செவ்வாய், 31 மே, 2016

கலைஞர்: காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் திமுகவினர் முழுவீச்சுடன்....செயல்பட்டனரா?

திமுக தலைவர் கலைஞர் வெளிளியிட்டுள்ள கேள்வி பதில் வடிவிலான அறிக்கை:b>கேள்வி :- முல்லைப் பெரியாறு அணை  விவகாரம் பற்றித் தமிழக அரசுடன்  சுமூகமாகப் பேசித் தீர்வு காண விரும்புவதாகக் கேரள முதலமைச்சர், பினராயி விஜயன் தெரிவித்திருக்கிறாரே?
கலைஞர் :- கேரள முதல்வராகப் பொறுப்பேற்ற பின் டெல்லிக்குச் சென்ற பினராயி விஜயனிடம்,  செய்தியாளர்கள் முல்லைப் பெரியாறு விவகாரத்தில்  கேரள  அரசின் நிலைப்பாடு குறித்துக் கேட்ட போது இவ்வாறு கூறியிருக்கிறார். மேலும்  “தற்போதுள்ள  முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்ட வேண்டுமென்ற  முந்தைய கேரள அரசின் கொள்கையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. முல்லைப் பெரியாறு அணை வலுவுடன் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் அணையைப் பார்வையிட்டு,  பல்வேறு ஆய்வுகள் நடத்திய பிறகே  அறிக்கை அளித்துள்ளனர்.  அந்தக் குழுவின் கருத்தை கேரள அரசு ஏற்கிறது. அணை விவகாரத்தில் எவ்வித முரண்பாடுகளையும்  கடைப்பிடிக்க நாங்கள் விரும்பவில்லை.  எந்தப் பிரச்சினை ஆனாலும் தமிழக அரசுடன் நேரடியாகவே  பேசித் தீர்வு காண்போம்”  என்று முதல்வர் பினராயி விஜயன் கூறியிருப்பது  மகிழ்ச்சியளிக்கிறது;


அவருடைய கருத்து வரவேற்கத்தக்கது.  இந்த நல்ல சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள தமிழக முதல்வர்  ஜெயலலிதா  முன்வர வேண்டும்.   முல்லைப் பெரியாறு பிரச்சினையில் மத்திய அரசுக்கும், கேரள அரசுக்கும் கடிதங்கள் எழுதியவன் என்ற முறையிலும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படியும்,  பிரதமராக இருந்த திரு. மன்மோகன் சிங்  அவர்களின் ஆலோசனைப்படியும் கேரள முதல்வரோடு பேச்சுவார்த்தைகள் நடத்தியவன் என்ற முறையிலும், முல்லைப் பெரியாறு பிரச்சினையை  உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றவன் என்ற முறையிலும், பிரச்சினையை நல்ல முடிவுக்குக் கொண்டு வரத் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டவன் என்ற முறையிலும் இதை நான் கூறுகிறேன்.

;கேள்வி :- தி.மு.கழகக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்குக் கொடுக்கப்பட்ட தொகுதிகளில் 80 சதவிகிதத் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்து விட்டார்களே?

கலைஞர் :- காங்கிரஸ் கட்சிக்குக் கொடுக்கப்பட்ட மொத்தம் 41 தொகுதிகளில் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார்கள்; மீதமுள்ள 33 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கிறது; அதுவே அ.தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கக் காரணமாகி விட்டது; எனவே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பது தி.மு.க.வுக்குப் பேரிழப்பாக முடிந்து விடுகிறது - என்று  தி.மு. கழகச் செயல்வீரர்கள் விவாதித்துக் கவலை கொண்டிருப்பதாக, ஒரு சில நாளேடுகளும் ஊடகங்களும் கருத்து தெரிவித்து, கலக விதை ஊன்றி வருகின்றன. அந்தச் சில நாளேடுகளும், ஊடகங்களும் எவை என்று அவற்றின் பின்னணியை ஆராய்ந்து பார்த்தால், அவை எல்லா சந்தர்ப்பங்களிலும் தி.மு.க.வை இழித்தும் பழித்தும் அ.தி.மு.க.வை வலிந்து அரவணைத்தும் ஆதரித்தும் பிரச்சாரம் செய்து; மெதுவாக நஞ்சு செலுத்துபவை என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

தி இந்து” ஆங்கில நாளேட்டுக்கு நான் அளித்த பேட்டியில், “தி.மு.கழகக் கூட்டணிக் கட்சிகள் 60 இடங்களில் போட்டியிட்டு, 9  இடங்களில் வெற்றி பெற்றுள்ளன; இது 15 சதவிகிதம்தான். இதற்குக் காரணமாக கூட்ட ணிக் கட்சிகளை நான் சிறிதும் குறை கூற விரும்ப வில்லை.  அந்தத் தொகுதிகளில் தி.மு. கழக உறுப்பினர்கள், அவர்களை வெற்றி பெறச் செய்கின்ற அளவுக்கு அவர்களுடன் இணைந்து முழு மூச்சோடு உழைக்கவில்லையோ என்றுதான் கருதுகிறேன்” என்று நான் சொன்னதை  மறைத்து,  தி.மு. கழகத்திற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே உள்ள புரிதலையும், நட்பையும் கெடுப் பதற்கென்றே சிலர் வரிந்து கட்டிக் கொண்டு வேலை பார்த்து வருகிறார்கள். இந்தச் “சேவை”யில்  மத்திய அரசின் உளவுத் துறையும்  ஈடுபடுத்தப்பட்டு, தனது கைவரிசையைக் காட்டி வருவதாகவும், கற்பனைத் தகவல்களை  ஆங்காங்கே  ஊன்றி வருவதாகவும் எனக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்களுடைய  நோக்கமெல்லாம், தி.மு. கழகத்திற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கசப்புணர்வை  உருவாக்கி,  ஊதிப் பெருக்கி, தேசிய அரசியல் அரங்கில்  தி.மு.க. தனிமைப்படுத்தப்பட வேண்டும்; தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சி  பலவீனப்பட வேண்டும்;   அதே நேரத்தில், பா.ஜ.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் இடையே உள்ள மறைமுகக் கூட்டும், திரை மறைவுப் பேச்சும், பரஸ்பர இலாபமும் தங்கு தடையின்றித் தொடர்ந்திட வேண்டும் என்பதுதான்.  இதனைத் தி.மு. கழகத்தின் உடன்பிறப்புகளும், கூட்டணிக் கட்சிகளின் தோழர்களும் நன்கு புரிந்து கொள்ள வேண்டுமென விரும்பு கிறேன்.

கேள்வி :- “தமிழகத்தின் நலன்களுக்காக, தி.மு.க.வுடன் இணைந்து செயல்பட”  விருப்பம்  தெரிவித்துள்ள ஜெயலலிதாவின்  நாகரிகத்தையும், நல்லெண்ணத்தையும் தாங்கள் கெடுத்து விடுவீர்கள் என்ற பிரச்சாரத்தைச் சிலர் முன்னெடுத்திருக்கிறார்களே?<>கலைஞர் :- ஜெயலலிதா முதல் அமைச்சராகப் பதவியேற்ற நிகழ்ச்சிக்கு  தி.மு. கழகத்தின் சார்பில் கழகப் பொருளாளர், தம்பி மு.க.ஸ்டாலின் அரசியல் நாகரிகம் கருதிச் சென்றிருந்த போது, அவர் கூட்டத்தோடு கூட்டமாக அமர வைக்கப்பட்டதையும், எவ்வித “புரொட்டக்கால்” அம்சங்களும் அனுமதிக்காத பலர், முதல் வரிசையில்  இடம் பெற்றிருந்ததையும் சுட்டிக்காட்டி நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

உடனே ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், “Had the Officers brought  to my Notice  that Thiru M.K. Stalin would be attending the event,  I would have instructed the Officers in charge of the arrangements to provide  him a Seat in the First Row,  relaxing the norms in the  Protocol  Manual” என்று குறிப்பிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாகத்தான், ஜெயலலிதா ஏதோ அரசியல் நாகரிகம் போற்ற முன் வந்திருப்பதாகவும்,  நான் அதைப் புரிந்து கொள்ளாமல் கெடுக்க முயற்சி செய்வதாகவும் சிலர் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.;

முன்பொரு முறை, ஜெயலலிதா பதவியேற்பு  நிகழ்ச்சிக்குக் கழகத்தின் சார்பில் கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்கள் சென்றிருந்த போதும், உரிய மரியாதை கொடுத்து இருக்கை ஒதுக்கீடு செய்யப்படவில்லை.  அப்போது ஜெயலலிதா என்ன விளக்கம் அளித்தார்?  8-3-2002 அன்று “தி இந்து” ஆங்கில நாளேடு வெளியிட்ட செய்தி பின்வருமாறு :

“She (Jayalalithaa)  clarified that  she had no knowledge of the Seating Order for V.I.Ps. at the Ceremony. She  assumed that all proper arrangements had been made.  Only after the Ceremony started did she notice Mr. Anbazhagan in the Sixth Row” என்று ஜெயலலிதா விளக்கம் அளித்திருந்தார்."

ஜெயலலிதா 2002ஆம் ஆண்டு அளித்த விளக்கத்திலிருக்கும் அரசியல் நாகரிகத்திற்கும்,  பதினான்கு ஆண்டுகள் கழித்து இப்போது அளித்திருக்கும் விளக்கத்தில் உள்ள அரசியல் நாகரிகத்திற்கும், ஏதேனும் வித்தியாசம் உண்டா என்றால் நிச்சயமாக இல்லை என்பதை  யாரும் எளிதில் புரிந்து  கொள்ளலாம்.  அதுமட்டுமா?  புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள்  பதவியேற்க, சட்டப்பேரவையின்  முதல் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள ஐந்தாண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நான் பேரவைக்குள்  சென்றேன்.   நான் பேரவைக்குள் செல்வதை அறிந்த ஜெயலலிதா, “விருட்”டென்று எழுந்து வெளியேறினாரே;  அவருடைய வெளிநடப்பு,  அவர் திருந்திவிட்டார் என்பதையா காட்டுகிறது? அவர் அப்படி வெளியேறியது எவ்வகை அரசியல்  நாகரிகத்தின்பாற்பட்டது?

தொடர்ந்து ஜெயலலிதாவின் தொலைக் காட்சியிலும், அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேட்டிலும் என்னைப் பற்றியும், என் குடும்பத்தைப் பற்றியும், தி.மு. கழகத்தைப் பற்றியும் பண்பாடற்ற - அநாகரீகமான மொழியில் தானே அர்ச்சிக்கிறார்கள்! அண்ணா சொன்னபடி “வாழ்க வசவாளர்கள்” என்று அனைத்தையும் கண்டும், கேட்டுக் கொண்டும் அமைதியாகத்தான் அரசியல் பயணம் செய்கிறேன்.

அவரது தொலைக்காட்சியில் நடப்பதும், நாளேட்டில் அர்ச்சிக்கப்படுவதும் ஜெயலலிதாவுக்குத் தெரியாமலா நடக்கிறது?  பிள்ளையையும் கிள்ளி விட்டு,  தொட்டிலையும்  ஆட்டும்  கலையை பிறர் அவருக்குப் போதிக்க வேண்டுமா, என்ன? இப்படி ஒரு பக்கம் அரசியல் நாகரிகத்தையும், பண்பாட்டையும் அடித்துத் துவைத்துக் காயப்படுத்துவதும்;  மறு பக்கம் “இணைந்து செயல்பட” விருப்பம் தெரிவிப்பதைப் போல் நயவஞ்சக நாடகமாடுவதும்தான் அரசியல் நாகரிகம் என்றால்;  நாடகத்தில் அடுத்து நடக்கப் போகும் காட்சி என்ன?<>கானகத்துக் கடும் புலி கவரிமான் வேடம்  போடுகிறது. உங்களையும் கடித்துக் குதறும் போதுதான் வேடம் என்பது தெரியும்; நாவில் நெளிவது  விஷம் என்பது புரியும்   nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக