ஞாயிறு, 29 மே, 2016

திமுக செயற்குழுவில் காங்கிரசுக்கு கணிசமான அர்ச்சனை

காங்கிரசுடன் கூட்டணி வேண்டாம்:' செயற்குழுவில் வெடித்த நிர்வாகி 'கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன்; தயவு செய்து, உள்ளாட்சி தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி அமைக்க வேண்டாம்' என, தி.மு.க., செயற்குழுக் கூட்டத்தில், குளித்தலை சிவராமன் ஆவேசமாக பேசினார். சட்டசபை தேர்தல் தோல்வி குறித்து ஆராய்வதற்காக, தி.மு.க., செயற்குழுக் கூட்டம் சென்னை அறிவாலயத்தில் நடந்தது. கூட்டத்திற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். பொது செயலர் க.அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின், மகளிர் அணி மாநில செயலர் கனிமொழி, முதன்மை செயலர் துரைமுருகன், துணை பொது செயலர்கள் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி மற்றும் வெற்றி பெற்ற தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்கள், செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


கூட்டத்தில், தி.மு.க., பிரமுகர்கள் பேசியது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:முதன்மை செயலர் துரைமுருகன்:நாம் ஆட்சியை இழந்திருக்கலாம்; ஆனால், கட்சி ரீதியாக வெற்றி பெற்று விட்டோம். உதிரி கட்சிகளை உதிர்த்து விட்டோம். ஸ்டாலின் கடின உழைப்பு வீண் போகவில்லை. அடுத்த தேர்தலில், ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., ஆட்சி அமைக்கும். தலைமை செயற்குழு உறுப்பினர் குளித்தலை சிவராமன்:

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி இலக்கை நோக்கி பணியாற்றவில்லை. தி.மு.க.,வினர் காலை, 5:00 மணிக்கு எழுந்து, இரவு, 12:00 மணி வரை பம்பரமாக சுழன்று பணியாற்றினர். காங்கிரஸ்
வெற்றி பெற்ற சில இடங்களும் கூட, தி.மு.க.,வினர் கடுமையாக பணியாற்றியதால், கிடைத்தவை. அவர்கள் கூடுதலாக இருபது இடங்களில் வெற்றி பெற்றிருந்தால், தமிழகத்தில், கட்டாயம் தி.மு.க., ஆட்சி அமைந்திருக்கும்.

தொகுதிக்கு கொஞ்சமும் அறிமுகம் இல்லாத வேட்பாளர்களை அறிவித்து, காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது. அவர்களின் மமதையான அணுகுமுறையே, கூட்டணிக்குதோல்வியை தந்துள்ளது. இனியும் அவர்களோடு, கூட்டணி வேண்டாம். இதற்கு தலைவர்கள் அனைவரும் ஏற்பாடு செய்ய வேண்டும். உள்ளாட்சி தேர்தலில், எக்காரணம் கொண்டும், காங்கிரசுடன் கூட்டணி அமைக்கக் கூடாது.
கோவை வடக்கு தொகுதி வேட்பாளர் மீனா லோகு:என் தோல்விக்கு, தி.மு.க., நிர்வாகிகள் தான் காரணம். ஒரு வட்ட செயலர், தன் மகளுக்கு திருமணம் என சொல்லி விட்டு சென்று விட்டார். மற்றொரு வட்ட செயலர், தேர்தல் பணிமனையில், 7:00 மணிக்கே, மது அருந்தி விட்டு படுத்து விட்டார். தேர்தல் பணி மனை அமைக்க பணம் வாங்கி சென்ற கட்சி நிர்வாகிகள் பலரும் பணிமனை கூட அமைக்கவில்லை.
தலைமை செயற்குழு உறுப்பினர் கருப்பண்ண ராஜா::மதுரை மாவட்ட வேட்பாளர்கள் தோல்விக்கு, மாவட்ட நிர்வாகிகள் தான் முக்கிய காரணம். நிர்வாகிகள் முறையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை. கட்சியினரிடம் முறையாக தேர்தல் பணிகளை வாங்கவில்லை. தோல்விக்கு பாடுபட்ட, கட்சி நிர்வாகிகள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வர்த்தக அணி செயலர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம்: தி.மு.க., 174 தொகுதிகளில் போட்டியிட்டு, 89 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. கூட்டணிக் கட்சிகள், 60 தொகுதிகளில் போட்டியிட்டு, 6ல் ஒரு பங்கு வெற்றியை கூட பெற முடியவில்லை.கூட்டணிக் கட்சிகளுக்கு, தொகுதிகளை, தகுதிக்கேற்ப அளந்து கொடுத்திருந்தால், இப்படிப்பட்ட தோல்வியை நாம் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. குறைந்தபட்சம், கூட்டணி கட்சிகளை உதயசூரியன் சின்னத்திலாவது போட்டியிட வைத்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், கூடுதல் வெற்றி கிட்டி இருக்கும்.

திராவிட இயக்கங்களை ஒழித்து விடுவோம் என, கங்கணம் கட்டிய பா.ஜ., - பா.ம.க., போன்ற கட்சிகள் தோல்வியை தழுவியுள்ளன. அவர்கள் முயற்சிகளை முறியடித்து, வழக்கம் போல, திராவிட கட்சிகள் வெற்றி பெற்று விட்டன. ஆட்டுக்கு, கூர்மையான காது, கூர்மையான கொம்பு ஆகிய இரண்டும் சரியாக இருந்தால், எதிரிகளுடன் மோத முடியும். அதுபோல கட்சிக்கு புதுமுகங்களும் நிறைய தேவைப்படுகின்றனர்.இவ்வாறு அவர்கள் பேசியதாக, கட்சி வட்டாரங்களில் கூறினர்.

முரண்டு பிடித்த ஸ்டாலின்!:தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தின் மூலம், சட்டசபை கட்சித் தலைவராக, கட்சியின் தலைவர் கருணாநிதி, தேர்ந்தெடுக்கப்படப் போகிறார் என்ற தகவல் கிடைத்ததும், முன்னதாக நடந்த தலைமை செயற்குழுகூட்டத்துக்கு கிளம்பிய ஸ்டாலின், வீட்டிலேயே இருந்து விட்டார்.

கூட்டம் துவங்கிய பின்னும் ஸ்டாலின் வரவில்லை. இந்தத் தகவல் கருணாநிதிக்கு செல்ல, முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, எ.வ.வேலு மூலம், ஸ்டாலினை சமாதானப்படுத்தி, கூட்டத்துக்கு வரவழைத்தார். பின், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் மூலம்,

சட்டசபை தி.மு.க., தலைவராக ஸ்டாலினை அறிவித்து, ஸ்டாலினை குஷிப்படுத்தினார் கருணாநிதி.

- நமது நிருபர் -  தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக