திங்கள், 20 ஜூன், 2016

அம்பானி :பிரமோத் மகாஜன் மூலமாக தலைமை உச்ச நீதிமன்ற நீதிபதியை சரிக்கட்டு.. எஸ்ஸார் டேப்புகள்

essarநாம் கட்சிகளைப் பார்க்கத் தேவையில்லை. நல்ல வேட்பாளர்களாகப் பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும். ஊழல் செய்யும் கட்சிகளை ஓட்டுப் போடுவதன் மூலம் தண்டித்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதே போல், ஒரு சில அதிகாரிகள் லஞ்ச ஊழல் புரியும் அயோக்கியர்களாக இருக்கலாம். ஆனால், நல்ல அதிகாரிகளும் இருக்கிறார்கள். சகாயம், உமா சங்கரைப் போல. அவர்களைப் போன்ற அதிகாரிகளைப் போற்ற வேண்டும். இங்கே சட்டத்தின் ஆட்சி நிலவுகிறது. ஒருவேளை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தவறு செய்தால் நீதி மன்றத்தை நாடலாம். கட்டாயம் நீதி வெல்லும். சத்ய மேவ ஜெயதே. ஜெய் ஹிந்த்”.
என்றெல்லாம் நம்மைச் நம்பச் சொல்கின்றன முதலாளிய ஊடகங்கள். இந்த இன்பக் கனவு அவ்வப் போது கலையும் போதெல்லாம் யாராவது ஒரு அண்ணா ஹசாரே – அரவிந்த் கேஜ்ரிவாலை களமிறக்கி கழுத்தில் ஈரத் துணியைச் சுற்றுகின்றன ஊடகங்கள் – கத்தியோடு பின் தொடர்கிறார் மோடி.
உண்மை என்ன?

நாம் ஒரு மேட்ரிக்ஸ் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இங்கே அரசு எப்படி நடக்கிறது, அதிகாரிகள் எப்படிச் செயல்படுகிறார்கள், அரசியல்வாதிகள் எப்படிச் செயல்படுகிறார்கள், அரசியல் கட்சிகள் எப்படிச் செயல்படுகின்றன, நீதிபதிகள் எப்படிச் செயல்படுகின்றனர், நீதி மன்றங்கள் எப்படிச் செயல்படுகின்றன, அங்கே கிடைக்கும் “நீதி” எத்தகையது, அரசின் திட்டங்களும் நிதிக் கொள்கைகளும் யாருக்காக, எப்படி வகுக்கப்படுகின்றன – எப்படிச் செயல்படுத்தப்படுகின்றன, இவற்றையெல்லாம் யார் இயக்குவது என்பதைக் குறித்த உண்மைகள் மிக அரிதான தருணங்களில் ’கசிந்துள்ளன’.
சுமார் ஏழாண்டுகளுக்கு முன் அவ்வாறு வெளியானது தான் நீரா ராடியா நடத்திய பேரங்களின் இரகசிய தொலைபேசி உரையாடற் பதிவுகள்.
இதோ இப்போது அதனினும் அசிங்கமான சில உண்மைகளை அவுட்லுக் மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன.
எஸ்ஸார் டேப்ஸ்
படம் நன்றி : அவுட்லுக்
அல்பசித் கான் என்பவர் எஸ்ஸார் குழுமத்தில் 1999 முதல் 2011-ம் ஆண்டு வரை தலைமைப் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்துள்ளார். ரூயா குடும்பத்தாரின் கட்டுப்பாட்டில் உள்ள எஸ்ஸார் குழுமம் எரிவாயு, இரசாயனம், தொலைதொடர்பு உள்ளிட்ட துறைகளில் கால் பதித்து இதே துறைகளில் உள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் சந்தைப் போட்டியாளராக உள்ளது.
எஸ்ஸார் நிறுவனத்தில்1999-ம் ஆண்டு பணிக்குச் சேரும் அல்பசித் கானுக்கு 2001-லிருந்து 2006-ம் ஆண்டு வரை இரகசியமான ஒரு பணி ஒப்படைக்கப்படுகிறது. எஸ்ஸார் குழுமத்தைச் சேர்ந்த பி.பி.எல் செல்பேசி சேவையைப் பயன்படுத்தும் சில முக்கியமான மத்திய அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், அப்போதைய பாரதிய ஜனதாவின் மத்திய அமைச்சர்கள் மற்றும் போட்டி நிறுவனமான ரிலையன்ஸ் அம்பானி சகோதரர்களின் தொலைபேசி உரையாடல்களை இரகசியமாக பதிவு செய்வதே அந்த இரகசிய உளவு வேலை.
அதை திறம்படஅல்பசித் கானும் நிறைவேற்றுகிறார். பதிவு செய்யப்பட்ட இரகசிய உரையாடல்களை தனது முதலாளிகளிடம் ஒப்படைத்ததுடன், தனது எதிர்கால பாதுகாப்பு கருதி தனியே பிரதிகள் எடுத்து பாதுகாத்துள்ளார். பின், உளவு வேலைக்கான தேவை முடிந்து போன நிலையில் 2011-ல் வேறு சில சில்லறைக் காரணங்களை முன்வைத்து அல்பசித் கான் வேலை நீக்கம் செய்யப்படுகிறார்.
அதன் பிறகு அல்பசித் கான், தன் வசம் உள்ள உரையாடற் பதிவுகளின் பிரதிகளோடு உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சுரேன் உப்பலை நாடுகிறார். பதிவு செய்யப்பட்ட இரகசிய உரையாடல்களை கேட்டு அதிர்ந்து போன சுரேன் உப்பல், உடனடியாக பிரதமர் மோடியின் அலுவலகத்திற்கும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கும் தகவல் தெரிவிக்கிறார். மேலும், எஸ்ஸார் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு சட்டப்படியான நோட்டீஸ்களையும் அனுப்புகிறார்.
இதற்கிடையே சுரேன் உப்பலை சரிக்கட்டி இரகசியப் பதிவுகளை அமுக்கும் முயற்சியில் ரூயா சகோதரர்கள் நேரடியாக இறங்கியுள்ளனர். நேரடியாக பேரம் பேசிப் பார்த்தும் அவர் மசியாததால், தமது முன்னாள் ஊழியர் அல்பசித் கானை சரிக்கட்டி விடுகின்றனர். அதைத் தொடர்ந்து அல்பசித் கான் வழக்கறிஞர் சுரேன் உப்பல் உடனான தொடர்புகளை முறித்துக் கொள்கிறார். என்றாலும், தன் வசம் அல்பசித் கான் ஏற்கனவே வழங்கிய ஆதாரங்களை ஊடகங்களின் மூலம் அம்பலப்படுத்தியிருக்கிறார் சுரேன் உப்பல்.
என்ன சொல்கின்றன அந்த உரையாடல்கள்?
அம்பானி சகோதரர்கள்
அம்பானி சகோதரர்கள்
ரிலையன்ஸ் நிறுவனத்தின் உயரதிகாரி சதீஸ் சேத்திடம் 01.12.2002 அன்று பேசிய முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் தொடர்பான வழக்கு ஒன்றிற்காக பிரமோத் மகாஜன் மூலமாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை சரிக்கட்டுவது தொடர்பாக பேசியுள்ளார். மேலும் ரிலையன்ஸ் குழுமத்தின் மற்றுமொரு உயரதிகாரியும், ராஜ்ய சபை உறுப்பினருமான பாரிமன் நாத்வாதியிடம் பி.எஸ்.என்.எலின் செல்பேசிக் கட்டனங்கள் நிர்ணயிப்பதில் ரிலையன்ஸ் எவ்வாறு பங்காற்றியது என்று சதீஸ் சேத் விவரித்துள்ளார்.
தகவல் தொடர்புத் துறையின் முன்னோடியாக அன்று விளங்கிய பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் எப்படி படிப்படியாக சீர்குலைக்கப்பட்டது, அதற்கு தேசபக்தி வேடம் போடும் பாரதிய ஜனதா எப்படி அடியாள் வேலை பார்த்தது என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. தரம்தான் தனியார் சேவை என்பது தான் தனியார்மய தாசர்களின் வாதம். ஆனால் அந்த தரத்தின் தரத்தை அம்பலப்படுத்துகிறது இந்த உரையாடல்.
மேலும், தனது போட்டி நிறுவனமான பி.பி.எல்லின் நிறுவனர் ராஜீவ் சந்திரசேகருக்கு 100- 200 கோடி ரூபாயை கொடுத்து செல்பேசி நிறுவனங்களின் கூட்டமைப்பை (COAI) ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சாதகமான முறையில் பிளவு படுத்தும் திட்டம் குறித்து அம்பானியும் சதீஸ் சேத்தும் விவாதித்துள்ளனர்.
அதே போல், 22.11.2002 அன்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் மற்றுமொரு உயரதிகாரியான சங்கர் அத்வாலிடம் பேசிய அம்பானி, தொலைத் தொடர்பு அமைச்சகத்தில் உள்ள சில கோப்புகளை களவாடியதன் மூலம் தாம் அரசுக்குச் செலுத்த வேண்டிய 1,300 கோடி ரூபாய் வரியைத் தவிர்த்துக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சுரேன் உப்பால்
சுரேன் உப்பால்
படம் நன்றி : அவுட்லுக்

மேலும், அப்போது தொலைத்தொடர்பில் ரிலையன்ஸ்சுக்கு போட்டியாளராக விளங்கிய சுனில் மிட்டலின் ஏர்டெல் நிறுவனத்திற்கு சாதகமாக அன்றைய பாரதிய ஜனதா அரசின் தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சர் பிரமோத் மகாஜன் எவ்வாறெல்லாம் தரகு வேலையில் ஈடுபட்டார் என்பது பல்வேறு உரையாடல்களின் மூலம் அம்பலமாகியுள்ளது. மகாஜன் தமக்கு கைக்கூலியாக இருப்பதற்கு பரிசாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை நிருபர் ஷிவானி பட்னாகரின் கொலை வழக்கில் மகாஜனுக்கு சாதகமாக நீதிமன்றத்தை வளைக்க அம்பானி நேரடியாக உதவி செய்துள்ளார்.
மேலும், அன்றைய பாரதிய ஜனதா அரசின் பெட்ரோலியத் துறை அமைச்சர் ராம் நாயக், ரியலைன்சுக்கு ஆதரவாக பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களை சீரழிப்பது குறித்து அம்பானிகள் நேரடியாக அமைச்சருக்கு வகுப்பே எடுத்துள்ளனர். கோதாவரி இயற்கை எரிவாயு – கே.ஜி பேசின் வழக்கில் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் அம்பானிகளுக்கு ஆதரவாக சரிக்கட்டியுள்ளனர். பாரதிய ஜனதாவின் முந்தைய ஆட்சிக் காலத்தில் பிரதமர் அலுவலகத்திலும் நிதியமைச்சகத்திலும் பணிபுரிந்த மத்திய அரசின் உயரதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் துணையோடு பட்ஜெட் அறிக்கையையே தமக்கு சாதகமாக மாற்றிக் கொண்டுள்ளனர். அமர் சிங்கின் துணையோடு பாரளுமன்ற உறுப்பினர்களை விலை பேசியுள்ளனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகளை பல்வேறு வழக்குகளுக்காக விலைக்கு வாங்கியுள்ளனர். பாராளுமன்ற நிலைக்குழுக்களில் யார் உறுப்பினராக இருக்கலாம், அது என்ன முடிவெடுக்க வேண்டும் என்பதையெல்லாம் அம்பானியே நேரடியாக தீர்மானித்துள்ளார்.
தொகுப்பாக பார்த்தால்,
இங்கே நிலவும் ஜனநாயகம் மக்களுக்கானதல்ல. நிதி, நீதி, நிர்வாகம், இராணுவம், போலீசு என்று அரசு கட்டமைப்பில் உள்ள ஒவ்வொரு அங்கமும் முதலாளிகளுக்கானதாகவே இருப்பது துலக்கமாக வெளிப்பட்டுள்ளது. மக்களின் இறுதி நம்பிக்கையாக உள்ள நீதிமன்றங்களோ அம்பானிகளின் கழிவறைகளாக உள்ளன. தேர்தலில் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்து அனுப்பும் பாராளுமன்றமோ அம்பானிகள் மலம் துடைத்துப் போடும் குப்பைத் தொட்டியாக உள்ளது.
மேற்கண்ட உரையாடல் பதிவுகள் வெளியாகி வாரங்கள் கடந்து விட்ட நிலையிலும் 56 இன்ஞ்ச் மார்பு கொண்ட பிரதமர் வாய் திறக்கவில்லை. “தின்னவும் மாட்டேன் தின்ன விடவும் மாட்டேன்” என்று வாய்கிழிய பேசி அதிகாரத்தைப் பிடித்த மோடி உண்மையில் நாட்டின் வளங்களைக் கொள்ளையடிக்கும் தரகு முதலாளிகளின் கைக்கூலி என்பது எண்ணற்ற சந்தர்ப்பங்களில் ஏற்கனவே அம்பலப்பட்டிருக்கிறது. அதானியின் விமானத்தில் பறக்கிறவர் மக்களுக்கு விசுவாசமாக இருப்பார் என்று யாரையும் இனி நம்ப வைக்க முடியாது.
தேர்தல், காங்-பா.ஜ.க, இதர கட்சிகள், பாராளுமன்றம், அதிகார வர்க்கம், நீதித்துறை அனைத்தும் முதலாளிகளின் சேவைக்கு காத்திருக்கும் அடிமைகள் என்று நிரூபிக்கப்பட்டு விட்டதால் நாம் மாற்றை இந்த அமைப்பில் தேட முடியாது.  மக்களை திரட்டி புதிய அமைப்பை படைப்போம்!
–    தமிழரசன்.  வினவு.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக