சனி, 21 மே, 2016

கலைஞர் சாட்டை : தேர்தல் கமிஷனா? தில்லுமுல்லு செய்யும் கமிஷனா?

 திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டப் பேரவைக்கான  பொதுத் தேர்தல் பணிகள் தொடங்கிய  நாளிலிருந்து   தமிழகத்தில்  தேர்தல் ஆணையத்தின்  பணிகள் எவ்வாறு  இருந்தன  என்பது குறித்து  திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும்,  மற்ற கட்சிகளின் சார்பிலும் தொடர்ந்து  முறையிட்டு வந்ததை அனைவரும் அறிவர்.   இதுபற்றி தனியாக ஒரு விசாரணைக் கமிஷன் அமைத்து  விசாரித்தால் கூட  பல உண்மைகளைத் தெரிந்து கொள்ள முடியும். தேர்தல் முடிந்த பிறகும்,  தமிழகத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் நின்றபாடில்லை. உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமேயானால், தஞ்சை, அரவக்குறிச்சியில் தேர்தலை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து அறிவித்தார்கள்.  காரணம் என்ன சொன்னார்கள் என்றால்,  “பணம் பட்டுவாடா” என்றார்கள்.   பணம் பட்டுவாடா நடைபெற்றதற்காக தேர்தலை ஒத்திவைப்பது என்றால், தமிழ்நாட்டில்  பல தொகுதிகளிலும் ஒத்தி வைத்திருக்க வேண்டும்.  
தமிழ்நாட்டில் உள்ள பல  தொகுதிகளிலும், ஆளுங்கட்சி பணம் பட்டுவாடா செய்தது  தேர்தல் ஆணையத்திற்கு தெரியாதா என்ன?  பணம் பட்டுவாடா செய்யப்பட்டது பற்றி பதினைந்து நாட்களாக ஏடுகளில் வராத செய்திகளா?                      கடந்த 24-4-2016 அன்று “தினமலர்”  நாளிதழின்  முதல் பக்கத் தலைப்புச் செய்தி என்ன தெரியுமா?   “வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காகப் பதுக்கிய 250 கோடி ரூபாய் பறிமுதல்  -  45 இடங்களில் சோதனை”  என்பது தான்!   அந்தத் தலைப்பின்கீழ் வந்த செய்தியில், 

            “தமிழக சட்டசபை தேர்தலில்,  பணப் பட்டுவாடாவைத் தடுக்க, ஒவ்வொரு  மாவட்டத்திலும்,  வருமான வரித் துறை  துணை  இயக்குனர் தலைமையில்,  ஒரு உதவி கமிஷனர்,  ஐந்து ஊழியர், ஆறு ஆய்வாளர் இடம் பெற்ற படை அமைக்கப் பட்டுள்ளது.   இவர்கள் சில வாரங்களாக,  பண நடமாட்டத்தைக் கண்காணித்து வந்தனர்.   கரூரில்,  அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு நெருக்கமான, அன்புநாதன்   என்பவர் வீட்டில், நேற்று முன்தினம்  வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.   இந்தச் சோதனையில் 10.30 இலட்சம் ரூபாய் ரொக்கம்;  ஒரு ஆம்புலன்ஸ் வாகனம்;  ஒரு டிராக்டர்;  ஒரு கார்;  12 பணம் எண்ணும்  மிஷின்கள் பறிமுதல் செய்யப்பட்டன என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டது.   ஆனால்,  நேற்று ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியானது.   கரூரில் அன்பு நாதன் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டது,  இந்திய தேர்தல் வரலாற்றில், இது வரை இல்லாத அளவு பணம் என்று கூறப்பட்டது.   இதுபற்றி, கரூர் போலீஸ் வட்டாரங் களில்  விசாரித்த போது, “அன்புநாதன் வீட்டில் சிக்கியது, 250 கோடி ரூபாய் அளவுக்கு  இருக்கும்” எனத் தகவல்கள் கிடைத்தன”  என்று “தினமலர்” செய்தி வெளியிட்டு  எத்தனை நாட்கள் ஆகிறது?

            இன்று எங்கே போனார் அந்த அன்புநாதன்?   அவரிடமிருந்து கைப்பற்றிய உண்மையான பணம் எவ்வளவு?  தேர்தல் கமிஷன் அதுபற்றி என்ன நடவடிக்கை எடுத்தது?  ஏன் மூடி மறைத்தது? 

            அதே இதழில் வெளி வந்த மற்றொரு செய்தியில்,  “தமிழகம் முழுவதும்  பணம் பதுக்கி வைக்கப்பட்டதாகச்   சந்தேதிக்கப்பட்ட  இடங்களில் நேற்று சோதனை நடந்தது.   மொத்தம்,  45 இடங்களில்,  500 வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.   தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறும் போது, “கரூரில்  பணம் மட்டுமின்றி,  ஏராளமான சொத்து ஆவணங்கள், வேட்டி,  சேலை மற்றும் பரிசுப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.   சென்னையில்  ஒரு நகைக் கடையில்  சோதனை நடத்தப்பட்டு பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.   கரூரில்  பணம் பறிமுதல் செய்யப்பட்ட வீட்டில், பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு   கேமராவை, வருமான வரித் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.  அதில் பணம் கொண்டு வந்து இறக்கப்பட்ட காட்சிகள், பதிவாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.  இந்தக் காமரா, வருமான வரித் துறையினர் வசம் சிக்காமல் இருக்க, போலீஸ் உயர் அதிகாரிகள் முயற்சித்ததாகவும், தகவல் வெளியாகியுள்ளது” என்று தெரிவித்தார்களே;  என்ன ஆயிற்று?  எங்கே அந்த காமரா?  அதிலே சிக்கிய அமைச்சர்கள் யார்?  ஏன் அந்தக் காமரா மறைக்கப் பட்டது?   தேர்தல் கமிஷன் அதுபற்றி ஏதாவது  நடவடிக்கை எடுத்ததா?  தேர்தல் கமிஷன் என்ற ஒன்று தமிழகத்திலே செயல்பட்டதா?

            இந்தத் தகவல்கள் “தினமலர்”  நாளிதழில் வந்ததைப் போலவே, வேறு பல நாளேடுகளிலும் வந்துள்ளன.  இந்தத் தகவல்கள் வருமான வரித் துறை அதிகாரிகளும், தேர்தல் அதிகாரிகளும் கூறியதாக உள்ளன.    செய்திகள் வந்து பல நாட்கள்  ஆகியும்,  தமிழக அரசின் சார்பிலோ, தேர்தல் கமிஷன் சார்பிலோ இதற்கு ஏன்  விளக்கம் அளிக்க வில்லை?  

            நாளேடுகளில்  வந்த செய்திகளில், “அமைச்சர்கள் சிலரின் நெருக்கடியால், தேர்தல் பிரிவில் உள்ள உள்ளூர் விசுவாச  அதிகாரிகள் தரப்பிலிருந்து அன்புநாதன்  தரப்புக்கு விஷயம் கசிந்துள்ளது.  அவர்கள் சுதாரித்து, இரவே பல கோடி ரூபாயை வேறு இடங்களில் பதுக்கியதாகவும் தெரிகிறது.  அன்பு நாதன் குடோனில் இருந்து 10.33 இலட்சமும்,  வீட்டிலிருந்து   4.77 கோடி ரூபாயும் பறிமுதல் செய்யப்  பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.  ஆனால் 250 கோடி ரூபாய் அளவுக்கு ரொக்கப் பணம் கைப்பற்றி  தேர்தல் கமிஷனின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்”  என்றும் உள்ளது.  குறிப்பாக  இந்த அன்புநாதன்  ஒருசில  முக்கிய அமைச்சர்களின் பினாமி என்றும்,  அந்த அமைச்சர்கள் அவரது இல்லத்திற்கு வந்ததெல்லாம் காமராவில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அதனால் தான் அந்தக் காமராவைக் கைப்பற்றுவதற்கான முயற்சியில் சிலர் ஈடுபட்டிருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.   அதுபற்றி இந்நாள் வரை தேர்தல் கமிஷன் எதுவும் சொல்ல வில்லையே,  ஏன்?  

            அன்புநாதன் மூலமாக இரண்டு முக்கிய அமைச்சர்கள்  தங்களது லஞ்ச, ஊழல் பணங்களை பல இடங்களுக்கு அனுப்பினார்கள் என்றும், ஊரின் பெயரை  தன் பெயருக்கு முன்னாள் வைத்துள்ள அமைச்சர் ஹாங்காங் அருகே தீவே வைத்திருப்பதாகவும்,  அமைச்சரின் “பாஸ்போர்ட்டை”  சோதனையிட்டாலே அவர் பயணம் செய்த விவரத்தை அறியலாம் என்றும்,  நடிகைகள் பற்றியும் பக்கம் பக்கமாக வந்த செய்திகள்  இன்று வரை அமைச்சர்களாலோ, முதல்வராலோ மறுக்கப்படவில்லையே;  ஏன்? 

            வருமான வரித் துறை அதிகாரிகள், அன்புநாதன் வீட்டில் சோதனை முடித்ததும்,  மாலையில் வேலாயுதம்பாளையம் அருகே  அன்புநாதனின் நண்பர் மணிமாறன் என்பவரின் தொழிற்சாலையிலும் சோதனை செய்திருக்கின்றனர்.    இந்த நிலையில் தமிழகக் காவல் துறையினரின் பார்வையிலிருந்தும், வருமான வரித் துறையினரின் பிடியிலிருந்தும் அன்புநாதன் மாயமாகியிருக்கிறார் என்றால் அதற்கு மூல காரணம் யார்?  அவரைத் தப்ப விட்ட புனிதர்கள் யார்?  தமிழக அரசின் மூத்த அதிகாரிகள்  துணையின்றி, அமைச்சர்களின் உதவியின்றி அவரால் எப்படி தப்ப முடியும்? சி.பி.ஐ. விசாரணை வேண்டுமென்று எதிர்க் கட்சிகள் எல்லாம் வைத்த கோரிக்கை என்னவாயிற்று?  இதை யெல்லாம் தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டதா?   இதற்கெல்லாம்  பதில் என்ன? 

            அன்புநாதன் வீட்டில்  சோதனை நடத்திய  எஸ்.பி.,  வந்திதா பாண்டேவை  உயர் போலீஸ் அதிகாரிகள்  மிரட்டியதாகச் செய்தி வந்ததே?  அவரைக் கொலை செய்யவே முயற்சி நடைபெற்றதாக ஏடுகள் கூறினவே?  என்ன ஆயிற்று?  எப்படி மறைத்தார்கள்?  எங்கே தேர்தல் ஆணையம்?

            கரூர் மாவட்டம், புன்னம்சத்திரத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் மணி மாறன்  வீடு, பேக்டரி, குடோன்  உள்ளிட்டவற்றில் சோதனை நடத்தப்பட்டதே, தற்போது அவர் அமெரிக்காவில் இருப்பதாகக் கூறப்படுகிறதே;  தேர்தல் ஆணையம் என்ன செய்தது?             

கரூரில் நத்தம் விசுவநாதன் நண்பர் வீட்டில் இந்தச் சோதனை என்றால்,  அதற்கு மறுநாளே  சென்னையில்  அமைச்சர் வைத்திலிங்கத்தின் நண்பர் வீட்டில்  சோதனை நடைபெற்றதாகவும்,  ஐந்து கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் செய்தி வரவில்லையா?  தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இவர் என்றும்,  தஞ்சை மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளவர் என்றும் அந்தச் செய்தியில் கூறப் பட்டிருந்ததே, இது உண்மையா இல்லையா?  இதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்ததா?

தமிழகத்தில் இதுவரை எத்தனையோ தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றனவே, எந்தத் தேர்தலிலாவது  இந்த முறை போல பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதா?  ஐந்து மாநிலங்களில் மொத்தம்  133 கோடி ரூபாய் பறிமுதல் என்றால், அதிலே தமிழகத்தில் மட்டும் சுமார் 100  கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.  அது அ.தி.மு.க. அரசுக்கு மற்றொரு இழிவு  அல்லவா?   தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு  நெருக்கமானவர்கள் மற்றும் அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் வீடுகளில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறதா இல்லையா? 

            8-4-2016 அன்று கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் அதிகாரி அன்புசெல்வம், அப்பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர்  காரைச் சோதனை செய்ததில்  ரூபாய் பத்து இலட்சத்தை பறிமுதல் செய்து, அந்தத் தகவலை மாவட்டக் கலெக்டர் ராஜேஷ் கவனத்துக்குக் கொண்டு சென்றார்.   ஆனால் அவர்,  வேட்பாளரை விடுவிக்கவும், பணத்தைத் திருப்பிக் கொடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.   தன்னிடம் வீடியோ ஆதாரம் இருப்பதாக அன்புச் செல்வம் கூறியும் கலெக்டர் அவரை மிரட்டியதாகச் செய்தி வந்தது.

            22-4-2016 அன்று டி.எஸ்.பி. ராமச்சந்திரன் வாகன சோதனை நடத்திய போது ஒரு சொகுசு காரிலிருந்து  58 இலட்சத்து 30 ஆயிரத்து 500 ரூபாய் பணம் பறிமுதல் செய்துள்ளார்.

            24-4-2016 அன்று கோவை மாநகராட்சி 9வது வார்டு அதிமுக கவுன்சிலர்  வக்கீல் ராஜேந்திரன்  வீட்டில்,  தேர்தல் பிரிவு  அதிகாரி  மோகனசுந்தரம், வருமான வரித் துறை துணை ஆணையாளர் ராணி காஞ்சனா ஆகியோர் சோதனை நடத்தியிருக்கிறார்கள்.  என்னென்ன சிக்கியது என்ற விவரத்தை வெளியிட மறுத்துள்ளார்கள். 

            27-4-2016 அன்று ஈரோடு மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரது நிதி நிறுவனத்தில்  வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கணக்கில் வராமல் வைத்திருந்த 11 இலட்சம் ரூபாயைப் பறிமுதல் செய்துள்ளார்கள். 

            அதே நாளில், பொள்ளாச்சி தொகுதி தேர்தல் அலுவலர் அனுபியாஸ், கோவை மண்டல வருமான வரித் துறை  துணை ஆணையாளர் ராணி காஞ்சனா  ஆகியோர் தலைமையில், பொள்ளாச்சி ஜெயராமனின் நெருங்கிய உறுவினரும்,  நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் நண்பருமான டாக்டர் மகேந்திரன் என்பவரின் பண்ணை வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதாக வந்த புகாரைத் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டுள்ளது.  சோதனை முடிவில் 2 பெரிய சூட்கேஸ்கள் வெளியே எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது..  ஆனால் என்னென்ன சிக்கியது என்பதை அதிகாரிகள் தெரிவிக்க மறுத்து விட்டார்களாம்.   அ.தி.மு.க. வினருக்குச் சொந்தமான  இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு  பல கோடி ரூபாய்  கைப்பற்றப்பட்டும்,  எந்த நிகழ்விலும் முதல் தகவல்  அறிக்கை கூடப் பதிவு செய்யப்படவில்லை  என்பதும்,  யாரும்   இதுவரை  கைது செய்யப்படவில்லை என்பதும்  நாட்டின் சட்ட விதிமுறைகளையே நசுக்கும் நாசச் செயல்.  

            தமிழகத்திலே இவை மட்டுமா நடந்தன?   முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிறுதாவூர் மாளிகையில் கன்டெய்னர்கள் நிறுத்தப்பட்டிருந்ததை, புகைப்படம் எடுத்து ஏடுகள் வெளியிடவில்லையா?   அதுபற்றி எவ்வளவு செய்திகள் வந்தன?  தேர்தல் ஆணையம் ஏதாவது நடவடிக்கை எடுத்ததா?

            அது மாத்திரமா?  திருப்பூர் அருகே  3 கன்டெய்னர்களில்  570 கோடி ரூபாய்  பணம் கடத்தப்படவில்லையா?  அதற்கு முன்பே 5 கன்டெய்னர்களின் கடத்தப்பட்டு விட்டன என்றும், அவை பிடிபடவில்லை என்றும்,  ஆனால் இந்த 3 கன்டெய்னர்கள் பிடிபட்டு விட்டன என்றும் கூறப்பட்டது.  அது பற்றி எவ்வளவு செய்திகள் வந்தன?  அத்தனையும்  வங்கிக்குச் சொந்தமான பணம் என்று கூறி மூடப்பட்டு விட்டன.  அதிலே  தேர்தல் ஆணையம் ஏதாவது  செய்ததா?  எதற்காக தேர்தல் ஆணையம்? 

            தமிழகம் முழுவதிலும் அத்தனை தொகுதிகளிலும் பணம் பட்டுவாடா நடைபெற்றிருக்க இரண்டு தொகுதிகளில் மட்டும் ஒரு வாரத்திற்கு தேர்தல் ஒத்திவைப்பு என்று தேர்தல் ஆணையம் முதலில் அறிவித்தது.   தற்போது அதையும் தாண்டி ஏதோ பா.ஜ.க., பா.ம.க., நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தது என்ற காரணத்தைக் கூறி, தேர்தல் ஆணையம் மூன்று வாரங்களுக்கு  விசாரணை  நடத்துவதாகக் கூறி,  அந்த இரண்டு தொகுதி களிலும்  3 வாரங்களுக்குத் தேர்தலை ஒத்தி வைத்திருப்பதாக அறிவிக்கிறார்கள் என்றால் என்ன நியாயம்?   இரண்டு தொகுதிகளில் பணப் பட்டுவாடா பற்றி விசாரிக்க மூன்று வாரங்கள் தேவையா?  அதுபற்றி  அங்கே தேர்தலில் போட்டி யிடும் முக்கிய  கட்சிகளின் கருத்துக்களை அறிந்திட வேண்டாமா?  பா.ம.க., வும், பா.ஜ.க.வும்  நீதி மன்றத்தில் மனு கொடுத்தார்கள் என்றால், அவர்கள் எந்த நோக்கத்தோடு வழக்கு தொடுத்தார்கள்?  யாருடைய துhண்டுதலின் பேரில் வழக்கு தொடுத்தார்கள்?  அதற்காக இரண்டு தொகுதிகளின்  தேர்தல்களை மூன்று வாரங்களுக்குத் தள்ளி வைப்பதா?  இவைகள் எல்லாம் யாரை ஏமாற்று கின்ற காரியம்?  இதற்காகவா ஒரு தேர்தல் ஆணையம்?   தேர்தல் ஆணையம் என்றால் பாரபட்சமற்று நடக்க வேண்டாமா?   முதலமைச்சர் காலிலே விழுந்து வணங்குவது தான் பாரபட்சமற்ற நடவடிக்கையா?   இப்படிப்பட்ட தேர்தல் ஆணையங்கள் இருக்கின்ற வரை  நியாயம் கிடைக்காது, வெற்றி கிடைக்காது,  நீதி கிடைக்காது,  நீதியே  நீ இன்னும் இருக்கின்றாயா?  நீயும் அந்தக் கொலைக் களத்திலே விழுந்து மாண்டு விட்டாயா  என்று தான் கேட்க வேண்டும் நக்கீரன்,in

1 கருத்து:

  1. பெயரில்லா22 மே, 2016 அன்று 12:18 AM

    தற்போது விட சிறப்பாக செயல் பட அடுத்த முறை தேர்தல் ஆணையம் சரியான டெண்டர் விட்டு அனைவர்க்கும் ஒரே அளவு தர தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுகட்சி ஆதரவான ஆணையம்மாக மாறிய பின் ஒரு நேர்மையான தேர்தல் நடத்த இயலாது என்பது அனைவரும் அறிவர். இதாவது சரியாக செய்யலாம். (யார் பணம் கொடுத்தார்கள் என்பது மக்கள் அறிவார். என் ஊரில் குறைவாகவும் பக்கத்து ஊரில் அதிகமாக கொடுப்பது நீயாமா?,)

    பதிலளிநீக்கு