புதன், 18 மே, 2016

ஜெ அரசை துணிச்சலாக எதிர்த்த கட்சி எது ?

kovan-2shutdown-tasmac-may5-pressmeet-1வர்கள் செய்யும் பரப்புரைகளுக்காக எந்த வாக்கும் விழப்போவதில்லை. தேர்தல் களத்தில் வேட்பாளர்களாகவும் இல்லை. கட்சி-சாதி-பணம் இவற்றின் அடிப்படையிலான தேர்தல் முறைகளையும் அவர்கள் ஏற்பதில்லை. ஆனால், அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் பயந்து நடுங்கும் ஜெ அரசுக்கு எதிராக துணிச்சலான பிரச்சாரத்தை மேற் கொண்டவர்கள் அவர்கள்தான்.
அவர்கள்… “மக்கள் அதிகாரம்’ அமைப்பின் தோழர்கள். ஆண்-பெண் பேதமின்றி இந்த அமைப்பில் உள்ள எல்லோருமே தோழர்களெனவே அழைக்கப்படுகிறார்கள்.
பன்னாட்டு நிறுவனங்களுக்கும் உள்நாட்டு முதலாளிகளுக்குமான தேர்தலும் ஜனநாயகமும் உண்மையானதல்ல, அது உழைக்கும் மக்களுக்கும் ஏழை-எளியவர்களுக்கும் பலன் தரவேண்டும் என்ற சிவப்பு சிந்தனையுடன் உருவான மக்கள் கலை இலக்கியக்கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணிகள், விவசாய அமைப்பு இவற்றின் தொடர்ச்சியாக உருவானதுதான் மக்கள் அதிகாரம்.
தமிழக அரசியலில் போராளிகளாக தங்களைக் காட்டிக் கொண்டவர்களெல்லாம் கடந்த 5 ஆண்டுகளில் ஐ.நா.சபைக்கு எதிராகவும், அமெரிக்க அரசை எதிர்த்தும், மத்திய அரசைக் கண்டித்தும், இலங்கை அரசுக்கு சவால்விட்டும், ஆந்திர- கர்நாடக மாநிலங்களை எதிர்த்தும் கூவினார்களே தவிர, தமிழகத்தில் உள்ள ஜெயலலிதா அரசை எதிர்த்து வாய்திறக்கவே நடுங்கினார்கள். ஆனால், சர்வாதிகாரமும் உயர்சாதித்தன்மையும் கொண்ட ஜெயலலிதா அரசுக்கு எதிராகத் தோழர்களின் போராட்டம் 5 ஆண்டுகளும் தொடர்ந்தது.
ஆற்று மணல் கொள்ளையைத் தடுக்கும் வகையில் நேரடியாக களமிறங்கி கடத்தல்காரர்களையும் அவர்களுக்கு உதவிய அதிகாரிகளையும் முற்றுகையிட்டார்கள். சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்களின் ஆதிக்கத்தை எதிர்த்தார்கள். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை நிறைவேற்ற உச்சநீதிமன்றம் வரை சென்று போராடினார்கள். ரேஷன் கடை முறைகேடுகள் உள்பட தமிழக மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்காக களத்தில் நின்றார்கள். அதன் உச்சகட்டம்தான், டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டங்கள்.
மக்கள் வசிக்கும் இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடச்சொல்லியும் ஜெயலலிதா அரசு கேட்காததால், கடைகளை நொறுக்கி, மது பாட்டில்களை ரோட்டில் வீசி முதல் போராட்டம் நடத்தியது இந்தத் தோழர்கள்தான்.
tas_2496702fமக்கள் அதிகாரம் அமைப்பின் பாடகர் கோவன் பாடிய “ஊருக்கு ஊரு சாராயம்… தள்ளாடுது தமிழகம்’’என்ற பாடல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த, கோவன் உள்ளிட்ட தோழர்கள்மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. நள்ளிரவில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பாட்டு பாடிய சிறுவர்களையும்கூட விட்டுவைக்காமல் வழக்கு போட்டது. ஆனாலும் கோவன் தரப்பிலிருந்து, “”ஊரெங்கும் மழை வெள்ளம்’’ பாட்டும், “போங்கு.. அம்மா போங்கு’’’ என்ற பாட்டும் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தின.
பச்சையப்பன் கல்லூரி அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி போராடிய இந்த அமைப்பின் மாணவர்கள் பலரும் போலீசின் கொடுமையான தாக்குதலுக்குள்ளாகி, புழல் சிறையில் அடைக்கப்பட்டு அங்கும் வன்முறைகளை சந்தித்தனர். தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் இருந்த நிலையிலும், டாஸ்மாக்கை மூடக்கோரி இரண்டு முறை வலிமையான போராட்டங்களை மக்கள் அமைப்பின் ஆண்களும்-பெண்களும் தமிழகம் முழுவதும் நடத்தினர். பெண்களின் ஆடைகளைக் கலைத்தும், கண்மூடித்தனமாக தாக்கியும் போலீசின் கொடூரம் தொடர்ந்தபோதும் போராட்டத்தின் வீரியம் குறையவில்லை.
மக்கள் அதிகாரத்தின் போராட்டம் என்றால் ஜெயலலிதா அரசும் காவல்துறையும் மிரண்டு போவது வழக்கம். விழுப்புரத்தில் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் செய்த நிலையில், மக்கள் அதிகாரம் அமைப்பினர் திடீர் போராட்டம் நடத்தப்போவதாக உளவுத்துறை சொன்ன தகவலை நம்பி, வழக்கறிஞர் ராஜு உள்ளிட்ட தோழர்களை வீட்டுக்காவலில் வைத்தது காவல்துறை.
இந்தத் தோழர்கள், திடீர் குபீர் போராட்டங்களை நடத்துவதில்லை. முன்கூட்டியே அறிவிப்பு வெளியிட்டுத் தான் மக்கள் திரளுடன் களமிறங்கிப் போராடுகிறார்கள். காவல்துறையின் தடியடி, சிறைவாசம் எதற்கும் அஞ்சுவதில்லை. பாசிசத்தனத்துடன் 5 ஆண்டுகாலமாக செயல்பட்ட ஜெயலலிதா அரசை எழுத்து-பேச்சு- கலை-போராட்டம் என அனைத்து வழிமுறைகளிலும் எதிர்த்து நின்ற நிஜப் போராளிகளே, மக்கள் அதிகாரம் அமைப்பினர்.
20160505_111526_13665மக்கள் உள்பட யாரையும் விலைபேசிவிட முடியும் என நினைக்கும் ஜெ.வின் ஆட்சியில் நிர்வாகம், சட்டம், ஊடகம் உள்பட அனைத்து துறைகளும் ஊழல் மயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து அம்பலப்படுத்தியது மக்கள் அதிகாரம். ஜனநாயகத்திற்கு புற்றுநோயாக அமைந்துள்ள இந்த அரசை வீழ்த்தவேண்டும் என்ற இலக்குடன் அண்மையில், அம்மா பார் சாங் என்ற பாடலையும் வெளியிட்டு, மக்களைப் பற்றிக் கவலைப்படாத ஜெ.வையும் அவரது அமைச்சர்களையும், அடிமைத்தனமாக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளையும் அதன் மூலம் அம்பலப்படுத்தியது.
ஓட்டு கேட்காத மக்கள் அதிகாரம்தான் இந்தத் தேர்தல் களத்தில் ஜெயலலிதா அரசை முழுமை யாகவும் துணிவாகவும் எதிர்த்து நின்று, சரியான ஆயுதத்தைக் கையில் எடுத்த அமைப்பாகும்.
– நன்றி: நக்கீரன் (மே 17-19, 2016 இதழில் வெளியான கட்டுரை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக