வெள்ளி, 6 மே, 2016

திமுகவை ஜெயிக்க விடக்கூடாது... முக்கிய நிர்வாகிகளை முடக்குங்கள் ... அம்மாவின் ஆணை!

விகடன்.com ;மிஸ்டர் கழுகு: ஜெ. ஜாலம்! எனக்கு ஓட்டு போட்டா எல்லாமே ஃப்ரீ... அக்னி நட்சத்திர வெப்பக்காற்று வெளுத்து வாங்குகிறதே??’’ என்றபடி வியர்க்க விறுவிறுக்க நுழைந்​தார் கழுகார். அவருக்காக ஏ.சி-யுடன் சேர்த்து ஏர் கூலரையும் ஆன் செய்தோம். கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனவர், ஜெயலலிதாவின் அதிரடி தேர்தல் அறிக்கையை விவரிக்க ஆரம்பித்தார்.விருப்பமனு, வேட்பாளர் பட்டியல், பிரசாரம் என தேர்தலில் துள்ளல் பாய்ச்சல் காட்டுவது ஜெ. பாணி. ஆனால், இந்தத் தேர்தலில் ஜெயலலிதா பதுங்கியிருந்தார். எல்லாக் கட்சிகளும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, களத்துக்குப்போய்விட்ட நிலையில் அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை மட்டும் ரிலீஸ் ஆகவில்லை. அ.தி.மு.க மட்டும் கடைசி வரையில் கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருந்தது. தமிழக தேர்தல் வரலாற்றில் தேர்தல் நெருக்கம் வரையில் எந்தக் கட்சியும் தேர்தல் அறிக்கையை வெளியிடாமல் இருந்தது இல்லை. அ.தி.மு.க-வின் இந்த மௌனத்துக்குப் பின்னால் இருந்தது பயம் மட்டுமே. எல்லாத் தேர்தல் அறிக்கையையும் படித்துப் பார்த்துவிட்டு அதில் இருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட முத்துக்களையும் கோத்து மாயாஜால மாலையைக் கட்டியிருக்கிறார். செல்போன் தொடங்கி ஸ்கூட்டர் வரை மின்சாரம் தொடங்கி செட் ஆஃப் பாக்ஸ் வரை அத்தனையும் ஃப்ரீ. வைஃபை, இன்டர்நெட் லேப்டாப், பேங்கிங் கார்டு, சத்துணவில் காலை சிற்றுண்டி, கோ ஆப்டெக்ஸ் கிஃப்ட் வவுச்சர், லோக் ஆயுக்தா என ஜெ. ஜாலம் காட்டியிருக்கிறார்.’’


‘‘இலவச பைக் வழங்கத் திட்டமிட்டிருக்கிறார் எனக் கடந்த வாரம் கழுகார் தந்த தகவல்தான் பைக்குக்கு மானியம் என மாறியிருக்கிறது என்பதையும் கவனித்தோம்.’’

‘‘இப்படி கடைசி நேரத்தில் இலவச மேளாவை நடத்தியிருப்பது ஓட்டுக்களை குறிவைக்கத்தான். 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் ஜெயலலிதா, தேர்தலில் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை இழந்துவிட்ட நிலையைத்தான் இந்தத் தேர்தல் அறிக்கை வெளிக்காட்டுகிறது என எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. 5 ஆண்டு ஆட்சியில் அ.தி.மு.க அரசின் மீது எழுந்த விமர்சனங்கள், எதிர்ப்புகள் காரணமாக வாக்குச்சாவடியில் எதிர் அணிக்கு ஓட்டுக்களாக விழும் என்ற அச்சத்தில் இப்படியான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. கிரானைட் முறைகேடுகள் மீது இதுவரையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சகாயம் விசாரணை அறிக்கையின்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையெல்லாம் விட்டுவிட்டு கிரானைட் கொள்கை வகுக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்திருப்பதும் தாது மணல் விற்பனையை அரசே ஏற்கும் எனச் சொல்வதும் வேடிக்கையாக இருக்கிறது. இந்தியாவில் இரண்டே மாநிலங்களில்தான் லோக் ஆயுக்தா அமைப்பு இல்லை. அதில் தமிழகமும் ஒன்று. லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் சில மாதங்களுக்கு முன்பு போடப்பட்ட வழக்கில் ‘விரைவில் லோக் ஆயுக்தா அமைக்கப்படும்’ என நீதிமன்றத்தில் சொல்லியது தமிழக அரசு. அதன் பிறகு லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்கும் எந்த நடவடிக்கையும் ​இல்லை. இப்போது தேர்தல் அறிக்கையில் லோக் ஆயுக்தா அமைக்கப்படும் எனச் சொல்லியிருக்கிறார் ஜெ. எது எப்படியோ, அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை அறிவாலயத்தில் அதிர்ச்சி அலையை உண்டாக்கியிருக்கிறது. ‘பரமா மரண பயத்தைக் காட்டிட்டாங்க...’ ‘பயப்படறீயா குமாரு’ என மீம்ஸ்கள் தி.மு.க-வுக்கு எதிராகப் பறக்கின்றன.’’

‘‘தமிழகத்தில் கரன்சி பறப்பதாக மக்கள் பேசிக்கொள்​கிறார்களே?’’

தனது கையில் வைத்திருந்த கைப்பையைப் பிரித்து, கொத்தாக டோக்கன்களை டேபிள் மீது கொட்டினார் கழுகார்.

‘‘என்ன இது?’’ என்றோம்.

‘‘கரன்சி காற்று அடிப்பதாகச் சொன்னீரே? அதற்கான டோக்கன்கள்தான் இவை. மே 5-ம் தேதியில் இருந்து வாக்காளர்​களுக்கு டோக்கன்கள் முன்கூட்டியே தரப்படுகின்றன. இந்த டோக்கன்களுக்கு மூன்று தவணைகளில் அன்பளிப்பு கிடைக்குமாம். மே 10-ம் தேதிக்குப் பிறகு பணம், பொருட்கள் பட்டுவாடா ஆரம்பிக்க ஆளும் கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர். தொகுதிக்கு மூன்றில் இருந்து ஐந்து கோடி ரூபாய் வரை ரகசிய ஏஜென்ட்கள் மூலமாகக்  கொண்டு சென்றுவிட்டனர். வாக்காளர்கள் கைகளுக்குத் தர வேண்டியதுதான் பாக்கி. தேர்தலுக்கு நெருக்கமாக விநியோகம் நடந்தால்தான், ஒட்டு போடப் போகும்போது இதெல்லாம் நினைவில் இருக்கும் என்பது அவர்களின் கணக்கு.  சென்னை மத்திய தொகுதி ஒன்றில் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்ட டோக்கன்களில் சில என் கையில் சிக்கின.’’

‘‘கரன்சி காத்து எப்படி எல்லாம் வீசுகிறது என்பதைச் சொல்லும்?”

‘‘ஆம்புலன்ஸ் வேன்கள், ‘மீடியா’ என்கிற ஸ்டிக்கருடன் வலம் வரும் பெரிய ரக கார்கள்...இவற்றின் மூலம்தான் ஆளும் கட்சிக்கு ஆதரவாகப் பணம் கடத்தப்படுவதாகத் தேர்தல் கமிஷன் பறக்கும் படையினருக்குத் தகவல் போயிருக்கிறது. தமிழகம் முழுக்க இந்த வகை வாகனங்களை இதுவரை சோதனை செய்யாமல் விட்டிருந்தார்கள். இனி அவற்றிலும் சோதனை செய்ய தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உத்தரவிட்டிருக்கிறார்.’’

‘‘ம்!”

‘‘ஆம்பூர், குடியாத்தம் பகுதிகளில் தோல் தொழிற்சாலைகள் அதிகம். அங்கெல்லாம் போட்டியிடும் பெரிய கட்சிகளிலிருந்து சிறிய கட்சிகள் வரை, தோல் தொழிற்​சாலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களைக் குறிவைத்து வாக்கு வேட்டை நடத்துகின்றன. சுமார் 20 ஆயிரம் பேர் வரை தொழிற்​சாலைகளில் வேலை பார்க்கிறார்கள். அவர்களிடம், ‘நான் ஜெயித்து வந்தால் 10 நாள் சம்பளத்தை உங்களுக்குக் கொடுத்துவிடுவேன். கெடுபிடி இல்லை என்றால், முன்னரே தருவேன்’ என்கிற ரீதியில் ரகசியப் பிரசாரம் நடக்கிறது. வேட்பாளர் ஒருவர், ‘20 நாள் சம்பளத்தைக் கொடுக்கிறேன்’ என்று தடாலடியாக அறிவித்துள்ளாராம். இப்படி ஒவ்வொரு ஏரியாவிலும் ஒவ்வொரு விதமான அஸ்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன!”

 ‘‘அட!’’

‘‘அ.தி.மு.க சார்பில் ஒரு மாதத்துக்கு முன்பே, மூன்று தொகுதிகளுக்கு ஈஸியாக கொண்டு செல்லும் வகையில், ஆங்காங்கே கல்வி நிறுவனங்களைத் தேர்தெடுத்து அங்கே பணத்தைப் பதுக்கிவிட்டார்கள். பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் அரசியல் கட்சியினரின் பினாமி நிர்வாகத்தில்தான் இயங்குகின்றன. கலைக்குப் புகழ்பெற்ற கோவைக் கல்லூரி தற்போது ஆளும் கட்சி வி.ஐ.பி வசம் போய்​விட்டது. அங்குதான், கொங்கு மண்டலத்துக்கான கரன்சி கட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறதாம். பக்கத்துத் தொகுதிகளுக்கு அங்கிருந்துதான் சப்ளை ஆகிறதாம். ஒவ்வொரு தொகுதிகளிலும் உள்ள சாதி பிரமுகர்கள், கிராம வி.ஐ.பி-க்கள் என்று லிஸ்ட் எடுத்து இரவு நேரங்களில் அவர்களை நேரில் சந்தித்து ‘கவர்’ செய்துவிட்டார்கள். அடுத்த கட்டமாக, அ.தி.மு.க-வின் மேலிட ஆலோசகர்கள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்களுக்கு இரண்டு முக்கிய அசைன்மென்ட் ‘பாஸ்’ செய்தனர். முதலில், தொகுதியில் உள்ள குடியிருப்போர் நல சங்கப் பிரதிநிதிகளைக் கவனித்து அவர்கள் மூலம் குடியிருப்பு வாசிகளுக்கு வைட்டமின் ‘ப’-வை சப்ளை செய்யுங்கள்... அடுத்து, நடுநிலையாளர்களைக் குறிவைக்கச் சொல்லி இருக்கிறார்கள். முடிவெடுக்காத நடுநிலையாளர்கள் மே 10-ம் தேதிக்குப் பிறகுதான் முடிவெடுப்பார்கள். அவர்களிடம் காந்தி நோட்டை காட்டி சரிகட்ட வேண்டும் என்று கட்டளை இட்டுள்ளார்களாம். இதே கோணத்தில்தான் அ.தி.மு.க-வினர் கேன்வாஸிங்கை தொடங்கினார்கள். ஆனால்...!”

‘‘ஆனால்?!”

‘‘திடீரென்று சென்னை மேலிடத்தில் இருந்து வந்த தகவல்  ‘கருத்துக் கணிப்புகள் நமக்கு எதிராக வருகின்றன. தி.மு.க-வை ஜெயிக்கவிடக் கூடாது. நமது முதல் இலக்கு தி.மு.க-வின் துடிப்பான நிர்வாகிகள்தான். அவர்களைக் கவனித்து முடக்குங்கள்’ என்பதாம். இந்த வகையில், விராலிமலை தொகுதியில் குடைச்சலைக் கொடுத்த முக்கியமான தி.மு.க பிரமுகர் முடம் ஆக்கப்பட்டுள்ளாராம். இது சாம்பிள்தான். இப்படி தொகுதிவாரியாக ஆட்களைப் பிடித்து சைலன்ட் ஆக்கவும் பணம் செலவு செய்யப்படுகிறது. தேர்தல் நேரத்தில் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்ட​தாகவோ, குடும்பத்தினருக்கு சிகிச்சை என்று விதவிதமான காரணங்களைச் சொல்லி பிரசாரத்தில் இருந்து ஜகா வாங்கிவிடுவார்களாம் இந்த மாதிரியான ஆட்கள். தமிழகம் முழுக்க இந்த வகையில் ரகசிய அண்டர்ஸ்டாண்டிங் நடக்கிறது.’’

‘‘பணம் கொடுப்பதற்கான ப்ளான்கள் என்ன?’’

‘‘அ.தி.மு.க-வில் புரஃபஷனலாக செயல்படு​கிறார்கள். 50 வாக்காளர்களுக்கு ஒரு சூப்பர்வைசர். இந்த வாக்காளர்களுக்குத் தேர்தலுக்கு முன்பு வரை மூன்று தவணைகளில் டோக்கன்கள் தரப்படும். அதைப் பெறுகிறவர்கள் ஒட்டு போட்டார்களா என்பதை கிராஸ் செக் செய்து விசாரித்து கட்சியின் முக்கியப் பிரமுகர்களுக்கு ரிப்போர்ட் தரவேண்டு​மாம். டோக்கன்களை வைத்திருப்பவர்களுக்குத் திடீர் திடீரென ரகசிய தகவல் போன் மூலம் வரும். அதன்படி, அவர்கள்  சொல்லும் கடைகளில் போய் பொருட்களையோ, பணத்தையோ வாங்கிக்கொள்ளலாம். தென் மாவட்டங்களின் பல தொகுதிகளில் மாளிகைக் கடைகளில் ஒருமாதத்துக்குத் தேவையான வீட்டுச் சாமான்கள் தரப்படுகின்றன. சென்னைப் புறநகர் பகுதிகளில் ஹோட்டல்களில் 10 முதல் 15 நாட்கள் சாப்பிடும் வகையில் வீட்டுக்கு வீடு டோக்கன்கள் தரப்படுகின்றன. இவைகளுடன், வாக்காளர்கள் ஒவ்வொருவரின் தலைக்கும் ரூபாய் 250 முதல் 2,000 ரூபாய் வரை நிர்ணயித்திருக்கிறார்கள். ஆளுக்குத் தகுந்த மாதிரி கரன்சி மழை பொழியத் திட்டம் வைத்திருக்கிறார்கள். நெல்லை ஏரியாவில் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கவரில் போட்டு ரெடியாக வைத்திருக்கிறார்கள். க்ளைமாக்ஸில் எப்படி அவற்றை வீடுகளில் கொண்டுபோய் சேர்க்கப் போகிறார்கள் என்கிற விஷயம் மட்டும் படு சஸ்பென்ஸாக இருக்கிறது.’’

‘‘ஓஹோ?”

 ‘‘கோவையில் ஆளும் கட்சி பிரமுகர் ஒருவர் தொடர்புடைய ஜுவல்லரி கடை இருக்கிறது. ஜவுளிக் கடைகளையும் வைத்திருக்கிறார் அவர். டோக்கன்களை அங்கே கொண்டுபோய் கொடுத்​தால், விரும்பும் பொருட்களை வாங்கிக்கொண்டு போகலாம். அந்தப் பிரமுகர் கடைசி நிமிடத்தில் மூக்குத்திகளைத் தொகுதியில் இறக்கவும் திட்டம் வைத்திருக்கிறாராம்.’’

‘‘அப்படியானால், இந்த மாதிரிக் கடைகளை நடத்துகிற சிலர், வாக்காளர்களுக்குப் பணம், பொருட்கள் கொடுக்க மறைமுகமாக இடம் கொடுக்கிறார்களா?’’

‘‘அப்படித்தான் பேசிக்கொள்கிறார்கள். தென் மாவட்டம் ஒன்றில் ஒரு பிரபலம் போட்டியிடுகிறார். தொகுதிவாசிகள் அந்த வேட்பாளரிடம் போய் ஒரு டோக்கனை வாங்கிக்கொண்டு போய் கடையில் காட்டினால்...ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி.. என்று எது வாங்கினாலும் பிரமிக்கதக்க வகையில் கூடுதல் சலுகை தரப்படுகிறதாம். தமிழகத்திலேயே அதிக பணம் புழக்கம் உள்ள தொகுதியாக அம்பாசமுத்​திரத்தை எதிர்க் கட்சியினர் சொல்கிறார்கள். தாமிரபரணியில் தண்ணீர் ஓடுவதைப்போல இங்கே கரன்சி விளையாடுகிறதாம்.’’

 ‘‘வேறு ஏதாவது நூதன டெக்னிக்கை யாராவது செயல்படுத்துகிறார்களா?’’

‘‘கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதிகளில் வாக்காளர்களுக்கு முதல் மரியாதை இல்லை. அங்கே தரப்படுவது... முதலில், போலீஸாருக்கு. அடுத்து.. பறக்கும் படையில் இடம்பெற்றுள்ள அதிகாரிகளுக்கு. பதவிக்குத் தகுந்தமாதிரி அதிகாரிகளுக்கு கரன்சி தரப்படுகிறதாம். எதிர்க் கட்சியினர் புகார் செய்தால் முதலில் ஸ்பாட்டுக்கு வருகிறவர்களே இவர்கள்​தானே?... இவர்களை முதலில் கவனித்துவிட்டால்... பிறகு என்ன கவலை என்பது ஆளும் கட்சியினரின் பிளான். அடுத்தகட்டமாக, வாக்காளர்களைத் தேடிச் செல்லப்போகிறார்கள். இப்படி எல்லாப் பக்கமும் கரன்சி காத்து அடிக்க ஆரம்பித்து உள்ளது.’’

‘‘அப்படியா?”

‘‘இதில் பணத்தை அமுக்குகிறவர்களைப் பிடிக்கவும் ஆளும் கட்சியில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆளும் கட்சியினரில் யாராவது வசதி ஆகி, ஏராளமாகச் செலவு செய்கிறார்களா என்று பார்க்கிறது ஒரு டீம். கொடுக்கத் தரப்பட்ட பணத்தை சொந்தத்துக்கு பயன்படுத்தும் ஆட்களும் சிக்கி வருகிறார்கள். ‘அங்க கொடுத்துட்டேன், இங்க கொடுத்துட்டேன்’ என்று சொல்லிச் சமாளிக்க முடியாத அளவுக்கு கிடுக்குப்பிடி போட்டும் வருகிறார்கள்.”

‘‘இதற்கு போலீஸ் ஒத்துழைப்பு எப்படி இருக்கிறது?”

‘‘அதாவது ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு பணம் கடத்தப்படுவதை போலீஸ் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. மறைமுக உதவியும் செய்கிறது. ஆனால், வீடுவீடாகக் கொடுக்கும்போது போலீஸார் செல்வது இல்லை. பறக்கும் படை, தேர்தல் கமிஷன் ஆகியவை அலைந்துகொண்டு இருப்பதால், எதற்கு நாம் மாட்டிக்கொள்ள வேண்டும் என்று போலீஸார் நினைக்கிறார்கள். இரண்டு பெரிய கட்சிகளையும் போலீஸார் பகைத்துக்கொள்ள மாட்டார்கள். அதுவும் தேர்தல் நேரத்தில் பகைத்துக்கொள்ள மாட்டார்கள். ஏதாவது பிரச்னை வந்தால், அந்த இடத்துக்குப் போய் சமாதானப் படுத்துவது மாதிரிச் செயல்பட வேண்டும் என்று ஆளும் கட்சிக்கு ஆதரவான அதிகாரிகள் கீழே உள்ள போலீஸாருக்கு உத்தரவு போட்டுள்ளார்கள். ஆனால், போலீஸார் ஏனோ ஆர்வம் காட்டாமல் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.”

‘‘போலீஸுக்குள் இப்போதே பிரிவினை ஏற்பட்டுவிட்டதோ?”

‘‘ஆமாம். தி.மு.க போலீஸ், அ.தி.மு.க போலீஸ் என்று பிரிவினை எப்போதும் உண்டு. இப்போது தேர்தல் நேரம் என்பதால் அதிகமாக இருக்கிறது. இரண்டு பக்கமும் தங்களுக்குக் கிடைத்த தகவல்களை பரப்பி வருகிறார்கள் போலீஸ் அதிகாரிகள். இதில் யார் யார் என்ன செய்கிறார்கள் என்பது தெரியாமல் ஆளும் மேலிடம் விழிபிதுங்கி இருக்கிறது. ஒரே ஒரு உதாரணம் மட்டும் சொல்கிறேன்.

கரூரில் அன்புநாதன் சிக்கினார் அல்லவா? அந்த ஆபரேஷனையே உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் துல்லியமாக நடத்தினாராம். சென்னையில் இருந்த அதி உயர் போலீஸ் அதிகாரிக்கே தெரியாமல், கரூர் அதிகாரிகளைவைத்து அன்புநாதனை நெருங்கவைத்து... பணம் சிக்கக் காரணமாக இருந்தாராம். மேலிடத்துக்குத் தகவல் போய் இந்த அதிகாரியைக் கடிந்துகொண்டார்​களாம். ‘எனக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது. அதை நான் ஃபார்வர்டு செய்தேன். அவ்வளவுதான் ‘என்றாராம் அந்த அதிகாரி. ஆனால், அவர்தான் முழுக்க மாட்டிவிட்டவராம். அதி உயர் அதிகாரி அவரை ரொம்பவே கடிந்துகொண்டாராம். அதனால்தான், அவர் மாற்றப்பட்டு விட்டார் என்றும் சொல்கிறார்கள்” என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகார் பறந்தார்.

அட்டை படம்: சு.குமரேசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக