடியும்” என்றவர் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் குறித்து தெரிவித்ததாவது,
“தமிழக அரசும் எதிர்க்கட்சியும் இணக்கமாக செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு மக்கள் நலக் கூட்டணியும் ஒரு காரணம். உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் ஆறு கட்சி தலைவர்களுடன் பேசி முடிவெடுத்து இதுகுறித்து பின்னர் அறிவிப்போம்” என்றார்.
‘கூட்டணியால் பெரிய பலனில்லை. குறிப்பாக வாங்கிய வாக்குகள் அனைத்தும் சொந்த வாக்கு பலத்தில் மட்டுமே. தலித் ஒருவர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக எழுந்தபோது அதை கூட்டணி கட்சியினர் ஏற்கவில்லை. விஜயகாந்த் கூட்டணியில் இணைந்தவுடன் அவரை முதல்வராக அறிவித்தனர். ஆனால், அவர் தேர்தலில் டெபாசிட் இழந்தார். அதேநேரம் திருமாவளவன் 87 வாக்குகளில்தான் தோல்வியை தழுவினார். ஆக, நம்மால்தான் மக்கள் நலக் கூட்டணிக்கு பலன். அவர்களால் நமக்கில்லை என்ற கருத்துக்கள் நிர்வாகிகள் கூட்டத்தில் தொடர்ந்து வெளிப்பட்டது. அதனால்தான் உள்ளாட்சி தேர்தலுக்கு கூட்டணி அவசியமில்லை என்ற கருத்தை வெளிபடுத்தியுள்ளார் திருமாவளவன்’ என்கின்றனர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்.   minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக