திங்கள், 20 ஜூன், 2016

தமிழகத் தேர்தல் ஆணையம் : போயசு தோட்டத்தின் செக்யூரிட்டி !

கரூர்-அய்யம்பாளையத்தில் உள்ள அன்புநாதனின் உதவியாளர் சுதர்சன் வீட்டில் நடந்த சோதனையின்போது பெட்டிபெட்டியாகக் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள். (உள்படம்: அன்புநாதன் )ஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல்களை ரத்து செய்ததன் மூலம் குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை எனக் காட்டிக் கொண்டிருக்கிறது, தமிழகத் தேர்தல் ஆணையம். ஓட்டிற்குப் பணம் என்ற கழிசடை தேர்தல் பண்பாடு விளையாடியதில் தமிழகத்தின் மற்ற தொகுதிகளுக்கும் அரவக்குறிச்சிக்கும் அதிக வேறுபாடில்லை என்பது தமிழக மக்களுக்கும் தெரியும்; தேர்தல் ஆணையத்திற்கும் தெரியும். ஆனாலும், பணப் பட்டுவாடா நடந்ததைக் கையும் களவுமாக, ஆதாரத்தோடு பிடிக்க முடிந்ததால்தான் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளின் தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டதாகச் சிரிக்காமல் கூறுகிறது, தேர்தல் ஆணையம். கரூர்-அய்யம்பாளையத்தில் உள்ள அன்புநாதனின் உதவியாளர் சுதர்சன் வீட்டில் நடந்த சோதனையின்போது பெட்டிபெட்டியாகக் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள். (உள்படம்: அன்புநாதன்)
பணப் பட்டுவாடாவைத் தடுக்கக் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் போன்ற முக்கிய பிரமுகர்கள் போட்டியிடும் 94 தொகுதிகளில் தலா 6 பறக்கும் படை; மற்ற தொகுதிகளில் தலா ஐந்து பறக்கும் படை; அவற்றுக்கு உதவியாக ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 25 மண்டலக் குழுக்கள் – என தமிழகமெங்கும் 20,000 அரசு அதிகாரிகள், ஊழியர்களைக் கொண்ட 5,639 மண்டலக் குழுக்கள்; இப்பறக்கும் படைகளைக் கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 2 அல்லது 3 எஸ்.பி.க்களைக் கொண்ட குழு; இவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு ஐ.ஆர்.எஸ். அதிகாரி தலைமையில் 9 பேர் கொண்ட வருமான வரித் துறையின் பறக்கும் படை – என உதார் காட்டி வந்தது, தேர்தல் ஆணையம். ஆனால், இந்தப் படைகளெல்லாம் மற்ற 232 தொகுதிகளில் நடந்த பணப் பட்டுவாடாவைப் பிடிக்க முடியாமல் எதைச் சொரிந்துகொண்டு நின்றன என்பதற்கு சர்வ வல்லமை பொருந்தியதாகக் கூறப்படும் தேர்தல் ஆணையம்தான் விளக்கம் அளிக்க வேண்டும்.
பாப்பிரெட்டிப்பட்டி, தருமபுரி தொகுதிகளுக்கான மேலிடப் பார்வையாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரசேகர குமார் நியமிக்கப்பட்டிருந்தார். தேர்தல் முடியும் வரை, அவர் அந்த இரண்டு தொகுதிகளில்தான் தங்கியிருக்க வேண்டும் என்பது தேர்தல் நடத்தை விதிமுறை. ஆனால், அவரை தருமபுரி மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் ஏற்காட்டில் தங்க வைத்திருக்கிறார்; தேர்தலுக்கு முதல்நாள் திருவண்ணாமலை, சிதம்பரம் எனச் சுற்றுலா சென்றுவர ஏற்பாடு செய்து அனுப்பி வைத்திருக்கிறார். மேலிடப் பார்வையாளர் ஆன்மீகப் பயணத்தில் திளைத்த சமயத்தில், அ.தி.மு.க. இந்த இரண்டு தொகுதிகளிலும் பணப் பட்டுவாடாவை நடத்தி முடித்ததாகவும்; தி.மு.க.வும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டதாகவும் அம்பலப்படுத்துகிறது, நக்கீரன் இதழ்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். பணப் பட்டுவாடாவைத் தடுக்க நியமிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட பறக்கும் படைகள் அ.தி.மு.க.வின் ஐந்தாம் படைகளாக வேலை செய்தன என்பது மட்டுமல்ல, தேர்தல் ஆணையமே அ.தி.மு.க.வின் ஏஜெண்டாகச் செயல்பட்டதை அன்புநாதன் மற்றும் கண்டெய்னர் விவகாரங்கள் அம்பலப்படுத்துகின்றன.
ec-jaya-servant-container-money
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட மர்ம கண்டெய்னர்கள்: ஜெயா-சசி கும்பல் கொள்ளையடித்துப் பதுக்கி வைத்த பணத்தைப் பாதுகாக்கும் போலீசு.
அ.தி.மு.க.வின் பணப் பட்டுவாடா மையமாக அன்புநாதன் இருந்ததும்; அவர் தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளுக்கும் பணத்தைக் கடத்திச் செல்வதற்கு கரூர் மாவட்டத் தேர்தல் அதிகாரியான மாவட்ட கலெக்டர் டி.பி.ராஜேஷ் தொடங்கி லோக்கல் இன்ஸ்பெக்டர் வரை மாவட்ட நிர்வாகமே உடந்தையாகச் செயல்பட்டதும் தேர்தல் ஆணையம் அறியாத ஒன்றல்ல. அதேசமயம், அ.தி.மு.க.விற்குள்ளும் அதிகாரிகள் மட்டத்திலும் நடந்த உள்குத்து காரணமாகத்தான் அன்புநாதன் வீட்டைச் சோதனையிட வேண்டிய கட்டாயமும் நெருக்கடியும் தேர்தல் ஆணையத்திற்கு ஏற்பட்டது.
சோதனையின் போதும், அதன் பிறகும் அன்புநாதன் விவகாரத்தை உப்புக்குப் பெறாத ஒன்றாக அமுக்கிவிடுவதில் அ.தி.மு.க. அரசும் தேர்தல் ஆணையமும் கூட்டுக் களவாணிகளாவே செயல்பட்டன. அன்புநாதன் வீட்டில் 250 கோடி ரூபாய் அளவிற்குப் பணம் இருந்ததாக எதிர்க்கட்சிகள் இன்றுங்கூடக் குற்றஞ்சுமத்துகின்றன. அன்புநாதன் குடோனில் கண்டெடுக்கப்பட்ட 12 பணம் எண்ணும் இயந்திரங்கள் இக்குற்றச்சாட்டை நிரூபிக்கும் சாட்சியங்களாக உள்ளன. ஆனால், தேர்தல் ஆணையமோ அன்புநாதனிடமிருந்து வெறும் பத்து இலட்ச ரூபாய்தான் கைப்பற்றப்பட்டதாகக் கூறி அம்பலப்பட்டு, பிறகு நான்கு கோடியே சொச்சமும் சில ரப்பர் பேண்டுகளும் கைப்பற்றப்பட்டதாகக் கூறிச் சமாளித்தது.
ec-jaya-servant-caption-1இந்தச் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பணத்தைக் குறைத்துக் காட்டும்படியும், அங்கு கைப்பற்றப்பட்ட கண்காணிப்பு கேமிரா பதிவுகளை அழித்துவிடும்படியும் அரசு ஆலோசகரும் முன்னாள் டி.ஜி.பி.யுமான ராமானுஜம் மற்றும் டி.ஜி.பி. அசோக்குமார் ஆகியோர் கரூர் மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டேவுக்குக் கட்டளையிட்டதாகக் கசிந்துவந்த செய்தி குறித்தோ, கைப்பற்றப்பட்ட பணத்தை அன்புநாதனிடம் திருப்பிக் கொடுத்துவிடும்படி கரூர் மாவட்ட ஆட்சியர் கூறியது குறித்தோ, வந்திதா பாண்டேவைக் கொலை செய்ய முயற்சி நடப்பதாகக் கூறி ஒருவர் துப்பாக்கிகளோடு சரண் அடைந்தது குறித்தோ, தேர்தல் ஆணையம் எந்தவொரு விசாரணையும் நடத்தவில்லை.
அதேசமயம், அன்புநாதன் மீது ஓட்டுக்குப் பணம் கொடுத்தது தொடர்பான குற்றவழக்குப் பதியப்படாமல், இந்திய அரசின் முத்திரையைத் தவறாகப் பயன்படுத்தினார் என்ற மொன்னையான வழக்கு மட்டுமே தொடரப்பட்டது. இந்த வழக்கிலும் அன்புநாதனைக் கைது செய்யாத அ.தி.மு.க. போலீசு, அவரைத் ‘தலைமறைவாக’ச் செல்லும்படி வழியனுப்பி வைத்தது. முன்ஜாமீன் கேட்டு அன்புநாதன் மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் தாக்கல் செய்த வழக்கில், அதனை எதிர்த்து வாதிட வழக்குரைஞரை நியமிக்காமல் தேர்தல் ஆணையம் ஒதுங்கிக் கொண்டது. எதிர்த்து வாதிட வேண்டிய அரசு வழக்குரைஞரோ அன்புநாதனின் வழக்குரைஞராக நடந்து கொண்டார். உயர்நீதி மன்றமும் அன்புநாதன் கேட்டுக்கொண்டபடி, அன்புநாதனுக்கு முன்ஜாமீன் அளித்தது. அரசு, உயர்நீதி மன்றம், தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் கூட்டுக் களவாணித்தனம் காரணமாக, மிகத் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட வேண்டிய வழக்கில் நீதி கேலிக்கூத்தாக்கப்பட்டது.
ec-jaya-servant-police-money
காரைக்குடி அ.தி.மு.க. தலைமை அலுவலக வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தைப் பறிமுதல் செய்யும் போலீசு.
அன்புநாதனின் கூட்டாளி மணிமாறன் மற்றும் அன்புநாதனின் உதவியாளர் சுதர்சன் வீடுகளில் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டாலும், அவை குறித்த விவரங்கள் வெளியிடப்படாமல் அமுக்கப்பட்டதோடு, அவர்கள் மீது வழக்கும் பதியப்படவில்லை. இது போன்று, சசிகலாவின் தாய்மாமன் தங்கவேலு, அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது உறவினர் கோழி பாலு, அமைச்சர்கள் தங்கமணி மற்றும் செல்லூர் ராஜுவின் பினாமிகள், சிட்லபாக்கம் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜேந்திரன், பொள்ளாச்சி வேட்பாளர் ஜெயராமனின் உறவினர் டாக்டர் மகேந்திரன், தருமபுரி அ.தி.மு.க. நிர்வாகி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டுப் பல அ.தி.மு.க. பிரமுகர்களின் வீடுகளிலும் பண்ணைகளிலும் நடத்தப்பட்ட சோதனைகளும் எவ்வித மேல் நடவடிக்கைகளும் இன்றி அமுக்கப்பட்டன.
இத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளும் போட்டிபோட்டுக் கொண்டு ஓட்டுக்குப் பணம் கொடுத்தன என்றாலும், அ.தி.மு.க.வின் பணப்பட்டுவாடாதான் மையப்படுத்தப்பட்ட ரீதியில் பரவலாகவும் பிரம்மாண்டமானதாகவும் அரசு இயந்திரத்தின் துணையோடும் நடத்தப்பட்டது. கோவை வேளாண் பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே உள்ள அப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராமசாமியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையும், இரவு நேரத்தில் மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு நடத்தப்பட்ட பணப் பட்டுவாடாவும் அரசு இயந்திரம் அ.தி.மு.க.வின் கைக்கூலியாகப் பயன்படுத்தப்பட்டதை நிறுவுகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளியிலிருந்து 3.40 கோடி ரூபாய்; காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.பகுதிச் செயலர் ரவியிடமிருந்து 4 இலட்ச ரூபாய்; பட்டுக்கோட்டை அருகேயுள்ள திட்டக்குடியைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் கோவிந்தராஜ் வீட்டிலிருந்து 49 இலட்ச ரூபாய்; தற்பொழுது தொழிலாளர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் நிலோஃபர் வீட்டிலிருந்து 14 இலட்ச ரூபாய்; சென்னை மாநகராட்சியின் 169-ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.கே.ஜெயச்சந்திரன் வீட்டிலிருந்து 40 இலட்ச ரூபாய்; ஆரணி தொகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் யுவராஜிடமிருந்து 25 இலட்ச ரூபாய் – என அடுத்தடுத்து அ.தி.மு.க. பிரமுகர்களிடமிருந்து கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்டாலும், இவர்களுள் ஒருவர்கூடக் கைது செய்யப்படவுமில்லை; இவர்கள் மீது எந்தப் பிரிவின் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது என்ற விவரமும் வெளியிடப்படவுமில்லை.
ec-jaya-servant-caption-2இவை அனைத்திற்கும் மேலாக, திருப்பூருக்கு அடுத்துள்ள செங்கம்பள்ளியில் கைப்பற்றப்பட்ட மூன்று கண்டெய்னர்களை, அவற்றுள் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் பணம் பதுக்கப்பட்டிருந்தது என்ற விவரத்தைக்கூடச் சொல்லாமல், சேர வேண்டிய இடத்தில் சேர்த்துத் தனது பொறுப்பை நிறைவேற்றிய தேர்தல் ஆணையத்தைக் கண்டு தமிழகமே விக்கித்துப் போனது.
இந்த மூன்று கண்டெய்னர்கள் குறித்து தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி உள்ளிட்டுப் பலரும் நியாயமான பல கேள்விகளை இன்றும் எழுப்பி வருகிறார்கள். “பணம் எடுத்துச் செல்லும் கண்டெய்னர்கள் ஏன் முத்திரையிடப்பட்டுப் பூட்டப்படவில்லை என்பது தொடங்கி ஸ்டேட் பேங்க் அதிகாரிகள் தமது பணம் என அறிவிப்பதற்கு 18 மணி நேரம் எடுத்துக் கொண்டது ஏன் என்பது வரையில்” எழுப்பப்பட்ட எந்தவொரு கேள்விக்கும் தேர்தல் ஆணையமோ, வருமான வரித் துறையோ, ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவோ இதுவரை எந்தவொரு பதிலையும் அளிக்கவில்லை. கள்ளத்தனமான மௌனத்தின் மூலம், கோயபல்சு பொய்களின் மூலம் உண்மையைக் குழிதோண்டிப் புதைத்துவிட முயலுகிறது, அதிகார வர்க்கம். ஆனால், கைப்பற்றப்பட்ட பணம் ஜெயா-சசி கும்பல் ஊரைக் கொள்ளையடித்துக் குவித்து வைத்துள்ள கருப்புப் பணம்தான் எனத் தமிழக மக்கள் நம்புவதற்கு ஆதாரங்களும் சாட்சியங்களும் உள்ளன.
ec-jaya-servant-commissioners
தேர்தல் ஆணையர்களா, ஜெயாவின் சொம்புகளா? (இடமிருந்து) தமிழகத் தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி, தமிழகத்தின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் சந்தீப் சக்சேனா மற்றும் பிரவீண் குமார்.
ஜெயா-சசி கும்பல் அவமானகரமான தோல்வியைச் சந்தித்த 1996 சட்டமன்றத் தேர்தல்கள் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த வேளையில், போயசு தோட்டத்திலிருந்து கண்டெய்னர் லாரிகள் வெளியேறிப் போன வரலாறைத் தமிழகம் இன்னும் மறந்துவிடவில்லை. தமிழகச் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியான சமயத்திலேயே ஜெயாவிற்குச் சொந்தமான சிறுதாவூர் பங்களாவிற்கு கண்டெய்னர் லாரிகள் வந்து போவது பற்றிய செய்திகள் புகைப்படத்தோடு வெளிவந்தன. அப்பொழுது அது குறித்து முறையான, நியாயமான விசாரணையை நடத்தாமல், சிறுதாவூர் பங்களாவில் பணம் பதுக்கப்படவில்லை என ஜெயா-சசி கும்பலுக்கு நற்சான்றிதழ் வழங்கிய தேர்தல் ஆணையம், இப்பொழுதோ முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைத்துவிட்டிருக்கிறது.
தமிழகத்தின் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பணத்தைக் கடத்திக் கொண்டு சேர்ப்பதற்கு இந்திய அரசின் முத்திரையை அன்புநாதன் தவறாகப் பயன்படுத்தினார் என்றால், ஜெயா-சசி கும்பலின் கருப்புப் பணத்தைக் கடத்துவதற்கு இந்திய அரசே உடந்தையாக இருந்திருக்கிறது. தேர்தல் ஆணையம் அதற்கு வாட்ச்மேனாக மாறி காவல் காத்து நின்றது.
ec-jaya-servant-caption-3இப்படி அ.தி.மு.க.வின் விசுவாச அடியாளாக நடந்துகொண்டு வரும் தமிழகத் தேர்தல் ஆணையம் தஞ்சாவூரிலும், அரவக்குறிச்சியிலும் நியாயமான முறையில் தேர்தலை நடத்தும் என நம்ப முடியுமா? அதற்காகத்தான் தேர்தலை ரத்து செய்திருக்கிறது எனக் கூற முடியுமா? அந்த இரண்டு தொகுதிகளின் தேர்தல்களை ஜூன் 13-க்குத் தள்ளி வைத்த தனது முதல் நடவடிக்கையின் மூலம், ஜெயா-சசி கும்பல் நான்கு நாடாளுமன்ற மேலவைத் தொகுதிகளையும் கைப்பற்றுவதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கும் ஏஜெண்டாகச் செயல்பட்டது. இப்பொழுது தேர்தல்களை ரத்து செய்திருப்பதன் மூலம், அத்தொகுதிகளின் தேர்தலைகளை இடைத் தேர்தலாக மாற்றி, அ.தி.மு.க.வின் அடாவடித்தனமான வெற்றிக்கு உத்தரவாதம் செய்து கொடுத்திருக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் குறித்து, அதனின் சுயேச்சைத் தன்மை குறித்து, அதனின் நடுநிலைத்தன்மை குறித்து பார்ப்பன அறிவுஜீவிக் கும்பல் கட்டமைத்த பிம்பங்களெல்லாம் நொறுங்கிப் போய், ஆணையத்தின் கையாலாகத்தனம், அதனின் ஒருதலைச் சார்பு, அதனின் மக்கள் விரோத, ஜனநாயக விரோதத் தன்மை எல்லாம் அம்பலமாகி, அது அம்மணமாக நிற்பதைத் தமிழகம் காண்கிறது. அரசின் எல்லா உறுப்புகளும் தம் நம்பகத்தன்மையை இழந்து நாறிவிட்டன. மக்களின் ஜனநாயக உரிமைகள் அனைத்தும் படிப்படியாகப் பறிக்கப்படுகின்றன. இது ஜனநாயக நாடு என்று காட்டிக்கொள்வதற்கு வெகுசன வாக்குரிமை மட்டுமே எஞ்சியிருந்தது. அந்த மயக்கத்தையும் தேர்தல் ஆணையமே ஒழித்து விட்டது.
– குப்பன்
பெட்டிச் செய்தி

ஒரு போலி வாக்காளருக்கு ஒரு ரூபாய் -ஆணையத்தின் போங்காட்டம்!

.தி.மு.க. தனது வெற்றிக்கு கோடிக்கணக்காகப் பணத்தை மட்டுமல்ல, இலட்சக்கணக்கான போலி வாக்காளர்களையும் இறக்கியிருக்கிறது. பணப் பட்டுவாடா குறித்து மூக்கைச் சிந்திய ‘நடுநிலை’ பத்திரிகைகளுள் ஒன்றுகூட இப்போலி வாக்காளர் முறைகேடு குறித்து கண்டு கொள்ளவில்லை. காரணம், போலி வாக்காளர் சேர்ப்பு என்பது அ.தி.மு.க.வின் தனிப்பட்ட, போட்டியற்ற ராஜாங்கமாக இருந்ததுதான்.
ec-jaya-servant-bogus-voters2009-2014-ம் ஆண்டுகளில் இந்தியாவின் வாக்காளர் எண்ணிக்கை சராசரியாக 13.6 சதவீதம் அளவிற்கு உயர்ந்தபொழுது, தமிழக வாக்காளர் எண்ணிக்கையோ 29.1 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. அக்கால கட்டத்தில் மட்டும் தமிழகத்தில் 1.21 கோடி புதிய வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வாக்காளர் சேர்க்கை எண்ணிக்கை தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஒத்துப் போகவில்லை எனக் குறிப்பிடுகிறது, நக்கீரன்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட நாள் தொடங்கியே போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் எனத் தமிழகத் தேர்தல் ஆணையத்திடம் கோரி வந்தது, தி.மு.க. பா.ம.க.வும் இம்முறைகேடு குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டது. தேர்தல் ஆணையர் லக்கானி இம்முறையீட்டைக் கண்டுகொள்ளாமல் ஒதுக்கித் தள்ளவே, ஒரு வாக்காளர் பெயர் 13 இடங்களில் இருந்த ஆதாரங்களோடு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது, தி.மு.க. இதன் பிறகு, சென்னை உள்ளிட்டு தமிழகமெங்கும் 6.5 இலட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக அறிவித்தது, தேர்தல் ஆணையம்.
இதன் பிறகும் 32 இலட்சம் போலி வாக்காளர்களைத் தேர்தல் ஆணையம் தனது பட்டியலில் இருந்து நீக்காமல் வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தி இந்து ஆங்கில நாளிதழுக்கு நேர்காணல் அளித்திருக்கும் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, அதில், “திருவாரூர் தொகுதியில் மட்டும் 11,036 போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், ஆவடி, கொளத்தூர், திருப்போரூர், பாலக்கோடு, வன்னூர், திருப்பூர்(தெற்கு), பல்லடம், உடுமலை, குன்னம் உள்ளிட்டுப் பல தொகுதிகளில் போலி வாக்காளர்கள் மிதமிஞ்சிய அளவில் சேர்க்கப்பட்டிருந்ததை தி.மு.க. கண்டுபிடித்ததாக”க் குறிப்பிட்டுள்ளார்.
பிரவீண் குமார் தமிழகத் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த காலத்தில்தான், அவரின் ஒத்துழைப்போடு அ.தி.மு.க. போலி வாக்காளர்களைச் சிறுகச்சிறுகச் சேர்த்திருக்கிறது. இதற்கு கைமாறாக, அவருக்கு ரூ.85 இலட்சம் மதிப்புள்ள வீடு செப்.2012-இல் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே நொய்டாவில் அவருக்கு வீடு இருந்தும், அ.தி.மு.க. அரசு விதிமுறைகளை மீறி அவருக்கு சென்னையில் வீடு ஒதுக்கியிருக்கிறது. வீட்டை வாங்கிய 16 மாதங்களுக்குள் 40 இலட்ச ரூபாயைத் திரும்பச் செலுத்தியிருக்கிறார், பிரவீண் குமார். வெறும் 75,300 ரூபாய் மாதச் சம்பளம் வாங்கிய அதிகாரி, ஒன்றரை வருடத்திற்குள் 40 இலட்ச ரூபாயைத் திரும்பச் செலுத்தியிருக்கிறார் என்றால், அதற்கான வருமானம் எப்படி வந்தது?
தமிழகத்தில் 40 இலட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சுமத்துகிறது, தி.மு.க. பிரவீண் குமார் வருமானத்திற்கு மீறி 40 இலட்ச ரூபாயைத் திரும்பச் செலுத்தியிருக்கிறார். ஒரு போலி வாக்காளருக்கு ஒரு ரூபாய் என்பதுதான் கணக்கு. ஓட்டுக்குப் பணம் கொடுப்பதைக் காட்டிலும் தேர்தல் ஆணையரை விலைக்கு வாங்குவது எவ்வளவு மலிவானது! வினவு.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக