செவ்வாய், 24 மே, 2016

பிரெட்டில் புற்று நோய் ஆபத்து வேதி பொருள் கலப்பு... விசாரணைக்கு உத்தரவு

தலைநகர் டில்லியில் விற்கப்படும், 'பிரெட்' வகைகளில், புற்றுநோயை உண்டாக்கக் கூடிய வேதிப் பொருட்கள் கலந்திருப்பதாக, சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் உத்தர விட்டுள்ளது. டில்லியில் பரவலாக விற்பனையாகும், 38 வகை பிரெட்களில், 32ல், பொட்டாசியம் புரோமேட், பொட்டாசியம் அயோடேட் ஆகிய வேதிப் பொருட்கள் கலந்துள்ளன. இது, சி.எஸ்.இ., எனப்படும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் நடத்திய சமீபத்திய ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

சி.எஸ்.இ., துணை பொது இயக்குனர் சந்திரபூஷண் கூறியதாவது:பிரெட் உள்ளிட்ட சில உணவுப் பொருட்களில் கலந்துள்ள வேதிப் பொருட்களில் ஒன்று, புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய, '2பி கார்சினோஜென்' வகையைச் சார்ந்தது; மற்றொரு வேதிப்பொருள், தைராய்டு பிரச்னைகளை ஏற்படுத்தும். இவை, வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட போதும் இந்தியாவில்
தடை விதிக்கப்படவில்லை. டில்லியில், பாக்கெட்டு களில் அடைக்கப்பட்டு சாதாரணமாக விற்கப்படும் பிரபல பிராண்டுகளின் பிரெட், பன், பீட்சா மற்றும் பாவ் பாஜி போன்றவற்றின், 38 வகைகள், சி.எஸ்.இ., ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டன. இவற்றில், 84 சதவீத உணவுப் பொருட்களில் பொட்டாசியம் புரோமேட் அல்லது பொட்டாசியம் அயோடேட் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதுதவிர வேறு சில ஆய்வகத்தில் நடந்த சோதனைகளிலும் இது போன்ற முடிவு தான் கிடைத்தது. சோதனைக்குள்ளான


பிரெட் போன்றவற்றில் புற்றுநோய் உண்டாக்கும்உணவுப்பொருள் பாக்கெட்டுகளின் லேபிள் உள்ளிட்ட விஷயங்களையும் சோதித்தோம். பின், சம்பந்தப்பட்ட துறையினர் மற்றும் விஞ்ஞானிகளுடன் இதுகுறித்து பேசினோம்.
இச்சோதனைகள் மூலம் பிரெட், பன் போன்ற வகை உணவுப் பொருட்களில் வேதிப்பொருள் கலப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். வேதிப்பொருள் கலந்திருப்பதாக கூறப்படுவது குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்விஷயத்தில் பயப்பட தேவையில்லை. ஜே.பி.நட்டா, மத்திய சுகாதார அமைச்சர்

ஆய்வு சொல்வது என்ன?

ஆய்வுக்கு உட்பட்ட பிரெட் போன்ற பொருட்களின், 38 மாதிரிகளில், 32ல், வேதிப்பொருள் கலந்துள்ளது. 10 லட்சம் துணுக்குகளில், 1.15 முதல் 22.54 துணுக்கு என்றளவில் பொட்டாசியம் புரோமேட் அல்லது பொட்டாசியம் அயோடேட் சேர்ந்திருப்பது கண்டறியப்பட்டது.
வெள்ளை பிரெட், பாவ், பன், பீட்சா போன்றவற்றின், 24 மாதிரிகளில், 19ல், நச்சுத் தன்மையுள்ள வேதிப்பொருள் கலந்துள்ளது. பர்கர் வகை உணவில், நான்கில் மூன்றில், வேதிப்பொருள் சேர்க்கப்பட்டுள்ளது. உயர்ரக பிராண்டாக விற்பனையாகும் வெள்ளை பிரெட், பன் போன்றவற்றில், அதிகளவிலான பொட்டாசியம் புரோமேட், பொட்டாசியம் அயோடேட் கலக்கப்பட்டுள்ளது.

தடை செய்யணும்

சி.எஸ்.இ., கூறியுள்ளதாவது:பிரெட் மாவை மிருதுவாக்க, பொட்டாசியம்அயோடேட் மற்றும் புரோமேட் பயன்படுத்தப்படுவதை, இந்திய உணவு தரக்கட்டுப்பாடு ஆணையம் அனுமதிக்கக் கூடாது. இதற்கான விதிமுறைகளை, பி.ஐ.எஸ்., எனப்படும் இந்திய தரக்குழு, திருத்தம் செய்ய வேண்டும். நச்சுத் தன்மையுள்ள வேதிப் பொருட்களுக்கு மாற்றாக வேறு பொருட்களை பயன்படுத்தலாம். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வேதிப்பொருள் கலந்தஉணவு வகைகளுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, சி.எஸ்.இ., கூறியுள்ளது.

வெளிநாடுகளில் தடை
பிரெட் போன்றவற்றில் பொட்டாசியம் அயோடேட் மற்றும் பொட்டாசியம் புரோமேட் பயன்படுத்த, ஐரோப்பிய நாடுகள், 1990ல் தடை விதித்தன. பின், பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சீனா, பிரேசில், இலங்கை, நைஜீரியா, பெரு, கொலம்பியா போன்ற நாடுகளில் தடை விதிக்கப்பட்டது. ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஏஜன்சி, 2014ல் வெளியிட்ட ஓர் அறிக்கையில், 'அளவுக்கதிகமாக அயோடின் வகைகளை உட்கொண்டால் தைராய்டு பிரச்னைகள் ஏற்படலாம்; தைராய்டு புற்றுநோய் ஏற்படலாம்' என, கூறப்பட்டுள்ளது.

உண்மை மறைப்பு
பொட்டாசியம் சேர்ப்பதால் மென்மை மற்றும் தேவையான சிறந்த வடிவத்தை பிரெட் உள்ளிட்ட உணவு வகைகளில் பெற முடிகிறது. இந்த வேதிப்பொருளை பயன்படுத்தும் பிரபல உணவுப் பொருள் தயாரிக்கும் நிறுவனங்கள், 12ல் ஆறு நிறுவனங்கள் இவற்றை பயன்படுத்தவில்லை என மறுப்பு தெரிவித்தன. ஒரேயொரு நிறுவனம் மட்டுமே பிரெட் பாக்கெட்டுகளில் உள்ள லேபிளில், பொட்டாசியம் புரோமேட் பயன்படுத்தப்படுவதை குறிப்பிட்டுள்ளது. பிற நிறுவனங்கள், இந்த உண்மையை மறைத்துள்ளன.

- நமது சிறப்பு நிருபர் -  dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக