ஞாயிறு, 8 மே, 2016

அம்மாவின் தாலி: அன்னையர் தினத்தில் ஒரு மீள் பதிவு

heronewsonline.com:  அம்மா இறந்து கிடந்தார். சடலத்தைப் பாடையில் வைப்பதற்கு முன்பு குளிப்பாட்டினார்கள். அப்போதுதான் அவரது கழுத்தில் போட்டிருந்த கயிற்றில் தாலி இல்லை என்பது தெரிந்தது. கூடியிருந்த பெண்கள் மத்தியில் அதுவே பேச்சாக இருந்தது. இறந்த பிறகு யாராவது கழற்றியிருப்பார்களோ எனப் பேசிக்கொள்வது என் காதில் விழுந்தது. நான் கண்ணீர் வற்றிப்போய் அமர்ந்திருந்தேன். அம்மா சாகும்போது எழுபது வயதிருக்கலாம். அதற்கு முன்பாகவே நலிந்து போய்விட்டார்கள். ஓய்வு ஒழிச்சலில்லாத உழைப்பில் வற்றிப்போன உடம்பு, பற்கள் கொட்டிப்போய் குழி விழுந்த முகம். அவரது கவலைகளின் மையம் நான் தான். தவமிருந்து பெற்ற பிள்ளை தன்னை கவனிக்கவில்லையே என்ற வருத்தத்தைவிடவும் தன் பிள்ளைக்கு எந்த ஆதரவும் இல்லையே என்ற கவலை. அந்தக் கவலையைப் போக்குவதற்கு எந்த அக்கறையையும் நான் காட்டியதில்லை.

அப்பாவிடம் யாரோ தாலியைக் காணவில்லை என சொல்லிக்கொண்டிருந்தார்கள். திக்பிரமை பிடித்தவர்போல உட்கார்ந்திருந்த அவர் எந்தப் பதிலும் சொல்லவில்லை.
தாலி என்ன ஆனது என்பது எனக்கு மட்டும் தான் தெரியும். முதலாண்டு பிஎல் படிக்கும்போது தேர்வு எழுதுவதற்கு முன்னால் ஹாஸ்டல் கட்டணம் செலுத்தினால்தான் ஹால் டிக்கெட் என்று அண்ணாமலைப் பல்கலைக் கழக நிர்வாகம் சொல்லிவிட்டது. அப்போது அம்மாவிடம் இருந்தது தாலி தான். அதைக் கழற்றிக் கொடுத்து அடகு வைத்து கட்டணத்தை செலுத்திக்கொள் என்றார்கள். எனக்கு அடகுக் கடைக்குப் போன அனுபவம் இல்லை. எனக்குத் தெரிந்த நண்பர் கிருஷ்ணமூர்த்தியிடம் சொன்னேன். அவர் அதைத் தனது பெயரில் அடகுவைத்து பணத்தைக் கொண்டுவந்து கொடுத்தார். ஆறு கிராம் தாலிக்கு ஐநூறு ரூபாய் கொடுத்தார்கள். அதை செலுத்தி தேர்வும் எழுதிவிட்டேன்.
கிருஷ்ணமூர்த்தி ஹாஸ்டல் மாணவரில்லை. சிதம்பரநாதன்பேட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். எம்.எஸ்.சி ஜுவாலஜி படித்துக்கொண்டிருந்தார். ஒரு வருடம் ஓடிவிட்டது. அவர் படிப்பை முடித்துவிட்டு ஏதோ ஒரு ஊரில் வேலைக்கு சேர்ந்துவிட்டார். எனக்கு அவரோடு தொடர்பு இல்லாமல் போய்விட்டது.
ஒருநாள் அம்மா என்னிடம் தாலி அடகுவைத்த சீட்டை எடுத்துக்கொடுத்து பணத்தையும் தந்து மீட்டுக்கொண்டு வரச்சொன்னார். சிதம்பரம் ஆர்.டி வேலு ஸ்டுடியோவுக்குப் பக்கத்தில் பிள்ளையார் கோயிலுக்குப் பின்னால் தான் அந்த அடகுக்கடை இருந்தது. தயக்கத்தோடு அங்கே போய் சீட்டைக் கொடுத்தேன். அவர் வரிசையாக அடுக்கப்பட்டிருந்த நோட்டுகளில் ஒன்றை எடுத்துப் பிரித்துப் பார்த்துவிட்டு சீட்டை என்னிடமே திருப்பித் தந்துவிட்டார். ” எத்தனைதரம் நோட்டீஸ் அனுப்பினோம்! இப்போ வரீங்களே? நகை ஏலம் போயிடுச்சி” என்றார். எனக்கு என்ன கேட்பது என்றே புரியவில்லை. பதற்றத்தில் ஏதேதோ உளறினேன். அவர் காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை. அம்மாவுக்கு என்ன பதில் சொல்வது எனப் புரியவில்லை. அழுகைதான் வந்தது. இரவு வீட்டுக்குத் திரும்பி அம்மாவிடம் விஷயத்தை சொன்னேன். ‘போனா போவுது போ. நீ நல்லா படிச்சா அதுவே போறும்’ என்று சொல்லிவிட்டார். நான் வேலைக்குப் போன பிறகு புதிதாக தாலி வாங்கிக்கொள் என்று சொன்னதையும்கூட அவர் கேட்கவில்லை.
நான் நினைவு தெரிந்த நாளிலிருந்தே பகுத்தறிவுவாதி. பெரியாரின் கொள்கைகளில் ஊறியவன். நானே தாலி மறுப்புத் திருமணம் தான் செய்துகொண்டேன். அப்படியிருந்தும் அம்மாவைத் தாலி இல்லாமல் வாழும்படி ஆக்கிவிட்டோமே என்ற குற்ற உணர்வு இன்னும் கூட என்னை அரித்துக்கொண்டிருக்கிறது.
(அன்னையர் தினத்தில் ஒரு மீள் பதிவு)
– ரவிக்குமார்
விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக