வெள்ளி, 10 ஜூன், 2016

வீரமணி அறைகூவல் : பார்பன மனுதர்ம கல்வியை ஒருபோதும் அனுமதிக்க முடியாது

இந்தியக் கல்வித்திட்டத்தில் செய்ய இருக்கும் மாற்றங்கள் குறித்து கல்வியமைச்சர் ஸ்மிருதி இரானி கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘இந்தியாவுக்குப் புதிய கல்வி என்ற ஒரு திட்டத்தைக் காவி அமைப்புகள் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரிடம் அளித்தன. பெருநகரங்களில் உள்ள பள்ளிகள் 12 மணிநேரம் செயல்படவேண்டும். இரு பகுதிகளாக பிரித்து முதல்பாதி படிப்பும், அடுத்த பாதி தொழில் கல்வியும் வழங்கவேண்டும். முக்கியமாக பெற்றோர்கள் எந்த தொழில் செய்கிறார்களோ அந்த தொழிலில் ஆர்வமாக உள்ள குழந்தைகளுக்கு அந்த தொழிலை நவீனமயமாக்கும் முறையை கற்றுக் கொடுக்க வேண்டும்.


இருபால் மாணவர்கள் கல்விமுறை நமது கலாச்சாரத்துக்கு உகந்ததல்ல. ஆகவே, நாடு முழுவதும் உள்ள இருபாலர்கள் கல்வி பயிலும் பள்ளிகளை மூடிவிட்டு மாணவர் - மாணவியருக்கு என்று தனித்தனி பள்ளிகளைத் தொடக்கவேண்டும். அந்த மாநில மொழிகளில் மட்டுமே பாடங்கள் இருக்க வேண்டும். மேலும் இந்தியா முழுவதும் கல்வியில் சமஸ்கிருதம் முக்கியப் பாடமாக இருக்க வேண்டும். நாடு முழுவதும் அங்கன்வாடிகளில் சமஸ்கிருத ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கு சமஸ்கிருத உச்சரிப்புகள் மிகவும் எளிமையாக இருக்கும். ஆகவே, சமஸ்கிருத எழுத்துகள் மற்றும் வாக்கியங்களைக் குழந்தைகள் பேச கற்றுக்கொடுக்க வேண்டும்.

நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இந்தி பாடமாக அமைய வேண்டும். நாடு முழுவதும் இந்தி பொதுமொழியாக உள்ளது. ஆகவே, இந்தியை அனைத்து மாநிலப் பள்ளிகளில் கற்றுத்தரும்போது வேறு மாநிலங்களுக்குச் சென்று பயிலவிரும்பும் மாணவர்களுக்கு இது வசதியாக இருக்கும். தேர்வுமுறை என்பது கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். தேர்ச்சிப் பெறுவதற்கு தற்போதுள்ள முறையை மாற்றி 50 விழுக்காடு மதிப்பெண் பெற்றவர்களே தேர்ச்சி பெற்றவர்கள் என்ற முறை வரவேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் நவீன வருகைப் பதிவேடு மற்றும் கண்காணிப்புச் சாதனங்கள் அமைய வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் காலையில் ஆன்மிக வகுப்புகள் கட்டாயம் இருக்கவேண்டும்’ என்று அந்தப் பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது. (‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ 26.1.2016)

பச்சையாக பார்ப்பனீய - இந்துத்துவா வர்ணாசிரம - மனுதர்மக் கொள்கையைச் செயல்படுத்துவதற்கான திட்டம் தானே இது? அடல்பிஹாரி வாஜ்பேயி அவர்கள் பிரதமராக இருந்தபோது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராகவிருந்த முரளி மனோகர் ஜோஷி என்ற வைதிக வெறிகொண்ட பார்ப்பனர் 1998ம் ஆண்டில் மாநாடு ஒன்றை டெல்லியில் ஏற்பாடு செய்தார். அக்கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் கல்வியாளரான சிட்டியாங்லியா ஒரு பாடத் திட்டத்தைத் தயாரித்துக் கொடுத்தார். இப்பொழுது கொண்டு வரப்பட உத்தேசித்துள்ள புதிய கல்வித் திட்டம் என்பதும் அதுவும் கிட்டத்திட்ட ஒன்றேதான். முரளி மனோகர் ஜோஷி பல்கலைக்கழகங்களில் ஜோதிடம், வேத கணிதம் முறையையும் திணித்தார்.

கட்சி, மாநிலங்களை மறந்து மதச் சார்பற்ற சக்திகள் ஒன்று திரண்டு இந்த கட்டத்திலேயே கடுமையாக எதிர்த்து முறியடித்தாக வேண்டும். இந்து ராஜ்யம் அமைப்போம், ராம ராஜ்யம் ஏற்படுத்துவோம் என்று சொல்லிக் கொண்டிருந்த ஒரு கூட்டத்துக்கு ஆட்சி அதிகாரம் கையில் கிடைத்து விட்டது என்ற தைரியத்தில், இத்தகு பிற்போக்குத்தனமான பழம் குப்பைகளைக் கொலுவேற்றத் துடிக்கிறது. ஒன்றுபட்டு எதிர் கொள்வோம். அதற்குத் தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண்தான் தொடக்கத்தைக் கொடுக்கும், முறியடிக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக