செவ்வாய், 3 மே, 2016

ம.ந.கூட்டணி : எங்களுக்கும் அ.தி.மு.க.வுக்கும்தான் தேர்தல் களத்தில் போட்டி..


எங்களுக்கும் அ.தி.மு.க.வுக்கும்தான் தேர்தல் களத்தில் போட்டி'' என களமிறங்கிய தே.மு.திக., த.மா.கா., மக்கள் நலக் கூட்டணி பற்றி ஊடகங்களில் எதிர்மறை விமர்சனங்கள் பாய்ந்து வர... டென்ஷனின் உச்சத்தில் இருக்கிறார்கள் கூட்டணித் தலைவர்கள்.
ஒரு டி.வி. நடத்தும் கருத்துக்கணிப்பில் இந்தக் கூட்டணி மூன்றாவது இடத்தைப் பெறும், அதிகபட்சம் 18, குறைந்தபட்சம் 10 சதவிகித வாக்குகளைத்தான் தென் மாவட்டங்களில் பெறும் எனச் சொல்ல... "இது போன்ற கருத்துக் கணிப்புகளை மீடியாக் கள் தேர்தலுக்கு முன்பு வெளியிடக்கூடாது' என மாநில தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதி தெரிவித்துள்ளார் சி.பி.எம். மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்.



"ஏன் இந்த ஆவேசம்' என சி.பி.எம். தலைவர்களைக் கேட்டோம். ""நாங்கள் மக்கள் நல கூட்டணியாக உருவாக்கிய சிறிய அணி இன்று அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.விற்கு சவால் விடும் ஒரு பெரிய கூட்டணியாக மாறியிருக்கிறது. விஜயகாந்த்தும் ஜி.கே.வாசனும் எங்கள் அணியில் இணைந்து களம் காண்கிறார்கள். விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளர் என நாங்கள் அறிவித்ததை ஆரவாரத்தோடு தமிழக மக்கள் வரவேற் கிறார்கள். நாங்கள் தனியாக ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறோம். அதில் முழுமையான மது ஒழிப்பு, விவசாய கடன்கள் உடனடி ரத்து, தாய்மொழி வழிக் கல்வி கட்டாயம், நிலமற்ற ஏழை எளிய விவசாயத் தொழிலாளர் குடும்பத்திற்கு தலா இரண்டரை ஏக்கர் நிலம், சாதி மறுப்பு திருமணம் செய்வோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை... ஆகிய முற்போக்கான திட்டங்கள் இடம் பெற்றிருக்கின்றன. இப்படிப்பட்ட பாசிட்டிவ்வான விஷயங்களைப் பாராட்டாமல்... நாளொருமேனியாக வளர்ந்துவரும் எங்களது வாக்கு வங்கியை சிதைக்கக்கூடிய வகையில் ஊடகங்கள், கருத்துக்கணிப்பு என்ற பெயரில் செய்தி வெளியிடுவதை நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம்'' என்றார்கள்.இந்தக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான வைகோ திடீரென தேர்தலில் போட்டி யிடமாட்டேன் என ஒதுங்கிக் கொண்ட பிறகு உளுந்தூர் பேட்டையில் விஜயகாந்த், காட்டுமன்னார்கோயிலில் திருமாவளவன் என 6 கட்சிகளிலிருந்து இரண்டு தலைவர்கள் மட்டுமே களம் காண்கிறார்கள். ""இரண்டு இடங்களிலும் விடுதலை சிறுத்தைகள் பலமாக இருக்கிறார்கள். அதைக் கணக்கிலெடுத்துதான் விஜயகாந்த்தும், திருமாவும் அங்கே போட்டியிடுகிறார்கள். இருவரும் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்'' என்கிறார்கள் ம.ந.கூ.வினர் நம்பிக்கையோடு."வேட்புமனு தாக்கலின்போது தேர்தல் அதிகாரியையே உறுதிமொழி எடுத்து சொல்ல வைத்து அதை விஜயகாந்த் திருப்பிச் சொல்லி சூழலை கலகலப்பாக்கியுள்ளார்' என சூழ்நிலை யை விளக்கினார்கள் ம.ந.கூ. தலைவர்கள். எல்லாம் சரியாக போய்க் கொண்டிருந்தாலும் கூட்டணி வேட்பாளர்களுக்கு பணம் ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கிறது என்கிற குரலும் கூட்டணி வேட்பாளர்களிடமிருந்து கேட்கிறது. அதிலும் தே.மு.தி.க.வினரின் நிலைமை ரொம்ப மோசம் என்கிறார்கள். ""ம.தி.மு.க. வேட்பாளருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையைக் கட்சித் தலைமையே டெபாசிட் செய்துவிடுகிறது. கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு கட்சிதான் செலவுகள் செய்யும். த.மா.கா.வில் இருப்பவர்கள் ஓரளவு வசதி படைத்தவர்களைத்தான் வேட்பாளர்களாக நிறுத்தியிருக்கிறார்கள். ஆனால் தே.மு.தி.க.வில் வேட்பாளராக இருப்பவர்கள், அவர்களின் செலவுக்கு ரொம்பவே கஷ்டப்படுகிறார்கள். ஒருசிலர் தேர்தல் பரப்புரைக்கு வரவே தயங்குகிறார்கள்'' என்கிற குரல்கள் கூட்டணியில் கேட்கிறது.இந்த மைனஸ்களையெல்லாம் தாண்டி இன்று தமிழக தேர்தல் களத்தில் வேகமாக சுற்றிவரும் தலைவர்கள் தே.மு.தி.க., த.மா.கா., மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள்தான். விஜயகாந்த், பிரேமலதா, வைகோ, திருமா, ஜி.ஆர்., முத்தரசன், தா.பாண்டியன், நல்லகண்ணு, வாசன் என ஒன்பது தலைவர்கள் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் இந்தக் கூட்டணிக்காக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளையும் எதிர்த்துப் பேசிவருகிறார்கள். ""உதாரணமாக தமிழகத்தில் நடந்த கிரானைட் கொள்ளை பற்றி எங்களது கூட்டணிதான் முதலில் கையிலெடுத்து பிரச்சாரம் செய்தது. அதன் விளைவாக மதுரையில் பொதுக்கூட்டத்தில் பேசிய ஜெ., கிரானைட் ஊழலைப் பற்றி விரிவாகப் பேசியுள் ளார். அதுவரை தி.மு.க.வைப் பற்றி மட்டுமே பேசிவந்த ஜெ., முதன்முறையாக மதுரையில் புகார்கள் கிளம்பிய பிரச்சினைகள் பற்றிப் பேச வைத்தோம். இது அ.தி.மு.க.விற்கும் எங்களுக் கும்தான் போட்டி என்பதைச் சொல்கிறது'' என்கிறார்கள் கூட்டணித் தலைவர்கள்.கள நிலவரங்கள் பற்றிப் பேசும் கம்யூனிஸ்ட் தோழர்கள், ""எங்களது கூட்டணியின் பிரச்சாரம் களத்தில் ஓங்கி ஒலிக்கிறது... ஆனால், அதை மீடியாக்கள், மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்க்கத் தயங்குகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் புதிய உத்வேகத்துடன் திரண்டுள்ள தி.மு.க.வினருக்கும், பணம்-அதிகாரம் இவற்றோடு வலம்வரும் அ.தி.மு.க.வினருக்கும் போட்டியாக செயல்பட எங்களது தோழர்கள் சிரமப்படு கிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க.விற்கு மாற்று என நாங்கள் சொல்கிறோம். 


இந்த இரண்டு பெரிய கட்சிகளுக்கும் ஈடுகொடுத்து பணியாற்றி னால்தான் அவர்களை வெல்ல முடியும். இன்றைய நிலையில் மக்கள் எங்களை வரவேற்கிறார் கள். ஓட்டுப் போட்டு வெற்றிபெற வைப்பார்கள் என்பது எங்கள் நம்பிக்கை. அது வெற்றிபெறுமா என்பதை மே முதல்வாரத்தில் ஏற்படும் அரசியல் சுழற்சியை வைத்தே சொல்ல முடியும். அ.தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்கிற எண்ணத்தை மக்களிடம் நாங்கள் உருவாக்கியுள்ளோம். அ.தி.மு.க. எதிர்ப்பலை எங்களுக்கு சாதகமாகுமா? தி.மு.க. பக்கம் போகுமா என்பதை எதிர்காலம்தான் சொல்லும்'' என்கிறார்கள் தோழர்கள்.எதிரிகளின் பலம் உணர்ந்து, "ஓரடி முன்னே -ஈரடி பின்னே' பக்குவமாக களத்தைச் சந்திக்கும் கம்யூனிஸ்ட்டுகளின் வியூகத்துடன் பயணிக்கிறது விஜயகாந்த்தை முதல்வராக்க சபதம் பூண்டுள்ள மக்கள் நலக் கூட்டணி.
-தாமோதரன் பிரகாஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக