வியாழன், 19 மே, 2016

ஜெயலலிதா to ஞானதேசிகன்: திருப்பூர் கண்டெய்னர் விவகாரத்தால் நமக்கு எதாவது மைனஸ் ஏற்படுமா?'

சட்டசபைத் தேர்தலில் 140 தொகுதிகளில் முன்னிலை பெற்று முன்னேறிக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க. 'வழக்கமாக 6 மணிக்கு எழுந்திருக்கும் அம்மா, இன்றைக்கு 7.15 மணிக்குத்தான் எழுந்தார். மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்' என்கின்றனர் கார்டன் ஊழியர்கள். ' கார்டனில் என்ன மனநிலையில் இருக்கிறார் ஜெயலலிதா?' என்ற கேள்வியை கார்டன் ஊழியர் ஒருவரிடம் கேட்டோம். " தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த அதே நேரத்தில், எந்தப் பதட்டமும் இல்லாமல் ஆங்கில சேனல்களைப் பார்த்துக் கொண்டிருந்தார் அம்மா. மிகத் தாமதமாகத்தான் எழுந்தார். அரை மணி நேரம் தீவிரமாக பூஜை செய்தார். முடிவுகளைப் பார்த்து ரொம்பவே சந்தோஷத்தில் இருக்கிறார். ஆரம்பத்தில் இருந்தே 180 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என உறுதியான நம்பினார்.
ஒவ்வொரு முறை பிரசாரத்திற்குப் போகும்போதும், உளவுத்துறைக் குறிப்புகளை கவனித்து வந்தார். அதிலும், கடைசி நாட்களில் உளவுத்துறை சீனியர் ஒருவர், 'பெரும்பாலும் இழுபறி நீடிக்கவே வாய்ப்பு அதிகம்' எனக் கூறியபோது, ' இழுபறி வரும் என நான் நம்பவில்லை' என உறுதியாகக் கூறினார். மறுநாள் தலைமைச் செயலாளர் ஞானதேசிகனை வரவழைத்துப் பேசினார். அவரிடம், 'நாம்தான் ஆட்சியமைக்கப் போகிறோம். எனக்குத் தெரிய வேண்டியது எல்லாம் ஒன்றுதான். திருப்பூர் கண்டெய்னர் விவகாரத்தால் நமக்கு எதாவது மைனஸ் ஏற்படுமா?' என்று மட்டும் கேட்டார். ' மக்கள் மனதில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது' என அவர் கூறிய பிறகே, நிம்மதியடைந்தார்.

தேர்தலுக்குப் பின்பு எக்சிட் போல் முடிவுகள் வந்தபோதும், தனது செயலாளரிடம், ' கடந்த தேர்தலில் தி.மு.கதான் வெற்றி பெறும் என ஸ்ட்ராங்காக சொன்னார்கள். இவர்கள் சொல்லும் எக்சிட் முடிவுகளைக் கண்டுகொள்ள வேண்டியதில்லை' எனச் சொல்லி சிரித்தார். ஆட்சி அமைப்பதற்கு 117 இடங்கள் போதும். அதைவிட, தனி மெஜாரிட்டியாக இடங்கள் கிடைத்திருப்பதில் அம்மா ரொம்பவே உற்சாகத்தில் இருக்கிறார்" என்கின்றனர்.

அதிகாலை 5 மணிக்கே எழுந்துவிட்டு, தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கிக் காத்திருந்தார் தி.மு.க தலைவர் கருணாநிதி. உறக்கத்தில் இருந்து சாவகாசமாக எழுந்த ஜெயலலிதா, செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வாகனத்தைச் செலுத்த இருக்கிறார்.

கார்டன் வட்டாரமே கலகலப்பில் திளைக்கிறது.

ஆ.விஜயானந்த்   விகடன்,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக