வெள்ளி, 27 மே, 2016

தமிழ்நாட்டின் திரைமறைவு அரசியல் அபாயங்கள்

JJ
பாலில் ஊழல், மூட்டை கொள்முதலில் ஊழல், கோடிகணக்கான  ரூபாய் சாராய கொள்முதலை டெண்டர் இல்லாமல் பெறுவதில் ஊழல், மின்சாரத்தை வாங்குவதிலே ஊழல், மின்சாரத் திட்டத்தை தாமதபடுத்தி ஊழல் என்று தமிழகத்திலே கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு என்று நான்காண்டு ஆட்சியில் நாலாபுறமும் ஊழல் தான் மிச்சம். எல்லாத் துறைகளிலும் ஊழல் பெருகி விட்ட காரணத்தினால் எந்த ஒரு  தொழில்துறை வளர்ச்சியும் கட்டமைப்பு வசதியும் செய்து தர இயலாத ஜெயலலிதா அரசு, தமிழக அரசின் கஜானாவை படு பாதாளத்தில் தள்ளி விட்ட  ஜெயலலிதா அரசு, இப்போது நம்பி இருப்பது ஜாதி மோதலில் வளரும் வன்மத்தை  மட்டும்தான் 
thetamilpost.in :நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியரும் பிரபல தமிழ் எழுத்தாளருமான திரு. பெருமாள் முருகன் எழுதிய மாதொரு பாகன் நாவல் தொடர்பாக, மதவெறி மற்றும் சாதிவெறி அமைப்புகள் போராட்டம் நடத்தி, பெருமாள் முருகனை அச்சுறுத்திய போது, இந்து மதம் மற்றும் கவுண்டர் சாதி அமைப்புகளின் நிலைப்பாட்டிற்கு மறைமுக ஆதரவளித்து, மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் கட்டப் பஞ்சாயத்து செய்து மிரட்டி, எழுத்தாளர் பெருமாள் முருகனை மன்னிப்புக் கேட்க வைத்தனர்.
அவர் அதோடு தன் எழுத்துப் பணியையும் நிறுத்திவிட்டார். ஆதிக்க சாதி, மதத்திற்கு ஆதரவாக ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசால் எடுக்கப் பட்ட மிக ஆபத்தான நிலைப்பாடு இது.
எழுத்தாளர் பெருமாள் முருகன் தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கை. இரண்டு நாட்களுக்கு மட்டுமே இருக்கும் என்று சொல்லி வெளியிட்டு, இரண்டு நாட்கள் கழித்து அவ்வாறே நீக்கியும்விட்டார். அறிக்கை முழு விவரம்:-
ழுத்தாளன் பெருமாள்முருகன் செத்துவிட்டான். அவன் கடவுள் அல்ல, ஆகவே உயிர்த்தெழப் போவதில்லை. மறுபிறவியில் அவனுக்கு நம்பிக்கையும் இல்லை. இனி அற்ப ஆசிரியனாகிய பெ.முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான்.
பெருமாள்முருகனுக்கு ஆதரவு தெரிவித்தும் கருத்துரிமையை முன்னெடுத்தும் போராடிய பத்திரிகைகள்
, ஊடகங்கள், வாசகர்கள், நண்பர்கள், எழுத்தாளர்கள், அமைப்புகள், கட்சிகள், தலைவர்கள், மாணவர்கள் முதலிய அனைத்துத் தரப்பினருக்கும் நன்றிகள்.
‘மாதொருபாகன்’ நூலோடு பிரச்சினை முடிந்துவிடப் போவதில்லை. வெவ்வேறு அமைப்புக்கள், தனிநபர்கள் அவனுடைய ஏதாவது நூலை எடுத்துப் பிரச்சினை ஆக்கக் கூடும். ஆகவே பெருமாள்முருகன் இறுதியாக எடுத்த முடிவுகள் வருமாறு:
  1. பெருமாள்முருகன் தொகுத்த, பதிப்பித்த நூல்கள் தவிர அவன் எழுதிய நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய அனைத்து நூல்களையும் அவன் திரும்பப் பெற்றுக்கொள்கிறான். இனி எந்த நூலும் விற்பனையில் இருக்காது என்பதை உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறான்.
  2. பெருமாள்முருகனின் நூல்களை வெளியிட்டுள்ள காலச்சுவடு, நற்றிணை, அடையாளம், மலைகள், கயல்கவின் ஆகிய பதிப்பகத்தார் அவன் நூல்களை விற்பனை செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறான். உரிய நஷ்ட ஈட்டை அவர்களுக்கு பெ.முருகன் வழங்கிவிடுவான்.
  3. பெருமாள்முருகன் முருகனின் நூல்களை இதுவரை வாங்கியோர் தாராளமாக அவற்றைத் தீயிட்டுக் கொளுத்திவிடலாம். யாருக்கேனும் நஷ்டம் எனக் கருதி அணுகினால் உரிய தொகையை அவருக்கு வழங்கிவிடத் தயாராக உள்ளான்.
  4. இனி எந்த இலக்கிய நிகழ்வுக்குப் பெருமாள்முருகனை அழைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறான்.
  5. எல்லா நூல்களையும் திரும்பப் பெறுவதால் சாதி, மதம், கட்சி உள்ளிட்ட அமைப்புகள் போராட்டத்திலோ பிரச்சினையிலோ ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறான்.
அவனை விட்டுவிடுங்கள். அனைவருக்கும் நன்றி.
பெ.முருகன்
பெருமாள்முருகன் என்பவனுக்காக
புதிய தலைமுறை தொலைக்காட்சி, இந்து மதத்திற்கு எதிரான செய்திகள் வெளியிடுவதாக சொல்லி, பிஜேபி மற்றும் RSS ஆதரவு மத அடிப்படைவாத கும்பல் ஒன்று, அந்தத் தொலைக்காட்சி அலுவலகம் மீது டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசித் தாக்கியது. இந்த நிகழ்விற்குப் பின், தமிழக பாரதிய ஜனதா கட்சி, தங்கள் செய்தித் தொடர்பாளர்களை புதிய தலைமுறை டிவி விவாதங்களுக்கு அனுப்புவதை நிறுத்தியது. அதன் காரணமாகவே, ஊரில் உள்ள கணக்குப் பிள்ளைகள் எல்லாம் சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் என்ற போர்வையில் விவாதங்களில் கலந்துக் கொண்டு மதவெறி நஞ்சுக்களை உமிழ்ந்துக் கொண்டிருந்தார்கள். இப்போது பாஜக தன் வீராப்பை மலிவு விலைக்கு விற்றுவிட்டு மீண்டும் கலந்துக் கொள்ள ஆரம்பித்திருப்பது தனிக் கதை. இந்த அடிப்படைவாத கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டதோடு சரி. பின்னர் என்ன ஆனது என்று யாருக்கும் தெரியாது.
மீனவ குடிசை வாசிகள் கூட கேபிள் டிவி வைத்துள்ளார்கள் என்ற ரீதியில் சினிமா பாடகி சின்மயி  ட்விட்டரில் ஏளனம் செய்ய, இதனைக் கண்டித்தும் கேள்வி கேட்டும் எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் மீது அவர் புகார் அளிக்கிறார். ஒரு நிமிடமும் தாமதிக்காத தமிழகக்  காவல் துறை சிலரைத் தூக்கி  சிறையில் தள்ளுகிறது. ட்விட்டரில் குடிசை வாசிகளைப் பற்றி கிண்டல் செய்த பாடகி சின்மயி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கத் தயாராக இல்லாத காவல்துறை, அப்போது காவல் துறையில் உயர்பதவியில் இருந்த ஒரு அதிகாரியின் உத்தரவால், கருத்து சுதந்திரத்திற்கு எதிராக நடந்துக் கொண்டது என்று சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டது. பாடகி சின்மயியும் அந்தக் காவல் அதிகாரியும் ஒரே சாதியை சார்ந்தவர்கள். இப்போது அந்த அதிகாரி அதிமுகவில் உயர் பொறுப்பில் இருக்கிறார்.
கல்யாணம் செய்துக் கொள்வதாக சொல்லி ஏமாற்றி, சீமான் தன்னை பாலியல் ரீதியாக உபயோகித்து  கை விட்டு விட்டதாக நடிகை விஜயலட்சுமி புகார் அளிக்கிறார். புகார் அளித்து நாலரை வருடம் ஓடி விட்டது. இன்னமும் செல்வி ஜெயலலிதா ஆணைப்படி செயல்படும் காவல் துறை, அம்மாவின் ஆணைப்படியோ என்னவோ அப்படியே கிடப்பில் போட்டுவிட்டது. பாலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணின் பாதிப்பை விட, தன்னோட ஆதிக்க சாதி மனநிலைத் திமிருக்கு எதிர்க் கருத்துகளை தெரிவித்ததால் பாதிக்கப் பட்ட பெண்ணின் பாதிப்பே பெரிதாகத் தெரிந்திருக்கிறது மாண்புமிகு அம்மாவின் கட்டுபாட்டில் இருக்கும் காவல்துறைக்கு.
ஏனெனினில் சின்மயி உடலில் ஓடுவது ஆதிக்க சாதி ரத்தம். பாதிக்கப் பட்ட விஜயலட்சுமிக்கு எதிரானவரோ, “ இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என்று சொல்லி, தான் முதல்வராவதற்கு உதவியர். அதிமுக ஆட்சியாளர்களின் ரத்தம் யாருக்காக கொதிக்கும் என்று ஆராய்ச்சி ஒன்றும் செய்ய வேண்டியதில்லை.
இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் என்று அதிமுகவினரே கூச்சப் படும் அளவிற்கு அம்மா புகழ் பாடி ஒட்டு கேட்ட சீமானுடன், கடந்த வாரம் போனில்  பேசியவர்  நாம் தமிழர் கட்சியின் போடியநாயக்கனூர் வேட்பாளரின் தம்பி ஜெகதீசன் ஆவார்.  அவரை சாதியின் பெயரால் இழிவாக பேசியது மட்டும் இல்லாமல் அதே  ஜெகதீசனை  சீமான் கட்சியை சேர்ந்தவர்கள், அலுவலகம் புகுந்து அடித்து அவரின் மண்டையை உடைத்துள்ளனர். இதன் பின்னணியில் ஆபாசப் பேச்சு மற்றும் ஜாதி துவேஷம் வேற செய்து உள்ளார். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
மொழியை முன்னிறுத்தி  வன்மத்தைக் கக்கி, தமிழர்களின் சகோதரத்துவத்தைக் கெடுத்து பிரிவினையை ஊக்குவிக்கும் சீமானை தேச விரோத சட்டத்தில் கைது செய்து அவர் கட்சியை தடை செய்ய அனைத்து முகாந்தரமும் உள்ள நிலையில், சட்டம் ஒழுங்கை பாதுக்காக வேண்டிய ஜெயலலிதா மூடு டாஸ்மாக் கை மூடு என்று கோவன் பாடினால் கோபம் கொப்பளிக்க நள்ளிரவில் கைது செய்கிறார். அதுவும் தேச விரோத செயல் சட்டத்தில்.
சட்டமன்றத்தில் மேஜையைத் தட்டுவதும், ஒவ்வொரு தொலைக்காட்சி ஸ்டுடியோவாகச் சென்று அம்மா வாழ்க என்றும் கோஷம் போடுவதையும் மட்டுமே முழு நேரப் பணியாகக் கொண்டிருக்கும் தனியரசுவின் கொங்கு இளைஞர் பேரவையை சேர்ந்தவர்கள், கோவை மாநகரின் காவலர்களின் லத்தியைப் பிடுங்கியும், கடுமையான ஆயுதங்களைக் கொண்டும் பொது மக்களை ஓட ஓட விரட்டித் தாக்குவதை தொலைக் காட்சிகளிலும் சமூக வலைதளங்களிலும் பார்த்து தமிழ்நாடே அதிர்ச்சிக்குள்ளாகியது. அவர்களில் ஒருவர் அடுத்த ஆண்டு சட்டமன்ற உறுப்பினரானாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை. அம்மா புகழ் பாடுவதே பணியென இருக்கும் தனியரசுவுக்காக அவர் தம் அடிபொடிகள் பெரிய நடவடிக்கை ஏதுமின்றி விரைவில் இன்னொரு வன்முறை வெறியாட்டத்திலும் ஈடுபடலாம்.
சீமான், தனியரசு  போன்ற   ஜால்ராக்களுக்கு தைரியம் கொடுத்தது யார் என்று தமிழ்நாடறியும்.
இளவரசன், கோகுல் ராஜ் போன்ற ஒடுக்கப் பட்ட சமுதாய இளைஞர்களின் தொடர் படுகொலையில் ஜெயலலிதா அரசு எடுத்த நடவடிக்கை என்ன? இளவரசனைக் கொன்றவர்கள் யார்? கோகுல்ராஜ் கொலையில் தொடர்புடையவராக சொல்லப் பட்ட தனியரசுவின் முன்னாள் சிஷ்யபிள்ளை யுவராஜ் தினம் தினம் வாட்சாப்பில் ஆடியோ ரிலீஸ் செய்துக் கொண்டும், தொலைக்காட்சி விவாத நேரடி ஒளிபரப்புகளில் சிறப்பு விருந்தினராய் பங்கேற்றும் தமிழ்கக் காவல் துறையை வெட்கித் தலை குனிய வைத்துக் கொண்டிருந்தார். புரட்சித் தலைவி அம்மாவின் காவல்துறை அவரை நெருங்கவே விரும்பவில்லை. பின்னர் அவராகவே வந்து சரணடைந்தார். அந்த அளவுக்கு ஆதிக்க சாதிகளின் செயல்பாடுகளுக்கு இந்த அரசு முக்கியத்துவ்வும் ஆதரவும் தந்துக் கொண்டிருக்கிறது.
காவல் துறை DSP செல்வி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு எந்த வேகத்தில் விசாரிக்கப் படுகிறது? அவர் ஓர் ஆதிக்க சாதியை சார்ந்தவராக இருந்திருந்தால் குற்றவாளி இந்நேரம் கூண்டிலேற்றப் பட்டிருப்பார். தமிழ்க எதிர்க் கட்சிகளும் விஷ்ணுபிரியாவின் குடும்பத்தினரும் CBI விசாரணை வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இது ஒன்றும் அவ்வளவு முக்கியமான வழக்கில்லை, தமிழக காவல் துறை விசாரணையே போதும் என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. காவல் துறை உயர் அதிகாரியாகவே இருப்பினும், நீதி கிடைக்க வேண்டுமென்றால் சின்மயி போன்று ஆதிக்க சாதியாகவோ தனியரசு, சீமான் போன்று ஆளும்கட்சியின் அரசியலுக்கு ஒத்து ஊதுபவராகவோ தான் இருக்க வேண்டி இருக்கிறது என்பது வேதனையான உண்மை.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முத்தரையர் சாதியைச் சொல்லி இழிவான வார்த்தைகளால் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார் என்ற குற்றசாட்டில், இரு சமூகத்தை சேர்ந்த அதிமுகவினருக்கிடையிலேயே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்த, அமைச்சரைக் கண்டித்து முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் 3000 பேர் நவம்பர் 5-ம் தேதி  புதுக்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட கடைகள், நிறுவனங்கள் மீது கல்வீச்சு சம்பவங்களும் நடந்துள்ளது. காவல்துறையினரின் தடியடி நடவடிக்கைகளால் பலர் காயமுற்றுள்ளனர். அமைச்சருக்கு ஆதரவாகச் செயல்படுகிறேன் என்கிற பெயரில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ஒரு பதட்டமான சூழல் உருவாகுவதற்கு காவல்துறையினரே வழிவகுத்து  பொதுமக்களும், வர்த்தகர்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக காரணமாகி இருக்கிறார்கள். மாவட்டத்தின் பல இடங்களில் சாலை மறியலும், மரத்தை வெட்டிச்சாய்த்து போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் சம்வபங்களும் நடந்துள்ளது. எங்கே தான் போகிறது தமிழ்நாடு?
இது வரை கூட்டணி கட்சிகளை வைத்து ஜாதி மோதலை ஊக்குவித்த ஜெயலலிதா இப்போது சொந்த கட்சியினர் மூலமே சாதிய அரசியல் மோதல்களை ஊக்குவிக்கிறாரோ என்று சந்தேகம் கொள்ளத் தோன்றுகிறது. தமிழ்நாட்டில் மொத்தமாக ஸ்தம்பித்துக் கிடக்கும் ஆட்சி நிர்வாகத்தில் இருந்தும் மதுபானங்களுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் எதிர்கட்சியினரின் அறிக்கைகள், போராட்டங்கள், தேர்தல் பணிகளில் இருந்தும் மக்களை திசை திருப்ப இதுவும் ஒரு உக்தியாக இருக்குமோ என்று அரசியல் விமர்சகர்கள் சந்தேகப் படுகின்றனர். உடன்பிறவா தோழியின் குடும்பத்தார் செய்திருக்கும் 1000 கோடி ரூபாய் வியாபாரப் பரிவர்த்தனை தமிழ்நாட்டில் ஏற்படுத்தி இருக்கும் எதிர்மறைத் தாக்கத்தில் இருந்து மக்களை திசைதிருப்ப இன்னும் என்னென்ன கூத்துகள் எல்லாம் அரங்கேறுமோ என்று தமிழ்நாடே பீதியில் இருக்கிறது.
பாலில் ஊழல், மூட்டை கொள்முதலில் ஊழல், கோடிகணக்கான  ரூபாய் சாராய கொள்முதலை டெண்டர் இல்லாமல் பெறுவதில் ஊழல், மின்சாரத்தை வாங்குவதிலே ஊழல், மின்சாரத் திட்டத்தை தாமதபடுத்தி ஊழல் என்று தமிழகத்திலே கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு என்று நான்காண்டு ஆட்சியில் நாலாபுறமும் ஊழல் தான் மிச்சம். எல்லாத் துறைகளிலும் ஊழல் பெருகி விட்ட காரணத்தினால் எந்த ஒரு  தொழில்துறை வளர்ச்சியும் கட்டமைப்பு வசதியும் செய்து தர இயலாத ஜெயலலிதா அரசு, தமிழக அரசின் கஜானாவை படு பாதாளத்தில் தள்ளி விட்ட  ஜெயலலிதா அரசு, இப்போது நம்பி இருப்பது ஜாதி மோதலில் வளரும் வன்மத்தை  மட்டும் தானா?
தமிழ்நாட்டின் திரைமறைவு, ஆதிக்க மற்றும் ஆதாய அரசியல் அபாயம் பொதுமக்களுக்கு ஒரு பெரும் எச்சரிக்கை மணி. விழித்துக் கொள்ள வேண்டியது மக்களின் கடமை..   /thetamilpost.in/2015/11/06/dangerous-tn-politics/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக