சனி, 18 ஜூன், 2016

44 ஈழ அகதிகள் இந்தோனேசியாவில் இறங்க அனுமதி.. ஐ நா தலையீட்டில் ஏற்பாடு!

ஜகர்த்தா: தமிழக முகாம்களில் இருந்து ஆஸ்திரேலியா நோக்கி செல்லும் வழியில் பழுதான படகில் தத்தளித்த 44 ஈழ அகதிளையும் தரை இறங்க இந்தோனேசியா அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக அகதிகள் முகாம்களில் இருந்த 44 ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டுப் பதிவு எண் கொண்ட படகில் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைவதற்காகப் புறப்பட்டுச் சென்றனர். ஆனால் இந்தோனேசியா அருகே அந்த படகு இயந்திரக் கோளாறால் தரை தட்டியது. ஒரு கர்ப்பிணிப் பெண், 9 சிறுவர்களுடன் உள்ள இப்படகு இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண கடற்கரையில் தத்தளித்துக் கொண்டிருந்தது. இந்த படகு தொடர்பாக தகவல் கிடைத்த இந்தோனேசிய கடற்படையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதே நேரத்தில் எவரையும் படகில் இருந்து இறங்கவும் அனுமதிக்கவில்லை.

அப்படி கடலில் குதித்த பெண்களை சுட்டுக் கொல்வோம் என எச்சரிக்கும் வகையில் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டது இந்தோனேசிய கடற்படை. கடந்த ஒரு வார காலமாக படகில் தத்தளித்து வரும் 44 பேரையும் மீண்டும் தமிழகத்துக்கு அனுப்பும் நடவடிக்கைகளையும் இந்தோனேசியா அரசு மேற்கொண்டது. இந்த நிலையில் இந்தோனேசிய கடற்படையினரிடம் எங்களை ஆஸ்திரேலியா செல்ல அனுமதியுங்கள் அல்லது சுட்டுக் கொன்றுவிடுங்கள் என ஈழத் தமிழ் அகதிகள் கெஞ்சுகிற வீடியோ பதிவு வெளியாகி உலகை உலுக்கியது. இதனைத் தொடர்ந்து ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள், இந்தோனேசியா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதனால் படகில் இருந்த 44 ஈழத் தமிழ் அகதிகளையும் தற்போது தமது நாட்டில் தரை இறங்குவதற்கு இந்தோனேசியா அரசு அனுமதித்துள்ளது. தற்போது அவர்களை ஐநா பிரதிநிதிகள் சந்தித்து பேச உள்ளனர்.

Read more at: /tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக