வெள்ளி, 20 மே, 2016

பொது மருத்துவ நுழைவு தேர்வு ஓராண்டுக்கு ஒத்திவைப்பு .

புதுடெல்லி: மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வை ஒரு வருடம் தள்ளி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர்களை சேர்க்க உச்ச நீதிமன்றம் கடந்த 2013 ம் ஆண்டு இடைக்கால தடை விதித்திருந்தது. இந்த தடை உத்தரவை எதிர்த்து மத்திய அரசு, மருத்துவ கவுன்சில் சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.


இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதற்கு முன்னதாக பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை ரத்து செய்வதாக அறிவித்தது. மேலும் மருத்துவ படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்தவும் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணையின்போது, கண்டிப்பாக பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என மத்திய அரசு சார்பில் கோரிக்கை விடப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசுக்கு அனுமதி அளித்ததோடு, மே 1-ம் தேதி முதல் கட்ட தேர்வும், ஜூலை 24-ம் தேதி இரண்டாம் கட்ட தேர்வும் நடத்த வேண்டும் எனவும், ஆகஸ்ட் 17-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

இதற்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போதும், பல்வேறு மாநில எம்.பி.க்கள் மருத்துவ படிப்புக்கான பொது நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், இதற்கான அவசர சட்டம் ஒன்றை பிறப்பிக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தலைமையில், மாநில சுகாதார அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு குறித்த பிரச்னையில் நீதிமன்றத்தை மத்திய அரசு எவ்வாறு அணுகுவது என்றும், நுழைவுத் தேர்வை அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கும் வகையில் சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் இன்று (20-ம் தேதி) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய அளவிலான மருத்துவ பொது நுழைவுத்தேர்வை ஒரு ஆண்டுக்கு ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான அவசர சட்டத்தை பிறப்பிக்கவும் இந்த கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.  விகடன்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக