செவ்வாய், 17 மே, 2016

அருந்ததி ராய் :எனது அரச துரோக இதயம் 2

ஆபத்தானதைச் சொல்வது போன்று உள்ளது. எனவே, பீமராவ் அம்பேத்கர் பின்னால் ஒளிந்து கொள்ள நினைக்கிறேன். சாதி ஒழிப்பு எனும் நூலில் 1936-ம் வருடம் அவர் எழுதும்போது, 'முதலில் புரிந்துகொள்ளப்பட வேண்டிய விசயம் என்னவென்றால், இந்து சமூகம் என்பது ஒரு கற்பனை. இந்து என்பதே ஒரு அந்நிய பெயர். முஸ்லிம்கள் தங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காக பூர்வகுடிகளுக்கு (சிந்து நதியின் கிழக்கில் வாழ்ந்தவர்கள்) வழங்கிய சொல். எப்படி, ஏன் சிந்து நதியின் கிழக்கில் வாழ்ந்தவர்கள் தங்களை இந்துக்கள் என்று அழைத்துக் கொண்டார்கள்? என்பதை தெரிந்து கொள்ளலாம். பேரரசன், மன்னர் வகை அரசியல் 19ம் நூற்றாண்டின் இறுதிவாக்கில் முடிவுக்கு வந்தது. பிரதிநிதித்துவ ஜனநாயக அரசியல் செல்வாக்குப் பெற தொடங்கியது. முரண்நிலையாக, இங்கிலாந்து ஏகாதிபத்திய அரசுதான் இதை தனது காலனி நாடுகளில் அறிமுகப்படுத்தியது.
பிரதேச பகுதிகளைப் பிரித்து, எல்லைகளை வரையறுத்து இந்தியா என்ற நவீன தேச-அரசை உருவாக்கியது காலனிய அரசு. மேலும், உள்ளூர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுயாட்சி அமைப்புகளை ஏற்படுத்தியது. சாதாரண பிரஜைகளாக இருந்தவர்கள் படிப்படியாக குடியுரிமைபெற்ற குடிமக்கள் ஆனார்கள். குடிமக்கள் பின்னர் வாக்காளர்கள் ஆனார்கள்.

சிக்கலான வலைப்பின்னல்கொண்ட பழைய மற்றும் புதிய பற்றுறுதிகள், நட்புறவு மற்றும் விசுவாசத்தின் அடிப்படையிலான கூட்டுத் தொகுதிகளாக இந்த வாக்காளர்கள் மாறினார்கள். இப்படி உருவானபின்னரும் இந்த புதிய தேசம் அதன் ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராட வேண்டியிருந்தது. அந்தப் போராட்டம் ராணுவ பலத்துடன் இருக்கும் ஆட்சியாளரை தூக்கியெறிந்து அரியணையைக் கைப்பற்றுவதாக இருக்கவில்லை. இந்தப் புதிய ஆட்சியாளர்கள் எவராக இருப்பினும் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த பிரதிநிதித்துவ ஆட்சிமுறை புதிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியது. விடுதலைப் போராட்டத்தின் எண்ணங்களை யாரால் சரியாகப் பூர்த்திசெய்ய முடியும்? எந்த மக்கள் தொகுதி பெரும்பான்மை பெறும்? என்பன போன்றவை அது.

'ஓட்டு வங்கி' அரசியல் என்று, இன்று நாம் அழைப்பதன் தொடக்கமாக இது இருந்தது. மக்கள் தொகை ஆய்வு அனைவரையும் பிடித்தாட்டும் ஒரு நோயாக இன்று மாறியிருக்கிறது. சாதியின் பெயரால் மட்டுமே முன்பு அடையாளப்பட்டவர்கள், ஒரே பதாகையின்கீழ் கட்டப்பட்டு பெரும்பான்மையாக உருவானது குறிப்பிடத்தகுந்தது. அது, தங்களை இந்துக்கள் என்று அழைக்கத் தொடங்கியதிலிருந்து உருவான மாற்றம். மற்றபடி, ஒருங்கிணையச் சாத்தியமே இல்லாத பன்மைச் சமூகத்தில் ஒரு அரசியல் பெரும்பான்மை உருவானமுறை இதுதான். ‘இந்து’ என்ற பெயர் முஸ்லிம், சீக்கியர், கிறிஸ்தவர் என்பதைப் போன்ற ஒரு மத அடையாளமாக இருப்பதைவிடவும் ஒரு அரசியல் தொகுதியாகவே அதிகம் உணரப்படுகிறது. இந்து தேசியவாதிகளும், அதிகாரபூர்வ 'மதச்சார்பற்ற' காங்கிரஸ் கட்சியும் 'இந்து' ஓட்டைப் பெற்று உரிமை கோருகிறார்கள்

இந்தநிலையில்தான், ஒரு குழப்பமான போட்டி 'தீண்டத்தகாதவர்கள்' அல்லது 'விலக்கப்பட்டவர்களின்' ஆதரவைப் பெறுவதில் ஏற்பட்டது. (சாதி அமைப்பு முறையில் இந்தப் பிரிவு மக்கள் விலக்கிவைக்கப்பட்டாலும், அவர்களும் தனிச் சாதிகளாக பிரிக்கப்பட்டவர்களே.) நாம் வாழும் காலத்தின் இந்த அரசியல் குழப்பநிலையை புதிதாகப் புரிந்துகொள்ளவும், குறைந்தபட்சம் இந்த நூற்றாண்டில் தொடரும் போட்டியை கருத்தியல்ரீதியாகத் தெரிந்து கொள்ளவும் தலித் மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை முக்கிய ஒன்றாக இருக்கிறது. ;">முந்தைய நூற்றாண்டுகளில் சாதியின் கசையடியிலிருந்து தப்பிக்க, லட்சக்கணக்கான தீண்டத்தகாத மக்கள் (அம்பேத்கரும் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பதால் மட்டுமே நான் பயன்படுத்துகிறேன்.) புத்த மதத்துக்கும், சீக்கிய மதத்துக்கும், கிறித்தவத்துக்கும் மதம் மாறினார்கள். இந்த மத மாற்றங்கள் உயர்சாதிகளிடையே எந்த சலசலப்பையும் ஏற்படுத்தக் காரணமாக இருந்ததில்லை. ஆனால், மக்கள் தொகைக் கணக்கு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கத் தொடங்கியதுடன், இந்து மதத்தில் ஏற்படும் கசிவு உடனே சரி செய்யவேண்டிய ஒன்றாக உணரப்பட்டது. அருகில் அண்டவிடாமல் ஒதுக்கியும், மிகக் கொடூரமாக ஒடுக்கப்பட்டும் வந்த மக்கள், இந்து மக்கள் தொகுதியின் எண்ணிக்கையைப் பெருக்கும் தொகையாக கருதப்பட்டார்கள். தாஜா செய்து 'இந்து சட்டகத்துக்குள்' கொண்டுவர வேண்டியவர்கள் ஆனார்கள்.

இந்து நற்செய்தி பரப்புரையின் தொடக்கமாக அது அமைந்தது. இன்று நாம் அறியும் 'கர் வாப்ஸி' அல்லது வீடு திரும்புதல் என்பது 'சுத்தமற்ற' தீண்டத்தகாத மக்களையும், ஆதிவாசிகளையும் 'தூய்மைப்படுத்த' ஆதிக்கச் சாதிகள் கடைப்பிடித்த ஒரு சடங்கு.

இதன் நோக்கம் என்னவென்றால் முன்பும் சரி, இப்போதும் சரி-ஆதி மற்றும் தொல்குடி மக்கள் ஏற்கனவே இந்துக்களாக இருந்தவர்கள் என்றும், இந்து மதம்தான் அவர்களின் மூலம் என்றும், இந்து மதம்தான் இந்த துணைக்கண்டத்தின் மதம் என்றும் ஏற்கச் செய்வது. சாதியமைப்பை ஒருபுறம் போற்றிக்கொண்டு தீண்டத்தகாதோரை அரசியல்ரீதியாக அரவணைக்கும் வேலையை இந்து தேசியவாதிகளில் இருக்கும் உயர்சாதிகள் மட்டும் செய்யவில்லை. காங்கிரசில் இருக்கும் அவர்கள் சகபாடிகளும் இதைத்தான் செய்கிறார்கள். பீமராவ் அம்பேத்கருக்கும், மோகன்தாஸ் காந்திக்கும் இருந்த பழம்பெரும் மோதலின் காரணம் இதுதான். இந்திய அரசியலின் அமைதியைத் தொடர்ந்து மிகத் தீவிரமாக குலைக்கும் காரணமாகவும் இருந்து வருகிறது. இன்றளவும்கூட தனது இந்து ராஷ்டிர கருத்தாக்கத்தை முறையாகக் காப்பாற்றவேண்டி, இந்து மதம் நிந்திக்கும், பழிக்கும் தலித் மக்களின் பெரும்பான்மையோரை ஏற்கவேண்டிய கட்டாயத்தில் பா.ஜ.க. இருக்கிறது. இது, ஆச்சரியம் கொள்ளத்தக்கவகையில் சில வெற்றிகளை ஈட்டியுள்ளது. தீவிர அம்பேத்கரிய தலித்துகளில் சிலரை இழுக்கவும் முடிந்துள்ளது. இந்த முரண்நிலைதான் தற்போதைய அரசியல் சூழலை சூடேற்றி, எரியூட்டவைத்து குழப்பமுறச் செய்கிறது.

இந்து தேசியவாதம் மற்றும் பா.ஜ.க-வின் சித்தாந்த நிறுவனமான ஆர்.எஸ்.எஸ். உருவான 1925ம் வருடத்திலிருந்து பல்வேறு சாதிகளையும், சமூகங்களையும், பழங்குடிகளையும், மதங்களையும் மற்றும் தேசிய இனங்களின் அடையாளங்களையும் மங்கச் செய்து, இந்து ராஷ்டிரம் என்ற பதாகையின்கீழ் ஒருங்கிணைக்கும் வேலையில் இறங்கியது. இந்த முயற்சி புயல் வீசும் கடலிலிருந்து பிரம்மாண்ட, அழியாத பாரதமாதா கற்சிலையை - வலதுசாரி இந்துவின் இந்து தாய் உருவகம் - வடிவமைப்பதற்கு ஒப்பானது. நீரிலிருந்து கற்சிலையை உருவாக்குவது நடைமுறை சாத்தியமில்லாதது. ஆனால், ஆர்.எஸ்.எஸ்-ஸின் பல வருட முயற்சி கடல்நீரை மாசுபடுத்தியிருப்பதோடு கடல்வாழ் உயிரினங்களையும் மீளமுடியாத பாதிப்புக்குள்ளாக்கி இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்-ஸின் கேடுகெட்ட சித்தாந்தம் - இந்துத்துவம் என்றழைக்கப்படுவது மற்றும் பெனிடோ முஸோலினி, அடால்ஃப் ஹிட்லர் ஆகியோரால் தூண்டப்பட்டது - நாஜிக்களின் வழிமுறையில் இந்திய முஸ்லிம்களை அழித்தொழிக்க வெளிப்படையாக முன்மொழிகிறது. இந்து ராஷ்டிரம் அமைக்கும் எண்ணத்துக்கு பிரதான எதிரிகளாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் கம்யூனிஸ்ட்கள் இருப்பதாக ஆர்.எஸ்.எஸ்-ஸின் கொள்கை (ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் இரண்டாவது தலைவரான எம்.எஸ்.கோல்வால்கரின் கூற்று) கூறுகிறது. தனது லட்சியம் நோக்கி ஆர்.எஸ்.எஸ். இப்போது ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், நம்மைச் சுற்றி நடப்பவை குழப்பமாகத் தென்பட்டாலும், அனைத்துமே ஆர்.எஸ்.எஸ். புத்தகத்தில் கூறியுள்ளபடி மிகவும் கிரமமாக நடக்கிறது.

இப்போது தேசியவாதம் என்றாலே அது, இந்து தேசியவாதம்தான் என்று ஆர்.எஸ்.எஸ். சொல்ல ஆரம்பித்திருக்கிறது. தேசியவாதம், இந்து தேசியவாதம் என்ற இரண்டு பதங்களையும் ஒரே பொருளைச் சுட்டுவதற்கு மாற்றி மாற்றி பயன்படுத்துகிறது. இது, இயல்பாகவே இங்கிலாந்து காலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். கலந்து கொள்ளாமல் இருந்ததை மறைக்கப் பயன்படுகிறது. பிரிட்டனின் காலனியாக இருந்த இந்தியாவை சுதந்திர தேசமாக மாற்றும் போராட்டத்தில் ஈடுபடாதிருந்த ஆர்.எஸ்.எஸ்., அதன்பின்னர், சுதந்திர தேசமாக உருவான இந்தியாவை இந்து நாடாக மாற்றுவதற்கு வேறெந்த அரசியல், கலாச்சார அமைப்பைவிடவும் அதிகப்படியான முனைப்புக்காட்டி வருகிறது. பா.ஜ.க. உருவாவதற்கு முன்னர், 1980ல் ஆர்.எஸ்.எஸ்-ஸின் அரசியல் கரமாக பாரதிய ஜன சங்கம் இருந்தது. எனினும், ஆர்.எஸ்.எஸ்-ஸின் செல்வாக்கு கட்சிகளின் எல்லைகளைக் கடந்தது. கடந்த காலங்களில் அதன் நிழல் இருப்பு காங்கிரஸ் கட்சியின் அருவெறுக்கத்தக்க வன்முறைகளில் வெளிப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு ஆயிரக்கணக்கான ஷாகா கிளைகளும், பல்லாயிரக்கணக்கான ஊழியர்களும் தற்போது இருக்கின்றனர். அதற்கென சொந்தமாக தொழிற்சங்கம், லட்சக்கணக்கான மாணவர்களை மூளைச்சலவை செய்யும் கல்வி நிறுவனங்கள், ஆசிரியர் சங்கங்கள், பெண்கள் பிரிவு, ஊடக மற்றும் வெளியீட்டு நிறுவனங்கள், ஆதிவாசி நலனை பராமரிக்கும் அமைப்பு, மருத்துவ சேவை அமைப்பு, துயர்மிகு வரலாற்றாசிரியர்கள் அணி (சுய பிரமையில் வரலாற்றை எழுதுபவர்கள்) மற்றும் சமூக வலைதளங்களின் அட்டூழியப் படை ஆகியவை உண்டு. அதன் சகோதர அமைப்புகளான பஜ்ரங் தளம் மற்றும் விசுவ இந்து பரிஷத் ஆகியவற்றுக்கு பெரும்படை இருக்கிறது. எதிரி என்று தாம் கருதும் ஒருவரின்மீது திட்டமிட்ட தாக்குதலை நடத்த அவற்றால் இயலும். தனக்கென சொந்தமாக பல நிறுவனங்களை (பா.ஜ.க-வுடன் சேர்த்து அவை சங்க பரிவாரம் அல்லது காவி குடும்பம் என்றழைக்கப்படும்) ஏற்படுத்திக் கொண்டதோடு ஆர்.எஸ்.எஸ்., மிக அமைதியாக பொதுத்துறை நிறுவனங்கள் பலவற்றிலும் - ஆணையங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அதிகார மட்டம், மிக முக்கியமாக உளவுத்துறைகளில் - தனது சதுரங்க ஆட்டத்தின் மனிதர்களை நிரப்பியுள்ளது.

இந்த கடுமையான உழைப்பு மற்றும் தொலைநோக்குச் செயல்பாடுகள் எல்லாம் பலனை ஈட்டிக் கொடுக்கும் என்று நம்புவதற்கு இடமில்லை. இருந்தும், இந்தளவில் சாத்தியப்படுவதற்கு அவர்களின் கற்பனையும், இரக்கமற்ற அணுகுமுறையும் பின்னுள்ளது. எல்லோருக்கும் சம்பவம் என்னவென்பது தெரியும். இருந்தும் மறதியில் நாம் அழுத்தப்படுவதால், சமீபத்தில் நடந்தவற்றின் நினைவூட்டல் அவசியமாகிறது. யாருக்குத் தெரியும், தொடர்பற்றவையாக தோன்றிய சம்பவங்களை, காலம் கடந்து பார்க்கும்போது அவற்றின் இணைப்பு தென்படலாம். எனவே, ஒரு சித்திரத்தை வரையும் என்னுடைய முயற்சியில், அனைவருக்கும் தெரிந்த சில பகுதிகளை குறிப்பிட நேர்ந்தால், என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.
தமிழில்: ராஜ்   minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக