ஞாயிறு, 5 ஜூன், 2016

வைகோ மீது விஜயகாந்த் வாசன் கடும் அதிருப்தி !

வைகோ :தேமுதிக, தமாகா வெளியேறினால் பாதிப்பு இருக்காது. அவங்களை எந்த கட்சியும் கூட்டணியில்  சேர்த்து கொள்ளாது. எனவே, அவர்கள் வெளியே சென்றால் பரவாயில்லை
சென்னை: தேர்தல் தோல்விக்குப் பின் வைகோவின் பேச்சால் தேமுதிக, தமாகாவில் கடும் எதிர்ப்பு கிளம்புகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்கள்  நல கூட்டணியால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறமுடியவில்லை. முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உளுந்தூர் பேட்டையில் தோல்வி அடைந்து, டெபாசிட் இழந்தார். குறிப்பாக ஒரு தேர்தலிலேயே கூட்டணியில் அங்கும் வகிக்கும் எல்லா கட்சிகளும் அரசியல்  அங்கீகாரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டன.தேமுதிக: தேர்தல் தோல்விக்கு பிறகு மக்கள் நலக் கூட்டணிக்குள் புகைச்சல் ஏற்பட தொடங்கியது. தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மக்கள்  நலக்கூட்டணியுடன் கூட்டணி அமைத்ததால் தான் தோல்வியை சந்திக்க நேரிட்டது.
எனவே, இந்த கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று  கட்சி நிர்வாகிகள் தங்களுடைய கருத்தை தெரிவித்தனர். விஜயகாந்தும் கட்சியினரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. தமாகா: இதே போல, சட்டப்பேரவை தேர்தல் தோல்வி தொடர்பாக ஜி.கே.வாசன் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் ஆலோசனை நடத்தினார்.  அப்போது மக்கள் நலக்கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை பெரும்பாலான நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

நல்ல முடிவு எடுக்கப்படும் என்று ஜி.கே.வாசன் நிர்வாகிகளிடம் கூறியுள்ளார்.   இதனால், எந்த நேரத்திலும் இரண்டு கட்சிகளும் மக்கள் நலக்கூட்டணியில்  இருந்து வெளியேறலாம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. வில்லங்க பேச்சு: உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னர் 3வது அணி என்று சொல்லிக்  கொண்டிருந்தவர்கள் தங்களது நிலைப்பாட்டை தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்த  மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூட்டணியில் இருந்து தேமுதிக, தமாகா வெளியேற போவதாக வந்துள்ள தகவல் குறித்து விவாதிக்கப்பட்டது.  அப்போது, வைகோ” மக்கள் நலக்கூட்டணியில் இருந்து தேமுதிக, தமாகா வெளியேறினால் பாதிப்பு இருக்காது. அவங்களை எந்த கட்சியும் கூட்டணியில்  சேர்த்து கொள்ளாது. எனவே, அவர்கள் வெளியே சென்றால் பரவாயில்லை” என்று பேசியதாக கூறப்படுகிறது.

வைகோவின் இந்த பேச்சுக்கு தேமுதிக மற்றும் தமாகா தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இரண்டு கட்சியினரும் வைகோவின் பேச்சை கண்டித்து  பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப்பில் தங்களது கண்டன குரலை எழுப்பி வருகின்றனர். தேமுதிக நிர்வாகிகள் வெளியிட்டுள்ள பதிவில்” கேப்டனையும்,  தேமுதிகவையும் பற்றி குறை கூறுவதற்கு வைகோவுக்கு எந்த தகுதியும் கிடையாது. உடனே அவர் தனது பேச்சுக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டும்” என்றும்  சிலர், ‘‘எங்கள் எதிர்ப்பையும் மீறிதான் வைகோவுடன் விஜயகாந்த் கூட்டணி வைத்துக் கொண்டார். இப்போது எல்லோரும் அனுபவிக்க வேண்டியுள்ளது’’  என்றும் தங்களது கருத்தை பதிவு செய்துள்ளனர். தேர்தல் முடிந்து இன்னும் ஒரு மாதத்திற்குள் கூட்டணி முறியும் நிலை உருவாகியுள்ளது தற்போது  பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக