திங்கள், 16 மே, 2016

அரவக்குறிச்சி மட்டும் என்ன பாவம் செய்தது ?

EC_1கருப்பு பண சினிமா நடிகர்கள் முதல் ஊழல் ஐ.பி.எல்-ல் சம்பாதிக்கும் கிரிக்கெட் பிரபலங்கள் வரை அனைவரையும் அழைத்து வந்து ஜனநாயகத்தின் அருமை பெருமைகளை எடுத்து சொல்கிறார்கள் தேர்தல் முறையில் உடனடியாக எதையாவது செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம் இல்லையேல் இது ஜனநாயகத்துக்கே ஆபத்தாக வந்துவிடும்”. – அரவக்குறிச்சி தேர்தல் தள்ளிவைக்கப்படதை தொடர்ந்து புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் இப்படி குறிப்பிட்டார் பா.ஜ.க-வின் தமிழிசை சவுந்தர்ராஜன். “கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கவலையுடன் சொல்கிறது” என்கிறார் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் தியாகச் செம்மல். இப்படியாக விதியின் மேலும், கடவுளின் மேலும் பாரத்தை போட்டுவிட்டு தப்பித்துக் கொள்கிறார்கள் ஜனநாயகக் காவலர்கள்.

எதையாவது செய்யவேண்டும் என்று கூறுபவர்களுக்கும், கூறப்படுபவர்களுக்கும்என்ன செய்வது என்று தெரியவில்லை. எதை செய்தாலும் அது முட்டுச்சந்தில் போய் நிற்கிறது. அதில் ஒன்று தான் அரவக்குறிச்சியில் தேர்தலை தள்ளிவைப்பதாக தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் ஒரு அறிவிப்பு.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக 144 தடையுத்தரவு பிறப்பித்து பணப்பட்டுவாடா செய்ய துணை நின்ற தேர்தல் ஆணையத்திற்கு திடீரென்று என்னவாயிற்று? நியாயவானாக மாறிவிட்டதா? இல்லை என்பதை தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பே சொல்கிறது.

அன்புநாதன் வீட்டில் நடந்த சோதணை
இந்த தள்ளிவைப்புக்கு காரணமாக தேர்தல் ஆணையம் கூறுவது இத்தொகுதியில் அதிக அளவு பணப்பட்டுவாடா நடப்பதாகவும் அ.தி.மு.க அமைச்சர்களின் பினாமி அன்புநாதன் இடங்களிலும், தி.மு.க-வின் கே.சி.பழனிச்சாமி வீட்டிலும் நடந்த சோதனைகளையும் குறிப்பிட்டுள்ளது. ஏப்.22 அன்றுஅன்புநாதன் இடத்தில் சோதனை நடந்து மையப்படுத்தப்பட்ட முறையில் தமிழகமெங்கும் ஆம்புலன்ஸ்களில் பணம் கடத்தப்பட்டது தெரியவந்தது. அப்பொழுதும் தேர்தலை தள்ளிவைக்கவோ, அன்புநாதன் உள்ளிட்ட அதிமுக பினாமிகளையும், அதன் தலைமையையும் கைதுசெய்யவோ தேர்தல் ஆணையம் முன்வரவில்லை.
தி.மு.க-வின் கே.சி.பழனிச்சாமியும் அ.தி.மு.க-விற்கு இணையாக பணப்பட்டுவாடா செய்வதாக வந்த தகவல் ஜெயலலிதாவை மட்டுமல்ல தேர்தல் ஆணையத்தையும் பதைபதைக்க வைத்திருக்கவேண்டும். இந்த பின்னணியில் தான் அம்மா தேர்தல் ஆணையம் களத்தில் குதித்திருப்பதாக கருதவேண்டியிருக்கிறது.
தமிழகம் முழுக்க ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு வார்டிலும் எந்த கட்சி எவ்வளவு பணப்பட்டுவாடா செய்கிறது என்பதை கடைக்கோடி தமிழனும் அறிந்திருக்கும் போது, கோட்டை கொத்தள, படை, பரிவாரங்களோடு இருக்கும் தேர்தல் ஆணையத்துக்கோ அரவக்குறிச்சி மட்டும் தான் தெரிகிறது; இல்லை அது மட்டும் தான் என நம்மை நம்பச் சொல்கிறது. ஒரு தொகுதியை மட்டும் குறிப்பிட்டு காட்டுவதன் மூலம் மற்ற தொகுதிகளில் பணபட்டுவாடா இல்லாதது போன்ற தோற்றத்தை உண்டாக்க முயற்ச்சிக்கிறது. அவர்களின் நியாயப்படியே பணபட்டுவாடாவை தடுக்கப்பட வேண்டுமானால் எல்லா தொகுதிகளிலும் தேர்தலை நிறுத்தியிருக்க வேண்டும்.
கடந்த ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சில வார்டுகளில் மொத்த வாக்காளர்களைவிட அதிக ஓட்டு பதிவாகி அம்பலமானது முதல் தேர்தல் அதிகாரிகளின் வண்டிகளிலேயே பணப்பட்டுவாடா செய்யப்படும் விவரங்கள் ஊடகங்களில் வெளியாவதால் தனது நம்பகத்தன்மை குறைவதை தேர்தல் ஆணையம் உணர்ந்தே இருக்கிறது. அதை சரிக்கட்டவும் நடுத்தரவர்க்கத்திற்கு தேர்தல் மீதிருக்கும் நம்பகத்தன்மையை உறுதி செய்யவும் தடாலடியாக எதையாவது செய்யவேண்டிய தேவையில் இருக்கிறது தேர்தல் ஆணையம். இந்த தடாலடியில் குற்றத்தை கண்டித்து ஏதாவது ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும், அதே நேரம் குற்றவாளி தப்பிக்கவும் வேண்டும்.
22jan2013-money-in-electionsஇங்கு ஒரு கேள்வி எழுகிறது தேர்தலை தள்ளிவைப்பதினால் அ.தி.மு.க தலைமையும் பழனிச்சாமியும் பணப்பட்டுவாடாவை நிறுத்திவிடப் போகிறார்களா? இல்லை என்பது தேர்தல் ஆணையத்திற்கு நன்றாகவே தெரியும். இந்நேரத்திற்கு தள்ளிவைக்கப்பட்ட தேர்தலுக்கு பணப்பட்டுவாடா ஆரம்பிக்கப்பட்டிருக்கும். எனில் தள்ளிவைக்கப்பட்டதினால் என்ன பலன்?
வீட்டில் அடிவாங்கும் கவுண்டமணி தான் அடிகொடுப்பது போல சத்தமிட்டு ஊராரை நம்பவைப்பார். அதை நினைவுபடுத்துகிறது தேர்தல் ஆணையத்தின் இந்நடவடிக்கை. ஊடகங்களோ கைப்புள்ளையின் வீரத்தை சிலாகிக்கின்றன. இதை மாபெரும் நடவடிக்கையாக காட்டுகின்றன. “இந்த நடவடிக்கை மற்ற தொகுதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணியாக இருக்கும் என்கிறார் பாண்டே. இதன் மூலம் நியாயமான தேர்தல் சாத்தியம் என்று மக்களை நம்ப சொல்கிறார். இப்படி மக்களை ஏமாற்றி தேர்தல் கமிசன் கறாரானவர்கள் என்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்க இத்தகைய ஊடக மாமாக்கள் பாடுபடுகிறார்கள்.
பிரிட்டிஷ் ஆட்சியில் தேர்தல் முறை ஆரம்பித்த காலத்தில் இருந்த தேர்தல் முறைகேடுகள் தற்போது ஒரு உச்சத்தை எட்டியிருக்கிறது. 1952 தேர்தலிலேயே ஓட்டுக்கு பணம் கொடுக்கும் பழக்கம் இருந்ததை பலரும் எழுதியுள்ளார்கள். தன் தந்தையே அப்படி பணம் கொடுத்ததாக பி.ஏ.கிருஷ்ணன் தமிழ் இந்து இதழில் எழுதியிருக்கிறார். பதவிக்காக கட்சி மாறுவது, மாற்று அணிக்கு வாக்களிப்பது எல்லாம் ராஜாஜியின் சுயராஜ்ய கட்சி காலத்திலேயே இங்கு நிலைபெற்றுவிட்டது. அதன் வளர்ச்சி போக்கில் சாராயம், கள்ள ஓட்டு என்று பரிணமித்து இன்று மக்களும் பங்குபெற்று ஓட்டுக்கு எவ்வளவு என்று கேட்டு வாங்கும் நிலை வந்திருக்கிறது. உள்ளாட்சிகளின் நிலையோ இன்னும் பரிதாபம். ஐ.பி.எல்-க்கு முன்னதாகவே அங்கு பதவிகளை ஏலமிடும் முறை அமல்படுத்தப்பட்டுவிட்டது. தேர்தல் முறையில் இன்று ஏற்பட்டிருக்கும் நெருக்கடி என்பது புதியதாக தோன்றியதல்ல. இதை திராவிட இயக்கம் மட்டுமே உருவாக்கிய ஊழல் என்று கூறுவது முழுப் பொய்.
அனைவரும் பங்கு பெறும் தேர்தல்; அனைவருக்குமான அரசு என்ற போர்வையில் தனது அதிகாரத்தை செலுத்திவருகிறது ஆளும் வர்க்கம். அதனால் தேர்தல் கட்டுமான சீரழிவு என்பது ஒட்டு மொத்த அமைப்பிற்கு நல்லதல்ல என்ற அடிப்படையில் சில சில்லறை சீர்திருத்தங்கள் மூலம் நடவடிக்கை எடுப்பதாக சீன் போடுகிறார்கள். உண்மையிலேயே நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் தேர்தல் கமிஷன் தன்னைத்தானே தூக்கில் போட்டுக் கொள்ளவேண்டும்.
தேர்தலில் பணப்புழக்கத்தை தடுக்க வேட்பாளர் இவ்வளவு தான் செலவு செய்யவேண்டும் என்று வரம்பை நிர்ணய் செய்தார்கள். 1461419117-2979ஆனால் ரிசர்வ வங்கி கவர்னரே தேர்தல் நேரத்தில் 50,000 கோடி ரூபாய் அளவிற்குப் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்கிறார். வேட்பாளர்கள் சொத்து கணக்கை காட்டவேண்டும் என்றது தேர்தல் ஆணையம். தனக்கு வீடே இல்லை, வண்டியில்லை என ஊர்களையும், இயற்கை வளங்களையும் முழுங்கிய மகாதேவன்கள் சொத்து கணக்கு தாக்கல் செய்கிறார்கள்.
இத்தனைக்கு பிறகும் 234 தொகுதிகளில் 553 பேர் கோடீஸரரர்கள், 283 பேர் கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளவர்கள்.
தேர்தலில் பணப்புழக்கத்தை தடுப்பதாக கூறி பறக்கும் படை அமைத்தார்கள். ஆனால் தேர்தல் அதிகாரிகளின் வண்டிகளில் தான் கடத்தப்படுவதாக பத்திரிகைகள் அம்பலப்படுத்துகின்றன. தானே பணப்பட்டுவாடா செய்வதற்கு உதவியும் செய்துவிட்டு மறுபுறம் நியாயமாக வாக்களிப்பதை விளம்பரப்படுத்த பல கோடிகளை செலவிடுகிறது தேர்தல் ஆணையம். தேர்தல் அலுவலரை கொண்டு பணம் வாங்காமல் வாக்களிப்பேன் என மக்களை உறுதிமொழி ஏற்க வைக்கிறார்கள்.நேற்று வரை ஒரு கையெழுத்துக்கு இவ்வளவு என்று லஞ்சம் வாங்கிய அதிகாரி ஓட்டுக்கு பணம் பெறுவது பாவம் என்று பிரச்சாரம் செய்வதை மக்கள் பார்த்து சிரிக்கிறார்கள். லஞ்சத்தில் முதலிரண்டு இடத்தில் இருக்கும் போலீஸ், வருவாய்துறையுடன் இணைந்து ஓட்டுக்கு பணம் பெறும் லஞ்சத்தை ஒழிக்க போகிறதாம் தேர்தல் ஆணையம்.
எவ்வளவு முக்கினாலும் தேர்தல் ஆணையத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் பூமராங்காக திரும்புகிறது.
தேர்தலின் மீதான் மக்களின் மாயைகள் தகர்ந்து வருவதற்கேற்ப ஓட்டை பணத்திற்கு விற்பதும் அதிகரித்து வருகிறது. நேர்மறையில் இந்த அமைப்பின் தோல்வியை உணர்ந்து அதற்கான மாற்று என்ன என்பது குறித்து மக்கள் சிந்திக்காமல் இருக்கிறார்கள். ஆனால் எதிர்மறையில் இந்த அமைப்பினால் தங்களுக்கு எதுவும் நடக்கபோவதில்லை என்பதை தங்கள் அனுபவத்தின் மூலம் உணர்ந்திருக்கிறார்கள். ஆளும்வர்க்க அறிவுஜீவிகள் நம்ப சொல்வது போல விரல் நுனியில் அதிகாரம் இருக்கிறது என்றோ, தேர்தல் தான் தங்கள் தலைவிதியை நிர்ணயிக்க போகிறது என்றோ மக்கள் நம்பத் தயாரில்லை. வந்த வரை லாபம் என்ற வகையில் பணம் வாங்குகிறார்கள். இப்படியாக வெளிப்படையாக ஓட்டுப் பொறுக்கிகளின் ஊழலுக்கு கணிசமான மக்களும் பலியாகியிருக்கிறார்கள்.
தங்கள் உறவினர்களிடம் பேசி அவர்கள் ஊரில் ஒரு ஓட்டிற்கு எவ்வளவு தருகிறார்கள் என்பதை தெரிந்துகொண்டு தன் ஊரில் தருவதை சரிபார்த்துகொள்கிறார்கள். குறைந்தால் அது குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். தேர்தல் அமைப்பில் ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடி என்பது ஒட்டு மொத்த சமூக கட்டமைப்பின் நெருக்கடியாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.
cashfrvote_sanjeevகுடிக்கும் தண்ணீரில் ஆரம்பித்து கல்வி மருத்துவம் என அனைத்தும் விற்பனை பொருளாகிவிட்ட ஒரு நாட்டில் தற்போது ஓட்டும் விற்பனை பொருளாகியிருக்கிறது. இது இந்த அமைப்பு முறை சீரழிவின் இயல்பான நீட்சி. முன்னதை சிலாகிக்கும் ஆளும்வர்க்கத்தினால் பின்னதை சகித்துக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் நியாமான தேர்தல் என்பதில் தான் அவர்களது சர்வாதிகாரம் மறைந்திருக்கிறது.
அரசு அதன் கடமைகளிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும். அனைத்தையும் சந்தை தான் தீர்மானிக்கும் என்பது உலகமயத்தை அமல்படுத்திய முதலாளித்துவத்தின் கொள்கை. இதை ஆதரிக்கும் ஆளும் வர்க்க அறிவுஜீவிகளோ மக்கள் மட்டும் தங்கள் ‘ஜனநாயக’ கடமையை ஆற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். பங்குச் சந்தையின் விதி ஓட்டுக்கு மட்டும் பொருந்தாமல் போய்விடுமா என்ன?அமெரிக்க அணு சக்தி ஒப்பந்த வாக்கெடுப்பில் எம்.பி.களின் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டதும் இங்கு கவனிக்கத்தக்கது
கருப்பு பண சினிமா நடிகர்கள் முதல் ஊழல் ஐ.பி.எல்-ல் சம்பாதிக்கும் கிரிக்கெட் பிரபலங்கள் வரை அனைவரையும் அழைத்து வந்து ஜனநாயகத்தின் அருமை பெருமைகளை எடுத்து சொல்கிறார்கள். வேட்டி முதலாளி முதல் ரியல் எஸ்டேட் சமூக விரோதிகள் வரை தேர்தல் விளம்பரங்களை சமூக நலன் கருதி வெளியிடுகிறார்கள். எஃப். எம் மொக்கை காம்பியர்கள் முதல் முட்டாள் சமூக ஆர்வலர்கள் அனைவரையும் வைத்து அறிவுரை மழை பொழியச் செய்தாயிற்று. பீப் சிம்பு தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுகிறாராம்; காலக்கொடுமை. இப்படி சொல்லிவைத்தாற் போல எல்லா சமூக விரோதிகளும் போலி ஜனநாயாகத்தின் மீதான தங்களின் தீராக் காதலை வெளிப்படுத்தி தேர்தல் கமிசனுக்கு துணை நிற்கிறார்கள். ஓட்டு போடவில்லை என்றால் தெய்வ குற்றம் என்ற அளவுக்கு பிரச்சாரம் செய்யப்படுகிறது.
இறுதியில் இவர்களே கொன்றுவிட்ட பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு உயிர் இருப்பதாகவும், அதை நம்புவது கடமை என்பதாகவம் இன்னும் எத்தனை நாளைக்கு கூவுவார்கள்?
– ரவி. வினவு.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக