புதன், 8 ஜூன், 2016

ஐடி ஊழியர்கள் சங்கம் அமைத்துக்கொள்ளலாம்: தமிழக அரசு அறிவிப்பு

ஐடி ஊழியர்கள் சங்கம் அமைத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி- ஐ.டி. ஊழியர்கள் பிரிவு தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி- ஐ.டி. ஊழியர்கள் பிரிவு வெளியிட்டுள்ள செய்தி:
தமிழகத்தில் உள்ள அனைத்து தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களிலும் தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்தக் கோரி கடந்த ஜனவரி 2015 இல் பு.ஜ.தொ.மு. ஐ.டி. ஊழியர்கள் பிரிவின் சார்பில் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு (W.P.No. 4422/2015) தொடுத்திருந்தோம். இவ்விசயத்தில் உடனடியாக தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்று 23,பிப்ரவரி 2015 அன்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனடிப்படையில் 30, மே 2016 அன்று தமிழக அரசு கீழ்க்கண்ட முடிவுகளை அறிவித்துள்ளது.


  1. அனைத்து ஐ.டி. / ஐ.டி.இ.எஸ் (தகவல் தொழில் நுட்பம் / தகவல் தொழில்நுட்பம் தொடர்பான சேவைகள்) நிறுவனங்களுக்கும் எல்லா தொழிலாளர் சட்டங்களும் பொருந்தும்.
  2. எந்த ஐ.டி/ஐ.டி.இ.எஸ் நிறுவனமும், தொழில் தாவா சட்டம் 1947 இலிருந்து விலக்குப் பெறவில்லை.
  3. ஐ.டி. ஊழியர்கள், தொழிற்சங்கம் அமைத்துக்கொள்ள எவ்விதத் தடையும் இல்லை
  4. ஐ.டி. ஊழியர்கள், தொழில்தாவா சட்டம் 1947இன் ஷரத்துக்களின்படி தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளலாம்.
  5. வேலை நீக்கம் / ஆட்குறைப்பினால் பாதிக்கப்பட்டோர் தொழிலாளர் துறை அலுவலர் மூலம் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளலாம்.

சங்கம் அமைக்கும் உரிமையையும், தொழிலாளர் சட்டத்தின் கீழ் நமது பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்பதையும் தமிழ் நாடு அரசு தெளிவாக அறிவித்து விட்டது. எனவே அனைத்து ஐ.டி./ஐ.டி.இ.எஸ் ஊழியர்களும் பணிப்பாதுகாப்பு உள்ளிட்ட நமது உரிமைகளை நிலைநாட்ட சங்கமாகத் திரண்டிட அழைக்கின்றோம்.

கடந்த 25 ஆண்டுகளில் ஐ.டி. துறை மிகப் பெரும் அளவில் வளர்ந்து இந்தியா முழுவதிலும் 30 லட்சம் ஊழியர்களைக் கொண்டதாகப் பரிணமித்துள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் கொத்தடிமைகளாக, நிர்வாகம் நினைத்த நேரத்தில் தூக்கி எறியப்படுபவர்களாக, கடுமையான பணிச்சுமையோடு உழைக்கின்றனர். நூற்றுக்கணக்கான தற்கொலைகளும், மன அழுத்தம் உள்ளிட்ட நோய்களும் சூழ்ந்த நிலைதான் தொடர்கின்றது. இவர்களின் ப்ணிப்பாதுகாப்போ, சட்டப்பூர்வ உரிமைகளோ, சங்கமாய்த் திரளும் உரிமையோ உண்டா இல்லையா என்ற கேள்விக்கு விடை கூடத் தெரியாதபடிக்கு அரசும், ஐ.டி. நிறுவன முதலாளிகளும் பார்த்துக்கொண்டனர். இந்த நிலையில் 2014 டிசம்பர் இறுதியில் டி.சி.எஸ். நிறுவனம் 25 ஆயிரம் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யப்போகும் செய்தி வெளியானது. அப்போது சென்னை ஐ.டி. நெடுஞ்சாலையில் இந்த அநீதிக்கெதிரான பிரச்சாரத்தையும், ஆர்ப்பாட்டத்தையும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி முன்னெடுத்தது. இந்தியாவின் முதல் ஐ.டி. ஊழியர்க்ள் சங்கத்தை ஜனவரி 10, 2015 அன்று பு.ஜ.தொ.மு. ஆரம்பித்தது. இச்சங்கம்தான் டிசிஎஸ் உள்ளிட்ட அனைத்து ஐ.டி. நிறுவன்ங்களிலும் தொழிலாளர் சட்டங்கள், குறிப்பாக தொழில் தாவா சட்டம் 1947 பின்பற்றப்பட வேண்டும் என்பதை அறிவிக்கக் கோரி ஜனவரி 19, 2015 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு போட்டது. இவ்விசயத்தில் உடனடியாக தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்று 23,பிப்ரவரி 2015 அன்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

நீதிமன்ற உத்தரவை அரசு உடனடியாக அமல்படுத்திவிடவில்லை. அதற்கு சட்டப்பூர்வ வழிகளில் பு.ஜ.தொ.மு.வின் இடையறாது போராடியுள்ளது. நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரி 24 மார்ச், 2015 அன்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலரிடம் மனு கொடுக்கப்பட்டது. இம்மனுவை நினைவூட்டி மே 2015 இல் மீண்டும் ஒரு மனு கொடுக்கப்பட்டது. அரசு அசைந்து கொடுக்கவில்லை. மனு மீது அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பதை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்டு, பதில் இல்லை. மேல் முறையீட்டிலும் அரசு பதில் தரவில்லை. 14 மாதங்களாக அரசு எந்தப் பதிலும் தராத நிலையில் ஏப்ரல், 2016 இல் தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தோம். இம்மாத ஆரம்பத்தில் அவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருந்த சூழலில்தான் அரசு தற்போது தனது முடிவை அறிவித்துள்ளது.

தங்களின் நலன்களைக் காப்பதற்காக நாஸ்காம் சங்கத்தை வைத்திருக்கும் ஐ.டி. நிறுவன முதலாளிகள், ஐ.டி. ஊழியர்கள் சங்கம் வைக்க உரிமை இல்லை என்றும், சங்கம் வைத்தால் வேலை போய்விடும் என்றும் கட்டுக்கதைகளை உலவ விட்டுருந்தனர். மேலும் தங்கள் நிறுவனங்களை தொழிலாளர் சட்டங்கள் கட்டுப்படுத்தாது என்று திமிரோடு நடந்துகொண்டனர். அரசோ கள்ள மவுனம் சாதித்தது. பு.ஜ.தொ.மு.வின் இடையறாத முயற்சியின் காரணமாக அரசின் மவுனம் கலைக்கப்பட்டுள்ளது. ஐ.டி. ஊழியர்களின் உரிமைகள் யாவும் தெளிவாக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளன. எனவே ஐ.டி. ஊழியர்கள் இனி அச்சமின்றி சங்கமாகத் திரளும்படி கேட்டுக் கொள்கிறோம். ஆட்குறைப்பினாலோ, சட்டவிரோத வேலை நீக்கத்தாலோ பாதிக்கப்பட்டுள்ள ஐ.டி. துறை ஊழியர்கள் அனைவரும் எங்களைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சட்டரீதியான வழிகளில் நாம் நிவாரணம் தேடவும், நமது உரிமைகள் அனைத்தையும் நிலைநாட்டவும் பு.ஜ.தொ.மு. – ஐ.டி. ஊழியர்கள் பிரிவு சங்கத்தில் இணையுமாறு அழைக்கின்றோம்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி. ஊழியர்கள் பிரிவு
தொடர்புக்கு:
combatlayoff@gmail.com
9003198576   thetimestamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக