திங்கள், 30 மே, 2016

இளங்கோவன் : வாக்கு எண்ணிக்கையின்போது காலை 10 மணிக்கே பிரதமர் வாழ்த்தியதால்.... அதிகாரிகள் அதிமுகவுக்கு சாதகமாக....

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக -
காங்., கூட்டணி தோல்வி அடைந்ததற்கு, ஓட்டு எண்ணிக்கை நாளன்று காலை 10 மணிக்கே முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியதே காரணம் என தமிழக காங்., தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டசபை காங்., தலைவர் கொறடா பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்து, சென்னை சத்யமூர்த்தி பவனில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது இளங்கோவன் அறிவித்தார். சட்டசபை தலைவராக காரைக்குடி எம்.எல்.ஏ., ராமசாமியும், கொறடாவாக விளவன்கோடு எம்.எல்.ஏ., விஜயதாரணியும் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு இளங்கோவன் பதிலளித்தார்.

அப்போது அவர், தமிழகத்தில் திமுக, அதிமுக.,விற்கு அடுத்த பெரிய இயக்கமாக காங்கிரஸ் உருவெடுத்துள்ளது. தமிழக சட்டசபையில் மக்களின் பிரச்னைக்காக திமுக.,வுடன் இணைந்து ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் செயல்படும். தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தியதை தமிழக அரசு தடுக்க வேண்டும். தேர்தல் அறிக்கையில் கூறியதை போன்று ஆவின் பால் விலையை ஜெயலலிதா உடனடியாக குறைக்க வேண்டும். அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது சரியானது அல்ல.
தேர்தல் தோல்விக்கு ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டுவது சரியல்ல. இருந்தாலும், தமிழக சட்டசபை தேர்தலில் வாக்காளர்களுக்கு அதிமுக பணம் கொடுத்ததும், ஓட்டு எண்ணிக்கை நாளன்று காலை 10 மணிக்கே முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததுமே திமுக-காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்ததற்கு காரணம். கா்ஙகிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெறாததற்கு, திமுக.,வினர் சரியாக வேலை செய்யாததே காரணம் என்று திமுக.,வினரே ஒப்புக் கொண்டுள்ளனர் என இளங்கோவன் தெரிவித்தார்.
இந்த பேட்டியின் ஆரம்பத்தில், " இன்று நல்ல நாள் யாரையும் திட்டவோ குறை கூறவோ விரும்பவில்லை" என்று குறிப்பிட்ட இளங்கோவன். பிரதமர் மோடி, அதிமுக., மற்றும் திமுக.,வினரை குறை கூறி பேட்டி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக