ஞாயிறு, 12 ஜூன், 2016

சாதிக் பாட்சா கொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு? வைகோ ஜெயலலிதாவின் அடுத்த மூவ்?

சென்னை; முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் சாதிக்பாட்சா மரணம் குறித்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ மற்றும் சென்னை காவல் ஆணையரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் மனு கொடுத்திருப்பது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அப்போதைய மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் துப்புத் துலக்க ஆ.ராசாவின் நண்பரும், கிரீன் ஹவுஸ் ப்ரோமோட்டர்ஸ் நிர்வாகியுமான சாதிக் பாட்சாவிடம் விசாரணை நடத்த சிபிஐ நடவடிக்கை மேற்கொள்ள இருந்தது. ---- நீ பாதி நான் பாதின்னு பாடுறமாதிரில்லா பாக்கிராய்ங்க?
இந்த நிலையில், கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் சாதிக் பாட்சா பிணமாகக் கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், திமுக புள்ளிகளின் நெருக்கடியினால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியது. சாதிக் பாட்ஷாவின் மரணமும் இப்போது சிபிஐ விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், திருச்சியில் செய்தியாளர் சந்திப்பு நடத்திய,அரியலூர் மாவட்டம், அய்யூரை சேர்ந்த பிரபாகரன் என்பவர்,  'தான் தமிழர் நீதிக்கட்சியின் தலைவர் சுப.இளவரசனின் உதவியாளர் என்றும், ஆ.ராசாவின் மைத்துனர் பரமேஸ்குமார், முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர்சேட் ஆகியோருடன் சேர்ந்து சாதிக் பாட்சாவை கொலை செய்ததாகவும்' தகவலை வெளியிட்டார். மேலும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், இந்த ரகசியத்தை தற்போது வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும்,  'சாதிக் பாட்சா மரணம் தற்கொலை அல்ல; கொலை' என கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற அதிமுக வழக்கறிஞர்கள் பி.வி.செல்வக்குமார், எஸ்.திவாஹர், சி.திருகுமரன், ராம்சங்கர் ஆகியோர் சிபிஐ, அமலாக்கப் பிரிவு, சென்னை பெருநகர காவல் ஆணையர், தி.நகர் துணை ஆணையர் ஆகியோரிடம் ஒரு புகார் மனுவை அளித்தனர்.

அந்த மனுவில், “திருச்சி பிரஸ் கிளப்பில் கடந்த மாதம் 17-ம் தேதி கே.பிரபாகரன் என்பவர் கொடுத்த பேட்டியில், ‘முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் சாதிக்பாட்சாவை டவலால் கழுத்தை நெரித்து நான்தான் கொன்றேன். ஆ.ராசாவின் உறவினர் பரமேஷ்குமாருடன் சேர்ந்து இந்த கொலையை செய்தேன். முன்னாள் உளவுப்பிரிவு அதிகாரி ஜாபர்சேட் இந்த கொலைக்கு உதவி செய்தார்’ என்று தெரிவித்துள்ளார். பிரபாகரன் கூறிய தகவலின் அடிப்படையில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
2ஜி வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடந்து வரும் நிலையில் தமிழத்தில் ஆளும் கட்சியான அதிமுக திமுகவின் எதிர்காலத்தை பாதிக்கும்படியான பெரும் வழக்கில் ஆர்வம் காட்டுவதும் வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோருவதும் திமுக வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நடந்து முடிந்த தேர்தலில் முன்னைவிட வலுவான எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றுள்ள திமுக சட்டமன்றத்தில் ஆளும்கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த தீவிரத்திற்கு முட்டுக்கட்டை போடும் முயற்சியே சாதிக்பாட்சா வழக்கு விவகாரத்தில் அதிமுக ஆர்வம் காட்டும் பின்னணி என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.  விகடன்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக