ஞாயிறு, 12 ஜூன், 2016

மருத்துவம் பொறியியல் போதுமா? நீதிமன்றம்,சட்டம், அரசு எல்லாம் நமக்கு எதிராக இருக்கிறதே?

தனியார் பள்ளி - அரசுப் பள்ளிசென்ற வருடம் பள்ளி பொதுத் தேர்வு முடிவுகள் வெளிவந்த சமயத்தில் நமக்கான கல்வி எப்படி இருக்க வேண்டும்? கல்விக்கான நமது அடிப்படை உரிமையை மீட்டெடுக்க போராடுவதன் அவசியம் என்று எனது பள்ளி கல்லூரி வாழ்க்கை அனுபவத்தை (மாணவர் + பெற்றோருக்கு ஒரு ஆராய்ச்சி மாணவன் கடிதம்) உங்களிடையே பகிர்ந்திருந்தேன். இப்பொழுது இந்த வருட தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. கடந்த ஒரு வருடத்தில் நாம் பெற்ற அனுபவம்; பெற்றுக்கொண்ட படிப்பினைகள், போக வேண்டிய தூரம் என்ன என்பதை இக்கட்டுரையில் தொட்டுச் செல்வோம்.

தனியார் பள்ளியால் முடியாததைச் செய்த அரசு பள்ளி!
“ஒன்றுமே தெரியாத மாணவனை தேர்ச்சியடையச் செய்வதுதான் ஆசிரியரின் வேலை. தனியார்பள்ளியில் இருந்து வெளியேற்றப்படும் மாணவர்களுக்கு அரசு பள்ளிகள்தான் இடம் அளிக்கின்றன.”
கல்வி, வாங்கி-விற்கும்-பண்டமாக மாற்றப்பட்ட பிறகு தனியார் பள்ளிகளின் வக்கிரக் கொள்ளையை நமது பிள்ளைகள் அன்றாடம் அனுபவித்து வருவது கண்கூடு. ‘அரசு பள்ளிகள் என்றால் கேவலமானது; குடும்பத்தின் கெளரவம் பாதிக்கும்’ எனும் மட்டமான மனநிலையை மக்கள் மத்தியில் தனியார்மயம் ஒரு பண்பாட்டுத் தாக்குதலாகவே புகுத்தியிருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் தனியார் பள்ளியால் செய்யமுடியாத ஒன்றை தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள வன்னிவேலம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி செய்திருக்கிறது.
தனியார் பள்ளியால் மக்குத்தடி என்று விரட்டியடிக்கப்பட ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களை தங்கள் பள்ளியில் சேர்த்துக் கொண்டு பயிற்சி அளித்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற வைத்திருக்கிறது இப்பள்ளி. இன்றைய நிலையில் நூறு சதம் தேர்ச்சி எனும் பெயரில் தனியார் பள்ளிகள் பிளக்ஸ் போர்டு பேனர் வைத்து மக்களிடம் நூதனமாக திருடி வருகின்றன. ஆனால் இந்த திருட்டிற்கு பின்னே ஒன்பதாம் வகுப்பிலேயே மெதுவாக கற்கும் மாணவர்களை கழித்துக்கட்டுவது, உறைவிடபள்ளி என்று பல இலட்சங்களை பிடுங்குகிற போக்கு தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
வன்னிவேலம்பட்டி அரசு பள்ளி தலைமையாசிரியரின் நேர்காணலைக் கவனியுங்கள்: “ஒன்றுமே தெரியாத மாணவனை தேர்ச்சியடையச் செய்வதுதான் ஆசிரியரின் வேலை. தனியார்பள்ளியில் இருந்து வெளியேற்றப்படும் மாணவர்களுக்கு அரசு பள்ளிகள்தான் இடம் அளிக்கின்றன. அந்த மாணவர்களைப் புறக்கணிக்காமல் தேர்ச்சி பெறச் செய்ய முழு முயற்சியில் ஈடுபடுகிறோம். ஒவ்வொரு மாணவனையும் முறையாக ஊக்குவித்தால் தேர்ச்சி பெறச்செய்யலாம்.” (தி இந்து தமிழ், 27-05-016)
பள்ளியின் நோக்கம் என்ன? ஆசிரியரின் நோக்கம் என்ன? என்பதை இந்த நேர்காணல் தெளிவாகக் காட்டுவதுடன் இலாபம் பார்த்து, கல்வி எனும் சரக்கை விற்கும் தனியார் பள்ளிகள் எப்படி சமூகத்தின் வேண்டாத தொங்கு சதைகளாக இருக்கின்றன என்பதையும் தெளிவாகக் காட்டுகின்றன. மேலும் இந்த அரசுப் பள்ளியில் மாணவர்களை தேர்ச்சி பெறவைக்க வன்னிவேலம்பட்டி பகுதிவாழ் இளைஞர்கள் உதவியிருப்பதும் நமது கவனத்திற்கு வருகிறது. மாறாக நாமக்கல், பிராய்லர் கோழி தனியார் பள்ளிகளில் மாணவர்களை முழு மதிப்பெண் பெறவைக்க ஆசிரியரே தேர்வு அறையில் வாட்ஸ் அப் வைத்துக்கொண்டு விடைகளை சொல்லியது செய்திகளில் அம்பலப்பட்டது நினைவிருக்கலாம்.
சட்டபூர்வமற்ற மெட்ரிகுலேசன் பள்ளிகளின் இருப்பை நியாயப்படுத்த நடுத்தரவர்க்க கனவான்கள் அரசு பள்ளி மீது கொட்டும் பல்வேறு அவதூறுகள் கிண்டல்களை நடைமுறையில் இரத்து செய்திருக்கிறது வன்னிவேலம் பட்டி அரசு பள்ளி!
பெற்றோர்களின் மோகமும் அரசு பள்ளி சாதனையும்!
தனியார் பள்ளி - அரசுப் பள்ளி
இந்த வருட தேர்வு முடிவில் ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிகுலேசன் பள்ளியைச் சேர்ந்த மாணவி ஆர்த்தி மாநிலத்தில் முதல் இடம் பெற்றிருக்கிறார்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்த கையோடு நாமக்கல், ஊத்தங்கரை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட பிராய்லர் கோழி தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர்கள் தொண்ணாந்து கொண்டு காத்திருந்ததை செய்திகள் பரபரப்புடன் வெளியிட்டன. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து தங்கள் பிள்ளைகளுடன் படையெடுத்த பெற்றோர்கள் சொல்லும் முதற்காரணம் இங்கு படித்தால் மருத்துவ சீட்டு கிடைப்பது உறுதியாம். அதற்காக உறைவிடப் பள்ளி எனும் முறையில் இங்கு செயல்படும் பல தனியார்பள்ளிகள் இரண்டு வருட கொடுமைக்கு பிள்ளைகளை உட்படுத்துகின்றனர். பதினொன்றாம் வகுப்பு பாடங்களை நடத்தாமலேயே பன்னிரெண்டாம் வகுப்பு பாடங்களை நடத்தும் அப்பட்டமான மோசடி இங்கு நடைபெற்றுவருகிறது! இத்தகைய உறைவிட பள்ளிக்கு பல இலட்சங்களை கந்துவட்டிக்கு வாங்கி பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பணயம் வைக்கின்றனர்.
இந்த வருட தேர்வு முடிவில் ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிகுலேசன் பள்ளியைச் சேர்ந்த மாணவி ஆர்த்தி மாநிலத்தில் முதல் இடம் பெற்றிருக்கிறார். இவரது குடும்பம் சென்னையில் இருந்தாலும் மகளின் படிப்பிற்காக ஊத்தங்கரையில் தனியாக வீடு எடுத்து தங்கி ஊத்தங்கரையில் தாயும் பிள்ளையும் சென்னையில் தகப்பனும் என்று கல்வி வாசம் செய்திருக்கின்றனர். நடுத்தர வர்க்க பெற்றோர்களிடையே காணப்படும் மனநிலையின் ஒருவகைப்பாடு இது.
ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிகுலேசன் பள்ளி
ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிகுலேசன் பள்ளி
மறுபுறத்தில் தன் பிள்ளையின் மதிப்பெண் குறைந்ததால் தற்கொலை செய்துகொண்ட தாயைப் பற்றிய செய்தி இந்தாண்டு வெளிவந்திருக்கிறது. பள்ளி மாணவ மாணவிகள் மனம் வெறுத்து தற்கொலை செய்துகொள்வது ஒருபுறமிருக்க பெற்றோர்களே தற்கொலை செய்துகொள்ளும் போக்கு பாசம், கண்காணிப்பு எனும் பெயரில் பெற்றோர்களின் வக்கிரமான நுகர்வு மனநிலையைத் தான் காட்டுகிறதேயன்றி வேறல்ல!
இந்த இரு எதிர் எதிர் முனைகளுக்கு மத்தியில் புதுக்கோட்டை கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேனிலைப்பள்ளி கடந்த ஏழு ஆண்டுகளில் 14 மருத்துவ மாணவர்களை உருவாக்கியிருக்கிறது எனும் செய்தி தி இந்து தமிழ் நாளிதழில் 06-06-2016 அன்று வெளிவந்திருக்கிறது.
கல்வியில் தனியார்மயம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்கு இச்செய்தி கட்டியம் கூறுகிறது. இங்கு பெற்றோர்களின் மனநிலையை கவனத்தில் கொள்ள வேண்டும். உயர்கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரை அரசு பொறியியல் மருத்துவக் கல்லூரிகள் தான் சிறந்தது என்று கருதும் பெற்றோர்கள், தனியார் பள்ளிகளை இதற்கு ஒரு துருப்புச் சீட்டாக என்ன விலை கொடுத்தாவது அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் என நினைப்பது மலம் என்று தெரிந்தும் நுகர்ந்து பார்க்கத் துடிக்கும் அறிவாளியின் கதையையே நமக்கு நினைவூட்டுகிறது.
இதில் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் பொருட்டு அரசுப் பள்ளிகளை வேண்டுமென்றே சீர்கெட அனுமதிக்கிற அரசு இருக்கிற இந்நாட்டில், இருக்கும் கொஞ்ச நஞ்ச உயிர் இழைகளை வைத்துக் கொண்டு சிறந்த மாணவர்களை புதுக்கோட்டை கொத்தமங்கலம் போன்ற அரசுப் பள்ளிகள் உருவாக்குகிறது என்றால் மக்களாகிய நாம் என்ன செய்திருக்க வேண்டும்?
சாமியானா பந்தலில் இரவு முழுவதும் நாமக்கல் பள்ளிகளில் அட்மிசனுக்காக கால்கடுக்கும் வெட்கங்கெட்ட வேலையைச் செய்யாமல் வீட்டுக்கொரு நபராய் அருகில் உள்ள அரசு பள்ளியை தரம் உயர்த்துவதில் போராடியிருப்பதுதானே சரியாக இருக்க முடியும்?
பாராளுமன்றம் மட்டுமல்ல பள்ளிகளும் உழைக்கும் மக்களின் தலைமையில் அமைய வேண்டும்
மக்களின் மனநிலையைச் சுரண்டி தனியார் பள்ளிகள் எவ்விதம் ஆளும் அதிகார வர்க்க உறுப்புகளை வளைத்துப்போட்டிருக்கின்றன என்பதற்கு சான்றாக, ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக்குலேசன் பள்ளி, தேர்தலில் பணப்பட்டுவாடா பண்ணுவதற்கு நம்பிக்கைக்குரிய கேந்திரமாக செயல்பட்டிருக்கிறது! தேர்தல் ஆணையம் நடத்திய கண்ணாமூச்சி ரெய்டிலேயே 245 தங்கக் காசுகளும் 3.40 கோடி ரொக்கப்பணமும் சிக்கியிருக்கிறது! தங்க நாணயங்கள் செண்டம் எடுக்க உதவிய ஆசிரியர்களுக்கான ‘நாணய’ப்பரிசு என்று கூறி தங்க நாணயங்களை மீட்டிருக்கிறது பள்ளி நிர்வாகம்! சிக்கிய பணத்தின் மீது விசாரணை ஏதும் இல்லை!
வெள்ளத்தைக் காட்டி பள்ளிகளை மூட வேலை செய்த பாசிச ஜெயா கும்பல்!
government-model-school-saidapet
வெள்ளத்தைக் காரணம் காட்டி அடையாறு ஓரம் இருக்கும் (திடீர் நகர், ஆத்துமா நகர், மடுவங்கரை) போன்ற பல பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன
அரசின் செயலற்ற தன்மையாலும் தனியார்மய ஆக்ரமிப்பாலும் சென்னை மக்கள் சூறையாடப்பட்டதை எடுத்துக்காட்டியது சென்ற வருட வெள்ளப்பெருக்கு. மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை அடியோடு இழந்தனர் என்கிற பொழுது இதில் பள்ளிகளும் விதிவிலக்கல்ல. ஒருமாதத்திற்கும் மேலாக மின்தடை, நோட்டு புத்தகங்கள் ஆற்றோடு போனது, வெள்ளநீர் வடியாதது என்ற பல நிலைமைகளுக்கு மத்தியில் சென்னை கொருக்குப்பேட்டை பெண்கள் மேனிலைப்பள்ளி மாணவி ஸ்வப்னா 1166 மதிப்பெண்களையும் சி.ஐ.டி நகர் மற்றும் மடுவன் கரை அரசு மேனிலைப்பள்ளி மாணவிகள் புவனேஸ்வரி, ராமலெட்சுமி ஆகியோர் 1157 மதிப்பெண்களையும் சைதாப்பேட்டை, கோயம்பேடு, புல்லா அவென்யு அரசு மேனிலைப்பள்ளி மாணவிகள் 1155 மதிப்பெண்களையும் பெற்றிருக்கின்றனர். இவர்களின் பெற்றோர்கள் எல்லாம் மீனவர், தையல் தொழிலாளி, கார் ஓட்டுபவர், தனியார் செக்யுரிட்டி, வீட்டு வேலை செய்பவர் என்று உழைக்கும் வர்க்கமாக உதிரித் தொழிலாளிகளாக இருக்கின்றனர்.
நமது நாட்டின் உழைக்கும் மக்களுக்கு கல்வி வழங்கப்படும் பொழுது குன்றிலிட்ட விளக்காக ஒளிர்வதற்கு வாய்ப்பிருக்கும் நிலையில் காதோடு காது வைத்தார்போல் சென்னை வெள்ளத்தைக் காரணம் காட்டி அம்மா கும்பல் பல அரசுப் பள்ளிகளை இழுத்து மூடுவதற்கு பலவேலைகளை செய்திருந்ததை 01-01-2016 அன்று இந்து ஆங்கில நாளேட்டில் வெளிவந்த செய்தி தெரிவிக்கிறது.
நாம் ‘அருகாமை பள்ளிகள் வேண்டும்’ ‘பொதுபள்ளிகள் வேண்டும்’ என்று போராடுகிற பொழுது வெள்ளம் வருவதற்கு முன்பாகவே சென்னை மாநகராட்சி, மாணவர்களின் எண்ணிக்கையைக் காரணம் காட்டி பல பள்ளிகளை மூட திட்டம் போட்டிருந்தது. 1999-லிருந்து 2011வரை இத்திட்டத்தின் கீழ் 25 மாணவர்களுக்கு குறைவான 56 பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. 2009-ல் (தி.மு.க ஆட்சி) 30 பள்ளிகளை மூட எத்தனித்த பொழுது மக்களின் போராட்டம் காரணமாக பள்ளிகளை மூடும் நடவடிக்கை பின்வாங்கப்பட்டது. ஆனால் 2016-ல் பள்ளிகளை மூடிய எண்ணிக்கை அதிகரித்திருக்கும் என்று சொல்வதன் பின்னணியில் வெள்ளத்தைக் காரணம் காட்டி அடையாறு ஓரம் இருக்கும் (திடீர் நகர், ஆத்துமா நகர், மடுவங்கரை) போன்ற பல பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன என்கிறார்கள்.
தனியார் பள்ளி - அரசுப் பள்ளி
ஒருமாதத்திற்கும் மேலாக மின்தடை, நோட்டு புத்தகங்கள் ஆற்றோடு போனது, வெள்ளநீர் வடியாதது என்ற பல நிலைமைகளுக்கு மத்தியில் சாதித்த மாநகராட்சி பள்ளி மாணவிகள்
அ.தி.மு.க கும்பல் மீட்புப்பணிகளை செய்யவில்லை என்பது மட்டுமல்ல மக்களுக்கு எதிர்நிலையாக, அடிபட்டவன் மயக்கநிலையில் இருக்கும் பொழுது பர்ஸ் அடிக்கும் பிக்பாட்டைப் போல வெள்ளத்தைக் காரணம் காட்டி பள்ளிகளை மூடியும் இருக்கிறார்கள்.
இப்பொழுது அரசுப்பள்ளி மாணவர்களின் சாதனை என்று வியக்கிற பொழுது, நமது அடிப்படை உரிமையான பள்ளிகளே போயிருக்கிறது என்பதை எண்ணிப்பாருங்கள். அறுக்கமாட்டாதவனுக்கு ஆயிரத்தெட்டு அறுவாள் என்ற கதையாக பள்ளிகளைத் தொலைத்த மக்கள், ஆட்சியை தேர்ந்தெடுக்க ஓட்டுப்போட்டார்களாம்!
மருத்துவம் பொறியியலுக்கு ஆசைபட்டால் போதுமா? நீதிமன்றமும் அரசும் நமக்கு எதிராக இருப்பதை உணரவேண்டாமா?
மாநிலத்தில் முதலிடம் பெற்ற ஊத்தங்கரை மாணவி ஆர்த்தியின் கதைக்கு மீண்டும் திரும்புவோம். ஆர்த்தியின் பெற்றோர் தன் மகள் மருத்துவராக வரவேண்டும் என்பதற்காக ஊத்தங்கரையில் வீடு பார்த்து, வித்யா மந்திர் பள்ளியில் படித்து 1195 மதிப்பெண்கள் வாங்கியாயிற்று. ஆனால் மருத்துவக் கனவு நனவு என்று பெற்றோர்கள் நினைக்கும் பொழுது உச்சநீதி மன்றம் மருத்துவத்திற்கு பொது நுழைவுத்தேர்வு கட்டாயம் என்று குண்டைப் போட்டிருக்கிறது. மாநிலங்களின் சுயாட்சி உரிமையை ஒரு தீர்ப்பால் கழிவறையில் போட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். ஆர்த்தி போன்ற உயர்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பங்கள் உடனடியாக பொதுநுழைவுத் தேர்விற்கு பயிற்சி எடுக்க இன்னொரு நாமக்கல்லை கேரளாவில் தேடுகின்றனர். ஆனால் மருத்துவப்படிப்பை எட்டாக்கனியாக்கும் அரசின் களவாணித்தனத்தை அறியாமல் இருக்கின்றனர். பார்த்தும் பார்க்காதுபோல் இருக்கின்றனர்.
abhiya
மலையாளப் பாடத்தில் முதலிடம் பெற்ற டீக்கடை தொழிலாளியின் மகள் அபியா
மோடி பதவியேற்றவுடனேயே செய்த முதல் வேலை தொழிலாளர் காப்பீட்டு கழகத்தின் கீழ் செயல்படும் இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரிகளை மூடுவதாக அறிவித்து நடைமுறைப்படுத்தியதாகும். இதனால் பல ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் உருவாவது வேண்டுமென்றே தடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக நாடெங்கிலும் போராட்டம் நடைபெற்றது. இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரிகள் இத்துணைக்கும் தொழிலாளிகளின் வியர்வையால் பி.எப் பணத்தால் விளைந்தவையாகும். என மகன் மகளுக்கு மருத்துவச் சீட்டு கிடைக்க வேண்டும் என்று நினைக்கிற எந்தப் பெற்றோரும் இதற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை.
தொழிலாளிகளை ஆதரித்து வர்க்க உணர்வாக குரல் எழும்பினால் தான் இ.எஸ்.ஐ மருத்துவமனைகளை காப்பாற்ற முடியும் என்ற நிலையில் மக்களிடையே அந்தக் குரல் எழவில்லை என்பது தொழிலாளிகளை காவு கொடுத்தது மட்டுமின்றி பொதுசுகாதாரம் போய் தனது குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக்குரியதாய் நின்றிருக்கிறது. அதாவது அரசுக்கும் நமக்கும் இடையிலான கயிறு இழுக்கும் போட்டி மருத்துவச்சீட்டிற்கானதல்ல. மக்களின் அதிகாரத்திற்கானது. உழைக்கும் மக்கள் தமது அதிகாரத்தை நிலைநாட்டிக்கொள்வதன் மூலமாகத்தான் மருத்துவச் சீட்டு மட்டுமல்ல; நாம் உயிர் வாழ்வதற்கான நிலைமையையும் பெற முடியும் என்ற நிலைக்கு வந்திருக்கிறோம்.
இதன் அடிப்படையில் இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரிகள் ஏன் மூடப்பட வேண்டும்? என்பது அன்றைய நிலையில் பொதுதளத்திற்கு விவாதத்திற்கு வரவில்லை. மக்கள் திரள் போராட்டங்கள் கட்டியமைக்கப்படவில்லை. இதில் குளிர்காய்ந்த மோடி கும்பல் இந்தாண்டு மருத்துவப்படிப்பிற்கு பொதுநுழைவுத்தேர்வு கட்டாயம் என்று சொல்வதன் பின்னணியில் முழுக்கவும் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரல்தான் இருக்கிறது. இந்திய நாட்டை விற்கும் உலகவர்த்தக கழகம் கொண்டுவரும் காட்ஸ் ஒப்பந்தம் முன் தள்ளும் புதியக் கல்விக்கொள்கையின் அடிப்படையில் ஒரே நுழைவுத்தேர்வு என்பதன் மூலமாக நாட்டின் கல்விக்கட்டமைப்பை தகர்த்து காசு இருப்பவனுக்கு கல்வி என்று மாற்றுகிறார்கள்.
எனக்கு ஏகாதிபத்தியம், காட்ஸ், புதிய கல்விக்கொள்கை என்றால் என்னவென்று தெரியாது என்று பொதுமக்கள் வாதிடலாம். நியாயம் தான். அதே சமயம் ஒரே நுழைவுத் தேர்வு எப்படி அமல்படுத்தப்பட்டது என்பதைக் கொஞ்சம் கவனியுங்கள்.
சங்கல்ப் என்ற என்.ஜி.ஓ நிறுவனம் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கிறது. ஒரே நுழைவுத்தேர்வு ஒரே இந்தியா என்று பார்ப்பன சங்கப்பரிவாரக் கும்பல் தலைநகரில் கூச்சல் போடுகிறது. உச்சநீதிமன்ற நீதிபதி அனில் ஆர். தாவே யாருடைய தரப்பு வாதத்திற்கும் செவிமடுக்காமல் ஒரே நுழைவுத்தேர்வு என்று தீர்ப்பளிக்கிறார். மேல்முறையீட்டை நிராகரிக்கிறார். வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பாடத்திட்டம் எனும் வாதத்தை நிராகரிக்கிறார். இந்தியாவின் கல்விச் சூழல் பாரதூரமாக அசமத்துவமாக இருக்கும் பொழுது சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு என்பது அநீதி என்று வாதமும் நிராகரிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட அனில்.ஆர்.தாவே மனுஸ்மிருதியிலிருந்து அடிக்கடி கோட் செய்து தீர்ப்பளிப்பவர். ஆக தாவே யார் என்று நமக்கு தெரிவதில் சிக்கலில்லை. காட்ஸின் நோக்கங்கள் இவரைப்போன்ற நீதிபதிகளை வைத்து எல்லா தரப்பையும் நிகழ்ச்சி நிரலுக்கு கொண்டு வராமலேயே சொடுக்குபோட்டு நிறைவேற்றப்படுகிறது. மக்கள் தேர்தலைப்போலவே, தேர்வு திறமை எனும் வட்டத்தைத் தாண்டி தங்களின் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்திக்க முடியாமல் இருத்தி வைக்கப்பட்டிருக்கின்றனர்.
நமது நாட்டு மருத்துவக் கல்வி பகற்கொள்ளையாக போகிறதே என்று யாருக்கும் விழிப்புணர்வு இல்லை. கடைசியில் திறமை, சாதி, தாய்மொழி என்று உழைக்கும் மக்களின் பிள்ளைகள் உயர்கல்வியிலிருந்து ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். இதை ஆளும் வர்க்கம் ஐ.ஐ.டி தொழில்நுட்பக் கல்லூரிகளில் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது. JEE நுழைவுத் தேர்வு நாட்டின் பெரும்பான்மையான மக்களை உள்ளே வரவிடாமல் தடுக்கும் வண்ணம் இரு அடுக்காக திட்டமிட்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்வு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தேர்வை விட 42 மடங்கு கடினம் என்பது திறமை மற்றும் சிந்தித்தல் என்பதன் அடிப்படையில் அல்ல! கல்விசார் செயல்பாடுகள் மாணவர்களுக்கு கிடைக்கவிடாமல் தடுத்தல் (Non accessibility) என்பதன் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இது முழுக்கவும் மோசடியாகும்.
சான்றாக மாநில வழிக்கல்வியில் 1165 மதிப்பெண் எடுக்கிறவர் JEE நுழைவுத் தேர்வில் வெற்றி பெறவில்லை என்பது அவரது திறமையை மதிப்பிடுவதாக அமையாது. ஏனெனில் JEE பயிற்சி என்பது 250 ஸ்ட்ராக்களை வாயில் திணித்து லிம்கா சாதனை, மயிரைக் கொண்டு காரை இழுத்தல், ஆயிரம் பச்சை மிளகாய்களை உண்டு சாதனை போன்ற அர்த்தமற்ற, பொருளற்ற சாதனைத் தேர்வுகளாகும். 1165 தேர்வு முறையும் அப்படிப்பட்டதுதான் என்றாலும் JEE நிராகரித்தலை அடிப்படையாகக் கொண்டது. இதில் மாணவர்களை ஈடுபடச் சொல்வது என்பதே கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாகும். ஏனெனில் என்ன காரணத்திற்காக ஐ.ஐ.டி ஆரம்பிக்கப்பட்டதோ அதற்காகவே முதலில் அது இல்லை. நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பொறியியல் தொழில்நுட்பம் தேவை என்று ஐ.ஐ.டிக்கள் அமெரிக்க எம்.ஐ.டி மாடலில் இங்கு ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை இந்திய கட்டமைப்பிற்கு ஐ.ஐ.டிக்கள் எந்தப் பங்கும் ஆற்றியதில்லை. இப்பொழுதுவரை ஐ.ஐ.டிக்கள் ஏகாதிபத்திய நலன் காக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், பன்னாட்டு கம்பெனிகளுக்கு குறைந்த கூலிக்கு ஆட்கள் என்றுதான் இயங்கிவருகிறது.
ஆனால் நமது பார்வையின் படி உழைக்கும் மக்களின் தலைமையில் நாம் இந்தியாவைக் கட்டியமைக்கிற பொழுது உற்பத்தியில் நமக்கு இருக்கும் சவால்களுக்கு அறிவியல் தொழில்நுட்பம் கட்டமைப்பை சடுதியில் மேம்படுத்த மிக அவசியமாகும். அப்பொழுது ஐ.ஐ.டிக்கள் ஜரூராக வேலையில் இறங்கும் பொருட்டு பலதிசைகளிலும் முடுக்கி விடப்படும். இதற்கு நமக்கு உண்மையில் நாட்டின் மொத்த இளைஞர் பட்டாளமும் தேவை. இவர்களுக்கு அறிவு ஊட்டும் வேலையைச் செய்வது இன்றியமையாததும் தவிர்க்க இயலாததுமான புரட்சிகர இயக்கங்களின் பாட்டாளிவர்க்கத்தின் கடமையாகும். நாம் அப்பொழுதும் மாணவர்களைத் தேர்ந்தெடுப்போம். அப்பொழுது நமது தேர்வு முறை நிராகரித்தல் என்பதன் அடிப்படையில் இல்லாமல் தேர்ந்தெடுத்தல் என்பதன் அடிப்படையில் இருக்கும். இதற்கு JEE போன்ற பித்தலாட்டமான பாசங்கான உதவாக்கரை தேர்வு முறைகள் இருக்க வாய்ப்பில்லை என்பதை நினைவில் வையுங்கள்.
ஐ.ஐ.டிக்கள் தவிர தனியார் பொறியியல் கல்லூரிகள் என்று பல உப்புமா கல்லூரிகள் படையெடுத்து வருவதை நாம் காண்கிறோம். பெற்றோர்கள் தன் பிள்ளை இஞ்சினியர் என்பதில் ஆர்வமாக இருந்தால் தமிழ்நாட்டில் நிலவும் உண்மைக்கு முகம் கொடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் 93% சுயநிதி பொறியியல் கல்லுரிகளில் போலி பெயரில் பேராசிரியர்கள் பணிபுரியும் மோசடி சென்ற ஆண்டு வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அதாவது 93% தனியார் கல்லூரிகள் ஆசிரியர்கள் இல்லாமலேயே இருப்பதாக கணக்கு காட்டியிருக்கின்றன. ஆசிரியர் எனும் விசயத்திலேயே கல்லூரிகளின் நிலைமை இப்படி என்றால் கல்லூரி கட்டமைப்பு, வசதிகள் என்பதில் எத்துணை பித்தலாட்டம் இருக்கும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். இதற்கு மத்திய அரசும் மாநில அரசும், அதிகாரவர்க்க உறுப்புகளும் முழுக்கவும் உடந்தை.
எஸ்.வி.எஸ் மருத்துவக் கல்லூரி மாணவிகள் தற்கொலை செய்துகொண்டதன் பின்னணி, சாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டது என சென்ற ஆண்டு சுயநிதி கல்லூரிகளின் அடாவடியை கணக்குப்போட்டு பாருங்கள். தற்பொழுது எஸ்.ஆர்.எம் குழுமம், இடைத்தரகர்கள் மூலமாக மாணவர்களிடம் பணம் பிடுங்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
93% சுயநிதி பொறியியல் கல்லூரிகள் டூபாக்கூர்! இதற்கு அரசு, நீதிமன்றம், ஆளும் வர்க்க அதிகார உறுப்புகள் அத்துணையும் உடந்தை என்றால் எந்த அருகதையின் அடிப்படையில் எந்த தார்மீக கடமையின் அடிப்படையின் எந்த நியாய உணர்ச்சியின் அடிப்படையில் உங்கள் குழந்தைகளை பொறியியல் கலந்தாய்விற்கு அழைத்து செல்கிறீர்கள் என்பதற்கு பதில் சொல்லுங்கள்.
ஆக இந்தப்பதிவின் மூலமாக நம்மால் ஒரு முடிவை எட்ட இயலும்.
என் பிள்ளை மருத்துவனாக பொறியாளனாக வரவேண்டும் என்று சுயநலமாகவாவது பெற்றோர்கள் சிந்திப்பார்கள் எனில் “அரசுக்கட்டமைப்பு தோற்றுப்போய்விட்டது; இது அழுகி நாறிக்கிடக்கிறது; இதை தகர்த்து நமக்கான கல்வி அமைப்பைக் கட்டினால் தான், தான் ஆசைப்பட்ட கல்வி முறை நம் பிள்ளைகளுக்கு வாய்க்கப்பெறும்” என்பதை உணர்ந்து போராட்டத்திற்கு தயாராக வேண்டும். அரசு-கல்விநிலையங்களில் உள்ள ஒவ்வொரு அரங்கிலும் நமது உரிமைகளை நிலைநாட்டும் மக்கள் குழுக்களை நிறுத்தியாக வேண்டும். அரசுப் பள்ளிகளை நமது பகுதி வாழ் மக்களைக் கொண்டு நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரவேண்டும்! சென்ற ஆண்டு படிப்பினைகள் மூலமாக இந்த ஆண்டிற்கான நிகழ்ச்சி நிரலை நாம் இவ்விதம் வரையறுத்திருக்கிறோம்!
பெற்றோர்களுக்கு புரட்சிகர வாழ்த்துகள்!
– இளங்கோ
படங்கள் : நன்றி thehindu.com, tamil.thehindu.com  வினவு.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக