புதன், 18 மே, 2016

இலங்கையில் பெரும் வெள்ளம், நிலச்சரிவு: 35 பேர் உயிரிழப்பு; 150 பேரை காணவில்லை

இலங்கையில் கனமழை காரணமாக தலைநகர் கொழும்புவில் தத்தளிக்கும் மக்கள். | படம்: பிடிஐ. இலங்கையில் கனமழை காரணமாக தலைநகர் கொழும்புவில் தத்தளிக்கும் மக்கள். | படம்: பிடிஐ. இலங்கையில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 35 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 150 பேரைக் காணவில்லை. இதனிடையே, நிலச்சரிவு காரணமாக 200 குடும்பத்தினர் புதையுண்டதாக செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது. இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ராணுவம், போலீஸார், விமானப்படை மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்டோர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுகுறித்து ராணுவ செய்தித்தொடர்பாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீரா கூறியதாவது:

“கனமழை காரணமாக, கெகல்லா மாவட்டத்தில் இலங்கபிடியா மற்றும் புலத்கோஹுபிடியா ஆகிய 2 கிராமங்களில் செவ்வாய்க்கிழமை மாலை நிலச்சரிவு ஏற்பட்டதில் பெரும்பாலான வீடுகள் மண்ணில் புதைந்தன.

இதையடுத்து, நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் 300-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரை சுமார 150 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் காணாமல் போன 150 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இலங்கபிடியாவில் 13 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுபோல புலத்கோஹுபிடியா கிராமத்திலிருந்து 3 சடலங்கள் மீட்கப்பட்டன. இதன்மூலம் இதுவரை கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து பேரிடர் நிர்வாக மைய செய்தித் தொடர்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறும்போது, “கெகல்லா மாவட்டம் அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதியாகும். எனவே, தொடர் மழை பெய்து வருவதால் மலைப்பாங்கான பகுதியில் வசித்து வந்த பலர் வீடுகளை விட்டு வெளியேறி விட்டனர். நாடு முழுவதும் 81,216 குடும்பங்கள் அல்லது 3.32 லட்சம் பேர் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வேறு பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

இதனிடையே, 3 கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், இதில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்ணில் புதைந்திருக்கலாம் என்றும் இலங்கை செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் பலியானோர் எண்ணிக்கை அரசின் புள்ளிவிவரத்தைவிட கூடுதலாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.  tamil.thehnidu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக