புதன், 22 ஜூன், 2016

போதைமருந்து கொலை வன்முறை.. பஞ்சாப்பை சீரழித்த பாரதிய ஜனதா + அகாலி தளம் களவாணிகள்

drug-children
ன்னை மன்னித்து விடுங்கள் தந்தையே. நான் உங்களை அவமதித்து விட்டேன். எனக்கு இரண்டாவது வாழ்க்கையை கொடுத்ததற்கு நன்றி. கடவுளே.. நான் இன்னும் சாகாமல் இருப்பதற்கு நன்றி” போதை மறுவாழ்வு மையம் வழங்கிய நாட்குறிப்பில் இவ்வாறு எழுதியிருக்கிறான் அந்தப் பையன்.< நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது எனது சீனியர் மாணவர்கள் சிலர் ஹெராயின் பொடியை முகர்வதைப் பார்த்தேன். எனக்கும் காசு வாங்காமலேயே கொடுத்தார்கள்
“நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது தந்தையோடு ஒரு திருமணத்திற்குச் சென்றிருந்தேன். அப்போது தான் முதன் முறையாக மதுவைச் சுவைத்துப் பார்த்தேன். மற்ற பையன்கள் அதை ஜன்னத் (சொர்க்கம்) என்றார்கள்”
அந்தப் பையனுக்கு தற்போது 17 வயதாகிறது.

பஞ்சாப் மாநிலம் டான் டாரன் மாவட்டத்தைச் சேர்ந்தவன். ஆறாம் வகுப்பு படிக்கும் போது பள்ளிக்கு தினமும் மது போதையோடு வருவதை கவனித்த ஆசிரியர்கள் அவனை பள்ளியிலிருந்து நீக்குகின்றனர். தந்தையோ நிர்வாகத்தின் கையில் காலில் விழுந்து மீண்டும் அவனை பள்ளியில் சேர்க்கிறார்.
“நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது எனது சீனியர் மாணவர்கள் சிலர் ஹெராயின் பொடியை  முகர்வதைப் பார்த்தேன். எனக்கும் காசு வாங்காமலேயே கொடுத்தார்கள். அப்படித் தான் ஹெராயின் பழக்கமானது. பின்னர் எனது சீனியர்கள் ஹெராயின் கொடுப்பதை நிறுத்திக் கொண்டார்கள். என்ன செய்வதென்று தெரியவில்லை. எனது செல்பேசியை விற்றுக் கிடைத்த காசைக் கொண்டு சமாளித்தேன்”
கடந்த ஆண்டு வெளியான பத்தாம் வகுப்புத் தேர்வில் ஆங்கில பாடத்தில் அந்தப் பையன் தோல்வியடைந்துள்ளான்.
”அந்தப் பரீட்சையை முழு போதையில் தான் எழுதினேன். விடைத்தாளில் என்ன எழுதினேன் என்றெல்லாம் எனக்குத் தெரியவில்லை”
கடந்த டிசம்பர் மாதம் தந்தையோடு வயல் வேலையில் ஈடுபட்டிருந்த போது தலை கால் புரியாத போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் கதிரடிக்கும் இயந்திரத்தில் கையை விட்டிருக்கிறான். தற்சமயம் போதை மறுவாழ்வு மையம் ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ள அந்த இளைஞனின் வார்த்தைகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வாசிக்கும் போது மனம் வலிக்கிறது.
Drug_abuse
ஆண்டு தோறும் சுமார் 7500 கோடி மதிப்பிலான போதை வஸ்துக்களை பஞ்சாப் மாநிலம் மட்டும் நுகர்ந்து வருகிறது
”நான் வெளியே செல்ல வேண்டும். கடைகளுக்குப் போக வேண்டும். கையேந்தி பவன்களில் சாப்பிட வேண்டும். எனது குழந்தைப் பருவம் மொத்தத்தையும் மதுவிலும் போதையிலும் தொலைத்து விட்டேன். இப்போது நான் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன்”
மற்றுமொரு செய்தியாகக் கடந்து செல்ல விடாமல் நமது மனசாட்சியை உலுக்குகின்றன அந்த வார்த்தைகள்.
பஞ்சாப் என்றதும் நமக்கு என்னவெல்லாம் நினைவிலாடுகின்றன?
இந்தியாவின் கோதுமைக் களஞ்சியம். தேசம் காக்கும் வீரத்தின் களஞ்சியம். பஞ்சாபியர்களின்  கள்ளங்கபடமற்ற முரட்டுத்தனமான அன்பு. பொற்கோவில்.. பஞ்ச நதிகள்.. பசுமையான வயல்கள்… ஆனால் இவையனைத்தும் பழங்கதைகளாகி விட்டன. இன்றைய பஞ்சாபின் நிலையை அடுத்து வரும் சில புள்ளி விவரங்களில் இருந்து புரிந்து கொள்ள முடியும்.
2009-ம் ஆண்டு பஞ்சாபின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சமூக பாதுகாப்புத் துறை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரம் ஒன்றில் சுமார் 67 சதவீத ஊரக குடும்பங்களில் குறைந்தது ஒரு போதை அடிமையாவது இருப்பதாக தெரிவித்திருந்தது.  எய்ம்ஸ் மருத்துவமனை 2015-ம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வு ஒன்றின்படி, ஆண்டு தோறும் சுமார் 7500 கோடி மதிப்பிலான போதை வஸ்துக்களை பஞ்சாப் மாநிலம் மட்டும் நுகர்ந்து வருகிறது. சராசரியாக போதை அடிமை ஒருவர் தனது போதை மருந்து தேவையை பூர்த்தி செய்ய நாளொன்றுக்கு சுமார் 1400 ரூபாய் செலவழிக்கிறார் என்கிறது அதே ஆய்வின் முடிவு.
survey
பஞ்சாப் மாநிலத்தை போதைப் பொருள் கடத்தல் மாபியா கும்பலிடம் அடமானம் வைத்த முதன்மைக் குற்றவாளிகளாக பாரதிய ஜனதா மற்றும் அகாலி தளத்தின் மாநிலத் தலைமைகளே உள்ளன.
உலகின் பிற நாடுகளில் மொத்த மக்கள் தொகையில் போதை மருந்துக்கு அடிமையானவர்களின் சராசரியோடு ஒப்பிடும் போது பஞ்சாபின் சராசரி நான்கு மடங்கு அதிகமாகும். அரசு வெளியிட்டுள்ள தரவுகளின் படியே சுமார் 13 லட்சம் இளைஞர்கள் ஓபியம், ஹெராயின் போன்ற போதைப் பொருட்களை தினசரி உட்கொள்ளும் முழுமையான அடிமைகளாக உள்ளனர். இந்த எண்ணிக்கையை விட குறைந்தது நான்கிலிருந்து ஐந்து மடங்கிற்கும் அதிகமானவர்கள் தொடர்ச்சியான இடைவெளியில் போதை மருந்துகளை உட்கொள்ளும் பழக்கத்திற்கு ஆளானவர்கள் என்கின்றன வேறு சில ஆய்வுகள்.
இந்தளவுக்கு போதை அடிமைத்தனத்தில் ஊறியுள்ள அம்மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பத்து படுக்கைகள் கொண்ட ஒரே ஒரு மறுவாழ்வு மையமே செயல்பட்டு வருகின்றது. மேலும் மாநில எல்லைக்குள் போதைப் பொருட்கள் நுழைவதைத் தடுக்கும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் வெறும் 12 அதிகாரிகளே நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில அரசாங்கம் கடந்த பத்தாண்டுகளில் போதைப் பழக்கத்திற்கு எதிராக எடுத்து வருவதாக பீற்றிக் கொள்ளும் நடவடிக்கைகளோ வெறும் கண் துடைப்புகளாகவே உள்ளன.
அகாலி தளம் – பாரதிய ஜனதா கூட்டணியிலான மாநில அரசாங்கம் தமது மாநிலத்தை அமுக்குப் பேயாக அழுத்திக் கொண்டிருக்கும் போதைப் பழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வக்கற்று, பழியை பாகிஸ்தானின் மீதே போடுகின்றது. ஈரான் – ஆப்கான் – பாகிஸ்தான் எல்லைகளை ஊடுருவிப் பாயும் ”தங்கப் பிறை” (Golden Crescent) எனப்படும் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் பயன்படுத்தும் பாதை இந்திய எல்லையையும் கடந்து செல்கின்றது என்பது உண்மை தான். என்றாலும், பிற எல்லையோர மாநிலங்களைக் காட்டிலும் பல மடங்கு பஞ்சாப் மாநிலத்தில் தான் போதை அடிமைகள் அதிகமாக உள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தை போதைப் பொருள் கடத்தல் மாபியா கும்பலிடம் அடமானம் வைத்த முதன்மைக் குற்றவாளிகளாக பாரதிய ஜனதா மற்றும் அகாலி தளத்தின் மாநிலத் தலைமைகளே உள்ளன. கடந்தண்டு ஜூன் மாதம் தாலுக்கா அளவில் கட்சிப் பொறுப்புகள் வகிக்கும் பாரதிய ஜனதா மற்றும் அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த இரண்டு நிர்வாகிகள் 7.5 கிலோ பாப்பி விதைகளோடு கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர்.
லக்கா என்று அழைக்கப்படும் பா.ஜ.க. இளைஞர் அணி துணை தலைவர் - கடந்த வருடம் போதை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்
லக்கா என்று அழைக்கப்படும் பா.ஜ.க. இளைஞர் அணி துணை தலைவர் உடனிருப்பவர் பா.ஜ.க பஞ்சாப் மாநில தலைவர் கமால் ஷர்மா – கடந்த வருடம் போதை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்
எண்ணற்ற சந்தர்பங்களில் பாரதிய ஜனதாவின் உள்ளூர் தலைவர்கள் போதைப் பொருட்களைக் கடத்தும் போது கைதாகியுள்ளனர். கடந்த 2007-ம் ஆண்டு முதன் முறையாக பாரதிய ஜனதா அகாலி தள கூட்டணி அதிகாரத்தைக் கைப்பற்றியது. சுக்பீர் பாதல் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அந்த சமயத்தில் உளவுத் துறை தலைவராக இருந்த சசி காந்த், போதைப் பொருள் கடத்திலில் ஈடுபட்டுள்ள முக்கிய புள்ளிகளைக் குறித்து ஆய்வறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த அறிக்கையில் நிழலுலக போதை மாபியா கும்பலைச் சேர்ந்த சுமார் 90 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளார். தற்போது இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு பஞ்சாபின் போதை பிரச்சினை குறித்து பேட்டியளித்துள்ள சசி காந்த், தான் சமர்பித்த அறிக்கையில் குறிப்பிட்ட நபர்களில் சிலர் பாரதிய ஜனதா மற்றும் அகாலி தளம் கட்சியின் எம்.எல்.ஏக்களாகவும் மந்திரிகளாகவும், போலீசு அதிகாரிகளாகவும் இருந்தார்கள் என்பதை தெரிவித்துள்ளார்.
மேற்படி அறிக்கை குறித்து சுமார் ஆறு மாத காலம் கழித்தே நடவடிக்கை எடுத்துள்ளது பாரதிய ஜனதா – அகாலி தளம் தலைமையிலான அரசு. அறிக்கை சமர்ப்பித்த சசி காந்தை பதவிலிருந்து நீக்கி பந்தாடியதே அந்த நடவடிக்கை.
பஞ்சாப் மாநில பா.ஜ.க – அகாலி தலைவர்களுக்கும் போதை மாபியா கும்பல்களுக்கும் இடையிலான உறவு ஊரறிந்த இரகசியமாகவே இருக்கிறது. ஒவ்வொரு தேர்தலின் போதும் இந்தக் கூட்டணி திறந்து விடும் போதை வெள்ளம் மொத்த மாநிலத்தையே கிறுகிறுப்பில் ஆழ்த்துகிறது. பஞ்சாபில் தேர்தல் சமயத்தில் வெள்ளமெனப் பாயும் போதை மருந்தைக் கண்டு இந்திய தேர்தல் ஆணையமே அதிர்ந்து போயிருக்கிறது.
கடந்த 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் பிரச்சாரம் துவங்கி முதல் 40 நாட்களில் மட்டும் தேர்தல் ஆணையத்தின் அதிரடி சோதனைகளில் சுமார் 14,823 கிலோ பாப்பி விதைகள் கைப்பற்றப்பட்டது. மேலும் அதே காலகட்டத்தில், 136 கிலோ ஹெராயின், 76.2 கிலோ ஓபியம் மற்றும் 47 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. 2012ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது 2700 கிலோ பாப்பி விதைகளும், 53.555 கிலோ ஹெராயினும், பத்து லட்சத்திற்கும் அதிகமான போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டன.
பாப்பி இலைகள்
பாப்பி இலைகள்
உலக தேர்தல் சரித்திரத்திலேயே தமிழகத்தின் கண்கண்ட காவல் தெய்வமாம் கண்டெய்னராத்தா காந்தி நோட்டுக்களால் நிகழ்த்திக் காட்டிய சாதனைகளைக் கண்டே அசராத தேர்தல் ஆணையம், பஞ்சாபில் பாய்ந்த போதை மருந்துகளைக் கண்டு ஆடிப் போனது. அப்போதைய தேர்தல் ஆணையர் குரேஷி 2012, மே 3ம் தேதி பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்புகிறார். அதில் பஞ்சாபில் போதை மருந்துப் பழக்கம் அச்சமூட்டும் எல்லைகளைக் கடந்து எங்கோ சென்று விட்டதைக் குறித்து எச்சரித்துள்ளார்.
கடந்த மூன்றாண்டுகளாக போதைப் பொருள் விவகாரம் ஊடகங்களில் சூடுபிடிக்கத் துவங்கியதை அடுத்து அதுவே அரசியல் அரங்கிலும் முக்கியமான பேசு பொருளானது. குறிப்பாக, தில்லியை அடுத்து ஓரளவுக்கு பஞ்சாபில் அடித்தளம் கொண்டுள்ள ஆம் ஆத்மி கட்சி 2017 சட்ட மன்றத் தேர்தலை குறிவைத்து வேலைகளைத் துவக்கிய போது, போதை மருந்து விவகாரத்தையே முக்கியமான பிரச்சார ஆயுதமாகக் கையிலெடுத்ததைத் தொடர்ந்து போதைப் பொருள் மக்களிடையே ஒரு முக்கிய பேசு பொருளானது.
இதையடுத்து ஏதாவது நடவடிக்கை எடுத்ததாக கணக்குக் காட்டியாக வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்ட பா.ஜ.க அகாலி கும்பல், 2014-ம் ஆண்டில் மட்டும் சுமார் 17,068 பேரைக் கைது செய்தது. 2015-ம் ஆண்டில் சுமார் 11,593 பேரைக் கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்களெல்லாம் போதை மாபியா கும்பலில் முக்கியஸ்தர்களைப் போலவும், இந்தக் கைது நடவடிக்கைகளின் மூலம் போதைப் பழக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்து விடுவோமென்றும் பீற்றிக் கொண்டது மாநில அரசு.
ஆனால், கைதானவர்களில் சுமார் 6,598 பேர்களின் மீது தொடுக்கப்பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கைகளை ஆய்வு செய்து பார்த்த போது, இவர்களெல்லாம் கீழ் நிலையில் ஒரு சில கிராம் அளவு மட்டும் போதை மருந்துகளை விநியோகிப்பவர்களாகவோ அல்லது போதை மருந்துக்கு அடிமையானவர்களாகவோ இருந்ததது தெரிய வந்தது. கைதானவர்களில் சுமார் 40 சதவீதமானோரிடம் வெறும் ஐந்து கிராமுக்கும் குறைவான போதை மருந்தே (சொந்த பயன்பாட்டுக்கு வைத்திருந்தது) பிடிபட்டுள்ளது.
குடி பஞ்சாபின் கொண்டாட்டமான கலாச்சாரத்தின் ஒரு அங்கம் என்பதால் தான் தற்போது அங்கே போதைப் பழக்கம் அதிகரித்திருப்பதற்குக் காரணம் என்கின்றன என்.ஜி.ஓ ஆய்வுகள். ஆனால், விவசாயம் லாபகரமில்லாத தொழிலாக வீழ்ச்சியடைந்த போக்கும் போதைக்கு பஞ்சாப் மாநிலம் அடிமையான போக்கும் ஏறத்தாழ அக்கம் பக்கமாக நடந்திருப்பதைப் பார்க்கும் போது நமக்கு வேறு ஒரு சித்திரம் கிடைக்கிறது. அரசின் புதிய பொருளாதாரக் கொள்கைகள் விவசாயத்தைக் குற்றுயிரும் குலை உயிருமாக்கியுள்ளது. படித்த இளைஞர்களுக்கே வேலையில்லாத நிலை ஒரு பக்கமும், அதிகரித்து வரும் நுகர்வுக் கலாச்சாரம் இன்னொருபக்கமுமாகச் சேர்ந்து இளைய சமுதாயத்தை மன அழுத்தத்திற்குள் தள்ளுகின்றன.
punjab-drug
மது போதைக்கு ஒரு மாநிலத்தையே ஆழ்த்தி வைத்திருப்பது தேர்தல் வெற்றிகளுக்கு உத்திரவாதமளிக்கும் வழிமுறையாக காவிகளின் தெற்கத்திய பங்காளியான ஜெயா ஏற்கனவே நிரூபித்துள்ளார்.
நன்றி படம் : தி இந்து
அதே சமயம் பஞ்சாபில் விவசாயம் நன்றாக நடந்து கொண்டிருந்த காலத்திலேயே கூலி விவசாயிகளிடமிருந்து அதிக உழைப்பை உறிஞ்சியெடுக்க கச்சாவான பாப்பி இலைகளை நிலச்சுவாந்தார்கள் வழங்கும் வழக்கமும் இருந்துள்ளது. இதன் காரணமாக போதைப் பொருட்கள் எளிதாகவும் மலிவாகவும் கிடைக்கும் நிலை பஞ்சாபில் ஏற்பட்டுள்ளது. எல்லை தாண்டி வரும் போதைப் பொருட்கள் ஒருபக்கமென்றால் பக்கத்து மாநிலமான ஹரியானாவில் உள்ள மருந்துக் கம்பெனிகள் தயாரிக்கும் வலிநிவாரணி மாத்திரைகள் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமலேயே மருந்துக் கடைகளில் தடையின்றிக் கிடைக்கின்றன.
எளிதாக கைக்குக் கிடைக்கும் போதைப் பொருட்கள் – வேலையின்றி ஒரு பெரும் பட்டாளம் – அழிந்து போன உள்ளூர் தொழில்கள் – கொன்றொழிக்கப்பட்ட விவசாயத்தினால் மொத்த சமூகமும் நிர்கதியாக்கப்பட்ட நிலை – இவையனைத்துடனும் உள்ளூர் பா.ஜ.க – அகாலி தள கும்பலின் திறமையான போதைப் பொருள் மாபியா வலைப்பின்னலும் சேர்ந்து மொத்த மாநிலத்தையும் மரணப் படுக்கையில் வீழ்த்தியுள்ளன.
ஆனால், பஞ்சாபின் போதை மருந்து பிரச்சினைக்கு ஒரே தனிச்சிறப்பான காரணம் எல்லைக்கு அப்பாலுள்ள இசுலாமிய பயங்கரவாத கும்பல்கள் மாத்திரம் தான் என பித்தலாட்டம் செய்கின்றது அம்மாநிலத்தை ஆளும் பாரதிய ஜனதா – அகாலி கும்பல். இதன் மூலம் மலிவான இந்து – தேசிய வெறியைக் கிளப்ப முயல்வதோடு தமது சொந்தக் கட்சிகளின் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்டத் தலைவர்கள் போதை மருந்து கடத்தல் வலைப்பின்னலின் சூத்திரதாரிகளாக இருப்பதை மூடி மறைக்கின்றனர். தேச பக்திக்கு மொத்த குத்தகைதாரர்களாக தங்களது பிம்பத்தை உப்பிப் பெருக்கிக் காட்டும் காவி கும்பல், தமது சொந்தக் கட்சியினரே பாகிஸ்தானின் போதை மருந்து கும்பல்களோடு தீவிரவாத வலைப்பின்னலின் வழியே தொடர்பில் இருப்பதையும் உள்நாட்டில் போதை மருந்து மாபியாக்களாக செயல்படுவதையும் கண்டு கொள்ளாமல் இரட்டை வேடம் போடுகின்றது.
அதே சமயம், பஞ்சாப் இளைஞர்களை போதை அடிமைத்தனத்தில் வீழ்த்தியிருப்பதைக் குறித்த விவாதங்களை முன்னெடுப்பவர்களை ”பஞ்சாபின் பெருமிதத்தைக்” குலைப்பவர்களாக சித்தரித்து ”மராத்தி மானூஸ்” “குஜராத்தி அஸ்திமிதா” “கன்னட மாதே” பாணியில் இதையும் ஓட்டுப் பொறுக்கும் உத்தியாக பயன்படுத்த முயற்சித்து வருகின்றனர். தேசத்தின் வளர்ச்சியைக் குறித்து காவி கும்பல் முன்பு கடைபரப்பிய பச்சைப் பொய்களை தோலுரிப்பவர்களை சமூக வலைத்தளங்களில் மொய்த்துக் கொள்ளும் கூலி கும்பல், கேள்வியெழுப்புபவர்களை “தேச துரோகிகள்” என ஊருக்கு முந்திக் கொண்டு முத்திரை குத்தும் சோதித்தறியப்பட்ட நம்பகமான “தேச பக்த” வழிமுறையை இங்கும் பிரயோகிக்கின்றனர்.
அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் நிலவும் போதை அடிமைத்தனம் குறித்து வெளியாக உள்ள உ(ட்)த்தா பஞ்சாப் என்கிற பாலிவுட் திரைப்படம் தமது மாநிலத்தை கீழ்த்தரமாக சித்தரிப்பதாக கூக்குரலிடுகின்றனர் பாரதிய ஜனதா மற்றும் அகாலி தலைவர்கள். மேற்படி திரைப்படத்திற்கு ஆம் ஆத்மி கட்சி நிதியுதவி செய்திருப்பதாக தனக்கு ”செவி வழி” தகவல் ஒன்று கிடைத்ததாக எந்த ஆதாரமும் இன்றிக் கொளுத்திப் போடுகிறார் மத்திய தணிகைக் குழுவின் தலைவரான பங்கஜ் நிஹாலானி.
மத்தியில் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கைக் கொண்டு உ(ட்)த்தா பஞ்சாப் திரைப்படத்தை முடக்குவதற்கு செய்த முயற்சிகள் மற்றும் பங்கஜ் நிஹாலானியின் கோமாளித்தனமான உளறல்கள் ஊடகங்களின் மூலம் சந்தி சிரித்தது. இறுதியில் அதிகாரத்தின் துணையோடு படத்தை முடக்கும் முயற்சி ஊடகங்களின் மூலம் மக்களிடையே பரபரப்பான விவாதப் பொருளாக மாறியதோடு அறிவுத் துறையினரின் கடுமையான கண்டனங்களையும் பெற்றுள்ள நிலையில், உயர்நீதி மன்றம் அந்த திரைப்படத்திற்கு அனுமதியளித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் நிலவும் போதை அடிமைத்தனம் குறித்து வெளியாக உள்ள உ(ட்)த்தா பஞ்சாப் என்கிற பாலிவுட் திரைப்படம் தமது மாநிலத்தை கீழ்த்தரமாக சித்தரிப்பதாக கூக்குரலிடுகின்றனர் பாரதிய ஜனதா மற்றும் அகாலி தலைவர்கள்.
பஞ்சாப் மாநிலத்தில் நிலவும் போதை அடிமைத்தனம் குறித்து வெளியாக உள்ள உ(ட்)த்தா பஞ்சாப் என்கிற பாலிவுட் திரைப்படம் தமது மாநிலத்தை கீழ்த்தரமாக சித்தரிப்பதாக கூக்குரலிடுகின்றனர் பாரதிய ஜனதா மற்றும் அகாலி தலைவர்கள்.
பாலிவுட்டின் வழமையான போலிப் பகட்டு மற்றும் மலிவான கவர்ச்சியைத் தாண்டி இத்திரைப்படம் எந்த வகையில் பஞ்சாபின் பிரச்சினைகளை அரசியல், சமூக மற்றும் பண்பாட்டுக் கோணத்தோடு அணுகியுள்ளது என்பது நமக்குத் தெரியாது. எனினும், அரசியல் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள தேசிய போதை போதாமல் உண்மையான போதை மருந்தையே ஆயுதமாக ஏந்திச் சுழற்றும் மத அடிப்படைவாத பாசிஸ்டுகளின் மீதான விமர்சனங்கள் இருக்குமா அல்லது வழக்கமான அரசியலற்ற என்.ஜி.ஓ புலம்பலாக இருக்குமா என்பதை படம் வெளிவந்த பின்னரே நாம் புரிந்து கொள்ள முடியும்.
மது போதைக்கு ஒரு மாநிலத்தையே ஆழ்த்தி வைத்திருப்பது தேர்தல் வெற்றிகளுக்கு உத்திரவாதமளிக்கும் வழிமுறையாக காவிகளின் தெற்கத்திய பங்காளியான ஜெயா ஏற்கனவே நிரூபித்துள்ளார். இந்து பாசிஸ்டுகளோ தேசிய வெறி போதை, மத அடிப்படைவாத போதை, சாதி ஆதிக்க போதை ஆகிய வழக்கமான உத்திகளோடு இப்போது நேரடியான போதை மருந்துகளையே கையிலெடுத்துள்ளனர்.
பரந்துபட்ட மக்களின் மீது பாசிஸ்டுகள் தொடுக்கும் நேரடித் தாக்குதல்களையும் விடுக்கும் நேரடியான சவால்களையும் முறியடிக்கும் வரலாற்றுக் கடமை புரட்சிகர ஜனநாயக சக்திகளின் முன்னுள்ளது. இவர்களை வீழ்த்த உடனடியாக களமிறங்கா விட்டால் நாம் ஒரு தலைமுறையையே காவு கொடுத்த குற்றத்திற்கு ஆளானவர்களாவோம்.
– தமிழரசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக