வெள்ளி, 10 ஜூன், 2016

திருப்பதியில் மூன்று தமிழர்கள் சித்ரவதை.. தனி அறையில் அடைத்து வைத்து காவல்துறை

 திருப்பதியில் செம்மரம் வெட்ட வந்ததாக கூறி பிடித்து சென்ற மூன்று தமிழர்களை வனத்துறை அதிகாரிகள் தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது. செம்மரக் கடத்தல் வழக்கில் கைதாகும் தமிழகக் கூலிகள் விடுதலையாகிவிட முடியாதபடி ஆந்திர அரசு வனத்துறை சட்டத்தைத் திருத்தியது. இதன்படி, செம்மரக் கடத்தலில் முதன்முறையாக கைது செய்யப்படுபவர்களுக்கு, 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.3 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். இரண்டாவது முறை கைது செய்யப்பட்டால், அவர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
இந்த புதிய சட்டப் பிரிவுக்கு முன்பாக கைது செய்யப்பட்டவர்கள் 3 மாதங்களுக்குப்பின் பிணையில் விடுவிக்கப்பட்டு வந்தனர். ஆனால், தற்போது செம்மரக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்படுவோருக்கு ஜாமீன் வழங்கப்பட மாட்டாது. செம்மரக் கடத்தல் வழக்கை விசாரிக்க அப்பிலேட் டிரிபியுனல் தலைவர்களாக உள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட சிறப்பு நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வனத்தின் பாதுகாப்புக்காக டிஎஸ்பி பொறுப்பில் உள்ள சிறப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த செம்மரக் கடத்தல் புதிய தடுப்புச் சட்டம் ஆந்திர வனத்துறைச் சட்டத்தில் இன்னொரு இணைச் சட்டம் போன்று செயல்படுவதால், வனத்துறை அதிகாரிகளுக்குக் கட்டற்ற சுதந்திரம் வழங்கப்படும் வாய்ப்பு உருவானது.
இந்நிலையில் சமீபத்தில், திருப்பதி சேஷாச்சல மலைத்தொடரில் உள்ள பாக்ராபேட்டை வனப்பகுதியில், பகடகுண்ட கொணா என்ற இடத்தில், செம்மரம் வெட்டி கடத்தியதாக கூறி, தமிழர்கள் 3 பேரை ஆந்திர வனத்துறையினர் கைது செய்தனர். கைதான இந்த 3 பேரும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இவர்கள் 3 பேரும் கைது செய்து 10 நாட்கள் ஆகியும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்காமல், வனத்துறையினர் நாகபட்லா வன அலுவலகத்தில் கழிவறைகூட இல்லாத தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்து அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செய்தியாளர்கள் வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘வனப்பகுதியில் பிடிக்கும்போது அவர்கள் உடலில் ஏற்பட்ட காயத்தால், நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தவில்லை. அவர்கள் நாளை ஆஜர்படுத்தப்படுவார்கள்’ என்று தெரிவித்திருக்கின்றனர். இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக