சனி, 18 ஜூன், 2016

நீரா ராடியாவுக்கு முன்பே வாஜ்பாயி காலத்திலேயே விற்பனைக்கு வந்த இந்தியா? அம்பானி வகையாறக்கள்தான் எல்லாமா?

By Meetu Jain with Ushinor Majumdar in Delhi
“இந்திய குடியரசு, தற்போது விற்பனைக்கு” நீரா ராடியா தொலைபேசி உரையாடல்களை நவம்பர் 2010ல்வெளியிட்டபோது அவுட்லுக் இந்த வார்த்தைகளைத்தான் பயன்படுத்தியது. அரசியல்வாதி-கார்ப்பொரேட்டுகள் – ஊடகங்களுக்கிடையான பிணைப்பை அந்த 140 உரையாடல்கள்  வெளிக்கொண்டு வந்தன. மன்மோகன் சிங் அரசாங்கத்தின் ஜீவாதாரமான விஷயங்களையெல்லாம் இந்த விவகாரம் தின்றது.  அது நிகழ்ந்து ஆறு வருடங்களுக்குப் பின் வெளிவந்திருக்கும் ‘எஸ்ஸார் டேப்ஸ்’ பெருமுதலாளிகள் இந்திய நீதித்துறையை, நாடாளுமன்றத்தை, வங்கிகளை, போட்டியாளர்களை, நிர்வாகிகளை எப்படி கையாண்டார்கள் என்பது குறித்து பயமுறுத்தும் உண்மையைச் சொல்கின்றன. ராடியா உரையாடல்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பே அரசாங்கம் எப்படியான மோசடிகளில் ஈடுபட்டது என்பதையும் காட்டுகிறது. நீண்ட காலத்துக்கு முன்பே , அதாவது தேசிய ஜனநாயக் கூட்டணியின் முதல் ஆட்சிக்காலத்திலேயே இந்திய ஜனநாயகம் விற்பனைக்கு வந்துவிட்டது.

எஸ்ஸார் நிறுவனத்தின் முன்னாள் ஊழியரால், 2000லிருந்து 11 ஆண்டு காலம் இந்த உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டவை. அடல் பிஹாரி வாஜ்பாயின் பிரதமர் அலுவலக தொடர்புகள் முதல்கொண்டு சட்ட விரோத தொலைபேசி ஒட்டுக் கேட்புகள் நடந்துகொண்டிருப்பதையும் இது வெளிப்படுத்துகிறது. உரையாடல்களின் நம்பகத்தன்மை உறுதியளிக்கப்படாத நிலையில் அவுட்லுக் செய்தியாளர் சில உரையாடல்களை கேட்டிருக்கிறார். (உரையாடலில் சில பகுதிகள் இங்கே). எப்படி ஆயினும், 20 வெவ்வேறு உரையாடல்கள், எஸ்ஸார் முன்னாள் ஊழியர் அல்பசித் கானின் சார்பாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சுரேன் உப்பால் மூலம், பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.  அல்பசித் கான், எஸ்ஸார் குழுமத்தில் கண்காணிப்புக் குழுவின் தலைவராக இருந்தவர். 2011ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தை விட்டு வெளியேறும் முன் இந்த உரையாடல்களை நூற்றுக்கணக்கான ஆடியோ கேசட்டுகளில் ஒலிப்பதிவு செய்யும்படி கட்டாயத்துடன் பணிக்கப்பட்டார்.
  •  வாஜ்பாயின் ஆலோசகர் பிரஜேஸ் மிஸ்ரா, மிஸ்ராவின் மருமகன் ரஞ்சன் பட்டாச்சார்யா, அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஜஸ்வந்த் சின்ஹா, பிரமோத் மகாஜன், தற்போது உ.பி. கவர்னராக இருக்கும் ராம் நாயக், மின்சாரத் துறை அமைச்சர் பியூஸ் கோயல், ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, மும்பை எம்பி கீர்தி சோமையா, மகாஜனின் உதவியாளர் சுதான்சு மிட்டல் ஆகியோர் இந்த உரையாடல்களில் உள்ளனர்.
  • நிறுவனங்களின் தரப்பில் அம்பானி ராஜ்ஜியமும் அதன் ஏ டீமும் இடம்பிடித்திருக்கின்றன: முகேஷ் அம்பானி, சகோதரர் அனில் அம்பானி, அவருடைய மனைவி டினா. ரிலையன்ஸ் நிறுவன இயக்குநர்கள் ஹெதல் மேஷ்வானி, அமிதாப் ஜின்ஜுன்வாலா, மனோஜ் மோடி, ஆனந்த் ஜெயின், சதீஸ் சேத் ஆகியோரும் அவர்களுடைய ஆட்கள் ஃபிரைடே, ஜேசுதாசன், ஏ. சேதுராமன் ஆகியோரும்.
  • அதிகாரிகள் தரப்பில், பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த என்.கே. சிங்கும் தற்போதைய உள்துறை செயலாளர் ராஜிவ் மெஹ்ரிஷியும் கார்ப்போரேட் விவகாரத் துறை அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர். சஹாராவின் சுப்ரதோ ராயும், நடிகர் அமிதாப் பச்சனும், சமாஜ் வாதி கட்சியின் முலாயம் சிங் யாதவும் அமர் சிங்கும் இந்த உரையாடல்களில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தப் பெயர் பட்டியல் நீளமானது. ரகசியமாக பேசியது வெளிவந்திருப்பது குறித்து பலர் வருத்தம் தெரிவிக்கலாம், பலர் சட்டரீதியான நடவடிக்கைகளையும் கோரலாம். ஆனால் எஸ்ஸாரின் ரகசியங்களை வெளியிட்டவர் அவருடைய கடமையைத்தான் செய்திருக்கிறார், இது சாமானியர்களுக்கு மோசமான அதிர்ச்சியைக் கொடுக்கக்கூடும். இந்தக் குடியரசில் எல்லாமே விற்பனைக்கு உள்ளது, அவை அனைத்தும் விலை உள்ளது. டெல்லி, மும்பையில் உள்ள அதிகார மையங்களை ஆட்டுவிக்கும் பொம்மலாட்டக்காரர்களின் துணையின்றி எதுவும் நடக்காது என்பதும் தெளிவாகிறது.
பெரும்பாலான உரையாடல்கள் ரிலையன்ஸ் நிறுவனத்தை மையப்படுத்தியே உள்ளன. Ruias (எஸ்ஸார் நிறுவன முதலாளிகள்) நீண்ட கால தொழில் எதிரி ரிலையன்ஸ் என்பதையும் ரிலையன்ஸால் ஆட்சியதிகாரத்தில் எவ்வளவு ஆழமாக ஊடுருவ முடிகிறது என்பதையும் அவர்களால் அரசாங்கத்திலும் நாடாளுமன்ற குழுக்களிடையேயும் எப்படி செல்வாக்கு செலுத்த முடிகிறது என்பதையும் யாரை அமைச்சராக்கலாம் என்பதையும் நீதித்துறையினருக்கு லஞ்சம் தருவதையும், மத்திய பட்ஜெட்டையும்கூட இந்நிறுவனம் தீர்மானிப்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
பிரதமர் மோடிக்கு வழக்கறிஞர் உபால் எழுதிய கடிதத்திலிருந்து சில துளிகள்:  
  • முகேஷ் அம்பானிக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் சதிஸ் சேதிக்கும் 01.12.2002 அன்று நடந்த உரையாடலில் பிரமோத் மகாஜன், உச்சநீதிமன்ற நீதிபதிகளை நிர்வகிப்பது குறித்து பேசுகிறார்கள். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அஜய் சிங்கை அவர் போய் சந்தித்தது குறித்தும் பேசுகிறார்கள்.
  • 29.01.2003 அன்று முகேஷ் அம்பானி, சதீஸ் சேதியின் பேச்சிலிருந்து பிரமோத் மகாஜன் தொடர்புடைய ஷிவானி பட்னாகர் கொலை வழக்கை நீர்த்துப் போகச் செய்வதையும் நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் எழுப்பப் படாமல் இருக்க அமர் சிங்கை பயன்படுத்தலாம் என பேசிக் கொள்வதும் பதிவாகியுள்ளது.
  • அமர் சிங்கிற்கும் குன்வார் அகிலேஷ் சிங் (சமாஜ்வாதி எம்பி)கிற்கும் 28 நவம்பர் 2002ல் நடந்த உரையாடல் நாடாளுமன்ற கூட்டுக் குழுவை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக எப்படி அமர் சிங் நிர்வகித்தார் என்பதும் ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தைக் காப்பாற்றும் பொருட்டு இந்நிறுவனம் சம்பந்தப்பட்ட கேதன் பரேக் முறைகேடு, குளோபல் டிரஸ்ட் பேங்க் மூழ்கிப் போன விவகாரத்தையும்  சமாளிக்க உதவியது குறித்து பதிவு செய்திருக்கிறது. இந்த உரையாடலில் இந்த விவகாரத்தை சமாளிக்கும் பொருட்டு நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவர் பிரகாஷ் மணி திரிபாதிக்கு பணம் அளிக்கப்பட்டதும், திரிபாதியின் மகன் ரிலையன்ஸில் பணியாற்றுவதும் எஸ். எஸ். அலுவாலியா, பிரஃபுல் படேட், பிரேம் சந்த் குப்தா, கிர்தி சோமையா ஆகியோர் ரிலையன்ஸுக்கு அதரவாக இருந்து பலன் பெற்றதையும் இந்த உரையாடல் வெளிப்படுத்துகிறது.
  • என். கே. சிங்(அப்போது பிரதமர் அலுவலகத்தின் சிறப்பு பணி அதிகாரியாக இருந்தவர்)கிற்கும் முகேஷ் அம்பானிக்கும் இடையே நடந்த எண்ணற்ற உரையாடல்களில் அம்பானி, பட்ஜெட்டிற்கு முன்பாக அரசு செயல்படுத்த வேண்டிய கொள்கைகள் குறித்தும், பட்ஜெட்டில் என்னென்ன இடம் பெற வேண்டும் என்பது குறித்தும் பேசுகிறார்.
  • DCA செயலாளர் வி. கே. தஹல், அனில் அன்பானி, சதீஸ் சேதி, ஐ ஏ எஸ் அதிகாரி ராஜிவ் மகரிஷி ஆகியோருக்கிடையேயான உரையாடலில் 65 வெவ்வேறு நிறுவனங்களின் முறைகேடுகளை விதிமுறைகளை மீறி ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளித்ததும் தெரிகிறது.
துபாயில் இருந்த அல்பசித் கானை எஸ்ஸார் குழுமத்தைச் சேர்ந்த பிரசாந்த் ருயோவும் அவருடைய தந்தை ரவிகாந்த் ருயோவும் 2000-ஆம் ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களுக்கு உதவ அழைத்துவந்தனர். எஸ்ஸார் குழுமத்தின் மும்பை தலைமை அலுவலகத்தில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியின் தலைமையேற்க பணிக்கப்பட்டார்.  நிறுவனத்தின் பணியாட்களை தகவல் தொழிற்நுட்ப வசதிகளின் துணையுடன் கண்காணிப்பதும் அதை தணிக்கை செய்து எஸ்ஸார் குழுமத்தின் தந்தை – மகன் தலைமைக்கு அனுப்பி வைப்பது அவர் பணி. சஷீர் அகர்வால் என்ற எஸ்ஸார் குழும மூத்த அதிகாரி இவருக்கு உதவியாக இருந்திருக்கிறார்.

உபால் சொல்கிறார்…ஹட்சிசன் எஸ்ஸார் என்கிற பெயரில் டெலிகாம் உரிமம் வைத்திருந்த எஸ்ஸார் தலைமை,  அரசாங்கத்தின் விசாரணைகளுக்கு உதவுவதற்காக இத்தகைய ஒட்டுக்கேட்பையும் அதைப் பதிவு செய்வதையும் செய்யச் சொன்னதாக கானிடம் தெரிவித்துள்ளது.
மும்பையிலுள்ள எஸ்ஸார் இல்லம் மற்றும் டெல்லியிலுள்ள விருந்தினர் மாளிகையின் அடித்தளத்திலும் தரைத் தளத்திலும் இந்த பதிவு செய்யும் நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டன.  கானின் கூற்றுப்படி, அவருக்கு டஜனுக்கும் மேலான செல்போன்கள், டிக்டாபோன்கள், குரல் பதிவு செய்யும் கருவிகள், கேசட்டுகள், கேசட்டு பதிவு செய்யும் கருவிகள், இணைப்பு கருவிகள், பதிவு செய்யும் உபகரணங்கள், கம்ப்யூட்டர்கள், சிடி பதிவு செய்யும் கருவிகள் மற்றும் நிதியும் அளிக்கப்பட்டிருக்கிறது.
உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்ட பிறகு, சிம்கார்டுகள் அவருக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றிலும் மூன்று-நான்கு செயல்படுத்தப்பட்ட எண்கள் இருந்துள்ளன. அவற்றை இடைமறித்து கேட்கவும் பதிவு செய்யவும் பணிக்கப்பட்டுள்ளார். இப்படியாக இடைமறிப்பது BPL (தற்போது லூப்) மொபைல் மற்றும் ஹட்ச் சர்வர்களிலிருந்து செய்யப்பட்டிருக்கின்றது. எஸ்ஸார் நிறுவனத்தின் உரையாடல்கள் நிலத்தடி மற்றும் கைப்பேசி இணைப்பு வழியாக செய்யப்பட்டிருக்கிறது. இடைமறிக்கும் சிம் கள் ஃப்ரி பெய்டு கார்டுகளாக இருந்துள்ளன. இந்த எண்களுக்கு ஷிஷீர் அகர்வால் தொடர்ந்து ரீ சார்ஜ் செய்துள்ளார்.
மே 2011-ஆம் ஆண்டு கானை இந்தப் பணியிலிருந்து நீக்குவதென நிர்வாகம் திடீர் முடிவெடுக்கிறது, ஆனால் இதை அவர் தானாக செய்ததாக காட்டும்படி அவரிடம் பணிவிலகல் கடிதம் பெறப்படுகிறது. இதுதான் இந்த விவகாரத்தை வெளிப்படுத்தும் படி கானை உந்தியிருக்கிறது.  நகல்களை எடுத்துக் கொண்டு ஆதாரமான எல்லா சிடிக்களை அவர்களிடமே ஒப்படைத்துவிட்டதாகவும் கானின் வழக்கறிஞர் உபால் தெரிவிக்கிறார். ஷிஷீர் அகர்வால் சந்தேகத்துகத்துடன் செப்டம்பர் 2015ஆம் ஆண்டு கானை சந்தித்தார். கானிடம் ஏதேனும் டேப்புகள் இருந்தால் ஒப்படைக்கும் படியும், அப்படி ஒப்படைத்தால் நிறுவனத்திலிருந்து அவர் வெளியேற்றப்பட்டதற்கு தான் நீதி பெற்றுத்தருவதாகவும் அகர்வால் தெரிவித்துள்ளார். இதன் பிறகு இந்த வருடம் ஜனவரி மாதம் உபாலை, கான் சந்தித்தார்.  உபால் முன்னாள் அட்டர்னி ஜெனரல் கே. பரசரனுக்கு கீழேயும் ப. சிதம்பரத்திடமும் பணியாற்றியவர்.
உபால் (40) சொல்கிறார்: “இந்த தொலைபேசி பேச்சுகள் இவை யாருடைய குரல்கள், அவை என்ன பேசியிருக்கின்றன என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி தெரிவிக்கின்றன. பத்து வருடங்களுக்கும் மேலாக, நூற்றுக்கணக்கான மணி நேர உரையாடல்கள், 12 சிடிக்களில், முக்கியமான உரையாடல்கள் இவற்றில் இடம்பிடித்துள்ளன. எனவே இதை மோடிக்கும் இதைக் கையாளும் நபர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கிறார். அரசாங்க தரப்பிலிருந்து இதுவரை யவரும் இது குறித்து பதிலளிக்கவில்லை. நான் எச்சரிக்கையுடன் இந்த முறைகேடு குறித்து பிரதமரின் நடவடிக்கை எதிர்பார்த்து விண்ணப்பித்திருக்கிறேன். ஏராளமான சட்ட மீறல்கள் இந்த முறைகேட்டில். சிபிஐ அல்லது நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் இது விசாரிக்கப்பட வேண்டும். கார்ப்போரேட்டுகளைப் போல அரசாங்கமும் மவுனமாகவே இருக்கிறது”
ஆச்சரியமளிக்கும் வகையில் சில மாதங்களில் கான் எங்கே இருக்கிறார் என்பது தெரியாமல் போயிருக்கிறது. “கார்ப்போரேட்டுகளால் அழைத்து வரப்பட்டவர். அவரை வழிக்குக் கொண்டுவர முயற்சித்தார்கள். அவர் என்னுடைய தொலைபேசி அழைப்புகளையோ, குறுந்தகவல்களுக்கோ பதிலளிப்பதை நிறுத்தினார். அவரை என்னால் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. அநேகமாக அவர் நாட்டைவிட்டு வெளியேறி இருக்க வேண்டும்” என்கிறார் உபால்.
உபால் வழியாக கான் வெளிப்படுத்தியிருக்கும் முறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு எஸ்ஸார், ரிலையன்ஸ் நிறுவனங்கள் என்ன பதில் சொல்கின்றன? 2 ஜி முறைகேட்டில் ரிலையன்ஸுக்கு பெரும்பங்கு இருப்பதாக உபால் கருதுகிறார்…
அடுத்த பதிவில் தொடர்வோம்..
அவுட்லுக் வெளியிட்ட பதிவு இங்கே
நன்றி: அவுட்லுக்    thetimestamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக