செவ்வாய், 17 மே, 2016

மழையையும் மீறி வாக்கு பதிவு எகிறியது...கட்சிகள் திகிலில் ? யாருக்காக? யாருக்காக? இது யாருக்காக?

தமிழகத்தில் 232 சட்டசபை தொகுதிகளில் நேற்று நடந்த ஓட்டுப்பதிவில் 73.85 சதவீதஓட்டுகள் பதிவாகின. வங்க கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்த போதும் பொது மக்கள் ஆர்வமாக திரண்டு வந்து ஓட்டளித்தனர். இதனால் யாருக்கு வாய்ப்பு என தெரியாமல் கட்சிகள் பீதி அடைந்துள்ளன.தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளிலும் நேற்று ஓட்டுப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்ட புகாரால், தஞ்சாவூர், அரவக்குறிச்சி
தொகுதிகளுக்கான தேர்தல் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.மீதமுள்ள 232 சட்டசபை தொகுதிகளுக்கும் நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. இந்தத் தொகுதிகளில் 65 ஆயிரத்து 486 ஓட்டுச்சாவடிகள், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் அதிகாலையிலே மக்கள் ஆர்வமுடன் ஓட்டளிக்க குவிந்தனர்.


நீண்ட வரிசை



இளைஞர்கள், இளம்பெண்கள், முதியோர் என அனைத்து தரப்பினரும், நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டளித்தனர். காலையில் அனைத்து மாவட்டங்களிலும் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், கடலுார் ஆகிய மாவட்டங்களில், காலை முதல் காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் அந்த மாவட்டங்களில் குடை பிடித்தபடியும், மழையில் நனைந்தபடியும் வந்து வாக்காளர்கள் ஓட்டளித்தனர்.சில பகுதிகளில் மழை காரணமாக மின் தடை ஏற்பட்டது. அங்குள்ள ஓட்டுச்சாவடிகளில் 'எமர்ஜென்சி' விளக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு
ஓட்டுப்பதிவு நடந்தது. சென்னையில் காலையில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக இருந்தது; மதியத்திற்கு பிறகு மந்தமானது.ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது, போலி மை என சிறு சிறு பிரச்னைகள் ஆங்காங்கே எழுந்தன. வேறு அசம்பாவிதங்கள் எதுவுமின்றி ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. ஓட்டுப்பதிவு துவங்கிய நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ஓட்டுப்பதிவு நிலவரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி காலை 9:00 மணிக்கு 18.3 சதவீதம்; 11:00 மணிக்கு 25.2; மதியம் 1:00 மணிக்கு 42.10; மதியம் 3:00மணிக்கு 63.7; மாலை 5:00 மணிக்கு 69.19 சதவீத ஓட்டுகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் மாலை 6:00 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவுபெற்றது.

மொபைல் சேவை பாதிப்பு



சில ஓட்டுச் சாவடிகளில் மாலை 6:00 மணிக்கு முன் வந்து ஓட்டுப் போட காத்திருந்தோருக்கு 'டோக்கன்' வழங்கப்பட்டு அவர்கள் ஓட்டளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.மழையால் பல இடங்களில் மொபைல் போன் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் ஓட்டுச்சாவடி அலுவலர்கள்,
ஓட்டுப்பதிவு விவரத்தை, அதிகாரிகளுக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் தமிழகத்தில் மொத்த ஓட்டுப்பதிவு சதவீதம் தெரிய கால
தாமதம் ஏற்பட்டது.கடந்த 2011 சட்டசபை தேர்தலில் 78.12 சதவீதம்; 2014 லோக்சபா தேர்தலில் 73.68 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. இம்முறை, 73.85 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன.மாலை நிலவரப்படி,
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தொகுதியில் அதிகபட்சமாக 85 சதவீத ஓட்டுகள் பதிவாகின. வழக்கம் போல் சென்னை மாவட்டத்தில் ஓட்டுப்பதிவு சதவீதம் 65 சதவீதம் என்ற அளவுக்கு குறைவாக இருந்தது. பொதுவாக கிராம பகுதிகளில் ஓட்டுப்பதிவு
அதிகமாகவும், நகரங்களில் குறைவாகவும் இருந்தது.ஓட்டுப்பதிவு முடிந்ததும், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் 'சீல்' வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. ஓட்டு எண்ணிக்கை 19ம் தேதி காலை8:00 மணிக்கு துவங்குகிறது.

மூன்றடுக்கு பாதுகாப்பு


சென்னை:ஓட்டு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.தமிழகத்தில் பதிவான ஓட்டுகள் 68 ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அம்மையங்களுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 1,800 துணை ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
'சீல்' வைக்கப்பட்ட அறைக்குள் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அறை முன் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அப்பகுதியை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சட்டசபை தேர்தல்ஆண்டு வாரியாக பதிவான ஓட்டு சதவீதம்
தேர்தல் ஆண்டு - சதவீதம்
1952 - 55.34
1957 - 46.56
1962 - 70.65
1967 - 76.57
1971 - 72.10
1977 - 61.58
1980 - 65.42
1984 - 73.47
1989 - 69.69
1991 - 63.84
1996 - 66.95
2001 - 59.07
2006 - 70.82
2011 - 78.01
2016 - 73.85

சபாஷ் லக்கானி



தேர்தலில் ஓட்டுப்பதிவை அதிகரிக்கவும் பணப்பட்டுவாடாவை தடுக்கவும் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பெரும் முயற்சி மேற்கொண்டார். பணம் வாங்க மாட்டோம்; பணம் கொடுக்க வருவோரை பிடித்து கொடுப்போம் என 1.64 கோடி பேர் ஒரே நேரத்தில் உறுதிமொழி எடுக்க ஏற்பாடு செய்தார். பணப்பட்டுவாடாவைத் தடுக்க பல குழுக்கள் அமைக்கப்பட்டன. கிராமங்களை இளைஞர் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டன.

பணப்பட்டுவாடா புகாரால் அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளின் தேர்தல் தள்ளிவைக்கப்பட்ன. விடாது மழை பெய்தாலும் பல்வேறு முயற்சிகளால் ஓட்டுபதிவு பெரிய அளவிலான பிரச்னைகள் இன்றி முடிக்கப் பட்டுள்ளது.

- நமது சிறப்பு நிருபர் -  தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக